Bhavisya Purana-2

9.வருணாசிரம தருமங்கள்:தலைப்பு ஒரேமாதிரி இருப்பினும் பவிஷ்ய புராணத்தில் வருணாசிரம தருமங்கள் சிறிது மாறுபட்டிருக்கின்றன என்று அறியலாம். வகுப்புகளில் மற்ற புராணங்களில் சொல்லப்பட்டது போல் கண்டிப்பு இன்றி தளர்த்தப்பட்டிருக்கிறது. பிரம்ம புத்திரர்கள், பிராமணர்கள், பகைவரிடமிருந்து நாட்டையும் மக்களையும் காப்பவர் க்ஷத்திரியர்கள். வாணிபம், விவசாயம் கவனிப்பவர்கள் வைசியர்கள், வேதம் கற்பிக்கப்படாதவர்கள் சூத்திரர்கள். அந்தணர்கள் தொழில் வேதம் ஓதுதல், ஓதுவித்தல், புலனடக்கம், தன்னடக்கம் போன்றவை. போர்த்தொழில், போரில் வீரம் காட்டுதல், போர் நடவடிக்கை க்ஷத்திரியர் தொழில். வைசியர்கள் தொழில் முன் பத்தியில் கூறியவாறே மற்றவர்கள் இந்த மூவர்களிடமிருந்து உதவுதல்.
வேதம் கற்காமலிருந்தால், உபவாசம் இல்லாமை, யாகங்கள் செய்யாமை போன்ற நிலையில் இருக்கும் அந்தணனுக்கு அது குற்றமாகும். அரசர்கள் அந்தணர்க்கு யஜ்ஞ யாகாதிகளில் உதவுதல். நாட்டைக் காத்தல், குற்றம் புரிவோரைத் தண்டித்தல், கற்றல் ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். மற்றவர்கள் மேலே காட்டிய வழியே நடக்க வேண்டும்.

மாறுபடும் செய்திகள் :பிறப்பின் அடிப்படை காரணமின்றி பராசரர், சுகதேவர், வசிஷ்டர் போன்றவர்கள் உயர்ந்த நிலையில் இருந்தது சுட்டி காட்டப்படுகிறது. ஆனால் வித்தைகள், மறைகள் கற்றிருந்தாலும் சண்டாளர்கள் அந்தணர்கள் ஆகமுடியாது. அந்தணர்க்குரிய குணநலங்கள் இல்லாதவர் மறை ஓதியிருந்தாலும் அந்தணர் அல்லர். அந்தணர், சூத்திரர் என்பது பெயரளவில் வேறுபாடே. சூத்திரர்களும் பூணூல் அணியலாம். சமயச் சடங்குகளிலும் வேறுபாடு இல்லை. மந்திரம், சமஸ்காரங்கள் ஒருவனுடைய தீயகுணத்தை மாற்றாது. எனவே, சற்குணமே ஒருவர் குலத்தை உயர்த்துவதும் தாழ்த்துவதும் ஆகும். மற்ற கால்நடைகள் பராமரித்தல், பணியாளனாக இருத்தல், கடைகள் வைத்தல், கருமாராக இருத்தல் போன்றவை ஒருவனை அந்தணன் அல்லாதவர் ஆக்கும். அவர்களுடைய உணவில் இறைச்சி, வெங்காயம், பூண்டு போன்றவை கூடாது. அந்தணர்கள் கள்(அ)ஒட்டகப்பால் அருந்தக்கூடாது.
தன் குலதர்மத்தை விட்டடவன் அக்குலத்தைச் சார்ந்தவன் அல்லன். ஒரு குலத்தில் உதித்தவன் மற்றொரு குலத்தவனாக மாறலாம். சகத்வீபத்தில் மகர், மகதர், கனகர், மண்டகர் (அ) மண்டபர் என நான்கு பிரிவுகள் இருந்தன. அவர்கள் முறையே அர்ச்சகர்கள், படைவீரர்கள், குடும்பஸ்தர், தொழிலாளிகள் எனப்படுவர். ஒரு குலத்திலிருந்து மற்றொன்றுக்கு ஒருவன் மாறச் சுதந்திரம் உண்டு.
கல்வி: அடுத்து கல்வி, குரு, சீடன் பற்றி அறியலாம். குருவுக்கு பணிவிடை செய்து ஒருவன் சீடனாகி கற்பவன் கல்வி முடிந்தவுடன் சீடன், குருவுக்கு நிலம், பொன், குடை, பாதக்குறடு, உடை, தானியம், காய்கறி போன்றவற்றைத் தக்ஷிணையாகக் கொடுத்து அவரைத் திருப்தி செய்யலாம். காயத்திரி மந்திரத்தை, அதன் பொருளை நன்கு அறிந்தவர், மரியாதை உடையவர், சற்குரு சம்பன்னன் சற்குரு ஆவான். குருமார்களில் ஐந்து வகை சொல்லப்பட்டுள்ளன.
1. வேதங்களின் இரகசியப்பொருள்களை உபதேசிப்பவர் ஆசாரியன்.
2. பிழைப்புக்காக வேதம் கற்பிப்பவர் உபாத்தியாயர்.
3. குருகுலம் இருந்து அதில் சீடன் சேர்ந்து அங்கு அனைத்துப் பணிவிடைகளையும் செய்து கற்க உதவுபவர் குரு.
4. யாகம் செய்பவர் ரித்விஜர் எனப்படுவார்.
5. மஹாகுரு : ஆசாரியர்களில் சிறந்தவராய் எல்லோராலும் மரியாதை செய்யப்படுபவர் மஹாகுரு ஆவார். இராமாயணம், மகாபாரதம் நன்கு கற்றறிந்தவர். இறைவன் திருநாமங்களைப் பொருளுணர்ந்து உச்சரிப்பவர். மேலும், அவர் மும்மூர்த்திகளின் பிறப்பு, பதினைந்து புராணங்களைக் கற்றுத் தெரிந்தவராய் இருத்தல் அவசியம். இத்தகைய மகாகுரு அரிதாய் கிடைப்பார்.
கூலி : பவிஷ்ய புராணம் அக்காலத்தில் வேலைக்கேற்ற கூலி என்ற முறையில் எந்தெந்த வேலைக்கு எவ்வளவு கூலி என்று கூறுகிறது.
வரதம்-ஒரு சிறு தொகை (அ) நாணயம். 20 வரதம்-ஒரு காசினி. 4 காசினிகள்-ஒரு பணம் (அ) 80 வரதம்.
தொழிலும் அதற்கான கூலியும்
1. செங்கல் அடுக்குதல்-கிணறு எடுத்தல், பாலம் கட்டுதல்-ஒவ்வொன்றுக்கும் கூலி 2 பணம்.
2. பெருக்குதல், பெண்டிர்க்கு அழகு செய்தல், மிளகாய், வெற்றிலை நடுதல், அரங்கு அமைத்தல், சலவைக்கல் பதித்தல், சலவை கூலி-ஒவ்வொன்றும் 1 பணம்.
3. வெண்கலத்தில் பொருள்கள் செய்தல், பருத்தி ஆடை செய்தல்-3 பணம்.
4. செப்பு பாத்திரம் செய்தல், முடிஅலங்காரம்-4 பணம்.
5. வண்டி இழுத்தல்-1 பணம், 10 வரதம்.
6. நிலத்தை உழுதல்-2 பணம், 10 வரதம்.
7. முக க்ஷவரம்-1 காசினி.
8. கம்பளி ஆடை நெய்தல், கருமாரத்தொழில், முடிநீக்கம்-10 காசினிகள்.
பெண்களும் திருமணமும்
இப்புராணக் காலத்தின்படி பெண்களுக்கு இளமையிலேயே திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும்.7 வயது பெண் கவுரி, 10 வயது பெண் நக்னிக், 12 வயது பெண் கன்யக(அ) கன்னி அதற்கு மேற்பட்டவள் ரஜஸ்வலா என்பர். திருமண நிலை கவுரி நிலை. அடுத்து சிறப்புடையது நக்னிக. அதை அடுத்தது கன்னி. ரஜஸ்வலா மோசம்(அ)கேவலம் எனப்பட்டது. எட்டு வகைத் திருமணங்கள் வழக்கத்தில் இருந்தன. அவை பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. பிரம்ம திருமணம் : ஒரு பெண்ணை நன்கு அலங்கரித்து, புத்தாடை உடுத்தி ஆபரணங்களைப் பூட்டி ஒரு நற்குடியில் பிறந்து வளர்ந்த ஒருவன் கையில் ஒப்படைப்பது இது.
2. தெய்வத் திருமணம் : அக்னி வளர்த்து ஓமம் செய்து புரோகிதர்கள் முன்னிலையில் விதிப்படி நகை அணிந்த நங்கையைத் திருமணம் செய்வித்தல்.
3. அர்ஷத் திருமணம் : பெண்ணைப் பெற்றவர் திருமணச் சடங்குகளை முறைப்படி நடத்தி ஒரு நற்குடிப் பிறந்தவனுக்கு பசு(அ)எருதுடன் மணம் செய்விப்பது.
4. பிராஜா பத்தியம் : மதச் சம்பிரதாயங்களைப் பூசை ஆகியவற்றை என்றும் குறைவின்றி நடத்துமாறு அறிவுரை செய்து பெண்ணை ஓர் ஆண் பிள்ளைக்குத் திருமணம் செய்வித்தல்.
5. அசுரத் திருமணம் : பெண்ணுக்காகப் பணம் வாங்கிக் கொண்டு அவளை ஒருவன் கையில் கொடுத்து விவாகம் செய்விப்பது.
6. சாருதர்வ மணம் : இது ஒரு காதல் திருமணம்.
7. ராக்ஷசத் திருமணம் : ஓர் ஆண், ஒரு பெண்ணை ரகசியமாக தூக்கிச் சென்று திருமணம் செய்து கொள்வது.
8. பைசாசத் திருமணம் : இதில் மணமகளை பலாத்காரமாகவோ (அ) மோசம் செய்து ஏமாற்றியோ திருமணம் செய்து கொள்வது பைசாசத் திருமணம் ஆகும்.
பிரம்ம, தெய்வ, அர்ஷத் திருமணங்களே அனுமதிக்கப்பட்டவை. இத்தகைய திருமணங்களால் பிறக்கும் குழந்தைகள் தம் மூதாதையரை விடுவித்து மகிழ்ச்சி உறச் செய்வர். திருமணமான பெண் கணவனைக் கண்கண்ட தெய்வமாகக் கருதி, அவர் குடும்பத்தினரிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்க வேண்டும்.
பெண்டிர்க்கான கடமைகள்
பொதுவாகப் பெண்கள் கணவனுக்குக் கீழ்ப்படிந்து இருக்க வேண்டும். அவள் அர்த்தாங்கி எனப்படுகிறாள். அத்தகைய கணவன் மனைவியின் குடும்பத்துக்கு இறைவன் அருள் நிச்சயம் கிட்டும். பெண் விடியற்காலையிலேயே எழுந்திருந்து பணியாளர்க்குரிய பணிகளைக் கூறி, அவற்றை மேற்பார்வையிட வேண்டும். வெளியே சென்ற கணவன் சாப்பாட்டு வேளைக்கு வருமுன்பே உணவைத் தயார் செய்து காத்திருக்க வேண்டும். வீட்டைப் பெருக்கி துடைத்தல், பாத்திரங்களைத் தேய்த்தல், அறுசுவை உணவு தயாரித்தல், தயிர் தோய்த்துக் கடைதல் போன்றவை அவளின் முக்கிய கடமைகள். நிலபுலன்கள் இருந்தால் அங்கு நடக்கும் தொழில்களை மேற்பார்வை செய்ய வேண்டும்.
அவர்களுக்கான தடைகள் : தனித்து உட்கார்ந்திருத்தல், அயலார் முன் சிரித்தல், வாயிலில் நின்றிருத்தல், சாலையை நோக்கி இருத்தல், உரக்கப் பேசுதல், ஆண்களுக்கு முன்னே நடத்தல், மிகைச் சிரிப்பு, அக்கம் பக்கமுள்ளவர்களிடம் பொருள்கள் வாங்குதல் கொடுத்தல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. கணவன் இல்லாதபோது தன்னை அழகுபடுத்திக் கொள்ளுதல், நகைகள் அணிதல் கூடாது; வெளியே செல்லக் கூடாது. சென்றாலும் உடனே திரும்பி வரவேண்டும்.
கருவுற்றிருக்கையில் நறுமண நீரில் குளித்தல், பேரொலியுடன் கூடிய சிரிப்பைத் தவிர்த்தல், பிடிக்காதவர்களுக்குத் தூரமாய் இருத்தல், கவலை இன்மை, அபாயத்தைத் தவிர்த்தல் மற்றும் தனித்த இடம் செல்லாமை, மரத்தடியில் தனியாக உட்கார்ந்திருத்தல், தனியே உலாவுதல் (அ) ஆற்றைக் கடத்தல் போன்ற அபாயக் காரியங்களைச் செய்யக்கூடாது. இப்புராணத்தில் விவாகரத்து அனுமதிக்கப்படுகிறது. மனைவி மலடி ஆனால் எட்டாண்டுகளுக்கு பிறகு விவாகரத்து அனுமதிக்கப்படுகிறது. அப்போது அவளிடமிருந்து பெற்ற ஸ்ரீதனம், நகைகள், சொத்து ஆகியவற்றைத் திருப்பித் தந்து விட வேண்டும். மேலும் அவருக்கு ஜீவனாம்சமும் கொடுக்கப்பட வேண்டும்.
இரு மனைவிகள் இருந்தால் இளையவள், மூத்தவளைத் தாயாகவும், அவள் குழந்தைகளைத் தன் குழந்தையாகவும் எண்ண வேண்டும். தன் வீட்டிலிருந்து எது வந்தாலும் அதனை முதலில் மூத்தவளுக்குத் தர வேண்டும். மூத்தவளும் இளையவளைத் தன் மகளாகக் கொள்ள வேண்டும். கணவன் இரண்டு மனைவிகளையும் பொறாமை, பொச்சரிப்பு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், பவிஷ்ய புராணத்தில் இறைவனுக்கு அர்ச்சிக்கும் வெவ்வேறு மலர்கள் வெவ்வேறு பயன் தரும் விவரங்கள் மற்றும் பலவகைப் பாம்புகள் அவற்றால் பலவகையில் உண்டாகும் பாம்புக்கடிகள் பற்றியும் கூறுகிறது.
எதிர்(அ)வருங்காலம் பற்றியதே பவிஷ்ய புராணம்
(இது தனியாக கல்கி புராணம் என்கிற உப புராணம் என்றும் கூறப்படுகிறது. எனவே இனி ஸ்ரீவிஷ்ணு புராணம், ஸ்ரீபாகவத புராணம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள கலியுக தர்மம், கலியின், குணபாவம் கல்கி அவதாரம் ஆகிய செய்திகளை இந்தப் பவிஷ்ய புராணத்திலேயே இணைத்து வெளிவிடுகிறோம். பல புராணங்களில் பல செய்திகள் காணப்படினும் ஒரே வரலாறு பற்றியும் வெவ்வேறு விதமாக கூறப்படுவதால் அவற்றைப் பொருட்படுத்தாதிருத்தல் நலம்.)

10.கல்கி புராணம்
சூதமுனிவர் மற்ற முனிவர்களுக்குப் பகவானின் கல்கி அவதாரம் பற்றிக் கூற ஆரம்பித்தார். ஏ பகவான், உலக நலனைக் குறித்து நீங்கள் கல்கி வடிவில் மீண்டும் அவதரித்துத் துஷ்ட சம்ஹாரம், சிஷ்ட பரிபாலனம் செய்வீராக என்று ஸ்ரீவிஷ்ணுவைப் பிரார்த்தித்தார். அப்போது முனிவர்கள் சூதரிடம் பகவானின் கல்கி அவதாரம் பற்றிக் குறிப்பிடுமாறு வேண்டிட, அவரும் சொல்லலுற்றார். கிருஷ்ண பகவான் தன் சோதிக்கு எழுந்தருளிய பின் கல்கி அவதாரம் எடுத்திருப்பார் என்றார் சூதமுனிவர். அதருமத்தின் வம்சத்தில் குரோதம், (கோபம்) இம்சை இரண்டும் சேர்ந்து உலகை நாசம் செய்யும். அதுவே கலியுகம் என்பர். கிருதயுகத்தில் பகவான் பிரம்மனுக்கு அந்தராத்மாவாக இருந்து கொண்டு அனைத்தையும் எப்படி படைத்தானோ அப்படியே முடிவான கலியுகத்தில் எல்லாவற்றையும் அழிக்கிறார்.
கலியுகத்தில் வருணாசிரமங்கள், அவற்றிற்கான ஆசாரங்கள் தலைகீழாக மாறிவிடும். எல்லாமே தருமத்திற்கு மாறாக நடைபெறும். வல்லான் வகுத்ததே வழியாகும். குணத்தைவிட பணமே முக்கியமாக மதிக்கப்படும். வைராக்கியம் இல்லாவிடினும் எல்லோரும் எல்லா ஆஸ்ரமங்களையும் அவரவர் இஷ்டப்படி அனுசரிப்பர். கலி முற்ற முற்ற பொன், மணி, ரத்தினம் போன்றவை அழிந்து போகும். செல்வமுடையவனே எஜமானன். கலியில் நியாயமற்ற வழியில் பணம் குவிப்பர். பசுவையும், பிராமணனையும் உயர்வாகக் கருதமாட்டார். தேவதா பூஜை, விருந்தினர் உபசாரம் நடைபெறாது. மக்களில் பலர் தாழ்ந்த மனப்பான்மை உடையவர்களாக இருப்பர். பெண்கள் கற்பு பற்றிக் கவலைப்படமாட்டார்கள். மன்னன் மக்களை வருத்தி வரி வசூல் செய்வான்.
பாஷண்டிகள் எங்கும் மலிந்து தோன்றுவர். கலி வளர வளர வாழ்நாள் குறையும். இருபது வயதிலே மரணம் ஏற்படும். மக்கள் மாயையால் மதிமயங்கி ஸர்வேஸ்வரனையும் ஆராதிக்கமாட்டார். மழை, விளைச்சல் குறையும். நாள்தோறும் மக்கள் பாவ காரியங்களையே செய்வர். மும்மலத்தூய்மை இராது. இத்தகைய கலியிலும் ஒருவன் சிறிது முயற்சி கொண்டு பகவந் நாம சங்கீர்த்தனம் முதலிய செயல்களால் பெரும் புண்ணியம் பெறுவான். மகரிஷிகள் கலியுகத்தைப் பற்றி மேலும் பல ஐயப்பாடுகள் எழுப்ப அவற்றைப் பற்றியும் விளக்குகிறார் முனிவர். சூத்ரன் நல்லவன், கலியுகம் நல்லது, பெண்கள் நல்லவர் என்று கூறி தான் கூறியவற்றை விளக்குகிறார்.
1. சிறிய தருமமும் பெரிய பலனை அளிக்கும். இந்த தர்மத்தை எளிதில் அனுஷ்டிப்பவன் சூத்திரன். அவனே அறிவாளியும்கூட. கிருதயுகத்தில் புண்ணிய கர்மாவுக்குப் பலன் பத்து ஆண்டுகளிலும் அதையே திரேதா யுகத்தில் செய்தால் ஒரே வருடத்திலும், துவாபர யுகத்தில் செய்தால் ஒரே மாதத்திலும், கலியுகத்திலும் ஒரே நாளிலும் பலன் தரும். எனவே கலியுகம் சாது அதாவது நல்லதாகும். கலியுகத்தில் ஹரிநாம சங்கீர்த்தனம் செய்தே அனைத்தையும் எளிதில் பெறலாம்.
2. வேளாளர்கள் தமக்கு மேற்பட்ட வர்ணத்தினருக்குப் பணிவிடை செய்தே எளிதில் நற்கதி அடைய முடிகிறது. அவர்களுக்கு நியமங்கள் கிடையாது. எதையும் உண்ணலாம், அருந்தலாம். கட்டுப்பாடு எதுவும் கிடையாது. எனவே வேளாளர் (சூத்திரர்கள்) நல்லவர்.
3. பெண்கள் எவ்வித வருத்தமும் இன்றி தம் கணவர்களுக்குப் பணிவிடை செய்து மும்மனத் தூய்மையோடு நடந்து கொள்வதன் மூலம் அவர்கள் அடையும் புண்ணிய லோகங்களை எளிதில் பெறுவதால் பெண்கள் நல்லவர்கள் என்றார்.
அடுத்து எல்லா பூதங்களுக்கும் உண்டாகும் அழிவாகிய பிரளயம் பற்றிக் கூறுகிறார். அது மூன்று வகைப்படும். கல்பத்தின் முடிவில் பிரம்மனால் உண்டாவது நைமித்திக பிரளயம் பிரம்மனின் ஆயுள் முடிந்து, பிரகிருதியில் கார்யவர்க்கங்களுக்கு ஏற்படும் லயம் பிராகிருத பிரளயம். மோக்ஷம் என்பது ஆத்யாந்திக பிரளயம் எனப்படும்.
கல்கி அவதாரம்
உலக நிலைமைக்கும், தேவலோக நிலைகளுக்கும் அஞ்சிய தேவர்கள் பிரம்மனிடமும் திருமாலிடமும் சென்று முறையிடுவர். அப்போது ஸ்ரீவிஷ்ணு பிரம்மனிடம் சம்பளம் என்ற ஊரில் விஷ்ணுயசஸ் என்பவரின் மனைவியாகிய ஸுமதியின் புத்திரனாகத் தோன்றப் போவதாகவும், அவருடைய மூன்று சகோதரர்களுடன் கூடி கலியினாலுண்டான துன்பத்தைத் துடைத்து தருமத்தை நிலை நாட்டுவதாகவும் கூறி, தேவர்களையும் தனக்குப் பந்துக்களாக அவதரிக்குமாறும் கூறினார். மகாலக்ஷ்மி ஸிம்மள தேசத்தில் பிருஹத்ரதன் என்ற மன்னன் பட்ட மகிஷி சோளமுகிக்குப் பெண்ணாகப் பிறப்பாள். பத்மா என்று வளரும் அவளைத்தான் மணக்கப் போவதாகவும் கூறினார். மேலும் மரு, தேவாபி என்ற அரசர்களைப் பிரதிஷ்டை செய்வதாகவும், திரும்பவும் கிருதயுகத்தையும் நான்கு பாதங்களுடன் கூடிய தருமத்தையும் பூமியில் நிலைநாட்டி கோலோகம் என்னும் வைகுந்தம் அடைவேன் என்றார். பின்னர் பகவான் பூவுலகில் ஸுமதிக்கு மகனாய் வைகாசி மாதம், சுக்கில பக்ஷ துவாதசியில் கல்கியாக அவதரிப்பார். பிறந்த குழந்தைக்குக் கல்கி எனவே பெயர் வைப்பர்.
கல்கி அவதாரம் கண்டு களித்துத் தேவர்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திடுவர். பிராம்மணர்கள் பரமசந்தோஷம் அடைவர். கல்கி வளர்ந்து உரிய காலத்தில் உபநயனம் செய்து கொண்டு குருகுலவாசம் ஆரம்பிப்பார். பரசுராமரிடம் கலைகளையும், கல்வியும் பெற்றார். குருவுக்கு வேண்டும் தக்ஷிணை அளிக்கக் கேட்டபோது பரசுராமர் தனது சிஷ்யனாகிய கல்கி பகவான் செய்யப்போகும் நல்ல கர்மாக்களால் பரம சந்தோஷமடைவதாகவும், இனிய யஜ்ஞ யாகாதிகள், தானம், தவம் முதலிய காரியங்கள் நடைபெறும் என்றும் அவையே கல்கி தனக்கு அளிக்கும் தக்ஷிணையாக கருதுவதாகவும் கூறி கல்கியை பில்வேதகேச்வாம் என்ற திருத்தலத்துக்கு அனுப்பி வைப்பார். கல்கி அங்ஙனமே பரமசிவனைத் துதி செய்ய, சிவபெருமான் அவருக்கு இஷ்டமான உருவை எடுக்கவும், இஷ்டமான இடத்திற்குச் செல்ல உதவும் காருட அசுவத்தையும், அஸ்திரம், ஸகஸ்ர நாமங்களையும் அருளினார். மேலும் பூபாரத்தைக் குறைக்கக் கூடியதும், ரத்னமயமான பிடி உள்ளதும், நிறைந்த தேஜஸ் உள்ளதும் மிக்கக் கூர்மை உடையதுமான கத்தியையும் அளிப்பார். பகவான் கல்கி அசுவத்தின் மீது அமர்ந்து சம்பல கிராமத்திற்கு திரும்புவார்.
விசாகபூபன் எனும் அரசன் பகவானுடைய அவதாரத்தின் மகிமையை உணர்ந்து தர்மசீலனாக மாறுவான். அவன் கல்கியைத் தரிசிப்பதற்காக விரைந்து வருவான். அப்போது கல்கி சந்திர குலத்தில் தோன்றிய தேவாயியையும், சூர்ய குலத்தோன்றல் மருவையும் அரசர்களாக ஆக்கி கிருதயுகத்தை ஆரம்பித்துவிட்டு தன் சோதிக்கு எழுந்தருளப் போவதாகவும் உரைத்தார். கலியை அழிப்பதற்காக அவதரித்த கல்கி பகவான் தனது பரிஷத் கணங்களுக்கு மகிழ்ச்சியை உண்டுபண்ணி மிக அழகாக சத்தர்மங்களை எடுத்துரைப்பார். சிவனால் கொடுக்கப்பட்ட கிளி ஒருநாள் கல்கியிடம் வந்து சிம்ஹலத் தீவை ஆளும் பிருஹத்ரதனுக்கு பத்மா எனும் ஒரு அழகிய பெண் இருக்கிறாள். அவளை உமாமகாதேவன் ஒருநாள் பிரசன்னமாகி நாராயணனே அவருக்குக் கணவர் ஆவார் என்று கூறினார் எனச் சொல்லும். சிம்மன நாட்டில் பத்மாவின் சுயம்வரத்துக்கு ஏற்பாடு நடக்கும். கிளி கூறியதைக் கேட்டு கல்கி பகவானுக்கும், பத்மாவுக்கும் இடையே கிளி தூது செல்லும். இனி தூது வெற்றியாக பகவான் பத்மா இருக்கும் ஊருக்கு வந்து சேருவார். இனி பத்மாவுடன் செய்தி கூறி இருவரையும் சேர்த்து வைக்கும் ஏற்பாடுகள் நடக்கும்.
பத்மாவின் தந்தை கல்கி பகவானை அரண்மனைக்கு அழைத்துச் சென்று ஸ்வர்ண வேதியில் அமரச் செய்து வேதோகித விற்பன்னர்கள் முறைப்படி சடங்குகள் செய்ய பிரம்மா கூறியவண்ணம் பத்மா-கல்கி பகவான் திருமணம் இனிது நடைபெறும். கல்கி பத்மாவுடன் சம்பளம் வருதல், விசுவகர்மா நகரம் அரண்மனை அமைத்தல், க்ஞாதி பந்து சேனைகளுடன் புத்த ஜைனர்களை ஜயித்தல், ஹரித்வாரத்தில் ரிஷிகள் கல்கியை சந்தித்தல், சந்திர, சூர்ய வமிச வர்ணனை, ஸ்ரீராம சரிதம், தேவாபியும், மருவும் கல்கியுடன் வருதல் நடைபெறும். திக்விஜயம், கோகவிகோசர்கள் வதம், பல்லட தேசயாத்திரை, ஸுசாந்தையின் பக்தி, கல்கியை வீட்டிற்குத் தூக்கிச் செல்லல், தர்மமும் கிருதயுகமும் வருதல், ரமா, கல்கி விவாஹம், சசித்வஜனுக்கு மோக்ஷம், அரசர்களுக்கு அரசைப் பகிர்ந்தளித்து பட்டாபிஷேகம் செய்தல் நடக்கும்.
வைகுந்தம் அடைதல்
சம்பள நகரில் பற்பல யாகங்கள் நடைபெறுதல், விஷ்ணு யசஸ்ஸிற்கு மோக்ஷ வழி காட்டல், க்ருதமும், தருமமும் உலகில் பரவுதல், தேவர்கள் பிரார்த்தனை, வைகுண்டம் பகவான் செல்லுதல் ஆகியவை நடைபெறும்.

11.கலியுக அரச பரம்பரைகள்
வருங்கால வருணனையில் கலியுக அரச பரம்பரைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மச்ச புராணம், வாயு புராணங்களிலும், மற்ற புராணங்களிலும் இதைப்பற்றி கூறப்பட்டிருப்பினும் முக்கிய அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட செய்திகள் பவிஷ்ய புராணத்தில் கூறப்பட்டுள்ளவையே.
1. பவுரவ வம்சம் : அர்ச்சுனன், அவன் மகன் அபிமன்யு பரம்பரையில் வந்த அதிசிம்ம கிருஷ்ணனின் மகள் நிசாக்ஷீ ஹஸ்தினாபுரத்தைக் கங்கை கொள்ள தலைநகரைக் கவுசாம்பிக்கு மாற்றுவாள். இவ்வாறே புருவம்சத்தில் 25 மன்னர்கள் ஆண்டு வருவர். இது பவுரவ வம்சம் எனப்படும்.
2. இஷ்வாகு வம்சம் : இந்த வமிசத்தில் வந்தவர் சுத்தோதனர். அவர் மகன் சித்தார்த்தன், அவர் மகன் ராகுலன் என்று பலர் ஆண்டுவர சுமித்ரா என்ற மன்னருடன் இக்குலம் முடிவு பெறும்.
3. பர்ஹத்ரதர்கள் (அ) பிருஹத்ரதர்கள் : இந்தப் பரம்பரையில் பதினாறு பேர் ஆட்சி புரிவர்.
4. பிரத்யோதர்கள் : இந்தப் பரம்பரையைச் சார்ந்த ஐந்து மன்னர்கள் அரசாளுவர்.
5. சிசுநாக வம்சம் : திரிவ்ராஜ என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு சிசுநாகர் ஆண்டுவருவார். இதேப் பரம்பரையில் பத்து மன்னர்கள் ஆட்சி புரிவர்.
6. நந்தர்கள் : மாகபத்ம நந்தரால் தோற்றுவிக்கப்பட்ட கிருதவம்சம் 100 ஆண்டுகள் ஆட்சிபுரியும்.
7. மவுரிய வம்சம் : நந்தர்கள் க்ஷத்திரியர்கள் அல்லர் வேளாளர் மரபினர். நந்த வம்சத்தை நிர்மூலமாக்கி மூரா என்பவளின் மகளைச் சாணக்கியன் என்னும் அந்தணர் அரசனாக்குவார். இவரது வம்சம் மவுரிய வம்சம். இதில் புகழ்பெற்றவர் அசோகர். மவுரிய வம்சத்தைச் சார்ந்த 9 மன்னர்கள் ஆட்சி புரிவர்.
8. சுங்க வம்சம் : புஷ்ய மித்திர சுங்கரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த வம்சத்தினர் 112 ஆண்டுகள் ஆட்சி புரிவர்.
9. கண்வ வம்சம் : இவர்கள் அந்தணர்கள். 45 ஆண்டுகள் ஆட்சி புரிவர்.
(மேலே கூறப்பட்டவை வடஇந்திய வம்சத்தைச் சார்ந்தவர்.)
10. ஆந்திரர்கள் : ஆந்திர மன்னம் ஸ்ரீமுகன் என்பவர் முதல் மன்னர். இவர்களில் கடைசி மன்னன் புலுமாயி ஆகும். இவர்கள் 460 ஆண்டுகள் நாட்டை ஆள்வர்.
11. குறுநில மன்னர்கள் : பின் சிற்சில சிற்றரசர்கள் ஆங்காங்கே தலை எடுத்து குறுநில மன்னர்களாக ஆட்சிபுரிவர்.

12.விதிஷ வம்சம் : இந்த வம்சத்தில் சில மன்னர்கள் ஆட்சி புரிவர். மேலும் பற்பல அரச பரம்பரையினர் மூன்றாம் நூற்றாண்டில் ஆட்சி புரிவர். (இது பவிஷ்ய காலம்(அ)வருங்கால வரலாறுகள் நடக்கப் போவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே இந்நூலின் ஆசிரியர் வியாசர் தானா? என்ற கேள்வி எழலாம். ஒருவேளை வியாசர் ஞானதிருஷ்டியால் உணர்ந்து இந்நூலை உருவாக்கி இருக்கலாம் எனவும் எடுத்துக் கொள்ளலாம்.)
சூரியனின் வெவ்வேறு நிலைகள்
சூரியனின் வெவ்வேறு நிலைகள் பன்னிரண்டு என்றும் அவை ஒன்றொன்றும் ஆதித்தியர் எனவும் குறிப்பிடுவர். எனவே 12 நிலைகளில் கொள்ளப்படும் ஆதித்தியர்கள் இந்திரன், தாதன், பர்ஜன்யன், புஷன், த்வஷ்டன், அர்யாமன், பாகன், விவஸ்வனன், விஷ்ணு, அம்ஷு, வருணன், மித்திரன் என்ற பெயர்கள் கொண்டவர்.
1. இந்திரன் என்ற பெயரில் கடவுளர்களை ஆட்சி செய்யும் தேவேந்திரன்.
2. உயிரினங்களை உற்பத்தி செய்பவர் தாதன் எனப்படுகிறார்.
3. மேகங்களில் வசித்து மழை பொழியச் செய்வதால் வருணன்.
4. தானியங்களில் நிறைந்திருந்து, உயிரினங்களுக்குப் புஷ்டி அளிப்பதால் புஷர் என்று பெயர்.
5. தாவர வகைகளாகிய மரங்கள், மூலிகைகளில் சூரியன் இருப்பதால் த்வாஷ்டா எனப்படுகிறார்.
6. காற்றாகவும், உயிர்மூச்சாகவும் விளங்கும் சூரியன் அர்யாமன் எனப்படுகிறார்.
7. அனைத்து உடல்களும் இப்புவியில் சூரியன் நிறைந்திருப்பதால் பாகன் என்று பெயர் பெற்றுள்ளார்.
8. அக்கினிதேவனாகி சமைப்பதற்கு உதவுவதால் விவஸ்வனன்.
9. கடவுளர்களில்(அ) தேவர்களின் வைரிகளை அழிப்பதால் விஷ்ணு எனப்படுகிறார்.
10. காற்றில் கலந்திருந்து எல்லா உயிர்களுக்கும் மகிழ்ச்சி ஊட்டுவதால் அம்ஷு எனப்படுகிறார்.
11. உயிர் வாழத் தேவையான நீராக இருப்பதால் வருணன் எனப்பெயர்.
12. சந்திரபாக நதிக்கரையில் ஷம்பா கட்டிய கோயிலில் குடியுள்ளதால் மித்திரன் எனப்படுகிறார்.
இந்த 12 நிலைகளை நன்கு உணர்ந்தவன் சூரியனுடனே வாழ்கிறான். மாதங்கள் 12-லும் சூரியனின் ஒரு நிலை விளங்குகிறது. சித்திரையில் விஷ்ணு, வைகாசியில் அர்யாமர், ஆனியில் அம்ஷு, ஆடியில் விவஸ்வனர், ஆவணியில் பர்ஜன்யர், புரட்டாசியில் வருணர், ஐப்பசியில் இந்திரன், கார்த்திகையில் தாதர், மார்கழியில் மித்திரர், தையில் புஷர், மாசியில் பாசர், பங்குனியில் த்வஷ்டர். எனவே, பன்னிரண்டு மாதப்பெயர்களும் சூரியனுடைய பெயர்களே ஆம். மேலும் ஆத்தியா, ஸவிதா, சூர்ய, மித்ரா, அர்க்கா, பிரபாகரா, மார்த்தாண்ட, பாஸ்கர, பானு, சித்ரபானு, திவாகர, ரவி என்று பன்னிரண்டும் சூரியனது பெயர்களே. இந்த நிலை (அ) வடிவங்கள் ஒவ்வொன்றின் கிரணங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக உள்ளது.
சூரியனின் ரதம் (தேர்)
பிரம்மதேவனே சூரியனின் தேரைத் தங்கத்தால் செய்தார். இதன் ஓட்டி அருணன் ஆவான். இந்தத் தேரை காயத்திரி, தரிஷ்ருப, ஜகதி, அனுஷ்டுப, பங்க்தி, வ்ரிஹதி, உஷ்னிகா என்ற ஏழு குதிரைகள் இழுத்துச் செல்கின்றன.
1. சைத்திரம், வைசாக மாதங்களில் தாதர், அர்யாமர் ஆகிய ஆதித்தியர்களுடன், புலஸ்தியர், புலஹர் என்ற ரிஷிகளும்; தும்புரு, நாரதர் எனும் இரு கந்தர்வங்களும், கிருதர்தாலி, புஞ்சி கஸ்தலா ஆகிய அப்சரசுகளும்; வாசுகி, கசர் என்னும் நாகங்களும்; ஹேதி, பிரஹேதி என்ற இயக்கர்களும் இத்தேரில் பயணம் செய்வர்.
2. ஜேஷ்ட, ஆஷாட மாதங்களில் மித்திரன், வருணன் என்ற ஆதித்தியர்களும்; அத்திரி, வசிஷ்ட முனிவர்களும்; ஆஹா, ஊஹு என்ற கந்தர்வர்களும்; மேனகா, ஹைஜன்யா என்ற அம்சரசுகளும், தக்ஷன், அனந்தன் என்ற நாகங்களும்; பவுருஷேயன், புதன் என்ற அரக்கர்களும் தேரில் சஞ்சரிப்பர்.
3. சிராவணம், பத்ரம் என்ற இரு மாதங்களில் இந்திரன், விவச்வனன் என்ற ஆதித்தியர்களும்; ஆங்கிரஸ, பிருகு ரிஷிகளும்; விச்வாவசு, உக்கிரசேனன் என்கிற கந்தர்வர்களும்; பிரமலோ சண்டி, அனுமோசேலா சண்டி என்ற அப்சரசுகளும், இளபத்திவி, சங்கபாலா என்ற நாகங்களும்; சர்ப்ப, வியாக்கிர எல்லா அரக்கர்களும் சூரியனது தேரில் பயணம் செய்வர்.
4. அச்வினி, கார்த்திகை மாதங்களில் பர்ஜன்யர், புஷ்யர் என்ற ஆதித்தியர்களும்; பரத்துவாஜ, கவுதம ரிஷிகளும்; சித்திர சேனா, ருசி என்ற கந்தர்வர்களும்; பிச்வாசி, கிரிதாச்சி என்ற அப்சரசுகளும்; விச்ருதி, தனஞ்கய என்ற நாகங்களும்; அப, பட என்ற அரசர்களும் சூரியனது தேரில் பயணம் செய்வர்.
5. அக்ரஹயாணம், பவுஷ மாதங்களில் அம்சம், பாகம் என்ற ஆதித்தியர்களும்; காசியபர், கிரது முனிவர்களும்; சித்திர கபி, உர்ஹை என்ற கந்தர்வர்களும்; புரவச்சிதி, ஊர்வசி என்ற அப்சரசுகளும்; த்ரிக்ஷ்ய, அரிஷ்டேமி என்ற நாகங்களும்; அவஸ்புர்ஜ, வித்ஹதி என்ற அரசர்களும் சூரியனது தேரில் பிரயாணம் செய்வர்.
6. மாகம், பால்குணம் மாதங்களில் த்வஸ்த, விஷ்ணு ஆதித்தியர்களும், ஜமதக்கினி, விசுவாமித்ர முனிவர்களும், திருதராஷ்ட்ர, வர்ச கந்தர்வர்களும், திலோத்தமை, ரம்பை அப்சரசுகளும், காத்ரவேய, கம்பலஷ்வடரா நாகங்களும்; பிரம்ம ப்ரோதர், யக்ஷப்ரோதர் ராக்ஷசர்களும் சூரியனது தேரில் பயணம் செய்வர்.

13.சாக த்வீபம்
இப்புவி ஏழு த்வீபங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை ஜம்பு த்வீபம், பில க்ஷவீபம், சால்மல த்வீபம், குச த்வீபம், கிரவுஞ்ச த்வீபம், புஷ்கர த்வீபம், சாக த்வீபம் ஆகும். ஜம்பு த்வீபத்தில் பாரத வர்ஷம் உள்ளது. சாக த்வீபம் தயிர்க்கடலால் அதாவது தஹி சமுத்திரத்தால் சூழப்பட்டுள்ளது. இங்குள்ள நகரங்கள் புனிதமானவை. இங்குள்ள மக்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர். இந்தப் பகுதியின் ஆட்சியில் நோய், பஞ்சம், முதுமை காணப்படாது. பனி மூடிய ஏழு மலைகளும், அவற்றைச் சுற்றி ரத்தினக் கற்களும் ஏராளமாக கிடைக்கின்றன. இங்கு பாயும் ஏழு ஆறுகளில் விலையுயர்ந்த கற்கள் கிடைக்கின்றன.
1. மேரு மலையில் முனிவர்களும், கந்தர்வர்களும் வசிக்கின்றனர்.
2. உதயம் மலையின் சிகரம் பொன் முடிபோல் இருக்கும்.
3. மஹாகிரியில் ஏரிகள் ஏராளம்
4. ரைவதக மலையில் ரேவதி நக்ஷத்திரம் எப்போதும் காணப்படும்.
5. ஷியாமமலை கருநிறமாக இருக்கும். இத்தீவின் சொர்க்கம் ஆகும்.
6. அந்தகிரி வெள்ளியைப் போல் மின்னும்.
7. அம்பிகேயா பனியால் மூடப்பட்டுள்ளதால் மனித நடமாட்டம் இல்லை. ஷக என்ற மரங்கள் நிறைந்திருப்பதால் இதற்கு ஷக த்வீபம் என்று பெயர் கொண்டது. இதில் பல தெய்வங்களும், கந்தர்வர்களும் நிறைந்துள்ளனர்.
சாக த்வீபத்தில் ஷிவஜல (அ) அனுப்தா, குமரி (அ) வாசவி நந்தா (அ) பார்வதி, ஷிவேதிகா (அ) பார்வதி, இக்ஷு (அ) கிரது; தேனுகா (அ) மிருது; மேலும், ஒன்றாக ஏழு ஆறுகள் உள்ளன. இவை புனிதமானவை என்பதால் கங்கை என்றே குறிப்பிடப்படும். இங்கு வசிப்பவர்கள் மகர்கள், மதகர்கள், கனகர்கள், மண்டதர்கள் என்று நான்கு பிரிவினர். இங்குள்ளவர்கள் சூரியனை முழு முதற் கடவுளாக வணங்குவர். சூரியனை முன்னிட்டு உபவாசமும், விரதங்களும் இருப்பர். சூரியன் அருள்பெற்றவர் இவர்கள். இது பாற்கடலால் சூழப்பட்டுள்ளது. (மன்வந்தரங்கள் என்ற பகுதி-விஷ்ணுபுராணத்தில் காண்க) இந்த பவிஷ்ய புராணம் சூரியனைப் பிரதான கடவுளாகப் பேசுவதால் இது மற்ற புராணங்களிலிருந்து வேறுபட்டிருக்கிறது.
இதில் பலவித விரதங்கள், தானங்கள் போன்றவை அதிகமாக விளக்கப்படுகின்றன.)
பவிஷ்ய புராணம் முற்றிற்று.

Related Articles

  • Bhavisya Purana-1
    Bhavisya Purana-1
    முன்னுரை: பதினெண் புராணங்கள் வரிசையில் ஒன்பதாவது பவிஷ்ய புராணம். இதனை பவிஷ்யத் புராணம், பவிஷ்ய புராணம், பவிஷ்யோத்தர புராணம் என்று பலவாறாகக்…