Bhrama Vaivartha Purana-1

1.தோற்றுவாய்: பிரம வைவர்த்த புராணம் ஒரு ராஜஸிக புராணம். மேலும், பிரமாண்ட புராணம். மார்க்கண்டேய புராணம், பவிஷ்ய புராணம், வாமன புராணம், பிரம்ம புராணம் ஆகியவையும் ராஜஸிக புராணங்களே. இது பிரம்ம காண்டம், பிரகிருதி காண்டம், கணேச காண்டம், ஸ்ரீகிருஷ்ண காண்டம் என்று நான்கு காண்டங்களைளக் கொண்டது. பிரம வைவர்த்த புராணம் ஏன் அப்பெயர் பெற்றது. அது பிரமனைப் பற்றியும், அவருடைய வைவர்த்தம் (பரிணாம வளர்ச்சி) பற்றியும் விவரிக்கிறது. இது 18,000 ஸ்லோகங்கள் கொண்டது. ஸ்ரீகிருஷ்ண ஜன்ம காண்டத்தில் பிரம்மாவின் சகுணம், நிர்க்குணம் இரண்டையும் விவரிக்கிறது. இப்புராணம் கிருஷ்ணன் பிரம்ம கல்பத்தில் சிருஷ்டியை எப்படி விரிவாக்கினார் என்று விவரிக்கிறது. கல்விக்கதிபதி சரசுவதியைக் காமதேனு எனக் கொண்டால் சுருதிகள் (வேதக்ரந்தங்கள்) கன்றுகள் ஆகும். பிரம வைவர்த்த புராணம் பால் ஆகும். வேதவியாசர் அந்தப் பசுவிலிருந்து அதைக் கறந்து எடுத்தார்.
பிரளயத்தினால் பாதிக்கப்பட்ட அறியாமை மிக்க மக்கள் இடைவிடாது பாயும் இந்த இனிய பாலைக் குடிக்கச் செய்தார். இந்த பிரம வைவர்த்தக புராணத்தைச் சூதமுனிவர் முனிவர்களுக்கு நைமிசாரண்யத்தில் கூறலானார். முதல் காண்டத்தில் கடவுளர்கள், மனிதர்கள் பற்றியும்; இரண்டாம் காண்டத்தில் கடவுளர்கள், தேவிகள், அவர்களை வழிபடும் முறை மற்றும் பலவித சொர்க்கங்கள், நரகங்கள், நோய்கள், நிவாரண வழிகள் என்பவையும்; மூன்றாவது காண்டத்தில் கிருஷ்ணாவதாரம், கிருஷ்ண லீலைகள் பற்றியும் விவரிக்கப்படுகின்றன.

2.படைப்பு
உலக அழிவான பிரளயத்தின் போது பூலோகம், சொர்க்கலோகம் இவை இரண்டிற்கும் அவற்றிற்கும் விண்ணுலகுக்கும் இடைப்பட்ட புவர் லோகம் ஆகிய மூன்றும் அழிந்தன. இவற்றிற்கு மேல் ஸ்ரீ லக்ஷ்மியும், நாராயணனும் உறையும் வைகுந்தலோகம். சிவலோகம் காலியாக இருந்தன. ஆனால் கிருஷ்ணனின் கோலோகம் (கோ-பசு) மட்டும் சிருஷ்டியின் போது, அழிவின் போதும் மாற்றம் ஏதுமின்றி விளங்கியது. இப்புராணம் கிருஷ்ணனைப் பற்றியே உயர்வாகக் கூறுவதால் கிருஷ்ணனே பரப்பிரம்மம் என்கிறது. எனவே, கிருஷ்ணனது இடம் கோலோகம் என்றும், விஷ்ணுவினது வைகுந்தம் என்றும் வேறுபடுத்திக் கூறுகிறது. கோலோகம் கிருஷ்ணன் ஒளிமிக்கதாய் அணி பெற்றதால் அதிசயமாகப் பிரகாசமாய் விளங்குகிறது. மஞ்சள் நிறம் கொண்டு குழல் கொண்டதாய் காணப்பட்டது. சந்தனம் பூசி, கவுஸ்துப மணியுடன், ஸ்ரீவத்ஸ மறுவுடன் தோன்றிற்று. முடி தரித்து ரத்தின கசித மயமான அரியணையில் அமர்ந்திருந்தது. காட்டு மலர்களாலான மாலை அணிந்து வனமாலி எனப்பட்டது என்றும் இளமையுடன் கோபாலனாக (இடையனாகத்) தோற்றமளித்தது. என்றும் அழியாப் பிரம்மம் பரமாத்மா என்றும் கூறப்படுகிறது.
சிருஷ்டி
கிருஷ்ணனின் இச்சைப்படி இருண்டு நீர், காற்று இன்றி இருந்த அண்டம் சிருஷ்டிக்கப்பட்டது. கிருஷ்ணன் வலது புறத்திலிருந்து நாராயணன் தோன்றினார். சத்துவ குணம் நிறைந்தவராய் கைகளில் சங்கு, சக்கரம், கதை, தாமரை மலர், கவுஸ்துபம், வில் கொண்டு தோற்றம் உண்டாயிற்று. நான்கு கரங்களுடன் நீலநிறம் கொண்டிருந்தான் நாராயணன். நாராயணன் கிருஷ்ணனைப் போற்றி எதிரில் ஆசனத்தில் அமர்ந்தான். அடுத்து கிருஷ்ணனின் இடதுபுறத்திலிருந்து தாமச குணத்துடன் கூடிய மூன்று கண்களுடன், சடாமுடியுடன் திரிசூலம் ஏந்தியவராய் சிவன் தோற்றுவிக்கப்பட்டார். கிருஷ்ணனின் நாபியிலிருந்து தாமரையில் பிரம்மன் தோன்றினான். அவன் ராஜஸ குணம் நிறைந்தவன். முதியவனாய், வெள்ளை முடியுடன் வெண்ணிற ஆடை அணிந்து, கையில் கமண்டலம் ஏந்தி நான்கு முகங்களுடன் தோன்றினான். இருவரும் கிருஷ்ணனைப் போற்றி எதிரில் அவர்களுக்கான இருக்கையில் அமர்ந்தனர்.
கிருஷ்ணனின் மார்பிலிருந்து யமதர்மராஜன் தோன்றினான். மேற்கூறப்பட்ட நால்வரும் கிருஷ்ணனைத் துதி செய்து அவர்களுக்கான இருக்கையில் அமர்ந்தனர். கிருஷ்ணன் வாயிலிருந்து வெள்ளாடைகளை உடுத்தி, வீணையும் புத்தகமும் ஏந்தியவளாய் சரசுவதி தோன்றினாள். கிருஷ்ணனின் மனதிலிருந்து பொன்னிற மகாலக்ஷ்மி தோன்றினாள். ராஜசகுணம் கொண்ட அவள் சுவர்க்கத்தில் சுவர்க்கலக்ஷ்மி என்றும், மன்னர்களுக்கு ராஜலக்ஷ்மி என்றும் தோற்றம் அளித்தாள். கிருஷ்ணனின் எண்ணத்திலிருந்து போர்த் தேவதையான துர்க்கைத் தோன்றினாள். இவ்வாறே கிருஷ்ணனின் நாவிலிருந்து மந்திர தேவதையான சாவித்திரியும், மனக்காட்சியிலிருந்து காதல் தேவன் மன்மதனும் மன்மதனின் இடப்பக்கத்திலிருந்து அவன் மனைவி ரதிதேவியும், தோன்றிய பின் அக்கினி, வருணன், வாயு ஆகியோரும் அவர்களது மனைவியராகிய ஸ்வாஹா, வருணனி, வாயவி ஆகியோரும் படைக்கப்பட்டனர்.
அடுத்து கிருஷ்ணனிடமிருந்து பேரண்டம் தோன்றியது. அவ்வமயம் எங்கும் நீர் மயம். அந்த அண்டம் நீரில் மிதந்தது. அதிலிருந்து ஒரு பெரிய உருவம் தோன்றியது. அதுவே மகாவிஷ்ணு. மகாவிஷ்ணுவின் காதுகளிலிருந்து மது, கைடபன் என்ற இரண்டு ராக்ஷசர்கள் தோன்றினர். அவர்கள் தோன்றிய உடனே பிரம்மாவைக் கொல்லப் போக நாராயணன் அவர்களை தொடைகளுக்கு இடையில் நசுக்கிக் கொன்று அவர்கள் உடல் கொழுப்பிலிருந்து நிலவுலகைத் தோற்றுவித்தார். (மேதா-கொழுப்பு) எனவே பூமி மேதினி எனப்படுகிறது. (கிருஷ்ணன் புகழ்பாடும் இந்தப்புராணம் எல்லாம் கிருஷ்ணனே என்பதால் சிருஷ்டி விவரமும் மாற்றிக் கூறப்பட்டுள்ளது.)
காலம் உருவாதல்
கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று யுகங்கள் நான்கு. இவை நான்கும் சேர்ந்து மகாயுகம் எனப்படும். 360 மகாயுகங்கள் ஒரு திவ்ய யுகம் (இது கடவுளர்களுக்கு (அ) தேவர்களுக்கு ஒரு யுகம்) 71 திவ்யயுகங்கள் சேர்ந்தது ஒரு மன்வந்தரம். 14 மன்வந்தரங்கள் சேர்ந்து பிரம்மாவுக்கு ஒருநாள். அத்தகைய 360 நாட்கள் சேர்ந்து பிரம்மாவுக்கு ஓர் ஆண்டு. அத்தகைய 108 ஆண்டுகள் கிருஷ்ணனுக்கு ஒரு நிமிடம் (அ) கல்பம் எனப்படும். இவ்வாறு பல கல்பங்கள், பிரம்ம கல்பம், வராகக்கல்பம், பத்ம கல்பம் போன்றவை. பிரம்ம கல்பத்தில் மது கைடபர்களின் உடலிலிருந்து பூமி தோற்றுவிக்கப்பட்டது. வராகக் கல்பத்தில் உலகம் காணாமல் போகத் திருமால் வராகவதாரம் எடுத்து அதை மீட்டார். பத்ம கல்பத்தில் பிரம்மா திருமால் உந்திக்கமலத்தில் தோன்றி பூலோகம், புவர்லோகம், சுவர்லோகங்களைச் சிருஷ்டித்தார்.
படைப்பு தொடர்கிறது
கோலோகத்தில் உள்ளது ராச மண்டபம். கிருஷ்ணன் அங்கிருந்த போது அவருடைய இடது பக்கத்திலிருந்து தோன்றினாள் ராதை. (ராதையைப் பற்றி பத்மபுராணம், பிரம வைவர்த்த புராணம் மட்டுமே கூறுகின்றன. மற்றவையில் விவரம் இல்லை). ராதையின் மயிர்க்கால்களிலிருந்து ஆயிரக்கணக்கான கோபிகைகள் தோன்றினர். கிருஷ்ணன் உடல் துளைகளிலிருந்து கோபாலகர்கள் தோன்றினர். கால்நடைகள் எனப்படும் பசு, எருது, கன்றுகள், குதிரைகள், சிங்கங்கள், அன்னங்கள் எல்லாம் கிருஷ்ணனின் உடலிலிருந்தே தோன்றின. சிவனுக்கு எருதுவும், பிரம்மாவுக்கு அன்னமும், தர்மனுக்கு ஆண்குதிரையும், துர்க்கைக்கு சிங்கமும் பரிசளிக்கப்பட்டன. ஐந்து அதிசயத் தேர்கள் தோன்ற ராதை, நாராயணன் ஆகியோருக்கு இரண்டும், மற்ற மூன்று கிருஷ்ணனுக்கும் சேர்ந்தன.
கிருஷ்ணன் உடலிலிருந்தே குபேரனும், குபேரனிலிருந்து அவன் மனைவி மனோரமாவும் தோன்றினர். மேலும், கிருஷ்ணனின் உடல் பகுதியிலிருந்தே குஹ்யகர்கள் என்ற குபேரனுடைய சேவகர்களும், சிவபெருமானின் சேவகர்களாகிய பூதங்கள், நாராயணின் சேவகர்களாகிய பர்ஷுவதர்களும் தோன்றினர். கிருஷ்ணனின் ஏற்பாட்டின்படி மகாலக்ஷ்மியும், சரசுவதியும் நாராயணனையும், சாவித்திரி பிரம்மாவுக்கும், ரதி மன்மதனுக்கும், மனோரமா குபேரனுக்கும் திருமணங்கள் நடந்தன. ஆனால், துர்க்கையைச் சிவனுக்கு மணம் செய்விக்க முற்பட்டபோது அவள் அதை மறுக்க, அவளை துறவியாக இருக்க கிருஷ்ணன் அனுமதித்தார். ஆனால், பல கல்பங்களுக்குப் பிறகு துர்க்கையை மணந்தார். அதுவரை அவள் கிருஷ்ணனுடனேயே இருந்தாள். அடுத்து, கிருஷ்ணன் பிரம்மாவுக்கு ஓர் அழகிய மாலையை அணிவித்து, தவம் இயற்றுமாறு ஆணையிட்டு அதன்பின் படைப்புத் தொழிலைச் செய்யக்கூறி, கோபிகைகள், கோபாலர்களுடன் பிருந்தாவனம் சென்றார்.

3.பிரமன் படைத்தவை
கிருஷ்ணன் சொற்படி பிரமன் உலகைப் படைத்தார். அடுத்து சுமேரு, கைலாயம், மலயம், ஹிமாலயம், உதயசலம், அஷ்டாசலம், சுபேலம், கந்தமாதனம் என்று மலைகளாய் படைத்தார். பல ஆறுகளையும், நகரங்களையும், ஊர்களையும் படைத்தார். லவண, இக்ஷு, சுரா, சர்பி, ததி, துக்த, ஜல சமுத்திரங்களையும், ஜம்புத்வீபம், சுகத்வீடம், குசத்வீபம், பிலக்ஷத்வீபம் என்ற ஏழு நிலப்பிரிவுகளையும் உருவாக்கினார். அடுத்து பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹர்லோகம், ஜனலோகம், தபோலோகம், சத்திய லோகம் என்பவற்றையும், அதல, விதல, சுதல, தலாதள, மஹாதள, பாதாள, ரஸதல நரகங்களையும் சிருஷ்டித்தார். இவை அனைத்தும் கூடியே பிரம்மாண்டம் எனப்படும். இவை எல்லாம் மாயா உருவங்களே. விஷ்ணுலோகம், சிவலோகம், கோலோகங்கள் மட்டும் அழியாமல் நிலைத்திருப்பன. பிரம்மனின் மனைவி சாவித்திரிக்கு நான்கு வேதங்கள் தோன்றின. மற்றும் ஆறு ராகங்கள், முப்பத்தாறு ராகிணிகள், கால அளவு ஆகியவை படைக்கப்பட்டன.
பிரம்மனது நாபியிலிருந்து தேவலோகச் சிற்பி விசுவகர்மா தோன்றினார். அடுத்து எட்டு வசுக்கள், சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் என்ற நால்வரைப் படைத்து, உற்பத்தியைப் பெருக்கச் சொல்ல அந்த நால்வரும் கிருஷ்ணனை நோக்கித் தவம் செய்யச் சென்றனர். இதனால் கோபம் கொண்ட பிரம்மனது நெற்றியிலிருந்து தோன்றிய தீயிலிருந்து ருத்திரன் தோன்றினான் (சில புராணங்கள் பதினோறு ருத்திரர்கள் என்று கூறும்).
பிரம்மனது வலது செவியிலிருந்து புலஸ்தியரும், இடது காதிலிருந்து புலஹரும், வலது புறத்திலிருந்து கிரதுவும், வலது நாசித்துவாரத்திலிருந்து அரணியும், இடது துவாரத்திலிருந்து அங்கிரசரும், வலது பக்கத்திலிருந்து பிருகுவும், இடது பக்கத்திலிருந்து தக்ஷனும், நிழலிலிருந்து கர்தமரும், உந்தியிலிருந்து பஞ்சசிக்ஷõவும், மார்பிலிருந்து வதுவும், கழுத்திலிருந்து நாரதரும், புஜங்களிலிருந்து மரீசியும், திரும்ப கழுத்திலிருந்து அபந்தரதமனும், நாவிலிருந்து வசிஷ்டரும், கீழுதட்டிலிருந்து பிரசேதரும், இடது அக்குளிலிருந்து ஹம்சரும், வலது அக்குளிலிருந்து யதியும் தோன்றினர். இவர்களை எல்லாம் உற்பத்தியைப் பெருக்குமாறு பிரமன் கூற, நாரதர் மறுக்க அவரைத் தீய, துராசை உள்ள கந்தர்வனாக பிரம்மத்தைப் பற்றி ஞான மற்றவனாகவும், ஒரு வேலைக்காரிக்கு மகனாகவும் பிறக்குமாறு சபித்தார். பதிலுக்கு நாரதரும் பிரமனுக்கு மரியாதையும், பூஜையும் இல்லாதவாறு சபித்தார். மற்றவர்கள் படைப்பில் இறங்கினர். மரீசிக்குக் காசியபரும், அத்திரிக்குச் சந்திரனும், பிரதேசருக்குக் கவுதமரும், புலஸ்தியருக்கு அகத்தியரும் பிறந்தனர்.

4.மனுவும் சதரூபையும்
பிரமன் சுவயம்புவ மனுவையும், அவன் மனைவி சதரூபையையும் தோற்றுவித்தான். அவர்களுக்குப் பிரியவிரதன், உத்தானபாதன் என்ற இரண்டு புத்திரர்களுடன் ஆகுதி, தேவஹுதி, பிரசுதி என்ற மூன்று புத்திரிகளும் பிறந்தனர். அந்த மூன்று புத்திரிகளும் முறையே ருசிமுனிவர், கார்தம முனிவர், தக்ஷன் என்ற மூவரையும் மணந்தனர். தக்ஷன், பிரசுதி தம்பதியரின் அறுபது புத்திரிகளில் இருபத்தேழு பேர் சந்திரனையும், எண்மர் தர்மராஜனையும், பதினோறு பேர் பதினோறு ருத்திரர்களையும், மற்றுமொரு பதின்மூன்று பேர் காசியப முனிவரையும், மீதி ஒருத்தி சிவபெருமானையும் மணந்தனர். தர்மனின் முதல் மனைவி மிருதி நரன், நாராயணன் என்ற இருவரைப் பெற்றெடுத்தாள். மற்ற மனைவிகள் சந்தோஷம் (திருப்தி) தைரியம் (அமைதி) ஹர்ஷ (மகிழ்ச்சி) போன்றவர்களை பெற்றெடுத்தனர்.
ருத்திரர்களின் புத்திரர்கள் சிவகணங்கள் ஆயினர். சதி சிவனை மணந்தாள். பின்னர், அவள் தக்ஷயஜ்ஞத்தின் போது அக்னிப் பிரவேசம் செய்து உயிரை விட்டு, அடுத்த பிறவியில் இமவானின் மகளாகப் பிறந்து பார்வதி என்ற பெயரில் சிவபெருமானை மணந்தாள். காசியப முனிவர் மனைவியரில் அதிதி தேவர்களையும், திதி ராக்ஷசர்களையும், கத்ரு பாம்புகளையும், வினதா பறவைகளையும், சுரபி பசுக்கள், எருமைகள் ஆகியவற்றையும் சரம நாளுகால் பிராணிகளையும், தனு தானவர்களையும் மற்ற மனைவியர் மற்றவர்களையும் தோற்றுவித்தனர். சந்திரன் தன் மனைவியரில் ரோகிணியை மட்டும் அதிகமாக நேசிக்க, மற்றவர்கள் தந்தை தக்ஷனிடம் முறையிட, அவன் சந்திரனைத் தேய்ந்து போகுமாறு சபிக்க, சிவனருளால் கடைசி கலை திரும்பவும் வளரும் அருள் பெற்ற கதையைப் பல புராணங்களில் காணலாம். அதன் பிறகு தன் மனைவியர் அனைவரையும் சமமாக நடத்தினான்.
பிருகு முனிவரின் மகன் சியவனர், கிரதுவின் மகன்கள் குள்ளமான பாலகில்யர்கள் என்ற முனிவர்கள், ஆங்கீரச முனிவருக்கு பிருஹஸ்பதி, உததிதீயன், சம்பரன் என்போர், வசிஷ்டரின் மகன் பராசரின் தந்தையாகிய சகிரி, பராசரின் மகன் வியாசர், அவர் மகன் சுகதேவன், புலஸ்தியரின் புத்திரர்கள் விஸ்வச்ரவன், குபேரன், அவருடைய மற்ற புத்திரர்கள் இராவணன், கும்பகர்ணன், விபீஷனன் ஆகியோர். புலஹருக்கு வடச்யன், ருசிக்குச் சாண்டில்யன், கவுதமனுக்கு சவர்ணி, பிருஹஸ்பதிக்குப் பரத்வாஜன். இவர்கள் சந்ததியர் அனைவரும் அந்தணர்களே. அவர்கள் காசியப, பரத்வாஜ, வத்ச்ய, சவர்ணி, சாண்டில்ய கோத்திரத்தில் பிறந்தவர்கள். மற்ற அந்தணர்கள் பிரமன் முகத்திலிருந்து தோன்றினர். சூரியன், சந்திரன், மனுவின் புத்திரர்கள் க்ஷத்திரியர்கள், மற்ற க்ஷத்திரியர்கள்; பிரம்மாவின் புஜத்திலிருந்து தோன்றினர். வைசியர்கள் பிரம்மாவின் முழங்காலிலிருந்தும், மற்றவர்கள் பாதத்திலிருந்தும் பிறந்தார்கள் என்பது புராணக்கூற்று. மேலும் பல இனங்கள், வம்சங்கள் பற்றியும் இப்புராணம் கூறுகிறது.

5.உறவு முறைகள்
பிரமன் கூறியவாறு உறவுகள் சொல்லப்படுகின்றன என்கிறது இப்புராணம். அந்த உறவுப் பெயர்கள் அனைத்தும் வடமொழிச் சொற்களாகவே உள்ளன. தாய், தந்தை, பாட்டன், பாட்டி, அத்தை, சித்தி, பெரியம்மா மகன், மகள், கணவன், மனைவி, மாமனார், மாமியார், பேரன், பேத்தி, மருமகன், மருமகள் போன்றன. ஒருவன், உயிர் அளித்தவன், அன்னமளித்தவன், அச்சம் தருபவன், ஆசிரியர் என தொழிலுக்கேற்ப பெயர் பெறுகிறான். பலர் அன்னையின் தாயாராக (பாட்டி) கருதப்படுகின்றனர். பெற்ற தாய், மாற்றாந்தாய், தந்தையின் தாயார், (பாட்டி) தாயின்தாய், அத்தை, சித்தி(அ) பெரியம்மா, எசமான் மனைவி, காப்பார் மனைவி, மற்றும் தாயார் என்று அழைக்கப்படும் பெண்மணிகள் அனைவரும் தாயே. அதாவது தாய்க்குச் சமமாவர். மேலும் நண்பர்கள், பிரியமானவர்கள் என்று பல உறவினர்களையும், நட்பினர்களையும் பொன்னே போல் போற்ற வேண்டும்.

6.உபவர்ஹனன்
கந்தமாதன பர்வதத்தின் மீது, புத்திரப்பேறு இல்லாத கந்தர்வ தம்பதியினர் இருந்தனர். அவர்களுக்குச் சிவனருளால் நாரதர் மகனாக அவதரித்தார். வசிஷ்டர் அவனுக்கு உபவர்ஹனன் என்று பெயரிட்டார். உப (அதிகப்படியான) வர்ஹரன் (பிரார்த்திகை). கந்தர்வ மன்னன் தன் ஐம்பது புத்திரிகளையும், உபவர்ஹரனுக்கு மணம் செய்து வைத்தார். ஒரு சமயம் உபவர்ஹனன் பிரம்மாவைத் தரிசிக்க சென்று சமயம் அங்கிருந்து ரம்பையின் மீது காதல் கொண்டு மணந்தான். இதனால் கோபம் கொண்ட பிரம்மா, நாரதன் உடனே மரிக்குமாறு சபித்தார். உபவர்ஹனனின் முக்கிய மனைவியான மாலவதி, இதனால் மிகவும் கோபம் கொண்டு பிரம்மா, சிவன், யமன் மூவரையும் சபிப்பதாக அச்சுறுத்தினாள். அவர்கள் விஷ்ணுவிடம் முறையிட அவர் ஓர் அந்தண இளைஞன் வடிவில் மாலவதி முன் தோன்றினார். அவர் தேவர்களிடம் உபவர்ஹனுக்கு உயிரளிக்க வேண்டும் என்றார். பிரம்மா நாரதன் உடலின் மீது நீர் தெளித்தார். அவன் புத்துயிர் பெற்றான். சூரியன் கண்பார்வை கொடுத்தார். வாயு பகவான் மூச்சளித்தார். இறுதியில் கிருஷ்ண பகவான் அவன் இதயத்தில் பிரவேசிக்க அவன் உயிர்பெற்றெழுந்தான்.
காலனுக்கு மனைவி மிருத்யுகன்யை அவர்களுடைய புத்திரி ஜரா (முதுமை) பொதுவாக விதி முடிந்தவர்கள் உயிரை யமன் பறித்துச் செல்வான். எனவே ஒருவனுக்கு நோய் உண்டாகிறது. மாலவதி அந்தண இளைஞனிடம் நோய்கள், நோய்க்காரணங்கள் பற்றிக்கூறுமாறு வினவ அந்த இளைஞன் எல்லா நோய்களுக்கும் காரணம் காய்ச்சல். அது அஜீர்ணத்தால் ஏற்படுகிறது. காய்ச்சலுக்கு கபம், வாதம், பித்தம், சிலேட்டுமம் ஆகிய நான்கும் காரணம். நோய்கள் 64 வகைகளாகும். நோய்களின் காரணங்கள், நிவாரணங்கள் பற்றிக்கூறும் சாஸ்திரம் ஆயுர்வேதம். கிருஷ்ணன் சதுர்வேதங்களை இயற்றிய பிறகு பிரம்மா ஆயுர்வேதம் இயற்றினார். அதற்குப் பின் தோன்றிய வைத்திய நூல்கள் அனைத்திற்கும் மூலம் ஆயுர்வேதம் தான்.
ஒருவனுக்கு நோய் வராமலிருக்க செய்ய வேண்டியவை : தூய்மை, தலை, காது, பாதங்களுக்கு எண்ணெய் தேய்த்தல், கண்களைத் தூயநீரால் கழுவுதல், அன்றாடம் உடற்பயிற்சி செய்தல், தண்ணீரில் குளித்தல், சந்தனம் பூசிக்கொள்ளுதல், சரிவிகித உணவு, கட்டுப்பாடுடன் உண்ணுதல், தயிர் சேர்த்துக் கொள்ளுதல் (பகலில் மட்டும்) இவ்வாறு உணவு நியமனம், தூயஉடை, இருப்பிடத்தூய்மை ஆகியவற்றுடன் நல்லொழுக்கம் கொண்டு பாவம் செய்யாதிருத்தல் போன்றவை நோயை அண்டவிடாமல் தடுக்கும். பின்னர் உபவர்ஹனன் இறந்திட்டான். அவன் மனைவி மாலவதியும் அடுத்த பிறவியிலும் உபவர்ஹனனே தனக்குக் கணவனாக வேண்டுமென்று பிரார்த்திக் கொண்டே உயிரை விட்டாள். அடுத்த பிறவியில் மனு வம்சத்தினான சிரிஞ்ஜயன் என்ற மன்னனுக்கு மகளாய்த் தோன்றினாள். அவள் ஒரு ஜதிஸ்மாரை-அதாவது முற்பிறவி விவரம் நினைவில் கொண்டவள். கன்யாகுப்ஜ இராணிகலாவதியின் புதல்வனாக உபவர்ஹனன் பிறந்தான். அவன் பிறப்பதற்கு முன் அந்நாட்டில் பஞ்சம் தாண்டவமாடியது. அவன் பிறந்தவுடன் மழை பொழிய ஆரம்பித்தது. எனவே நீர்கொடுப்பவன் என்ற பொருள் கொண்ட நாரதன் என்ற பெயர் பெற்றான்.

7.நாரதர் வரலாறு
ஓர் அடர்த்தியான காட்டில் நாரதர் கிருஷ்ணனைக் குறித்து தவம் செய்து கொண்டிருக்க, கிருஷ்ணர் அவர்முன் தோன்றி உடனே மறைந்துவிட மிகவும் வருத்தமுற்றான் நாரதன். அப்போது நாரதன் மரணமடைந்து பின் தெய்வீக உருவடையும்போது மறுபடியும் கிருஷ்ணனைக் காணலாம் என்றோர் அசரீரி கூறிற்று. நாரதர் மிகவும் பிரம்மமுடன் இணைந்து விட பிரம்மாவின் சாபம் முடிவுற்றது. நாரதர் உலகில் வாழ்ந்தபோது பிரம்மா அவனை அழைத்து கிருகஸ்தா சிரமத்தில் பிரவேசிக்குமாறு கூற, அது தன் தவத்தைக் கெடுக்கும் என்றார். பிரம்மன் நாரதனுக்கு பிரம்மச்சரியம், கிரகஸ்தியம், வானப் பிரஸ்தம், சந்நியாசம் ஆகியவை பற்றி விளக்கி இல்லறம் ஏற்று ஒரு புத்திரனைப் பெறுதல் அவன் கடமை என்றார். அடுத்து நாரதன் சிவலோகம் சென்று சிவனைத் தரிசிக்க அவர் வாழ்க்கை முறைகள் பற்றி அறிவுரை பகன்றார். மேலும், கிருஷ்ணனைப் பூசித்தலில் சிறந்த வழி சாலக்கிராம பூஜை என்று கூறி பூசை முறைகளையும், உணவுக்கட்டுபாடுகள் பற்றியும் எடுத்துரைத்தார். யமனும் பூசையில் ஆத்மார்த்த பக்தியும், உண்மை உணர்வும் மிகவும் அவசியம் என்றார்.
சிவலோகத்திலிருந்து பதரிக்குச் சென்ற நாரதன் அங்கு நாராயண முனிவரின் ஆசிரமத்தைக் கண்டார். முனிவர் நவரத்தினமய ஆசனத்தில் அமர்ந்திருக்க, அவரைச் சுற்றி அப்சரசுகளும், கந்தர்வர்களும் சூழ்ந்திருந்தனர். நாரதன் முனிவரைக் கண்டதும் அவர் நாரதனை அமரச் செய்து கிருஷ்ணன் வரலாற்றைப் பற்றி விவரித்தார். (நாராயண முனிவர் வேறு. ஸ்ரீமந்நாராயண பகவான் வேறு) (இந்தப் பிரம வைவர்த்த புராணத்தில் பிரமகாண்டம் பகுதி முடிந்தது.)

8.பிரகிருதியின் உருவங்கள்
நாராயண ரிஷி நாரதருக்கு ஐந்து அடிப்படை பிரகிருதி பற்றி விளக்கினார். பிர என்றால் மிகச்சிறந்தது. கிருதி என்றால் உற்பத்தி. எனவே பிரகிருதி என்றால் மிகச்சிறந்த உற்பத்தி என்று பொருள்படும். உற்பத்தியில் தலையாயது பெண் தெய்வங்கள். அவர்களிலும் குறிப்பாக துர்கை, ராதை, லக்ஷ்மி, சரசுவதி, சாவித்திரி மிக முக்கிய வடிவங்கள். மற்ற தேவதைகள் இவர்கள் மூலம் உற்பத்தியாகி இவர்களுடைய அம்சங்களுடன் விளங்குபவை. அவை புனித கங்கை, புனித துளசி, நாகதேவதை மானசை, பிறந்த சிசுக்களுக்கான தேவதை ஷஷ்தி, தேவி மங்களச்சண்டி, காளி வசுந்தரா (பூமி). அடிப்படை பிரகிருதியிலிருந்தே எல்லாப் பெண்களும் தோன்றினர். எனவே பெண்களைத் துன்புறுத்துவது, அவர்களுக்குத் தீமையிழைப்பது, பிரகிருதி தாய்க்கு செய்யும் கொடுமைகள் என அறிதல் வேண்டும். அவர்களுக்கும் அளிக்கும் மரியாதை பிரகிருதி தேவிக்கு அளிக்கும் மரியாதை ஆகும். சக்திக்கு ராஜசம், தாமசம், சத்துவம் என்னும் மூன்று அடிப்படை குணங்கள் உண்டு. பிரகிருதியின் சத்துவகுணம் கொண்ட பெண்மணிகள் நல்லொழுக்கம் கொண்டவராய், கணவனே கண் கண்ட தெய்வமாய் இருப்பவர்.
பிரகிருதியின் ராஜச குணம் படைத்த பெண்டிர் தன்னலம் கொண்டு, வாழ்க்கையின் இன்பங்கள் துய்ப்பதில் நாட்டம் கொண்டவராய் இருப்பர். தாமச குணம் கொண்ட பெண்கள் கூர்மையான நாக்குடையவராய் சண்டை சச்சரவில் ஈடுபட்டும், நம்பிக்கையற்றவராய், கணவனுக்குத் துரோகம் செய்பவர்களாய் இருப்பர். பரமாத்மாவுடன் இணைந்து இருப்பதே பிரகிருதி. அது தனிப்பட்டதல்ல. பிரகிருதி இன்றி பரமாத்மா இல்லை. சிருஷ்டி துவக்கத்தில் கிருஷ்ணர் தன்னில் பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் பிரித்துக் கொண்டார். அந்த அழகிய பெண்வடிவமே பிருகிருதி ஆகும். அவருக்கே ராதை, ராதிக என்ற பெயரும் உண்டு. இப்பகுதியில் ராதை, கிருஷ்ணருக்குச் சிருஷ்டியில் உதவியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இனி பிரகிருதி காண்டத்தில் சரஸ்வதி பற்றிய விவரங்கள். அதாவது பிரகிருதியைப் பூசிக்கும் விரதங்களும் மற்றும் பல கதைகளும் தரப்படுகின்றன.

9.வேதவதியும் சீதாதேவியும்
ஸாவர்ணி என்ற மன்னன் வினயமின்றி இருந்ததால் கோபம் கொண்ட சூரியன் அவனைத் தேசப்பிரஷ்டம் செய்ய, அதனால் கோபம் கொண்ட சிவன் சூரியனைச் சூலத்தால் குத்தமுனைய அவன் பயந்து பிரம்மனை நாட, பிரம்மன், கிருஷ்ணனைச் சரணமடையுமாறு கூற, அவன் சென்று கிருஷ்ணனிடம் சரணடைந்தான். அப்போது அங்கே வந்த சிவனைச் சாந்தமடையச் செய்து கிருஷ்ணன் சூரியன் தந்த சாபத்தின்படி ஸாவர்ணி தேசப்பிரஷ்டம் ஆவான். ஆனால், அவனது மக்கள் நாடாள்வர் என்றார். மேலும் லக்ஷ்மி தேவி அவர்கள் வம்சத்தில் குழந்தையாய் அவதரிப்பாள் என்றார். ஸாவர்ணியின் மகன் விருஷத்வஜன், அவன் குமாரன் ருதுத்வஜன். அவனுக்குத் தர்மத்வஜன், குசத்வஜன் என்று இரண்டு புத்திரர்கள். அவர்களுள் குசத்வஜன், மனைவி மாலாவதியிடம் லக்ஷ்மியின் அமிசமான வேதவதி பிறந்தாள். அவள் பிறந்தபோது வேத ஒலி கேட்டதால் அவள் பெயர் வேதவதி எனப்பட்டது. வேதவதி விஷ்ணுவையே மணக்க வேண்டி புஷ்கரதீரத்தில் பிரம்மனை நோக்கித் தவம் செய்ய பிரம்மா தோன்றி அடுத்த ஜன்மத்திலேயே அந்தப் பேறு கிடைக்குமென ஆசிர்வதித்து மறைந்தார்.
வேதவதி தவம் செய்து கொண்டு இருக்கையில் அங்கு ராவணன் வந்து மோகம் கொண்டு அவளைத் தன்னை மணக்குமாறு வேண்டி பலாத்காரம் செய்ய முயன்றான். அவனுக்கு அதிதி பூஜை செய்ய நினைத்த அவள் மிக்க கோபம் கொண்டு தன் வலிமையால் அவனைத் தடுத்து என்னாலேயே உனக்கு மரணம் ஏற்படும் என்று சபித்தாள். பின்னர் யோக சக்தியால் கங்கையில் குதித்து உயிர் விட்டாள். அடுத்த பிறவியில் வேதவதி இலங்கையில் ஒரு தாமரைப்பூவில் பெண் குழந்தையாகத் தோன்றிட அதை ராவணன் ஒரு பெட்டியில் வைத்துக் கடலில் மிதக்க விட்டான். அந்தப் பெட்டி மிதிலை நகரை அடைந்தது. ஜனக மகாராஜன் ஏர்கொண்டு நிலத்தை உழ ஏர்க்காலில் பெட்டி சிக்கியது. திறந்து பார்க்க அதில் கண்ட குழந்தையை எடுத்து வளர்த்து இராமனுக்கு மணம் செய்வித்த விவரம், ராமன் ராவணனைக் கொன்றது ஆகியவற்றை இராமாயணம் கூறும். வேதவதியே சீதையாக அவதரித்தாள்.

10.மூன்று தேவியர்
நாரதரிடம் நாராயணன் கூறினார். மாக மாதத்தில் (மாசி) பஞ்சமி அன்றும், வித்தை கற்கத் துவங்கும் விசயதசமி அன்றும் சரசுவதியைத் துதிக்க வேண்டும். வெண்மலர்கள், சந்தனப்பசை, வெள்ளை நிற ஆடை, வெண் சங்கு உபயோகிக்க வேண்டும். பூஜையின் போது மேலும் வெண்ணெய், தயிர், பால், கருப்பஞ்சாறு, வெல்லம், தேன், சர்க்கரை, சதைப்பற்றுள்ள பழங்கள், தேங்காய், இஞ்சி, வாழைப்பழம், நெய்யில் (அரிசிமாவு (அ) கோதுமை மாவு) கொண்டு தயாரித்த இனிப்புகள் நைவேத்தியம் செய்ய வேண்டும். முதலில் லக்ஷ்மி, சரசுவதி, கங்கை மூவரும் நாராயணனின் தேவிகளாக இருந்தனர். ஒருநாள் சரசுவதி கங்கை மீது பொறாமைப்பட்டு சண்டை போட முதலில் லக்ஷ்மி அமைதியாக இருந்தாள். அவள் சரசுவதி, கங்கை இருவரையும் தடுத்து நிறுத்த முயன்றாள். சரசுவதி லக்ஷ்மியிடம் ஏன் முதலிலேயே தடுக்காமல் வேடிக்கை பார்த்தாய்? என்று கோபப்பட்டு அவளை மரமாகவும், நதியாகுமாறும் சபித்தாள்.
கங்கை சரசுவதியை நோக்கி நீ லக்ஷ்மியை நதியாகச் சபித்ததனால் நான் உன்னையும் நதியாகுமாறு சபிக்கிறேன் என்றாள். உடனே சரசுவதி கங்கையும் நதியாகுமாறு சபித்தாள். லக்ஷ்மி துளசியானாள், மற்றும் பதுமாவதி ஆறு ஆனாள். கங்கை பாகீரதி நதி ஆனாள். சரசுவதி அதே பெயரில் நதியானாள். நாராயணன் கங்கையைச் சிவனிடமும், சரசுவதியைப் பிரம்மாவிடமும் அனுப்பி தான் லக்ஷ்மியுடன் இருந்தார். ஏனெனில் சண்டையில் லக்ஷ்மி அமைதியாக நடந்து கொண்டாள். ஒருவனுக்கு மூன்று மனைவியர் வேதத்துக்கு விரோதமானது.

11.கலியுக முடிவும் கல்கி அவதாரமும்
சாபங்கள் உண்மையாக, மூன்று தேவியரும் ஆறுகளாகினர். கலியுகத்தில் ஆயிரம் ஆண்டுகள் கழிந்திட லக்ஷ்மி சாபம் நீங்கித் திரும்பவும் நாராயணனை வந்தடைந்தாள். சரசுவதி, கங்கை இருவரும் கூட நாராயணனை அடைந்தனர். கலியுகத்தில் தூய்மையும், புனிதமும் உலகில் இல்லாமல் போகும். கலியுகம் பொதுவாக கொடிய காலமாகவே விளங்கும். மக்கள் லஞ்சம் வாங்குபவராகவும், இம்சை செய்பவர்களாகவும், நாணயமற்றவர்களாகவும் இருப்பர். துளசியை பூசையில் சேர்க்கமாட்டார்கள். வருணாசிரம தருமங்கள் மாறிவிடும். பிராமணர்கள் சமையல் செய்பவர்களாகவும், மாடு மேய்ப்பவர்களாகவும் இருப்பர். இல்லறத்தில் சண்டை, சச்சரவு, கலவரம், கணவன் மனைவி தகராறு போன்றவை ஏற்படும். ஆறு, குளங்கள் வற்றிட செடி, கொடிமரங்கள் பலன் தராமல் போகும். பயிர்கள் அழியும், பசுக்கள் பால் வற்றும், உணவுக் கட்டுப்பாடுகள் இருக்காது. மக்கள் குறைவற்ற உருவங்களுடன் இருப்பர். விரைவில் முதுமை அடைவர். கலியுக முடிவில் தர்மம் ஒழியும், நாராயணனே விஷ்ணுயசன் என்ற பிராமணனுக்குப் புத்திரனாகக் கல்கி அவதாரம் எடுப்பார். குதிரை சவாரி செய்து, வாள் கொண்டு உலகில் மிலேச்சர்களை அழிப்பார். அவர் மறையும் போது உலகில் குழப்பம், அராஜகம் காணப்படும்.
பசி, பட்டினி, பஞ்சம் ஏற்பட்டு பிரளயம் ஏற்படும். இவ்வாறு கலியுகம் முடிய மறுபடியும் சத்தியயுகம் துவங்கும். இவ்வாறு சிருஷ்டியும், அழிவும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருக்கும். பிரம்மாவின் ஆயுள் முடியும் போது அண்டம் அனைத்தும் நீரில் மூழ்கிவிடும். பிரம்மாவும் கிருஷ்ணனில் ஐக்கியமாகி விடுவார். இது பிராகிருதிக பிரளயம் எனப்படும். இதில் பிரகிருதியும் கிருஷ்ணனுடன் இணைந்து விடும். எனவே, புல் முதல் பிரம்மா வரை அனைத்தும் நிலையற்றவை. தோன்றி மறைபவையே. ஆனால், கிருஷ்ணன் மட்டும் நிலையானவர் அழிவற்றவர் என்பதை உணர வேண்டும்.

12.வசுந்தரா என்னும் புவிமகள்
நாராயணன் அடுத்து நாரதனிடம் பூதேவி, புவிமகள் என்று பல பெயர்களில் பேசப்படும் வசுந்தரா பற்றிக் கூறலானார். மது கைடபர்களின் கொழுப்பினால் ஆனதால் அதனை மேதினி என்கின்றனர். ஆனால், அது சரியில்லை. மேலும் மது கைடபவர்களுக்கு முன்பே பூமி இருந்தது. ஒருவேளை அந்த அரக்கர்களின் கொழுப்பு பூமியில் சேர்ந்திருக்கலாம். எனவே, உலகம் எவ்வாறு தோன்றியிருக்கும் என்பதை நாராயணன் கூறுகிறார். பிரளயத்தினால் உலகம் நீரில் மூழ்கியபோது கிருஷ்ணன் ஒரு பெரிய உருண்டையைத் தன் உடலிலிருந்து எறிய அது பல ஆண்டுகள் மிதந்திட அதன் துளைகள் கடின பொருள்களால் மூடிட அந்த உருண்டையே நீரிலிருந்து வெளிப்பட்டது. இவ்வாறு தோற்றமும் மறைவும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
வராஹ கல்பத்தில் பிரம்மா மூழ்கியுள்ள புவியை வெளிக்கொண்டு வருமாறு வேண்டிட, விஷ்ணு வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனைக் கொன்று புவியை மீட்டார். எனவே, புவிமாது வராகத்தில் மனைவியாக அதாவது விஷ்ணு பத்தினியாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் பூதேவி அங்காரகனை ஈன்றாள். இதனால் வராகமூர்த்தியின் கூற்றுப்படி நிலத்தைப் பயிரிடுவதற்கு முன்பும், அதில் வீடு கட்டும் முன்பும், புதுமனை புகும் போதும், கிணறு, ஏரி, குளம் அமைக்கும் போதும் பூமி பூஜை செய்யப்படுகிறது. அவ்வமயம் நைவேத்தியம் செய்யக்கூடிய பொருள்கள், முத்துக்கள், ரத்தினங்கள், சங்குகள், விளக்கு, புத்தகம், மலர்கள், துளசி இலை, ஜபமாலை போன்றவை இவற்றை அப்படியே பூமியில் வைக்காமல் ஒரு தட்டில் வைத்து நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு தோன்றிய பூமி (அ) வசுந்தராவுக்கும் பல காரணப் பெயர்கள் ஏற்பட்டன. அவை உர்வி, இஜ்யை, öக்ஷளனி, க்ஷிதி, காசியபி, விசுவாம்பவை, அனந்தை, பிருதிவி என்பவை.

13.கங்காவதாரம்
பகீரதன் தவத்துக்கு மெச்சி, கிருஷ்ணன் அழைக்க, கங்கை புவியில் அவதரித்தாள். சகர புத்திரர்கள் மோட்சம் பெற உதவினாள். ஒருமுறை கங்கையில்-புனித நீராடினால் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கும். ஒரு புனித நாளில் நீராடினால் பல பிறவிகளில் ஏற்பட்ட பாவங்கள் நீங்கும். மேலும், கங்கை நீரைக் கண்டாலும், தொட்டாலும் பாவம் தொலையும். கங்கை காற்று உடல் நலம் தரும். கங்கையின் பெயர் உச்சரித்தாலே பாவம் அகலும். தெரியாமலே கங்கை நீர் ஸ்பரிசத்தாலும் பாவம் போய்விடும் என்று கிருஷ்ணன் கூறினார். கங்கை பூமியில் இருக்கும் போது லவண சமுத்திரம் கங்கையின் பதி ஆகும். கங்கையைப் பகீரதன் பூமிக்கும் கொண்டு வந்ததால் பாகீரதி எனப்பெயர் பெற்றான். இந்திரலோகத்தின் வழியாகப் பாயும்போது மந்தாகினி என்று பெயர். பாதாளத்தில் பாயும் போது யோகவதி, விஷ்ணுபஷத்தில் தோன்றியதால் விஷ்ணுபதி. க=என்றால் போ; கங்க் என்றால் விண்ணும், மண்ணும். விண்ணிலும் மண்ணிலும் ஓடுவதால் கங்கை என்று பெயர் உண்டாயிற்று.

14.துளசி, சங்கசூடன் வரலாறு
மன்னன் குசத்வஜனின் மனைவி மாதவியின் மகள் பிருந்தா. அழகு நிறைந்த அவள் விஷ்ணுவே தனக்குக் கணவனாக வேண்டும் என்று காட்டில் கடுந்தவம் செய்து வந்தாள். அவள் தவத்தை மெச்சிய பிரம்மன் அவள் முன்தோன்றி இப்பிறவியில் அவள் சங்கசூடன் என்ற அரக்கனையே மணப்பாள் என்றும், அடுத்த பிறவியில் துளசிச் செடியாகி விஷ்ணுவுடன் இணைவாள் என்றும் கூறி மறைந்தார். குசத்வஜனின் மகளான பிருந்தா முற்பிறவி பற்றி நினைவு கூர்ந்தாள். அவள் முற்பிறவியில் கோலோகத்தில் ஒரு கோபிகையாக கிருஷ்ணன் கைங்கரியத்தில் ஈடுபட்டிருந்தாள். கிருஷ்ணன் மீது காதல் கொண்ட அவள் ராதையின் மீது பொறாமை கொண்டதால் ராதை அவளைப் பூமியில் பிறக்குமாறு சபித்தாள். பிரம்மா, சந்திரசூடனின் முற்பிறவி பற்றி எடுத்துரைத்தாள். சந்திரசூடன் முற்பிறவியில் கிருஷ்ணனுடைய சேவர்களில் ஒருவனாக சுதாமன் என்ற பெயரில் இருந்தான். அந்த கோபன் பிருந்தா கோபி மீது காதல் கொண்டான். இதனை ராதை தடுத்ததுடன், சந்திரசூடன் ஓர் அரக்கனாகப் பிறக்குமாறும் சாபமிட்டாள். இப்போது உலகில் சந்திரசூடன் ஓர் அரக்கனாகப் பிறந்தாலும், இங்கு பிருந்தாவையே மணக்க விரும்பி பிரம்மனை வேண்டினான். பிருந்தா ராதையின் கோபம் காரணமாக சந்திரசூடனை மணக்கத் தயங்கினாள். எனவே, பிரம்மன் அவளுக்கு ஒரு மந்திரத்தைக் கற்பித்து அதை உச்சரிப்பதன் மூலம் ராதையைத் திருப்திபடுத்தி சந்திரசூடனை மணக்க அவள் அனுமதியைப் பெற்று, அவனை மணந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தாள்.
சந்திரசூடன் அரக்கனாதலால் அவன் தேவர்களுக்குத் தொல்லைகள் அளித்து தேவர்களின் உடைமைகளைப் பறித்துக் கொள்ள, அவர்கள் பிரம்மாவிடம் முறையிட, அவர் தேவர்களுடன் கிருஷ்ணனிடம் சென்று சரணடைந்து முறையிட்டனர். அப்போது கிருஷ்ணன் சந்திரசூடனுக்குத் தான் ஒரு ரøக்ஷ அளித்திருப்பதாகவும், அதனைத் தானே ஒரு பிராமணன் வடிவில் சென்று அவனிடமிருந்து அகற்றிவிடுவதாகவும் கூறி, அவனை அழிக்க சிவபெருமானுக்கு ஒரு சூலமும் அளித்தார். அப்போது பிரம்மா அவனுக்கு, அவன் மனைவி வேறொருவனைக் கணவனாகக் கொண்டு வாழ்ந்தால் மட்டுமே அவனை அழிக்கமுடியும். அவ்வாறு ஏற்படாத வரையில் அவனை யாராலும் அழிக்க முடியாது என்று வரம் அளித்திருப்பதாகக் கூறினார். சந்திரசூடன் ஒரு கிருஷ்ண பக்தன். சிவனுக்கு அவனைக் கொல்ல மனமில்லை. எனவே, அவனுக்கு நல்லுபதேசம் செய்து நல்வழிப்படுத்த முயன்றார். அதனை ஏற்காத அவனுக்கும் தேவர்களுக்கும் போர் ஏற்பட்டது. சந்திரசூடன் கந்தன், காளி, சிவபெருமான் ஆகியோருடன் போர் புரிந்தான்.
போர் சிறிது நேரம் ஓய்ந்திருந்த போது கிருஷ்ணன் ஓர் அந்தணன் வடிவில் சந்திரசூடனிடம் சென்று அவன் கழுத்திலிருந்த ரøக்ஷயை யாசித்துப் பெற்றுக் கொண்டார். பின்னர் சந்திரசூடன் உருவில் அவன் இல்லம் அடைய பிருந்தா அந்த மாயத்தை அறியாமல் அவருடன் வாழ்ந்தாள். அந்தச் சமயம் பார்த்து சிவன், கிருஷ்ணனால் அளிக்கப்பட்ட சூலத்தால் சந்திரசூடனைக் குத்திக் கொன்றார். பிருந்தா நிகழ்ந்ததை அறிந்த உடன் கிருஷ்ணன் கல்மனமுடையன் என்று கல்வடிவமாகச் சபிக்க சாலக்கிராமம் உருவானது. கிருஷ்ணன் அவளைச் சமாதானப்படுத்தி இப்போது அவள் ஒரு தெய்வ வடிவம் பெற்று வைகுந்தம் அடைவாள் என்று கூறிச் சமாதானப்படுத்தினார். அங்கு அவள் கிருஷ்ணனுடன் இணைவாள் என்றார். பூமியில் அவளுடைய உடல் கண்டகி என்னும் புனித ஆறாகி பாரதத்தில் பாய்கிறது. அவள் கூந்தல் துளசிப்புதராக வளர்ந்தது.

15.துளசியின் மகிமை
துளசி மிகவும் புண்ணிய செடியாகும். துளசி தீர்த்தத்தில் நீராடினால் சகல புனித தீர்த்தங்களிலும் நீராடின பலன் தரும். ஒரு பிராமணனுக்கு ஒரு துளசிதளம் தானம் செய்தால் ஆயிரக்கணக்கில் கோதானம் செய்த பலன் கிடைக்கும். கையில் துளசியுடன் பொய் சொன்னால் நெடுநாள் நரகம் சித்திக்கும். மரணிக்கும் போது துளசி தீர்த்தம் உட்கொண்டால் நேரே விஷ்ணு லோகத்தை அடைவர். துளசிக்கு பிருந்தை, பிருந்தாவனி, விஷ்வபவானி, விச்வபூஜிதை, புஷ்பமாயை, நந்தினி, கிருஷ்ண ஜீவனி என்று பல பெயர்கள் உண்டு. கார்த்திகை மாத பவுர்ணமியில் துளசி பூஜை மிகவும் சிறந்தது.

16.சாளக்கிராமம்
துளசியின் சாபப்படி சாளக்கிராமம் கிருஷ்ணனையே குறிக்கும். அதுவும் புனிதமானது, புண்ணியம் தரவல்லது. சாளக்கிராமத்தைப் பூசிப்பவரின் பிரம்மஹத்தி தோஷமும் நிவர்த்தி ஆகும். அநேக புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் சாளக்கிராமம் முக்கி எடுக்கப்பட்ட நீரில் நீராடினால் கிடைக்கும். தொடர்ந்து சாளக்கிராமம் தீர்த்தங்களைப் பருகியவர் நேராக விஷ்ணுலோகம் அடைவர். துளசி மரித்தவுடன் அவள் கூந்தல் கண்டகி நதி ஆயிற்று. அதன் கரையில் நாராயணன் மலையாகி நின்றார். அம்மலையில் வஜ்ரடங்கள் எனப்படும் பூச்சிகள் காணப்படுகின்றன. அவற்றின் பற்கள் வச்சிரம் போல் கூர்மையானவை. அம்மலை மீது காணும் உருண்டை கற்களில் இப்பூச்சிகள் துளைகள் செய்கின்றன. இவையே சாளக்கிராம உருவங்கள். பலவகை சாளக்கிராமம் பற்றி கருடபுராணம் விவரிக்கிறது. சந்திரசூடனைக் கொன்ற பிறகு சிவபிரான் அவனுடைய உடலைச் சமுத்திரத்தில் எறிந்து விட, அந்த எலும்புகளிலிருந்து பலவகை சங்குகள் உற்பத்தி ஆயின. சிவனைத் தவிர மற்ற எல்லா கடவுளர்க்கும் சங்கு தீர்த்த அபிஷேகம் சிறந்தது. சங்கு ஊதப்படும் வீட்டை விட்டு லக்ஷ்மி எப்போதும் பிரியமாட்டாள். சங்கு தோய்ந்த தீர்த்த ஸ்னாநம் அனைத்து புண்ணிய தீர்த்த நீராடலுக்கும் சமம்.

17.சாவித்திரி விரதம்
சாவித்திரி தேவதை வேதங்களைப் பிறப்பித்தவள். அவள் சூரியனுக்கும் மந்திரங்களுக்கும் தாய் ஆவாள். அவள் பொன்னிறமேனியாள். அழகிய ஆடை, ஆபரணங்கள் அணிந்து புன்சிரிப்புடன் திகழ்வாள். அவளுக்கு ஆசனம், தீர்த்தம், அரிசி, சந்தனம், தூபம் மாலை ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். சாவித்திரி விரதம் ஜேஷ்ட (ஆனி) மாதம், திரயோதசி அன்று செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் செய்ய வேண்டும். பதினான்கு வகை பழங்கள் நிவேதனம் செய்ய வேண்டும். அந்தணர்களுக்கு தானம் அளிக்க வேண்டும். மாத்ர நாட்டு மன்னன் அசுவபதிக்கு பராசர முனிவர் இந்த விரத மகிமை பற்றியும், செய்முறைகளைப் பற்றியும் கற்பித்தார். இந்த விரதத்தை மேற்கொண்ட அசுவபதி முன் சாவித்திரி தேவி தோன்றிட, அதன் பலனாக அவன் மனைவி ராணிமாலதிக்கு அத்தேவியே மகளாகப் பிறந்தாள். அப்படிப் பிறந்த சாவித்திரி துயுமதி தேசன் மகன் சத்தியவானை மணந்தாள். மணந்த ஓராண்டுக்குள்ளாகவே ஒரு விபத்து நிகழ்ந்தது. சத்தியவான் சாவித்திரியுடன் காட்டில் விறகும், பழங்களும் சேகரித்து வரச்சென்றான். அங்கு அவன் மரத்திலிருந்து கீழே விழுந்து மடிந்தான்.
பிறகு யமன் சத்தியவான் உயிரை எடுத்துச் செல்ல, சாவித்திரி அவனுடன் வாதாடி வெற்றி பெற்று, சாதுர்யமாக தன் மாமனார், மாமியார்களுக்குக் கண்களின் குருடு நீங்கி பார்வை பெற்றதும், தனக்கு மகன் வேண்டும் என்று யமனிடம் பெற்றதும், வரம் பெற்ற பிறகு யமன், சத்தியவானை உயிருடன் சாவித்திரிக்கு அளித்ததும் பல புராணங்களில் கூறப்பட்டன. இவையே இன்றி சாவித்திரி, யமன் உரையாடலில் யமன் கூறியதாகப் பல செய்திகள் இந்த வைவர்த்த புராணத்தில் காணப்படுகின்றன. யமன் முற்பிறவி கர்மாக்களுக்கு ஏற்ப ஒருவன் பிறப்பும் இறப்பும் ஏற்படுவதைப் பற்றிக் கூறுகிறான். மற்றும் தான வகைகள் அவற்றின் பலன்களைப் பற்றியும் இயமன் கூறினான். பெருமளவில், நிலம், அரிசி பிராமணனுக்கத் தானம் செய்தவர் விஷ்ணுலோகம் அடைவர். வீடு தானம் அளித்தவர் தேவலோகம் அடைவர். வீடு தானம் அளித்தவர் தேவலோகம் அடைவர். கால்நடைகள், செம்பு, பொன் தானம் அளித்தவர் சூரியலோகம் அடைவர். ஒரு பிராமணன் மற்றொரு பிராமணனுக்குத் தன் கன்னிகையை தானம் செய்வித்தால் சந்திரலோகம் அடைவான். அல்லது விஷ்ணுலோகம் சேர்வான். கறவை பசுக்கள், துணிமணிகள், சாலக்கிராமங்கள், குடை, காலணி, தீபம், படுக்கை, குதிரை, யானை, பல்லக்கு போன்ற தானங்களும் சிறந்த பலன்களைத் தரும்.
அடுத்து, யமன் பலவகை விரதங்கள் பற்றி எடுத்துக் கூறுகிறான். சிவராத்திரி அன்று வில்வதளம் கொண்டு சிவனை ஆராதிப்பவர் சிவலோகம் அடைவர். ராமநவமி விரதம் அனுஷ்டித்தவர் விஷ்ணு லோகத்தில் நீடித்து வாழ்வர். கார்த்திகை மாதத்தில் ராசமண்டபம் கட்டி பூசை, பஜனை செய்தால் கோலோகம் கிட்டும். ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர் வைகுண்டலோகம் அடைவர். ஜேஷ்ட (ஆனி) மாதம் சதுர்த்தசி திதியில் சாவித்திரி விரதம் அனுஷ்டிப்பவர்கள் பிரம்மலோகம் பெறுவர். மாக (அ) மாசி மாதத்தில் பஞ்சமி அன்று சரஸ்வதி பூஜை, விரதம் இருந்தால் வைகுண்டலோகம் அடைவர். உலகைச் சுற்றி வந்து எல்லா தீர்த்தங்களிலும் புனித நீராடுபவர் வீடு பேறு பெறுவர். அவர்களுக்கு மறுபிறவி கிடையாது. இவையேயன்றி மிகப்பெரிய யாகங்கள் பற்றியும் யமன் கூறுகிறான். அசுவதேம யாகம் செய்பவர் இந்திரலோகத்தில் பாதி பெற்று இனிது வாழ்வர். ஒரு ராஜசூய யாகம் செய்தவன் அசுவமேதயாகம் செய்த பலனைப் போல் நான்கு மடங்கு பலன் பெறுவான். ஆனால், எல்லாவற்றிலும் சிறந்த விஷ்ணு யஜ்ஞம் செய்தவர், ஆயிரம் ராஜசூய யாகப் பலனைப் பெறுவார்.
யமன் எண்பத்தாறு நரகலோகங்களைப் பற்றிக் கூறுகிறார். அவற்றுள் அக்னி குண்டம், கர குண்டம், தப்தம்ர தப்த பாஷணா, கூர்ம, கோல, சஞ்சனா, கஜ தம்ஷா, அசிபதிர குண்டம், கும்பிபாகம், காலகத்திரம், அந்தகூபம், தூமாந்தம், விஷனம், திபசூர்ணம், தாலனம் என்று சிலவற்றைப் பற்றிக் கூறுகிறார். கருமநெறி தவறுபவர்கள் அவரவர் செய்யும் பாவங்களுக்கு ஏற்ப நரகில் தள்ளப்பட்டு உயிர்கள் மிகவும் வருத்தமடையும். (மேலும் விரதங்களை, நரகங்கள் ஆகியவற்றின் விவரங்களை விஷ்ணுபுராணம், அக்னிபுராணம் ஆகியவற்றில் காண்க)

Related Articles

  • Bhrama Vaivartha Purana-2
    Bhrama Vaivartha Purana-2
    18.லக்ஷ்மி கடாக்ஷம் இப்புராணம் ஸ்ரீலக்ஷ்மியைப் பற்றியும் கூறுகிறது. சிருஷ்டியின் போது கிருஷ்ணன் இடது பக்கத்திலிருந்து ஓர் அழகிய தேவி தோன்றி இரண்டு…