Dharmaruku Mudisuttum Vizha

போர்க்களத்தில் ஏற்பட்ட உயிர்ச் சேதங்களை எண்ணி தருமர் சோகமாகக் காணப்பட்டார்.சகோதரர்களையும்,சுற்றத்தாரையும் இழந்து பெற்ற பயன் என்ன என ஏங்கினார்.அர்ச்சுனனைக் கூப்பிட்டு தருமர் சொல்ல ஆரம்பித்தார்.

'நாம் காட்டிலேயே இருந்திருந்தால் துயரம் இருந்திருக்காது. நம் சகோதரர்களைக் கொன்றதால் என்ன நன்மை..வனத்தில் இருந்த போது நம்மிடம் பொறுமை இருந்தது.அடக்கம் இருந்தது,அஹிம்சை இருந்தது.இவையே தருமம்.அறிவின்மையாலும்,ஆணவத்தினாலும்,பொருளாசையாலும் அரசாட்சியில் உள்ள கஷ்டத்தை விரும்பி துயரத்தை அடைந்தோம்.எல்லோரையும் கொன்றுவிட்டு கேவலமாக உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.நம்மால் கொல்லப்பட்டவர்கள் மரணம் என்னும் வாயிலில் புகுந்து யமனின் மாளிகையை அடைந்து விட்டார்கள்.நன்மைகளை விரும்பும் தந்தைகள் அறிவுள்ள மக்களைப் பெற விரும்புகின்றனர்.தாய்மார்கள் விரதங்களும், தெய்வ வழிபாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.மகனையோ,மகளையோ பெற்று அவர்கள் நல்லபடியாக கௌரவத்துடனும்,செயல்திறனுடனும் புகழுடன் வாழ்வார்களாயின் தமக்கு இம்மையிலும்,மறுமையிலும் நற்பேறு கிட்டும் என பெற்றோர் எண்ணுகின்றனர்.இங்கே அவர்கள் நனவு கனவாயிற்று.அவர்கள் வாழ்க்கையும் பாலைவனம் போல் ஆயிற்று.அவர்களின் பிள்ளைகள் நம்மால் கொல்லப்பட்டார்கள்.அவர்கள் தாய் தந்தையர்க்கு ஆற்ற வேண்டிய கடமை நம்மால் தடுக்கப்பட்டது.

ஆசையும், சினமும் மிக்கவர்கள் வெற்றியின் பயனை அடைய முடியாது.இதில் கௌரவர்களும்..நாமும் ஒன்றுதான்.இந்த பூமியின் பயனை அவர்களால் அனுபவிக்க முடியவில்லை.ஆசைவயப்பட்ட நம்மால் மட்டும் இதன் பயனை அனுபவிக்க முடியுமா?எண்ணிப்பார்த்தால் துரியோதனனால் அலைக்கழிக்கப்பட்ட நாமே இந்த உலகின் அழிவுக்கும் காரணமானோம்.நம்மிடம் பகைக் கொண்டு நம்மை அழிப்பதே அவன் லட்சியமாக இருந்தது.நமது பெருமையைக் கண்டு பொறாமை கொண்ட அவன் உடல் வெளுத்துக் காணப்பட்டான்.இதை சகுனியே திருதிராட்டிரனிடம் சொல்லி இருக்கிறான்.துரியோதனன் மீது கொண்ட பாசத்தால் யார் பேச்சையும் கேட்காமல் துரியோதனன் மனம் போனபடி போக வழிவிட்டார்.பீஷ்மரின் பேச்சையும் விதுரருடைய பேச்சையும் கேளாமல் மகனின் மனம் போல செயல்பட்டார்.

கெட்ட புத்தியுள்ள துரியோதனன் பழிபட செயல் புரிந்து உடன்பிறந்தவர்களைக் கொல்வித்தான்.தாய்,தந்தையரைச் சோகத்தில் ஆழ்த்தினான்.கண்ணனை கடுஞ்சொற்களால் ஏசினான்.

யார் செய்த பாவமோ..நாடு அழிந்தது.பல்லாயிரம் வீரர்கள் மடிந்ததும்..நம் கோபம் அகன்றது.ஆனால் இப்போது சோகம் வாள் கொண்டு பிளக்கிறது.நாம் செய்த பாவம்தான்..சகோதரர்கள் அழிவுக்குக் காரணமோ என அஞ்சுகிறேன்.இந்தப் பாவம் தவத்தினால் போகக்கூடியது என ஆகமங்கள் கூறுகின்றன.ஆதலால் நான் தவக்கோலம் பூண்டு காட்டிற்குச் செல்ல விரும்புகிறேன்.இல்லறத்தில் இருந்துக் கொண்டு நாம் செய்யும் செயல்கள் மீண்டும் பிறப்பு, இறப்புக் காரணம் என அற நூல்கள் கூறுகின்றன.ஆகவே சுக துக்கங்களைத் துறந்து சோகமில்லா ஓரிடத்தை நாடிச் செல்ல விழைகிறேன்.தவம் ஒன்றே நம் பாவங்களை சுட்டெரிக்கும் என உணர்கிறேன்.ஆகவே அர்ச்சுனா..இந்த பூமியை நீயே ஆட்சி செய்..எனக்கு விடை கொடு..' என்றார்.

தருமரின் மொழிகளைக் கேட்ட அர்ச்சுனன் பதில் கூற ஆரம்பித்தான்..

'செயற்கரிய செயலை முடித்து..அதனால் பெற்ற செல்வத்தை இழக்கக்கூடாது.உமது துயரம் என்னை வியக்க வைக்கிறது.பகைவரைக் கொன்று தருமத்தால் கிடைத்த பூமியை எப்படி விட்டுப் போவது?அஃது அறிவீனம்.பயமும்,சோம்பலும் உடையவர்க்கு ஏது அரச செல்வம்?உலகில் ஒன்றும் இல்லாதவன் தான் பிச்சை எடுத்து உண்பான்.அவன் முயற்சியால் செல்வத்தை பெற மாட்டான்.மிகப் பெரிய அரச செல்வத்தை விட்டு விட்டு பிச்சை எடுத்து தவம் மேற்கொள்ளப் போகிறேன் என்ற உமது பேச்சை யாரேனும் ஏற்றுக் கொள்வார்களா? எல்லா நம்மைகளையும் விட்டு விட்டு அறிவிலி போல் ஏன் பிச்சை எடுக்க வேண்டும்?அரும்பாடு பட்டு வெற்றி கொண்ட பின் ஏன் காடு நோக்கி செல்ல வேண்டும்?ஒன்றும் இல்லாமல் இருப்பது சாதுக்களுக்கு தருமம்.ஆனால் அரச தருமம் அல்ல.அரச தருமம் என்பது பொருளால் நடைபெறுவது.அரச தருமம் மட்டுமல்ல சாது தருமம் கூட பொருள் இல்லாது போனால் நிலைகுலைந்து விடும்.சாதுக்கள் சாது தருமத்தைக் காக்க இல்லறத்தார் துணை செய்வர்.பொருள் இல்லையெனில் இல்லறத்தாரால் எவ்வாறு சாதுக்களுக்கு உதவ முடியும்.எனவே உலகில் பொருள் இல்லாமை பாவம் ஆகும்.பல்வேறு வகைகளில் திரட்டப் படும் செல்வமே எல்லா நன்மைகளும் பெருக காரணமாகிறது.அண்ணலே..பொருளிலிருந்து இம்மை இன்பம் கிடைக்கிறது.தருமம் பிறக்கிறது.இறுதியில் மறுமை இன்பமும் கிடைக்கிறது.

உலக வாழ்க்கை பொருள் இல்லாது மேன்மையுறாது.பொருளற்றவனின் முயற்சி கோடைகால நீர்நிலை போல் வற்றிப் போகும்.ஒரு பயனும் தராது.எவனிடம் பொருள் உண்டோ அவனிடம் நண்பர்கள் இருப்பார்கள்.எவனிடம் பொருள் இருக்கிறதோ அவனுடன் நெருங்கிய சுற்றத்தார்கள் இருப்பர்.எவனிடம் பொருள் இருக்கிறதோ அவனே சிறந்த அறிஞன்.அவனே தலைவன்.ஆகவே..யானையைக்கொண்டு யானையைப் பிடிப்பது போலப் பொருளைக் கொண்டு பொருளை சேர்க்க வேண்டும்.மலையிலிருந்து நதிநீர் பெருகுவதுப் போல பொருளில் இருந்து தான் தருமம் பெருகுகிறது.உண்மையில் உடல் இளைத்தவன் இளைத்தவன் அல்ல.பொருளற்றவனே இளைத்தவன் ஆவான்.

பகை அரசரின் நாட்டைக் கவர்வது அரச நீதி.அரச வம்சத்தை ஆராய்ந்தால் இதன் உண்மை விளங்கும்.ஒரு காலத்தில் இந்தப் பூமி திலீபனுடையதாக இருந்தது.பின் நகுஷன் கைக்குப் போனது.பின் அம்பரீஷனுடையதாகியது.பின் மாந்தாவுக்குச் சொந்தம் ஆனது.தற்போது உம்மிடம் உள்ளது.எனவே முன்னோர்களைப் போல அரச நீதி உணர்ந்து நீர் ஆட்சி புரிய வேண்டுமேயன்றிக் காட்டுக்குப் போகிறேன்..என்று சொல்லக் கூடாது'

என்று அர்ச்சுனன் சொல்லி முடித்தான்

அர்ச்சுனன் கூறிய காரணங்களை கேட்டும் தருமர் மனம் மாறவில்லை.துறவு மேற்கொள்ள இருக்கும் தன் முடிவில் மாற்றமில்லை என்றார்.அவர் அர்ச்சுனனிடம்..'நான் சொல்வதை உன் ஐம்புலன்களையும் ஒருமுகப் படுத்தி நான் சொல்வதைக் கேள்.அப்போது நான் சொல்வதில் உள்ள நியாயம் உனக்குப் புரியும்.முனிவர்கள் சேர்க்கையால் நான் மேலான நிலைமையை அடையப் போகிறேன்.நீ சொல்வதால் அரசாட்சியை நான் மேற்கொள்ளப் போவதில்லை.நான் காட்டுக்குச் செல்லப் போவது உறுதி.கானகம் சென்று கடுந்தவம் இருக்கப் போவது உறுதி.தவிர்க்க இயலாது.உலகப் பற்று நீங்கி முனிவர்களுடன் கூடி ஆத்ம சிந்தனையில் திளைப்பேன்.உடலை சாத்திரப்படி உண்ணாவிரதத்தால் இளைக்கச் செய்வேன்.இரண்டு வேளையும் நீராடுவேன்.காட்டில் உள்ள பறவை,விலங்குகளின் இனிய ஒலிகளைக் கேட்டு மனம் மகிழ்வேன்.தவம் செய்வோர் மேற்கொள்ளும் சாத்திர விதிப்படி பின்பற்றுவேன்.விருப்பு,வெறுப்பு,இன்ப துன்பம்,மான அவமானம் ஆகியவற்றிலிருந்து விலகி எப்போதும் தியானத்தில் இருப்பேன்.எனக்கு இனி நண்பரும் இல்லை..பகைவரும் இல்லை.

வாள் கொண்டு ஒருவர் கையை அறுத்தாலும் சரி,சந்தனத்தால் ஒருவர் அபிசேகம் செய்தாலும் சரி இருவருக்குமே தீங்கையோ, நன்மையையோ நினைக்க மாட்டேன்.இவ்வளவு நாள் இந்த புத்தி இல்லாமல்தான் சகோதரர்களைக் கொன்றேன்.பிறப்பு,இறப்பு,மூப்பு,நோய்,வேதனை இவைகளால் பீடிக்கப் படும் மனித வாழ்க்கையில் ஒரு பயனும் இல்லை.நிலையில்லா உலகில் தோன்றும் அற்ப ஆசைகளால் ஒரு அரசன் மற்ற அரசனைக் கொல்கிறான்.இவ்வளவு நாட்கள் அறிவு தெளிவற்றுக் கிடந்த நான் இப்போது தெளிந்த ஞானத்துடன் ஒரு முடிவிற்கு வந்து விட்டேன்..என்றும் நிலைத்து நிற்கக் கூடிய முக்தியை அடையத் துணிந்து விட்டேன்' என்றார்.

பீமன் தருமரைப் பார்த்து 'நீங்கள் உண்மையை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை..ராஜ தர்மத்தையே கொச்சைப் படுத்துகிறீர்.ராஜ தருமத்தில் உங்களுக்கு ஏன் அருவெறுப்பு? இப்படி நீங்கள் சொல்வீர்கள் எனத் தெரிந்திருந்தால்..நாங்கள் போர்க்கருவிகளையே எடுத்திருக்க மாட்டோம்.யாரையும் கொன்றிருக்கமாட்டோம்.இந்தப் போரே நடந்திராது.காலமெல்லாம் நாம் பிச்சை எடுத்திருப்போம்.இவ்வுலகு வலிமையுள்ளவர்களுக்கே சொந்தம் என மேலோர் கூறியுள்ளனர்.நம்ம பகைவர்களைத் த்ரும நெறிப்படி கொன்றோம்.வெற்றி பெறற நாட்டை அனுபவித்தல்தான் முறை.

பெரிய மரத்தில் ஏறி அரும்பாடுப்பட்டு கொணர்ந்த தேனைப் பருகாது..மரணம் அடைவது போல இருக்கிறது உமது செயல்.பகைவனைக் கொன்றுவிட்டு..தற்கொலை செய்துக் கொல்வது போல இருக்கிரது உங்க செயல்.உம்மைச் சொல்லிக் குற்றமில்லை.மந்த புத்தியுள்ள உங்கள் பேச்சைக் கேட்ட நாங்கள்தான் நிந்திக்கத் தக்கவர்கள்.ஆற்றல் மிக்கவர்களும் கல்வியில் சிறந்தவர்களும் சீரிய சிந்தனை மிக்கவர்களான நாங்கள் ஆற்றல் அற்றவர்களைப் போல ஆண்மை அற்ற உம்முடைய சொற்களுக்கு கட்டுப்பட்டுக் கிடக்கின்றோம்.துறவு என்பது முதுமைக் காலத்தில் நிகழ்வது..க்ஷத்திரியர்கள் துறவு மேற் கொள்வதை மேலோர் விரும்புவதில்லை.போர்க்களமே அவர்கள் மோட்ச உலகம்.

உண்மை இவ்வாறு இருக்க உமது செயல் க்ஷத்திரிய தருமத்தை நிந்திப்பது போல இருக்கிறது.பொருளற்றவர்களே துறவறத்தை நாடுவர்.துறவு மேற்கொள்பவர்கள் மேலும் பிறர் துன்பத்தை சுமப்பதில்லை தமது சுற்றம்,விருந்தினர்,ரிஷிகள் இவர்களைக் கவனிக்காமல் காடுகளில் திரிந்து சுவர்க்கம் அடைய முடியுமானால் ..காட்டிலேயே பிறந்து..காட்டிலேயே வளர்ந்த விலங்குகள் ஏன் சுவர்க்கம் அடையவில்லை.இரண்டுவேளை நீராடினால் முக்தி கிடைக்குமெனில்..எந்நேரமும் நீரில் கிடக்கும் மீன்கள் ஏன் முக்தியை அடையவில்லை?ஒரு பொருளிலும் பற்றற்று அசையாது நிறபதன் மூலம் முக்தி அடையலாம் என்றால் உயர்ந்த மலைகளும்..ஓங்கி வளர்ந்த மரங்களும் ஏன் முக்தி அடையவில்லை?ஒவ்வொருவரும் தன் கடமைகளை செய்ய வேண்டும்.தம் கடமையை மறந்தவனுக்கு முக்தி கிடைக்காது' என்றான்.

பின் மீண்டும் அர்ச்சுனன் தருமரைப் பார்த்து..'துறவறம் சிறந்ததா..இல்லறம் சிறந்ததா என்பதை அறிந்து கொள்ள முன்பு ஒரு புறாவிற்கும்,துறவிகளுக்கும் நடைபெற்ற உரையாடலைச் சான்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர்.நல்ல குலத்தில் பிறந்த சிலர் துறவு வாழ்க்கை மேலானது எனக் கருதித் தாய் தந்தையரையும்,சுற்றத்தாரையும்,பிறந்த வீட்டையையும்,உடமைகளையும் துறந்து காடு சென்று தவ வாழ்க்கை மேற்கொண்டனர்.அவர்களிடம் கருணை கொண்ட இந்திரன் ஒரு புறா உருவில் வந்தான்.விகசத்தை (ஹோமம் செய்து பிறருக்குக் கொடுத்தபின் மீதியிருக்கும் உணவு)உண்பவர்களே முக்தியடைவர் என்றது புறா.ஆனால் அந்த துறவிகள் விகசம் என்றால் காய்கறிகள் என தவறாகப் புரிந்து கொண்டனர்.

துறவிகளும்..தாங்கள் சரியான பாதையில் செல்வதாக மகிழ்ந்து 'பறவையே! உன் பாராட்டுக்கு நன்றி' என்றனர்.

உடன் புறா 'உங்களை நான் புகழவில்லை.நீங்கள் மூடர்கள்..நீங்கள் தெளிவு பெறச் சிலவற்றைக் கூறுகிறேன்.நாற்கால் பிராணிகளுள் சிறந்தது பசு..உலோகங்களில் தங்கம் சிறந்தது.ஒலிகளுள் வேதம் சிறந்தது..இரண்டுகால் பிராணிகளுள் வேதத்தை அறிந்தவன் சிறந்தவன்.ஒவ்வொருவனுக்கும் பிறப்பு முதல் இறப்புவரை பருவத்திற்கேற்பப் பல கருமங்கள் உள்ளன.தனக்குரிய கருமத்தைச் செய்பவன் புண்ணியப் பேறு பெறுவான்.குடும்பத்தில் தாய்,தந்தையர்,மனைவி,மக்கள்,விருந்தினர் ஆகியோரைக் கவனிக்க வேண்டும்.அவர்கள் உண்ட பின் எஞ்சிய உணவை உண்ன வேண்டும்.இந்த இல்லறக் கடமையை ஒழுங்காக நிறைவேற்றிய பின்னரே தவம் பற்றிய எண்ணம் வர வேண்டும்.அதன்பின் தேவகதி முதலான கதிகளைப் படிப்படியாகக் கடந்து இறுதியில் பிரம பதவி அடைய முடியும்.எனவே அறவோர் போற்றும் இல்லறக் கடமைகளை முதலில் மேற்கொள்வீராக' என்று கூறியது.

உண்மை உணர்ந்த துறவிகள் இல்லற தருமத்தை மேற்கொண்டனர்.ஆதலால் உமக்குரிய அரச தருமத்தை மேற்கொண்டு நல்லாட்சி புரிவீராக' என அர்ச்சுனன் கூறினான்

அர்ச்சுனனின் பேச்சைத் தொடர்ந்து நகுலன் தருமரிடம் கூறலானான்

"இல்லறக் கடமைகளை ஒழுங்காகச் செய்ததால்தான் தேவர்களுக்கு அந்த பிறப்புக் கிடைக்கிறது.இன்றும் அவர்களுக்கு மண்ணில் வாழ்வோர் மீது உள்ள அக்கறையைப் பாருங்கள்.இங்கு இருக்கும் உயிர்களின் உணவிற்காக மழையைத் தருகிறார்கள்.அதுபோல உலக உயிர்களுக்கு தொண்டு செய்ய வேண்டும்.அர்ச்சுனனால் கூறப்பட்ட அந்தப் பிராமணர்கள் வேத நெறியைக் கைவிட்ட நாத்திகர்கள்.வேதத்தில் கூறப்பட்ட இல்லறக் கடைமைகளைத் துறந்து விட்டு யாரும் பிரமலோகத்தை அடைய முடியாது.இல்லற தருமம் மற்றெல்லா தருமத்தையும் விட சிறந்தது என உயர்ந்தோர் சொல்கின்றனர்.இல்லறம் துறந்து காடு செல்பவன்..வேறு ஒரு சமயத்தில் வீட்டைப் பற்றி எண்ணுவானானால் அவனை விட வேடதாரி இல்லை எனலாம்.

அறவழியில் பெற்ற செல்வத்தைப் பல யாகங்கள் மூலம் தானம் செய்பவனே..உண்மையில் மனதை வென்றவன்.அவனே உண்மையான தியாகி.இல்லற தருமம் என்னும் இத் தருமத்தில் தான் அறம்,பொருள்,இன்பம் என்னும் மூவகைப் பயனும் உண்டு.

ஆகவே..அரசே..இந்திரனுக்கு இணையான நீர் ராஜசூயம்,அசுவமேதம் முதலான யாகங்களைச் செய்வீராக.நாடெங்கும் திருடர்களால் துன்பம் அடையும் மக்களைக் காக்காத வேந்தன் சனியின் வடிவம் என பழிக்கப்படுவான்.நாட்டாட்சியை நல்ல முறையில் செயல்படுத்தாத நாம் துன்பத்தைத்தான் அடைவோமே தவிர ஒரு போதும் இன்பம் அடைய மாட்டோம்.

எனவே..கிடைத்த வாய்ப்பை விட்டு துறவை மேற்கொள்வீராயின் இம்மை மறுமை ஆகிய இருமையும் இழந்து மேலும் துன்பம் அடைய நேரிடும்.போர்க்களத்தை நாம் வலிமையினால் வென்றோம்..இனி நல்லாட்சி தருவது நம் கடமை ஆகும்.ஆகவே..அரச தருமப்படி நாட்டை ஆண்டு மேலான பதத்தை அடைய வேண்டிய நீர் இப்படிச் சோகத்தில் மூழ்குவது நன்றன்று'

இவ்வாறு நகுலன் தன் கருத்தைக் கூற..அவனைத் தொடர்ந்து சகாதேவன் கூறலானான்.

நகுலனின் பேச்சுத் துறவறத்தில் உள்ள துன்பத்தை விவரிக்கவும், அரசரின் கடமையை நினைவுபடுத்துவதாகவும் அமைய சகாதேவன் தருமரைப் பார்த்து'எனக்குத் தாயும், தந்தையும், குருவும் நீங்கள்தான்.உம் மீது உள்ள பக்தியால் இதை உரைக்கிறேன்.தவறாயின் மன்னிக்கவும்.உற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோரையோ நண்பர்களையோ, வீடு முதலானவற்றையோ துறப்பது துறவு ஆகாது.இவை எல்லாம் புறப் பொருள்கள்.புறத்துறவு உண்மைத் துறவன்று.உள்ளத்தில் தோன்றும் அழுக்காறு அவா வெகுளி காமம் முதலிய தீய நினைவுகலைத் துறப்பதுதான் உண்மைத் துறவாகும்.இதனை அகத்துறவு என்பர்.

காலமெல்லாம் க்ஷத்திரிய சிந்தனையுடன் வாழ்ந்த உமக்கு எப்படி இந்த துறவு எண்ணம் வந்தது.துறவு என்பது ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகே தோன்ற வேண்டும்.துக்கத்தில் தோன்றுவது துறவாகாது.சாது தருமத்தில் சிறிது தவறு நேரினும்..அடுத்த பிறவி பெரும் துன்பம் தரும் பிறவியாகி விடும்.அப்பிறவியிலிருந்து அடுத்தடுத்து நேரும் பிறவிகள் எப்படி யிருக்கும் என யாரால் சொல்ல முடியும்.ஆகவே நம் முன்னோர்கள் செல்லும் வழியிலேயே நாமும் செல்ல வேண்டும்.மற்ற யுகங்களைக் காட்டிலும் திரேதாயுகம் மிகச் சிறந்த யுகமாகும்.அந்த யுகத்திலே தோன்றிய அரசர்கள் இந் நில உலகில் நன்கு ஆட்சி புரிந்தனர்.தீமையை ஒழித்து நன்மையை நிலை நிறுத்தினர்.இதைவிட அரச தருமம் வேறென்ன உண்டு.எனவே..நீரும் நம் முன்னோர் சென்ற வழியில் நாடாள வேண்டும்' என்றான்.

தம்பியரின் உரைகள் தருமரை மாற்றவில்லை..இந்நிலையில் திரௌபதி தருமரை நோக்கி..

உம் தம்பியர் உமது துயர் கண்டு வருந்துகின்றனர்.அவர்களை மகிழ்ச்சி அடைய செய்ய வேண்டியது உமது கடமை.முன்னர் காட்டில் வாழ்ந்த போது தாங்கள் கூறியது என்ன.'என் அருமை தம்பியரே! பொறுங்கள்..நம் துன்பங்கள் விரைவில் தீரும்.நாம் கொடியவனான துரியோதனனைக் கொன்று நாட்டை மீட்போம்.' என்று கூறினீர்கள்.எனக்கு ஆறுதல் சொன்னீர்.அப்படிப் பேசிய நீங்கள் தற்போது ஏன் எங்கள் அனைவருக்கும் துன்பம் தரும் சொற்களைக் கூறுகிறீர்.

தைரியம் இல்லாதவரால் நாட்டை ஆள முடியாது.நீதி தெரியா அரசர் புகழ் பெற முடியாது.அவரது நாட்டு குடி மக்களும் நிம்மதியாக வாழ முடியாது.நல்ல அரசன் உலகில் சூரிய சந்திரர்களின் ஆற்றலைப் பெற்றவன்.நெருப்பு நெருங்கிய பொருளைத்தான் சுடும்.ஆனால் அரச தண்டனையோ தீமை எங்கிருந்தாலும் அழித்துவிடும்.உமது சினத் தீ திருதிராட்டிரனின் குலத்தையே சுட்டெரித்து விட்டது.

உலகம் தூங்குகையில் அரச நீதி விழித்துக் கொண்டிருக்கும்.அப்படி நீதி செலுத்தும் அரசனைத் தேவரும் போற்றுவர்.அரசன் தண்டிப்பான் என்பதாலேயே தீமை செய்வோர் அடங்கியுள்ளனர்.அரசரிடத்தில் அச்சம் இல்லையெனில் அனைத்து நாட்டு நன்மைகளும் சிதறிப் போகும்.குற்றம் செய்பவர் தப்பிக்க முடியாது என்ற அச்சம் ஒவ்வொருத்தர் உள்ளத்திலும் இருக்க வேண்டும்.இந்த உணர்வு அல்லாதார் தண்டிக்கப் படுவர்.

தருமத்தை விட்டு விலகியதால் தான் திருதிராட்டினனின் புதல்வர்கள் கொல்லப்பட்டனர்.அதனால் நீர் வருந்த வேண்டாம்.தீயவர்களை தண்டிப்பதும்..நல்லவர்களைக் காப்பதும் ,போர்க்களத்திலிருந்து ஓடாமல் இருப்பதும் முக்கிய தருமங்கள் ஆகும்.இந்நாட்டை ஆளும் உரிமையை யாரிடமும் யாசித்துப் பெறவில்லை.

குந்திதேவியார் அன்று சொன்னது என்ன 'திரௌபதி உனக்கும் நல்ல காலம் வரும்.என் மகன் தருமன் உன் துயரைத் தீர்க்கப் போகிறான்.' என்றாரே..அது பொய் ஆகுமா?உலகில் உள்ள பெண்கள் அனைவரினும் நான் கீழானவள்.திருதிராட்டிரனனின் மகன்களால் அடைந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டு இன்னும் உயிருடன் இருக்கின்றேனே..இதைவிடக் கீழ்மை என்ன இருக்கப் போகிறது.அந்த மா பாவிகளை கொன்றதில் என்ன தவறு.

தற்கொலை செய்து கொள்பவன்,தன் பொருளை அழிப்பவன்.உறவினனைக் கொல்பவன்,விஷம் வைப்பவன்,காரணமின்றி பிறரைக் கொல்பவன்,பிறன் மனைவியை இழுப்பவன் ஆகிய இந்த அறுவரும் ஆததாயிகள் எனப்படுவர்.இவர்களைக் கொல்வது கொலைக் குற்றமாகாது..என்று பிரம தேவர் பார்க்கவரிடம் சொன்னதை மறந்து விட்டீரா? அரசவையில் என்னை இழுத்து வந்து மானபங்கம் செய்த பாவிகளைக் கொன்றது குற்றமல்ல.அதற்கான தண்ட நீதியை செலுத்திய நீர் கோழைகளைப் போல் நடந்துக் கொள்ளக் கூடாது.கவலையை விட்டொழித்துத் தம்பியருடன் நல்லாட்சி செய்வீராக.." என்று அரச நீதியை நினைவுப் படுத்தினாள்
அண்ணலே! தீயோரை அடக்கி மக்களைக் காப்பது அரச நீதியாகும்.மன்னன் உறங்கினாலும் அரச நீதி எப்போதும் விழித்துக் கொண்டே இருக்கும்.அறம், பொருள்,இன்பம் ஆகியவற்றைக் காப்பது அரசநீதி யாகும்.மக்களில் சிலர் மன்னன் தண்டிப்பான் என்றே தவறு செய்யாமல் இருக்கிறார்கள்.சிலர் மரண தண்டனைக்குப் பயந்தும், செத்த பிறகு நரகம் போக வேண்டியிருக்கும் எனப் பயந்தும் குற்றம் புரியாமல் இருக்கின்றனர்.அரச தண்டனை என்பது செங்கோலின் ஒரு பகுதி என்பதை மறக்கக் கூடாது.தண்டனைக்குப் பயந்துதான் ஒருவரை ஒருவர் துன்புறுத்தாது உள்ளனர்.குற்றத்திற்கு சரியான தண்டனை வழங்காவிடின்..உலகம் காரிருளில் மூழ்கிவிடும்.அடங்காமல் இருப்பவரை அடக்குவதும்..தவறு செய்பவரைத் தண்டிப்பதும் நீதியாகும்.கொடியவர்களைக் கொல்லத் துணியாத வேந்தனுக்கு புகழும் இல்லை..செல்வமும் இல்லை.

விருத்தன் என்னும் அசுரனைக் கொன்றுதான் இந்திரன் மகேந்திரன் ஆனான்.பிற உயிரைக் கொல்லாமல் எந்த பிராணியும் உயிரோடு இருப்பதில்லை.கீரி எலியைக் கொன்று தின்கிறது.கீரியைப் பூனைக் கொல்கிறது..பூனையை நாய் கொல்கிறது, நாயைப் புலி கொல்கிறது.புலிகளையும் பிறவற்றையும் மனிதன் கொல்கிறான்.இப்படி ஒவ்வொரு உயிரும் பிற உயிரின் உணவாகின்றது.

உயிரினங்களின் படைப்பின் ரகசியத்தைப் புரிந்துக் கொள்ளுங்கள்.எல்லா உயிர்களும் ஒவ்வொரு தன்மையுடன் படைக்கப் பட்டுள்ளன.நான்குவகை வருணத்தவரின் வாழ்வு நிலையை புரிந்துக் கொள்ளுங்கள்.க்ஷத்திரியர்களின் தன்மையுடன் நடந்துக் கொள்ளுங்கள்.க்ஷத்திரியன் அறிவின்மையால் சினத்தையும் மகிழ்ச்சியையும் துறந்து காடு சென்று கடுந்தவம் புரிந்தாலும் காய், கிழங்குகள் இன்றி காலம் தள்ள முடியாது.நீரிலும், பூமியிலும், பழங்களிலும் பல உயிர்கள் இருக்கின்றன.நாம் கண் இமைத்தலால் உயிர் இழக்கத் தக்க நுண் உயிர்கள் காற்றில் ஏராளமாக இருக்கின்றன.உலகில் அவற்றைக் கொல்லாமல் யார் இருக்கின்றனர்.

ஆகவே உயிர்க்கொலை என்பது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.அரசனாக இருப்பவன் சில கொலைகளைச் செய்தே ஆக வேண்டும்.இல்லையெனில் பகைவர்களை அடக்க முடியாது.அது மட்டுமின்றி, சரியான தண்டனை இல்லையெனில்..யாரும் கல்வி கற்க மாட்டார்கள்.வண்டியில் கட்டிய மாடுகள் கூட தண்டனை இல்லாவிடின் வண்டியை இழுக்காது.பகைவரை அழிக்கும் திறன் உள்ள நாட்டில்தான் பொய்யும்,திருட்டும்,வஞ்சனையும் இருக்க வழியில்லை.ஆகவே..ஐயோ..கொலை நேர்ந்து விட்டதே என புலம்புவதில் பயன் இல்லை.பசுக்கூட்டத்தைக் கொல்லவரும் புலியை கொல்வது பாவம் என்றால் பசுக்களைக் காப்பாற்ற முடியாது.இங்கு புலியைக் கொல்லுதல் நியாயம் ஆகிறது..அதுவே தருமம்.கொல்லத் தகாத உயிர்களைத்தான் கொல்லக் கூடாது.கொல்லத் தகுந்ததைக் கொன்றே தீர வேண்டும்.அதுபோல அழிக்க வரும் அரசனை அழிப்பது அரச நீதி ஆகும்.எனவே இந்தப் பகைவரின் அழிவு குறித்துச் சோகப்பட வேண்டாம்.தரும நீதி இதுவென உணர்ந்து அரசாட்சி மேற்கொள்ளுங்கள்' என்று தருமரிடம் கூறிவிட்டு அமர்ந்தான் அர்ச்சுனன்.

அர்ச்சுனனின் பேச்சைக் கேட்டதும்..உற்சாகமானான் பீமன்.அவன் தருமரை நோக்கி 'உம்மை விட அரச நீதி உணர்ந்தார் யாவரும் இலர்.உங்களிடமிருந்தே நாங்கள் அனைத்து நீதியும் கற்றோம்.ஆயினும் அவற்றை எங்களால் கடைபிடிக்க இயலவில்லை.ஆனால்..எல்லாம் உணர்ந்த நீங்கள் இப்போது ஏன் தடுமாறுகிறீர்கள்? நீங்கள் ஏன் சாதாரண மனிதரைப் போல சோகத்துடன் உள்ளீர்.

உலகில் நல்லது, கெட்டது அனைத்தும் நீர் அறிவீர்.எதிர்காலம் பற்றியும் உமக்குத் தெரியும்.ஆதலால் நான் சொல்வதை சற்றுக் கேளும்..உலகில் உடலைப் பற்றியும்..மனதுப் பற்றியும் இரு வகை நோய்கள் உள்ளன..இவற்றில் ஒன்றிலிருந்து மற்றொன்று உருவாகிறது.உடல் நோயால்..மன நோயும்..மன நோயால் உடல் நோயும் உண்டாகின்றன.உடல்,மனம் இந்த நோய்களைக் குறித்து எவன் சோகம் அடைகின்றானோ.அவன் அந்த சோகத்தால்..துக்கத்தையும் அடைகிறான்.இந்தச் சோகமும் துக்கமும் அவனை ஆட்டிப் படைக்கின்றன.

மகிழ்ச்சியில் இருக்கும் மனிதர்கள்..தங்கள் அறியாமையால்..துக்கத்தை தாங்களாகவே வரவழித்துக் கொள்கிறார்கள்.அப்படிப்பட்டவர்களைப் போலவே..நீங்கள் இப்போது நடக்கிறீர்கள்.மிகவும் மகிழ்வுடன் இருக்க வேண்டிய நேரத்தில் துக்கத்தை அடைந்துள்ளீர்.நாம் கடந்து வந்த பாதையை சற்று எண்ணிப் பாரும்.நம் கண்ணெதிரிலேயே, வீட்டு விலக்காக ஒற்றை ஆடையில் இருந்த திரௌபதியை அவையில் இழுத்து வந்தானே கொடியவன்..அந்தக் கொடுமையை எப்படி மறந்தீர்? நாட்டைவிட்டுச் சென்று காட்டில் நாம் அடைந்த வேதனையை மறந்து விட்டீரா..அஞ்ஞாத வாசத்தில் திரௌபதியை கீசகன் காலால் உதைத்தானே..அந்தத் துயரக் காட்சியை எப்படி மறந்தீர்?

பீஷ்மர்,துரோணர் ஆகிய புறப் பகையை வெற்றிக் கொண்ட நீர் அகப் பகையை வெல்ல முடியாது தவிப்பது ஏன்?இந்த மனப் போராட்டத்தில் வில்லும்,அம்பும் வாளும் உறவினரும் நண்பரும் ஒன்றும் செய்வதற்கில்லை.இம்மனத்தை அடக்கும் முயற்சியில் நீரே தான் ஈடுபட வேண்டும்.தெளிவற்ற குழம்பிய நிலையில் உள்ள மனம் ஒரு நிலையில் நிற்காது.உமது மனப் போராட்டம் வீணானது.நீர் ஈனக்கவலையை விட்டொழித்து ..நீதி நெறி வழுவாமல் அரச பாரத்தை ஏற்பீராக! தெய்வ பலத்தாலும்..திரௌபதியின் அதிர்ஷ்டத்தாலும் துரியோதனன் இனத்தோடு அழிந்தான்.இனியும் சிந்திக்க என்ன உள்ளது? விதிப்படி அஸ்வமேத யாகம் செய்வீர்.நாங்களும், கண்ணபிரானும் இருக்கும் வரை உமக்கு என்ன குறை? ' என்றான்

பிமனுக்கு தருமர் பதிலுரைக்கத் தொடங்கினார்..

'அரசாட்சி..அரசாட்சி என அலைகிறாயே..நன்கு சிந்தித்துப் பார்.இந்த உலகின் நிலைமையைப் புரிந்துக் கொள்..கானகத்தில் வேட்டையாடும் வேடனுக்கு வயிறு ஒன்றுதான்..இந்த பூமி முழுதும் அரசனாக இருந்து ஆட்சி புரியும் மன்னனுக்கும் வயிறு ஒன்று தான்.காதல்,அன்பு,சினம் போன்ற எல்லா உணர்ச்சிகளும் அப்படியே ஒரே தன்மையாக இருக்கின்றன.ஒரு நாளென்ன..ஒரு மாதம் என்ன..ஆயுள் முழுதும் முயன்றாலும் மனித ஆசை நிறைவேறாது.மகிழ்ச்சியையும்..செல்வத்தையுமே நீ பெரிதாக எண்ணுகிறாய்..போரிட்டுப் பெற்ற அரச பாரத்தைச் சுமக்க வேண்டும் என்னும் பேராசை உன்னிடம் உள்ளது..

இப் பெரிய சுமையை தூக்கி எறிந்து விட்டு தியாகம் என்னும் துறவை மேற்கொள்வாயாக..புலியானது தன் வயிற்றுக்காக எவ்வளவு இம்சையில் ஈடுபடுகிறது? அதுபோலவே தீயவர் பலர் இம்சையில் ஈடுபடுகின்றனர்.பொருள்கள் மீதான பற்றை விட்டுத் துறவறத்தை மேற் கொள்பவர் சிலரே..அறிவின் வேறுபாடு எப்படி உள்ளது பார்! இந்த பூமி முழுதும் எனக்கே சொந்தம்..யாருக்கும் பங்கு இல்லை என ஆட்சி செய்யும் மன்னனை விட, அனைத்தும் துறந்த துறவி மேலானவர்.

அருமைத் தம்பி..உலக இயல்பை சிந்தி..பொருள் மீது ஆசை கொள்பவன் துன்பம் அடைகிறான்.ஆசை அற்றவன் இன்பம் அடைகிறான்.ஆகவே நாடாள்வதும்..தியாகமே என்ற பொய் வாதத்தை விட்டு விட்டு இவ்வுலக வாழ்க்கையை துறப்பாயாக..எல்லாப் பற்றையும் துறந்த ஜனகர் ஒருமுறை சொல்கிறார்..'எனது செல்வம் அளவற்றது..ஆனால் எனக்கு என்று ஏதுமில்லை..ஆதலால் மிதிலை பற்றி எரிந்த போது என்னுடையது ஏதும் எரியவில்லை.பொருள் பற்று இல்லாததால் அதன் அழிவு கவலையைத் தருவதில்லை..ஞானம் என்னும் குன்றில் நிற்பவன்..துயருறும் மக்கள் கண்டு துயரடைய மாட்டான்.அறிவற்றவன் மலை மீது இருந்தாலும், பூமியில் இருந்தாலும் பொருளின் உண்மைத் தன்மையை உணர மாட்டான்.ஆசையற்ற ஞானி பரம பதத்தை அடைவான்..ஞானம் அற்றவன் அதனை அடைய முடியாது' என பீமனுக்கு தருமர் கூறினார்.

ஜனகருக்கும்..அவரது மனைவிக்கும் நடந்த உரையாடலை அர்ச்சுனன் தருமருக்கு சொல்ல எழுந்தான்

தருமரின் வைராக்கியம் பற்றி அறிந்த அர்ச்சுனன் வருத்தத்துடன் தருமரைப் பார்த்து...

நாட்டை விட்டு நீங்கி பிச்சை ஏற்கத் துணிந்த ஜனகரைப் பற்றி ஆவர் மனைவி கூறியதை உலகு அறியும்.பொன்னையும், பொருளையும், மனைவி மக்களையும், நண்பரையும் பிரிந்து ஒன்றும் இல்லாதவராய்ப் பிச்சைத் தொழிலை மேற்கொண்டவராய்த் திரிந்த ஜனக மாமன்னரை அவர் மனைவி யாரும் இல்லாத போது நெருங்கி பேசினாள்..

'மாபெரும் அரசைத் துறந்து..ஓடெடுத்து ஒரு பிடி அரிசி எப்போது கிடைக்கும் என ஏன் எதிர்ப்பார்க்கிறீர்? ஆயிரமாயிரம் விருந்தினரை உபசரித்த நீர் ஏன் இப்படி வயிறு வளர்க்க பிச்சை எடுக்கிறீர்..உம் தாய் இப்போது மகனை இழந்து காணப்படுகிறாள்.பெற்ற தாயையும்..உற்ற தாரத்தையும் தவிக்க விட்டு இப்படிச் செல்வது முறையா? அரசர் பலர் உம்மை சுற்றிச் சுற்றிப் போற்றி வழிபட்டு மகிழ்ச்சியுடன் இருந்தார்களே, அவர்களை எல்லாம் துன்பத்தில் ஆழ்த்திவிட்டு நீர் எந்த உலகை அடையப் போகிறீர்..

நாட்டையே சோகக்கடலில் தள்ளிவிட்டுச் செல்லத் துணிந்த உமக்கு..நிச்சயமாக முக்தி கிடைக்காது..உண்மையிலேயே நீர் சினத்தை விட்டு விட்டீரா? துறவுக் கோலத்தின் சின்னமாக விளங்கும் இந்தத் தண்டத்தையும்..காஷாயத்தையும் ஒருவன் பிடுங்கினால் உமக்கு சினம் வராதா? யாவற்ரையும் விட்டுத் தொலைத்த உமக்கு ஒரு பிடி அரிசியின் மீது மட்டும் ஆசையில்லையா?

ஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள்..துறவிகளுக்கு உணவளிக்கும் இல்லற வாழ்வே மேலானது.அதுதான் உலகில் நிலையானது.உணவு அளிக்கும் அரசன் இல்லாவிடின் மோட்சத்தை விரும்பும் துறவிகளும் தங்கள் துறவு வாழ்க்கையில் நிலை குலைந்து போவர்.துறவறம் சிறப்படைவதே இல்லறத்தால் தான்.உயிரானது உணவால் நிலை பெற்றுள்ளது.ஆகவே உணவு அளிப்பவன் உயிர் அளப்பவன் ஆவான்.(உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ஆவர்.)

துறவுக் கோலத்தில் இருப்பவரும்..உணவுக்காக இல்லறத்தாரை சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது.துறந்தோர் என்பவர் முற்றும் துறந்தவராய் இருக்க வேண்டும்..சிலவற்றை துறக்க மறந்தவராய் இருக்கக் கூடாது.

எனவே..முழுத் துறவுதான் துறவிகளின் இலக்கணம்.தலையை மொட்டையடித்து, காஷாயம் பூண்டு, சில நூல்களை கையில் ஏந்தி, திரிதண்டம்,கமண்டலம் தாங்கி இருப்பது துறவாகாது.இத்தகைய போலித் துறவைத் துறந்து இல்லறத்தில் நாட்டம் கொள்வீர்.எவன் ஒருவன் ஆசையுள்ளவன் போல் காணப்பட்டாலும்..ஆசையற்றவனாக இருக்கின்றானோ, பகைவரிடத்தும்..நண்பரிடத்தும் சமமாக நடந்துக் கொள்கின்றானோ அவனே உண்மைத் துறவி ஆவான்.அவனே உண்மையில் முக்தி மார்க்கத்தில் செல்பவன்.இத்தகைய மன நிலையைப் பெற்று இல்லறத்திலே இருந்துக் கொண்டு ராஜரிஷி போல் வாழ்ந்து உண்மைத் துறவிகளைப் போற்றி மனத்தை வெல்வீராக' என்று ஜனகரின் மனைவி கூறினாள்.

எனவே நீங்களும் உங்களது விவேகமற்ற மன நிலையிலிருந்து விடுபட்டு உயிரினங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.சான்றோரையும்..தவத்தோரையும் வழிபட்டு உலகை நன்முறையில் காப்பீராக.நற்கதி பெற இதுவே நன்னெறி ஆகும்' என்றான் அர்ச்சுனன் தருமரை நோக்கி

அர்ச்சுனனின் சொல் கேட்ட தருமர்..அவனுக்கு தன் வைராக்கியத்தை புலப்படுத்தச் சொல்கிறார்..

'தம்பி..பல கோணங்களில் பார்க்கையில்..சாத்திரங்கள் முரண்பட்டதாய் தோன்றும்.ஆயினும் துறவறத்தின் மேன்மையை..உண்மைத் தன்மையை நான் அறிவேன்..நீ சாத்திரத்தை மேற்போக்காக படித்தவன்.அதனை ஆழ்ந்து நோக்காதவன்.உண்மையான சாத்திர ஞானம் உள்ளவன் உன்னைப் போல பேச மாட்டான்.உடன்பிறப்பே..இந்த அளவாவது..நீ சாத்திரத்தை அறிந்திருப்பது கண்டு மகிழ்ச்சி.நீ ஒரு போர் வீரன்.உனக்கு இணையாக போர் புரிபவன்..உலகில் யாரும் இல்லை.போர்க் கருவிகளை உன்னைப் போல யாரால் அவ்வளவு அற்புதமாகப் பயன்படுத்த முடியும்?உனக்கு இணையானவன் மூவுலகிலும் இல்லை.அதற்காக நான் பெருமிதம் அடைகிறேன்.ஆயினும் தம்பி, நீ சாத்திரம் பற்றிப் பேசாதே..

செல்வம் பெரிது என்கிறாய்..அதிலும் மண்ணாள் செல்வம் யாருக்கு வாய்க்கும் என்கிறாய்.செல்வம் நிலையற்றது.இதனை உணர்ந்து தவம் மேற்கொள்பவர் நிலையான முக்தி இன்பம் அடைவர்.எல்லாவற்றையும் தியாகம் செய்பவன் எவனோ..அவனே நற்கதி அடைகிறான்.

தியாகம் என்பது நம்மிடம் உள்ள பொருட்களைப் பிறருக்கு தருவது மட்டும் அன்று.உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்கள் அனைத்தும் விட்டு விடுவதும் தியாகம் தான்.நற் பண்புகளை எடுத்து உரைக்கும் ஆகமங்களைக் கற்பவர் இந்த உணமையை அறிவர்.

கண்களால் காணமுடியாததும்..வார்த்தைகளால் வருணிக்க முடியாததும் ஆன ஆன்மா தான் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்பப் பல்வேறு பிறவிகளில் உழன்று வருகிறது.அஞ்ஞானத்தால் ஏற்படும்..இந்த கர்ம வினைகளை நல்ல ஞானத்தால் அழித்து விட்டு மோட்ச மார்க்கத்தில் செல்ல வேண்டும்.தம்பி, துறவிகளால் போற்றப் பட்ட இம் முக்திப் பாதையை விட்டு..பல துன்பங்களுக்குக் காரணமான செல்வத்தை நீ ஏன் விரும்புகிறாய்? வினையின் கொடுமையை நன்கு உணர்ந்த ஆகம அறிவு மிக்கவர்..பொருளைப் பெரிதென ஒரு நாளும் பாராட்ட மாட்டார்கள்.தருமம் தெரிந்தவர்களோ..வைராக்கிய சிந்தை உடையவர்களாகிப் பொருள் மீதுள்ள பற்றை அறவே விலக்கிப் பரமபதத்தை அடைகின்றனர்.ஆகவே, அர்ச்சுனா..இது குறித்து நீ அதிகம் பேச வேண்டாம்' என்று கூறி..தருமர் தன் கருத்தில் உறுதியாக இருந்தார்.

அசைக்க முடியாத தருமரின் மனதை மாற்ற வியாசர் கூறுகிறார்..

'தருமா..இல்லற தருமமே சிறந்த தருமமாகும் என சாத்திரங்கள் கூறுகின்றன.சாத்திரப்படி நீ நடந்துக் கொள்ள வேண்டும்.இல்லறம் துறந்து காடு செல்ல உனக்குச் சாத்திர அனுமதியில்லை.தேவரும்,விருந்தினரும்,மற்றவரும் இல்லறத்தாரையே சார்ந்திருக்கின்றனர்.அவர்களைக் காப்பது உன் கடமையாகும்.விலங்குகளும்,பறவைகளும் கூட இல்லறத்தாராலேயே காப்பாற்றப்படுகின்றன.உனக்கு நான்கு வருண தருமமும் தெரியும்.க்ஷத்திரிய தருமத்தை நீ நன்கு உணர்ந்திருந்தாலும் உனக்கு நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.முயற்சியும்,தானமும்,யாகமும் மக்களைப் பாதுகாப்பதும்,நடு நிலைமையோடு நடந்து கொள்வதும். பகயை அழிப்பதும் அரசருக்கான கடமையாகும்.செங்கோன்மைதான் அரசருக்கு உரிய மிக உயர்ந்த தருமமாகும்.அரசன் குற்றவாளிகளை தண்டித்து நாட்டில் குற்றங்கள் பெருகாமல் தடுக்க வேண்டும்.இதுவும் அரச தருமம் என்பதை புரிந்து கொள்.சுத்யும்னன் என்னும் ராஜரிஷி ஒழுங்காக செங்கோல் செலுத்தியதால் முக்தியடைந்தார் என்பதைத் தெரிந்து கொள்' என்றார்.தருமர் சுத்யும்னன் எப்படி முக்தியடைந்தார் என வியாசரைக் கேட்டார்.

வியாசர் சொல்லத் தொடங்கினார்...முன்னொரு காலத்தில் சங்கர்,லிகிதர் என இரு சகோதரர்கள் இருந்தனர்.இருவரும் தவத்தில் சிறந்தவர்கள்.அவர்களுக்கு பாகுதை என்னும் நதிக்கரையில் மரங்களால் சூழப்பட்ட ஆசிரமங்கள் தனித் தனியாக இருந்தன.ஒரு சமயல் லிகிதர் சங்கரின் ஆசிரமத்திற்கு வந்தார். சங்கர் அப்போது வெளியே சென்றிருந்தார்.லிகிதர் மரத்தில் நன்கு பழுத்திருந்த கனிகள் சிலவற்றை பறித்து உண்ணத் தொடங்கினார்.திரும்பி வந்த சங்கர் தம்பியின் செயல் கண்டு கோபமுற்றார்.'என் அனுமதியின்றி பழங்களைப் பறித்தது திருட்டுக் குற்றம்.இக் குற்றத்திற்கான தண்டனையை இந்நாட்டு மன்னனிடம் பெற்று அத் தண்டனையை அனுபவிப்பாயாக' என்றார்.

அதன்படி லிகிதர் மன்னன் சுத்யும்னனிடம் சென்று தண்டனை வழங்கும்படிக் கேட்டுக் கொண்டார்.அதைக் கேட்ட மன்னன் 'தண்டனை வழங்குவது அரச நீதிதான்..என்றாலும் மன்னிப்பு வழங்குவதும் அரச தருமம்..ஆதலால் உம்மை குற்றத்திலிருந்து விடுவிக்கிறேன்..நீர் போகலாம்' என்றார்.ஆனால் லிகிதர் தாம் செய்த குற்றத்திற்கு தண்டனை வழங்குமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.அதனால்..திருட்டுக் குற்றத்திற்காக அவரது கைகள் துண்டிக்கப் பட்டன.

அறுபட்ட கைகளுடன் சங்கரைக் கண்ட லிகிதர்..'அரச நீதி கிடைத்து விட்டது..தாங்களும் சினம் தணிந்து என்னை மன்னிக்கவும்' என்றார்.

அதற்கு சங்கர் 'எனக்கு உன் மீது சினம் இல்லை.ஆனால் குற்றத்திற்கான தண்டனையை யாரானாலும் அனுபவித்தேத் தீர வேண்டும்.குற்றத்திற்கேற்ற தண்டனை விதித்தல் மன்னன் கடமையாகும்.அதுவே அரச நீதியாம்.இனி உன் பாவம் விலகும்.நீ பாகுதி நதிக் கரையில் தியானம் செய்வாயாக' என்றார்.

அவ்வாறே..லிகிதர் தியானம் இருக்க..தியான முடிவில் கைகள் தாமரை மலர்கள் போல் தோன்றின.அவர் தம் சகோதரரிடம் சென்று விவரத்தைச் சொன்னார்.உடன் சங்கர் 'இது என் தவ வலிமையால் நடந்தது.' என்றார்.

அவ்வாறாயின் இதை நீங்கள் முன்னமேயே செய்திருக்கலாமே என்றார் லிகிதர்.

'உண்மை..இதை என்னால் முன்னரே செய்திருக்க முடியும்..ஆனாலும் தண்டனை வழங்கும் தகுதி அரசனுக்கே உண்டு.உனக்கு தண்டனை வழங்கியதால் அரசன் தூயவனாக ஆகி..இறுதியில் முக்தியடைந்தான்.குற்றத்திற்கான தண்டனை அனுபவித்ததால் உன் பாவமும் கழிந்தது' என்றார் சங்கர்.

இக்கதையை எடுத்துரைத்த வியாசர் 'தருமா..நீயும் அரசாட்சியை ஏற்றுச் செங்கோல் செலுத்தி நற்கதி அடைவாயாக' என்றார்.

'தருமா...தம்பியர் பன்னிரெண்டு ஆண்டுகள் கானகத்தில் இருந்த போது என்னென்ன கனவுகள் கண்டனரோ,..அந்தக் கனவுகள் நிறைவேற நீ உதவ வேண்டும்.அவர்கள் காட்டில் பட்ட துன்பத்தின் முடிவு காலமான தற்போது இன்பம் அடைய வேண்டாமா..நீயும்,உன் தம்பியரும் அறம்,பொருள் இன்பங்களை நல்வழியில் அனுபவித்த பிறகு நீ காட்டை நோக்கிச் சென்று தவம் புரியலாம்.போர்க்களத்தில் பெற்ற வெற்றியின் பயனை நீ அலட்சியம் செய்யாதே..ராஜநீதி தெரிந்தவர்கள் இந்த வெற்றியை ஒழுங்குபடுத்தி நாட்டை நன்முறையில் பரிபாலிக்க வேண்டாமா?அரச நீதியை நன்கு உணர்ந்து இடத்திற்கும், காலத்திற்கும் ஏற்பக் குற்றவாளிக்கு தண்டனை வழங்க வேண்டும்..இதில் பாபம் ஏதும் இல்லை..குடிமக்களிடம் ஆறில் ஒரு பங்கு வசூலித்து..நாட்டை நன்கு ஆளவில்லையெனின்..அந்த அரசனுக்கு குடிமக்களின் பாபத்தில் நாலில் ஒரு பங்கு வந்து சேரும்.

யுதிஷ்டிரா..அரச நீதி பற்றி மேலும் சொல்கிறேன்..தரும நூல் படி தண்டனை வழங்க வேண்டும்.இதில் தயக்கம் கூடாது.சினத்தை விலக்க வேண்டும்.குடிமக்களிடம் அன்பு காட்டித் தந்தை போல் நடந்துக் கொள்ள வேண்டும்.அரசரின் முயற்சி விதி வசத்தால் பழுது பட்டாலும் உலகம் அவ்வரசனை குறை கூறாது.நாடாளும் மன்னன் பகைவரை ஒடுக்குவதில் விழிப்பாக இருக்க வேண்டும்.அடிக்கடி படையெடுப்புக்கு உள்ளாகும் நாட்டின் அரசன் எந்த ஒரு நல்ல செயலையும் நிறைவாக செய்ய முடியாது.ஆகவே பகை சிறிது என்று எண்ணக்கூடாது.அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

கல்வியிற் சிறந்த சான்றோர்களையும்..போர் வீரர்களையும் கண்ணெனப் போற்ற வேண்டும்..நாட்டின் மேன்மைக்கு வணிகரும் காரணமாவர்.ஆதலால் அவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் மன்னன் திகழ வேண்டும்.உயர் அதிகாரிகளின் தகுதி அறிந்து தக்க காரியங்களில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்..தனக்கு ஆலோசனை கூறத் தக்க அறிவார்ந்த குழுவை அரசன் அமர்த்திக் கொள்ள வேண்டும்..தரும சாத்திரத்திலும்..நீதி சாத்திரத்திலும் தேர்ச்சி உள்ளவர்கள் எடுக்கும் முடிவு மூவுலகிலும் பாராட்டப் படும்.அறிவின் எல்லையைக் கண்டவராயினும் ஒருவரையே நம்பியிருக்கக் கூடாது.

தருமா...அடக்கம் இல்லாமல் ஆணவத்துடன் நடக்கும் அரசனை மக்கள் பழிப்பர்.அத்தகைய மன்னனிடம் பாவமும் வந்து சேரும்.நன்றாக ஆராய்ந்து வழங்கும் தண்ட நீதியால் பாவம் ஏதுமில்லை.எவ்வளவுதான் முயன்றாலும் சில விஷயங்கள் விதி வசத்தால் பயனற்றவனாக முடிவதுண்டு.அதனால் மன்னனைப் பழிக்க மாட்டார்கள் மக்கள்.இத்தகைய நற்பண்புகளுடன் கூடிய அரசனை வரலாறு பாராட்டும்.ஆகவே..யுதிஷ்டிரா..அரசாட்சியை மேற்கொண்டு புகழுடன் பொலிக' என்றார் வியாசர்.

வியாசரின் எந்த விளக்கமும் தருமரின் மனதை மாற்றவில்லை.பலரும் மாறி..மாறி கூறியும் பயன் இல்லை.அவர் வைராக்கியத்துடன் தன் நிலைமையை எடுத்துரைத்தார்.

'போரில் நாட்டாசை காரணமாகச் சகோதரர்களைக் கொன்றேன்..யாரின் மடி மீதிருந்து உற்சாகமாக விளையாடினேனோ அந்த பீஷ்மரை யுத்த களத்தில் இழந்தேன்.அந்தப் பிதாமகர் ரத்த வெள்ளத்தில் மலை போல் சாய்ந்த போதே பாவியாகிய நான் சோகத்தின் மடியில் வீழ்ந்தேன்..பரசுராமருடன் பல நாள் போர் புரிந்த வீரராகிய அந்தப் பீஷ்மர் யுத்த களத்தில் என்னால் வீழ்த்தப்பட்டார்.இளமைப் பருவம் தொடங்கி வளர்த்து எங்களையெல்லாம் ஆளாக்கிய அந்த உத்தமரைக் கேவலம் பேராசை காரணமாக இந்த நிலைக்கு ஆளாக்கினேன்.

ஒரு பொய்யைச் சொல்லி துரோணரைச் சாகடித்தேன்.இதைவிட வேறென்ன பாவம் இருக்க முடியும்? சத்தியம் தவறாதவன் என்ற பெயர் எனக்கு எப்படி பொருந்தும்? பொய்யனாகிய நான் இந்தப் பூமண்டலத்தை ஆண்டு பெறப்போவது என்ன?

புறங் கொடாப் போர் வீரனான் என் தமையனைக் கொன்றேனே..இதைவிட வேறு எது பாவம்?

ஒரு சிங்கக் குட்டியென வலம் வந்த அபிமன்யூவைத் துரோணரின் சக்கர வியூகத்தில் தள்ளிக் கொலை செய்தேனே..பாவியல்லவா நான்? இனி உலகில் அத்தகைய வீரன் பிறப்பானா? என் பொருட்டு திரௌபதியின் ஐந்து பிள்ளைகளும் கொல்லப் பட்டனரே..திருஷ்டத்துய்மனும்..விராடனும்..எண்ணற்ற வீரர்களும் என்னால் அல்லவா மாண்டார்கள்?

இவர்கள் அனைவரையும் இழந்த பிறகு நான் மட்டும் ஏன் உயிர் வாழ வேண்டும்? நான் உண்ணா நோன்புடன் உயிர் துறக்கத் தயாராகி விட்டேன்..அனுமதி கொடுங்கள்' என மனம் நொந்து வியாசர் முதலான மகரிஷிகளிடம் கேட்டுக் கொண்டார் தருமர்.

இப்போது கண்ணன் தருமரை நோக்கி..'நீ கவலைப்படுவதில் அர்த்தம் ஒன்றுமில்லை.மனதைக் கொன்றழிக்கும் கவலையிலிருந்து மீள்வாயாக.போர்க்களத்தில் மாண்டவர் அனைவரும் வீரப்போர் புரிந்து மாண்டவரே! யாரும் கோழைகளாக புறமுதுகு காட்டி ஓடுகையில் கொல்லப் படவில்லை.அவர்கள் தங்கள் கடமைகளை முடித்துக் கொண்டு சுவர்க்கம் சென்றனர்.அவர்களைக் குறித்து நீ புலம்புவதில் நியாயம் இல்லை.

புத்திரனை இழந்த சோகத்தால் பீடிக்கப்பட்ட சிருஞ்சிய மன்னனுக்கு நாரதர் சொன்ன ஒரு வரலாற்றை உனக்கு நான் சொல்கிறேன்.சிருஞ்சியனை நோக்கி நாரதர் 'வேந்தே...இறந்து போன மாமன்னர்களின் வரலாற்றைக் கேட்டபின் உனது துன்பம் தொலையும் என எண்ணுகிறேன்.முன்னொரு காலத்தில் மருத்தன் என்னும் மன்னன் ஒருவன் இருந்தான்..இந்திரன்,வருணன்,பிரகஸ்பதி முதலானோர் வந்து சிறப்புச் செய்யும் அளவிற்கு யாகம் செய்த பெருமை மிக்கவன் அவன்.அம்மருத்தனது ஆட்சியில் வித்தின்றியே விளைவு மிகுந்திருந்தது.உழவு முதலியன இன்றியே தானியங்கள் எங்கும் குவிந்து கிடந்தன.தேவர்களுக்கும்..கந்தர்வர்களுக்கும் அவன் அளித்த அளவிற்கு வேறு யாரும் தானம் அளித்ததில்லை.உன்னையும், உன் மகனையும் விட அம்மருத்தன் ஞானம்,தருமம்,செல்வம்,வைராக்கியம் ஆகிய நான்கினும் சிறந்து விளங்கினான்.அத்தகையவனே இறந்து விட்டான் எனில்..உன் மகன் இறந்து போனது குறித்து நீ ஏன் கவலைப்படுகிறாய்?

சுகோத்திரன் என்னும் மன்னனும் இறந்து விட்டான்..அவன் என்ன சாதாரண மன்னனா? அவனது மேன்மையை அறிந்த இந்திரன் அவன் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு வருடம் பொன் மாரி பெய்வித்தான்.ஆறுகளில் பொன்னீர் ஓடிற்று.அவற்றில் மீன்,நண்டு,ஆமை கூட பொன்னிறமாய்க் காட்சி அளித்தது.பல யாகங்களில் பொன்னையும், பொருளையும் அனைவருக்கும் வாரி வாரி வழங்கினான்.அத்தகைய மன்னனும் மாண்டு விட்டான் எனில்..ஒரு யாகமும் செய்யா உன் மகன் இறந்ததற்கு ஏன் அழுகிராய்.

அங்க தேசத்து அரசன் பிரகத்ரதன்..அவன் செய்த யாகத்தின் போது லட்சக்கணக்கான யானைகளையும்,குதிரைகளையும்,பசுக்களையும்,காளைகளையும் பிராமணர்களுக்குத் தானமாக அளித்தான்.அளவற்ற செல்வங்களை வாரி வாரி வழங்கினான்.கொடை வள்ளலான அந்த பிரகத்ரதனும் இறந்து போனான்

சிபி என்னும் அரசன் உலகம் அனைத்தும் ஒரே குடையின் கீழ் ஆண்டவன்.அவன் தன் நாட்டில் உள்ள பசுக்களை மட்டுமின்றி..காட்டில் உள்ள பசுக்களையும் யாகத்தின் போது தானம் செய்து உயர்ந்திருந்தான்.பிரம தேவரே அவனது பெருமையைக் கண்டு பெருமிதம் அடைந்தார்.அத்தகைய பெருமை மிக்கவனும் இறந்து விட்டான்.

செல்வங்களைக் குவியல்..குவியலாய் பெற்றவன் பரதன் என்னும் மன்னன்.ஆயிரம் அசுவமேத யாகங்களையும்..நூறு ராஜசூய யாகங்களையும் செய்த பெருமை மிக்கவன்.அந்த பரதன் செய்த செயற்கரிய செயல்களை தம்மால் செய்ய முடியவில்லையே என அக்கால மன்னர் எல்லாம் ஏங்கினர்.யாகத்தின் போது அம்மாமன்னன் கோடிக்கணக்கான பசுக்களை தானம் செய்தான்.உன்னையும்..உன் மகனையும் விட சிறந்தவன் இறந்து விட்டான்.

ராமரைவிட சிறந்தவரை காணமுடியுமா?உலக உயிர்களில் அவர் காட்டிய அன்பிற்கு ஈடு உண்டா..அந்தப் புண்ணியரின் ஆட்சியில் மக்கள் நோய்த் துன்பமின்றி வாழ்ந்தனர். மாதம் மும்மாரி பெய்தது.மக்கள் பயமின்றி மகிழ்வுடன் வாழ்ந்தனர்.பதினாங்கு ஆண்டு கால வனவாசத்திற்குப் பிறகு பல அசுவமேத யாகங்களைச் செய்தார்.அயோத்தியில் ராம ராஜ்யம் நீடித்திருந்தது,..அந்த ராமனும் மரணமடைந்தான்.

பகீரதன் பற்றி அறியாதார் இல்லை..அவன் ஆயிரம்..ஆயிரம் குதிரைகளையும்,யானைகளையும்,தேர்களையும்,பசுக்களையும்,ஆடுகளையும் தானம் செய்தவன்.அவன் மடியில் கங்கை ஒரு குழந்தைப் போல அமர்ந்திருந்தாள்.அதனால் கங்கை அவனுக்கு மகளானாள்...உம்மையும்..உம் மகனையும் விட சிறந்த அந்த பகீரதனும் மரணம் அடைந்தான்..

திலீபன் என்னும் மன்னன் புகழை உலகம் போற்றுகிறது.அவன் யாகத்தின் போது பொன்னாலான யானைகளைத் தானமாக அளித்தான்.இந்திரன் முதலான தேவர்கள் அவனை வழிபட்டனர்.அவன் முன்னால் ஆயிரம்..ஆயிரம்..தேவர்களும்..கந்தர்வர்களும் நடனம் ஆடினர்.அவன் அவையில் வசு என்னும் கந்தர்வன் வீணை வாசித்தான்..அந்த வீணையிலிருந்து எழும் இனிய ஒலி கேட்டு உயிரினங்கள் மகிழ்ச்சி அடைந்தன.அவனது நாட்டில் தங்கக் கவசம் பூண்ட யானைகள் மதம் பிடித்து எங்கும் திரிந்தன.அந்தத் திலீபனும் இறந்து விட்டான் எனில்..உன் மகன் இறந்ததற்கு ஏன் அழுகிறாய்.

மூன்று உலகங்களையும் வெற்றி கொண்ட மாந்தாதா என்னும் மன்னனும் மாண்டு போனான்.குழந்தையாக தேவ வடிவத்தில் தன் தந்தையின் மடியில் படுத்திருந்த போது..இந்திரன் 'இந்தக் குழந்தைக்கு நான் பால் தருவேன்' என தன் கை விரலை அதன் வாயில் வைத்தி பால் பெருகச் செய்தான்.அந்தப் பாலின் சக்தியால் மாந்தாதா பன்னிரெண்டு நாட்களிலேயே வளர்ந்து வாலிபன் ஆனான்.ஆற்றல் மிக்க அவன் பூமி முழுதும் வென்று தனதாக்கிக் கொண்டான்.அவன் அங்காரகன் என்னும் அரசனை எதிர்த்துப் போர் செய்கையில் எழுந்த நாண் ஒலியால் தேவலோகம் இடிந்து விழுமோ எனத் தேவர்கள் நடுங்கினர். அவன் நூற்றுக்கும் மேலான அசுவ மேத யாகங்களையும்..ராஜசூய யாகங்களையும் செய்தான்.அவன் ஆயுளும் ஒரு நாள் முடிந்தது

நகுஷன் மகன் யயாதி புகழ் வாய்ந்தவன்..பூமி முழுதும் யாகசாலையாக மாற்றியவன் அவன்.அவன் தங்க மலைகளைத் தானம் செய்த பெருமை மிக்கவன்.அவன் காட்டை அடைந்து தவம் இயற்றி மாண்டு போனான்.

நாபகன் என்னும் மன்னனின் மகன் அம்பரீஷன்.அவன் இயற்றிய யாகத்தில் பத்து லட்சம் அரசர் பணி புரிந்தனர்.அவனைப் போன்ற சிறந்த மன்னன் மூவுலகிலும் இல்லை என மக்கள் புகழ்ந்தனர்.அவனுக்கு பணி புரிந்தோர் அனைவரும் புண்ணிய உலகம் அடைந்தனர்.கடைசியில் அந்த மன்னனும் மாண்டான்.

சித்திரதன் என்னும் மன்னனின் மகன் சசபிந்து..நூறு நூறு யானைகளையும்.ஒவ்வொரு யானைக்கும் நூறு நூறு தேர்களையும்..ஒவ்வொரு தேருக்கும் நூறு நூறு குதிரைகளையும்..ஒவ்வொரு குதிரைக்கும் நூறு நூறு பசுக்களையும்..ஒவ்வொரு பசுவிற்கும் நூறு நூறு வெள்ளாடுகளையும் ஒவ்வொரு வெள்ளாட்டுக்கும் நூறு நூறு செம்மறியாடுகளையும் கொண்ட அளவற்ற செல்வத்தை யாகத்தின் போது தானமாக அளித்தான்..அத்தகைய தான திலகனான சசபிந்துவும் மாண்டான்.

அதூர்த்தரஜஸ் என்னும் மன்னனின் மகன் கயன்.அவன் ஆட்சியில் நாடெங்கும் அமைதி நிலவியது.அவன் பல யாகங்களைச் செய்தான்..யாகத்தின் போது நூறாயிரம் பசுக்களையும்..பதினாறாயிரம் குதிரைகளையும் தானமாக அளித்தான்.அசுவமேதம் என்னும் பெரும் யாகத்தின் முடிவில் ஐம்பது முழ அகலமும் நூறு முழ நீளமும் கொண்ட பொன் விளையும் பூமியைத் தானமாகக் கொடுத்தான் பொன்னும், பொருளும்,போகமும் பெற்றிருந்த அந்தக் கயனும் மாண்டு விட்டான்

ரத்தி தேவன் என்னும் மன்னன்சங்கிருதியின் மகன் ஆவான்..புகழ் வாய்ந்த அவன் வேள்விச் சாலையில் இருந்த குடங்கள், தோண்டிகள், அண்டாக்கள், அனைத்தும் பொன்னாலானவை.அவன் செய்
த, தர்மங்களுக்கு அளவே இல்லை.'எங்களை நல்ல செயலுக்கு பயன் படுத்திக் கொள்ளுங்கள்' என்றுக் கேட்டுக் கொண்டு நாட்டிலும்,காட்டிலும் இருந்த பசுக்கள் அம்மன்னனை வந்தடைந்தன.அத்தகைய பெருமை மிக்க மன்னனும் மடிந்தான்.

இட்சுவாகு குல அரசன் சகரன்..அவனுக்கு அறுபதினாயிரம் மைந்தர்கள்.அந்தச் சகர புத்திரர்களால் தோண்டப்பட்டதால் கடல் சாகரம் எனப் பெயர் பெற்றது.சகரன் ஆயிர அசுவமேத யாகங்களைச் செய்து தேவர்களை மகிழ்வித்தான்.பூமி முழுதும் ஒரே குடைக் கீழ் ஆண்ட அந்தச் சகரனும் மாண்டான்

வேனனின் மகன் பிருது என்னும் அரசன், மகரிஷிகள் ஒன்று கூடி..'நாட்டைப் பெருகச் செய்வான் இவன்' எனக் கருதி பிருது எனப் பெயரிட்டு முடிசூட்டினர்.அவன் உலகத்தை ஆபத்திலிருந்து காத்ததால் க்ஷத்திரியன் என்றும் அழைக்கப் பட்டான்.அவன் கடல் மீது செல்கையில் கடல் நீர் கல்லைப்போல் உறுதியாக இருந்து வழி அமைத்துத் தரும்.அவன் செய்த அசுவமேத யாகத்தின் போது மூன்று ஆள் உயரமுள்ள இருபத்தொரு தங்க மாலைகளை வேதியர்க்கு தானம் செய்தான்.அத்தகைய வள்ளலும் இறந்தான்

'சிருஞ்சயனே..இவ்வாறு பதினாறு மாமன்னர்களும் மாண்டார்கள் என்றால்..உனது சிறு பாலகன் இறந்ததற்கு வருந்தலாமா?' என நாரதர் ஆறுதல் கூறினார்.

இந்த வரலாற்றைக் கூறிய நாரதரும் இங்கு வீற்றிருக்கிறார்.ஆதலால்..தருமரே..உலக இயல்பு இதுதான் எனத் தெளிந்து மனக்கவலை விலக்கி மண்ணாள் செல்வத்தை ஏற்றுச் சிறப்பாக ஆட்சி புரிவாயாக!' எனக் கண்ணன் கூறி முடித்தார்.

கண்ணனைத் தொடர்ந்து வியாசர் பல அறங்களை எடுத்துரைத்தார்.தருமரை அசுவமேத யாகம் புரிய வற்புறுத்தினர்.

பீமன்,அர்ச்சுனன்,நகுலன்,சகாதேவன்,திரௌபதி,வியாசர்,கண்ணன் ஆகியோரின் இடைவிடா அறிவுரைகளால் தருமர் துக்கத்திலிருந்து விடுபட்டார்.தருமரின் முகத்தில் சோகம் அகன்று சாந்தம் தவழ்ந்தது.அவர் அஸ்தினாபுரம் செல்லப் புறப்பட்டார்,பதினாறு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறினார்.பீமன் தேரைச் செலுத்தினான்.அர்ச்சுனன் வெண் கொற்றக் குடை பிடித்தான்.நகுல,சகாதேவன் இருவரும் வெண் சாமரம் வீசினர்.சகோதரர்கள் ஐவரும் ஒரு தேரில் செல்லும் காட்சி பஞ்ச பூதங்களையும் ஒரு சேரக் காண்பது போல இருந்தது.கண்ணனும், சாத்யகியும் ஒரு தேரில் சென்றனர்.திருதிராட்டிரன்..காந்தாரியுடன் ஒரு தேரில் ஏறிப் பின் தொடர்ந்தான்.குந்தி,திரௌபதி,சுபத்திரை முதலானோர் விதுரரைத் தொடர்ந்து பலவித வாகனங்களில் சென்றனர்.அலங்கரிக்கப்பட்ட யானைகளும்,குதிரைகளும் தொடர்ந்து சென்றன.அலை அலையாகத் தொடர்ந்து சென்ற மக்கள் கூட்டம் கடலே எழுந்தது போல இருந்தது.

அஸ்தினாபுரத்து மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.நகரை நன்கு அலங்கரித்தனர்.நகரம் கோலாகலமாகத் திகழ்ந்தது.தெருவெங்கும் மாலைகளும்,தோரணங்களும் காட்சியளித்தன.சந்தனமும்,கஸ்தூரியும் மலர் மாலைகளும் மணம் வீசி அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தின.'எங்கள் மாமன்னர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்க' என்னும் வாழ்த்தொலிகளுக்கிடையே தருமர் அஸ்தினாபுரம் அடைந்தார்.

தருமர் உயர்ந்த பொற் பீடத்தில் கிழக்கு முகமாக அமர்ந்தார்.அவருக்கு எதிரே அழகு மிக்க பொற் பீடத்தில் கண்ணன் அமர்ந்தார்.தருமர் நடுவில் இருக்க..பின்புறம் இருந்த பீடங்களில் பீமனும்,அர்ச்சுனனும் அமர்ந்தனர்.அழகான இருக்கையில் நகுலன்,சகாதேவன் ,குந்தி ஆகியோர் அமர்ந்தனர்.திருதிராட்டிரன் முதலான மற்றவர்கள் அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.தருமர் அருகில் திரௌபதியை அமரவைத்துத் தௌமியர் விதிப்படி ஓமம் செய்தார்.கண்ணன் புனித கங்கை நீரால் தருமருக்கு அபிஷேகம் செய்து முடி சூட்டினார்.எங்கும் துந்துபி முதலான மங்கள வாத்தியங்கள் முழங்கின.அந்தணர்கள் வாழ்த்தினர்.

தருமர் அவையினரை நோக்கி' அவையோரே, எங்களது பெரிய தந்தை திருதிராட்டிர மாமன்னர் எங்களுக்கு தெய்வம் போன்றவர்..என் நன்மையை விரும்பும் அனைவரும் அவரையும் போற்றுதல் வேண்டும்.உங்களுக்கும், எங்களுக்கும் அவரே அரசர்.நீங்கள் அவருக்குச் செய்யும் நன்மையே எனக்குச் செய்யும் நன்மையாகும்.எனது இந்த விருப்பத்தை நீங்கள் எப்போதும் மனதில் கொள்ளவேண்டும்.' என்று கூறினார்.பிறகு அனைவரையும் அவரவர் இடத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

பின்னர் அரசியல் காரியம் தொடங்கியது.தருமர், பீமனுக்கு இளவரசு பட்டம் சூட்டினார்.விதுரரை ஆலோசனைக் குழுத் தலைவராக நியமித்தார்.சஞ்சயனை வரவு..செலவுகளைக் கவனிக்கும் பதவியில் அமர்த்தினார்.அர்ச்சுனனை படைத் தளபதியாக இருக்கச் செய்தார்.நகுலனை படைகளைக் கவனிக்குமாறு கட்டளையிட்டார்.சகாதேவனை எப்போதும் தன் அருகில் இருக்கப் பணித்தார்.அரச புரோகிதராகத் தௌமியர் நியமிக்கப் பட்டார்.பெரிய தந்தையைக் கண்ணும் கருத்துமாக அனைவரும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் வற்புறுத்தினார்.

தருமர் குருக்ஷேத்திர வெற்றிக்குக் காரணமாக இருந்த கண்ணனைக் கை கூப்பித் தொழுதார்.கண்ணனை நூறு நாமங்களால் போற்றிப் புகழ்ந்தார்.'யதுகுலத் திலகமே..உம் அருளால் இந்த அரசு எனக்குக் கிடைத்தது.உலகம் உம் அருள் பார்வையால் நிலை பெற்றுள்ளது. உமக்குப் பலகோடி வணக்கம்' எனப் பணிவுடன் வணங்கினார்.

பின்..துரியோதனின் மாளிகையைப் பீமனுக்கு வழங்கினார்.துச்சாதனனின் மாளிகையை அர்ச்சுனனுக்கு அளித்தார்.துர்மர்ஷனுடைய மாளிகையை நகுலனுக்கும்,துர்முகனுடைய மாளிகையைச் சகாதேவனுக்கும் கொடுத்தார்.'என் அன்புத் தம்பிகளே! என் பொருட்டு நீங்கள் இதுவரை எல்லையற்ற துன்பத்தை ஏற்றீர்.இனி இன்பத்துடன் வாழ்வீர் ' என்றார்.

பின் ,குடிமக்களை அழைத்து அறநெறியில் உறுதியாய் இருக்குமாறு கூறினார்.

Related Articles

 • Mahabharatha
  Mahabharatha
  மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது…
 • Vyasarin Mahabharatham
  Vyasarin Mahabharatham
  பராசர மகரிஷியின் புத்திரர் வியாசர்.வேதங்களை தொகுத்தளித்தவர்.இவர்தான் மகாபாரதம்…
 • Aadi Parvam
  Aadi Parvam
  இட்சுவாகு குலத்தைச் சேர்ந்த மகாபிஷக் என்ற மன்னன்…
 • Maganai Kanda Mannan
  Maganai Kanda Mannan
  சந்தனு..காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது..கங்கை நதியைக் கண்டான்..இந்த…
 • Bhishmar
  Bhishmar
  தந்தையை எண்ணி..சிந்தனை வயப்பட்டான் தேவவிரதன்.பின் எப்படியாவது..அந்த பெண்ணை…

Be the first person to comment this article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *