Dwarakaiyin Azhivu

அஸ்வமேத யாகம் முடிவுற்றது.வந்திருந்த மகரிஷிகளும்,மன்னர்களும், மக்களும் கிருஷ்ணரை பணிந்து வணங்கினர்.கண்ணன் அனைவருக்கும் நல்லறக் கருத்துகளைக் கூறி ஆசி வழங்கினார்.பின் கண்ணன் துவாரகைக்குத் திரும்பிச் செல்ல விரும்பினார்.தேவர்களும், பிரம்ம ரிஷிகளும் யோகிகளும் பல்துறை வல்லுநர்களும் இனிக் கண்ணனை துவாரகையில் கண்டு தரிசிப்போம் எனக் கருதினர். கண்ணனை பிரிய மனமில்லாத பாண்டவர்கள் வருத்தம் மேலிட, தலை மேல் கை வைத்து வணங்கிக் கண்ணிர் மல்க ஒன்றும் பேசாது மௌனமாய் இருந்தனர்.கண்ணனும் மனம் நெகிழ்ந்தார்.வியாசர், திருதிராட்டிரன்,விதுரர்,காந்தாரி,திரௌபதி ஆகியோரிடம் விடை பெற்றுக் கொண்டு தேரில் புறப்பட்டார் கண்ணன்.அன்பு மேலிட பாண்டவரும் தேரில் ஏறினர்.தருமர் சாரதியாகி குதிரையின் கடிவாளக் கயிறுகளைப் பிடித்தார்.அர்ச்சுனன் தங்க மயமான விசிறி கொண்டு பகவானுக்கு அருகில் இருந்து வீசினான்.பீமன் ஸ்வர்ணமயமான குடையைப் பிடித்தான்.நகுல, சகாதேவன் சாமரம் வீசினர்.தேர் சில காத தூரம் சென்றதும், கண்ணன் தன்னை வணங்கிய பாண்டவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களை அஸ்தினாபுரத்திற்குச் செல்லும்படி அனுப்பிவிட்டு துவாரகை சென்றார். அஸ்தினாபுரம் சென்ற பாண்டவர்கள் கண்ணனை நெஞ்சில் இருத்தி அவரது நினைவாகவே வாழ்ந்த வரலாயினர். பிதாமகர் பீஷ்மரையும்,துரோணரையும்,கர்ணனையும்,துரியோதனன் முதலான தம்பியரையும் , எண்ணற்ற வீரர்களையும் யுத்த களத்தில் இழந்த பின் பெற்ற அரசாட்சியில் தருமருக்கு மகிழ்ச்சி ஏதுமில்லை.நாடாளும் மன்னன் என்னும் பெருமிதமும் இல்லை.நாட்டைக் காவல் புரியும் ஒரு காவல்காரனாகவே தம்மைக் கருதி நாட்டை ஆளத் தொடங்கினார்.முப்பத்தாறு ஆண்டுகள் தருமரின் ஆட்சி நீடித்திருந்தது.தரும நெறி எங்கும் தழைத்து ஓங்கியது. நூறு பிள்ளைகளை பறி கொடுத்த திருதராட்டிரனையும், காந்தாரியையும் தனது இரு கண்களைப் போல் கருதிப் பாதுகாத்து வந்தார்.பிள்ளைகளைப் பறி கொடுத்த தந்தைக்கும்,தாய்க்கும் ஏற்பட்ட வேதனையைக் கண்டு தருமர் மனம் வாடினார்.அவர்களுக்கு மனக்குறை ஏதும் ஏற்படாதவாறு நடந்துக் கொள்ள வேண்டும் எனத் தம்பியரிடம் கூறினார்.துரியோதனன் காலமெல்லாம் தந்தைக்குத் தொல்லை கொடுத்து வந்தான்.ஆனால் தருமரோ..தன் தந்தை பாண்டு இருந்திருந்தால் எப்படி அவரைப் பார்த்துக் கொள்வாரோ அதைவிடப் பல மடங்கு அன்புடன் பெரியப்பாவிடம் நடந்து கொண்டார்.காலப் போக்கில் தன் மக்கள் இல்லாத குறையைத் திருதராட்டிரன் மறக்கும் வண்ணம் தருமர் நடந்துக் கொண்டார். தருமரைப் போலவே குந்தியும், திரௌபதியும் திரிதிராட்டினனுக்கும்,காந்தாரிக்கும் மனம் கோணாது பணிவிடை செய்தனர். பெரியப்பாவிற்கு மனம் கோணாமல் நடக்க வேண்டும் என தருமர் உரைத்தாலும், பீமன் மட்டும் சிறிது மாறுபாடாகவே நடந்து கொண்டான்.தாங்கள் அனுபவித்த துன்பங்களுக்கு எல்லாம் உடந்தையாக இருந்ததற்காக திருதிராட்டிரன் காதில் விழுமாறு எதையாவது சொல்லிக் கொண்டே இருந்தான்.இவற்றைக் கேட்ட திருதிராட்டிரன் மனம் புண்பட்டாலும்..காலப்போக்கில்..பீமன் சொல்வது உண்மைதானே என நினைத்து பண்பட்டான். தருமர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுப் பதினைந்து ஆண்டுகள் கழிந்தன.தருமரின் உபசரிப்பில் திருப்தியாய் இருந்தாலும், திருதிராட்டினன் கானகம் சென்று கடுந் தவம் புரிந்து இவ்வுலக வாழ்க்கையை முடிக்க எண்ணினார்.மனதில் முன்னர் இருந்த ஆசாபாசங்கள் இப்போது இல்லை.பிள்ளைப் பாசத்தால் செய்த கொடுமைகளை எண்ணி எண்ணி மனம் திருந்தியவனாகத் திருதிராட்டினன் காட்சியளித்தான். க்ஷத்திரிய வம்சத்தில் பிறந்தவர்கள் போர்க்களத்தில் போர் புரிந்து வீர மரணம் அடைய வேண்டும் அல்லது முதிர்ந்த வயதில் கானக வாழ்க்கை மேற்கொண்டு தவம் இயற்றி உலக வாழ்க்கையை முடிக்க வேண்டும்.போர்க்கள மரணத்திற்கு திருதிராட்டிரனுக்கு வாய்ப்பில்லை.எனவே வனத்திற்குச் செல்ல விரும்பினான். ஒருநாள் சான்றோர்களை அழைத்து தனது எண்ணத்தை புலப்படுத்திப் பேசினான்.'அன்புள்ளம் கொண்டவர்களே! கௌரவ வம்சமே வீழ்ச்சி அடைந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.அதன் அழிவிற்கு நானும் ஒரு காரணம்தான்.புத்திர பாசத்தால் துரியோதனன் சொன்னவாறெல்லாம் நடந்து கொண்டேன்.பீஷ்மர் போன்ற மேலானவர் கூற்றிற்கு எல்லாம் செவி சாய்க்காது புறக்கணித்தேன்.என் தம்பியரின் புதல்வர்களுக்கு எல்லையற்ற தொல்லை கொடுத்தேன்.தருமனையா பகைத்தேன்...தருமத்தை அல்லவா பகைத்தேன். கண்ணனின் பேச்சைக் கேட்காததால் இப்போது துன்பத்தை அனுபவிக்கிறேன்.பாண்டவர்களுக்கு நாடு தராதது மட்டுமல்ல..அவர்களுக்கு மாபாதகக் கொடுமைகளைச் செய்தேன்.நான் செய்த தவறுகள் என் மனதைத் துளைத்துத் துன்புறுத்துகின்றன.இதுவரை கண்ணை மட்டுமா இழந்திருந்தேன்..கருத்தையும் அல்லவா இழந்திருந்தேன்.இப்போதுதான் அறிவுக் கண் திறக்கப் பெற்றேன்.குருக்ஷேத்திர போருக்குப் பின் பாண்டவரின் உபசரிப்பால் அறிவுக் கண் திறந்தேன். செய்த தவறுக்கு எல்லாம் பிராயச்சித்தம் தேடுகிறேன்.சில நாட்களாகக் கஞ்சியை மட்டுமே பருகி வருகிறேன்.சுவையான உணவு உட்கொள்வதில்லை.நாள் தோறும் ஜபம் செய்கிறேன்.தர்ப்பைப் புல்லையே படுக்கையாகக் கொண்டு அதில் படுத்துக் கிடக்கிறேன்.இரவில் உறக்கம் இல்லை.காந்தாரியின் நிலையும் இதுவே.நூறு மகன்களை இழந்த தாயின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். இவ்வாறு அவையோரை நோக்கிக் கூறிய திருதிராட்டினன் தருமரைப் பார்த்து,' உனக்கு எல்லா நன்மைகள் உண்டாகட்டும்.உன்னால் நான் நன்கு கவனிக்கப்படுகிறேன்.காந்தாரியும் என்னை நன்கு கவனித்துக் கொள்கிறாள்.திரௌபதிக்கும்,பண்டவர்களான உங்களுக்கும் தீங்கு இழைத்த கொடியவர்கள் அதற்கான தண்டனையைப் பெற்றுவிட்டார்கள்.தற்போது எனக்கும் , உன் தாயான காந்தாரிக்கும் புண்ணியம் அளிக்கும் செயலை நான் செய்ய வேண்டும்.அரசன் என்பவன் மக்களை ஆள்பவன் மட்டுமல்ல.அவன் குடிமக்களுக்கு குரு போன்றவன்.ஒவ்வொருவருடைய ஆன்ம நலனுக்கும் அவன் உதவி செய்ய வேண்டும்.அதனால்..உன்னிடம் ஒன்று கேட்கிறேன்.அதற்கு நீ அனுமதி தர வேண்டும்.காடு செல்ல விரும்புகிறேன்..தருமா...தடை செய்யாதே' நீ அனுமதி அளித்த பிறகு நானும், காந்தாரியும் காடு செல்வோம்.அங்கு மரவுரி தரிப்போம்.கந்த மூலாதிகளை உண்போம்.கடுந்தவம் செய்வோம்.அந்தத் தவத்தின் பயன் உனக்கும் கிடைக்கும்.மக்கள் செய்யும் பாவ புண்ணியத்தில் ஒரு பகுதி மன்னனைச் சாரும் என சான்றோர் கூறுகின்றனர்.எனவே எனக்கு அனுமதி கொடு' என்றார். இதைக் கேட்ட தருமர் வருந்தினார்.'அரசே..உங்கள் துயரை மாற்ற நாங்கள் முயற்சி செய்தோம்.எல்லாம் பயனற்று போயின.காலப்போக்கில் கவலைகளை மறந்திருப்பீர் என எண்ணி ஏமாந்து விட்டோம்.நீர் உணவு கொள்ளாமல் உபவாசம் இருப்பதும், தரையில் படுப்பதும் எங்களுக்குத் தெரியாமல் போயிற்று.நீர் மகிழ்வுடன் இருப்பது போல பாவனை செய்து மனதிற்குள் வேதனையாய் இருந்துள்ளீர்கள்.நீங்கள் படும் வேதனைக் கண்டு, எனக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை.துரியோதனனிடம் எனக்கு கோபம் இல்லை.எல்லாம் விதியின் செயல்.நாங்கள் தங்களையும், பாண்டுவையும் வேறாக பார்க்கவில்லை.அதுபோல காந்தாரியையும் எங்கள் தாய் போலவே கருதுகிறோம்.ஆகவே எங்களை விட்டு காடு செல்ல நீங்கள் விரும்பினால்..நானும் உங்களுடன் வருவேன்..யாரேனும் நாட்டை ஆளட்டும்'என்றார். தருமரின் உரையைக் கேட்ட திருதிராட்டினன் மூர்ச்சித்து காந்தாரியின் மடியில் சாய்ந்தான்.தருமர் உடன் குளிர்ந்த நீர் தெளித்துக் கைகளால் வருடினார்.தருமரின் கைப்பட்டதும் திருதிராட்டினன் உணர்வு பெற்றான். அப்போது அங்கு தோன்றிய வியாசர் தருமருக்கு அறிவுரை வழங்கினார்.'தருமா..திருதிராட்டினன் விருப்பப்படியே செய்..புத்திரர்களை இழந்த சோகத்தாலும், முதுமையின் தளர்ச்சியாலும் திருதிராட்டினன் மிகவும் துன்புறுகிறான்.எல்லா ராஜரிஷிகளும் கடைசிக் காலத்தில் வனவாசத்தையே விரும்புகிறார்கள்.அவனுக்கும் அந்த எண்ணம் ஏற்பட்டுவிட்டது.தடுக்காதே! ராஜரிஷிகள் யுத்தத்தில் இறக்க வேண்டும் அல்லது கானகம் சென்று தவம் இயற்றிப் பரகதி அடைய வேண்டும்.இது உலக நியதி.எனவே இவனுக்கு அனுமதி கொடு.தவம் புரிய தக்க சமயம்தான் இது' என்ற வியாசரின் அறிவுரையைத் தருமரால் தட்ட இயலவில்லை. பின்னர் திருதிராட்டினன் மக்களை நோக்கிப் பேசினான்,' என் அன்பு மக்களே..முன்னர் சந்தனு மாமன்னன் இந்நாட்டை சிறப்பாக ஆண்டான்.பின் என் தந்தை விசித்திரவீரியனும் பிதாமகர் பீஷ்மரால் காப்பாற்றப்பட்டு நல்ல முறையில் ஆட்சிக் காத்தார்.பின் பாண்டுவின் ஆட்சியும் மாட்சியுடன் திகழ்ந்தது.துரியோதனன் பாண்டவர்களுக்குத்தான் தீங்கு இழத்தானே தவிர உங்களுக்கு ஒரு தீமையும் செய்யவில்லை' இந்த நேரத்தில் உங்களிடம் ஒன்று வேண்டுகிறேன்.நான் உங்களுக்கு ஏதேனும் தீங்கிழைத்திருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.நான் காட்டிற்குச் செல்வதால் வருந்த வேண்டாம்.தருமன் எப்போதும் உங்களுக்கு நன்மையே செய்வான்.தருமன் தருமத்தின் உருவம் என்பதனை நன்கு புரிந்து கொள்ளுங்கள்.நான்கு லோக பாலகர்களுக்கு இடையில் பிரம்ம தேவன் இருப்பது போலப் பீமன், அர்ச்சுனன்,நகுலன் ,சகாதேவன் ஆகியோர் சூழ்ந்திருக்க தருமன் உங்களை நன்கு பாதுகாப்பான். பெரியோர்களே! உங்களிடம் இன்னொன்றையும் வேண்டுகிறேன்.நான் பெற்ற மைந்தரில் விகர்ணனைத் தவிர மற்றவர்கள் அறிவுத் தெளிவற்றவர்கள்.சுயநலம் மிக்கவர்கள்.அவர்களால் உங்களுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்திருக்குமேயாயின் அவர்களை மன்னித்துவிடுங்கள்.எங்கள் இறுதிக்காலத்தில் நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் தவ வாழ்க்கைக்கு நீங்களும் அனுமதி கொடுங்கள்'என்றான். கண் இழந்த மன்னன் பேசியதைக் கேட்டு மக்கள் உள்ளம் உருகினர்.கண்ணீர் விட்டனர்.ஒன்றும் பேசாது, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.கை குவித்து வணங்கிப் பிரியா விடை அளித்தனர். திருதிராட்டினையும்,காந்தாரியுயையும் பின் தொடர்ந்து குந்தியும், விதுரரும்,சஞ்செயனும் கானகம் சென்றனர்.நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையை அவர்கள் அறவே மறந்தனர். மறுமை இன்பத்தை வேண்டி நின்றனர்.துன்பம் நிறைந்த உலக வாழ்க்கையை நீத்த அவர்கள்;இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை' என்னும் மேலுலக வாழ்க்கையைப் பெற மூன்றாண்டுகள் துறவு மேற்கொண்டு தியானம்,தவம் ஆகியவற்றில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சமயம் காட்டுத்தீ எங்கும் பரவியது.தியானத்தில் இருந்த திருதிராட்டினன்,காந்தாரி,குந்தியை அத்தீ இரையாக்கிக் கொண்டது.அவர்கள் உடல்கள் வெந்து கரிந்து சாம்பலாயின.ஆனால் அவர்கள் உயிர்கள் சோதி வடிவமாய் மேலுலகம் நோக்கிச் சென்றன.காட்டித் தீ விதுரரையும்,சஞ்செயனையும் பாதிக்கவில்லை.அவர்கள் தியானத்தை மேற்கொள்ள இமய மலையை நோக்கிச் சென்றனர். பின் சில காலம் வாழ்ந்த இவர்களது சீரிய வாழ்வு ஊழி ஊழிக்காலம் போற்றும் வண்ணம் முடிவுற்றது. பாரதப் போர் முடிந்து முப்பத்தாறு ஆண்டுகள் ஆயின.குரு வம்சம் அழிந்ததைப் போலக் கண்ணனின் விருஷ்ணி வம்சமும் அழியும் காலம் வந்தது.அதனை அறிவிப்பது போலத் துர்நிமித்தங்கள் பல தோன்றின.புழுதிக் காற்று உலகையே மூடிவிட்டது போல தோற்றம் அளித்தது.விண்ணிலிருந்து நட்சத்திரங்கள் கரிக்கட்டையாய் விழுந்தன.சூரியன் ஒளிக் குன்றியவனாய்த் தெரிந்தான்.எங்கும் குழப்பமும்,அச்சமுமாய் இருந்தது.ஆடம்பரமும் தற்பெருமையும் கொண்ட விருஷ்ணிகளின் வீழ்ச்சி நெருங்கி விட்டது. ஒரு சமயம் விஸ்வாமித்திரரும்,கண்வரும்,நாரதரும் துவாரகைக்கு வந்தனர்.விருந்தினராக வந்த அந்த முனிவர்களைப் பக்தி பூர்வமாக வரவேற்று உபசரித்திருக்க வேண்டும்.ஆனால் ஆணவம் தலைக்கேறிய விருஷ்ணிகள் அலட்சியமாக அம்முனிவர்களிடம் நடந்துக் கொண்டனர்.கேலியும், கிண்டலுமாய் அவர்களிடம் பேசினர்.ஓர் ஆடவனுக்கு அழகிய வேடமிட்டு, அம்முனிவர்களிடம் அழைத்துச் சென்று 'இவளுக்கு ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா?' எனக் கேட்டு நகைத்தனர். கந்தல் துணிகளையும் இரும்புத் துண்டுகளையும் சேர்த்து மூட்டையாக வயிற்றில் கட்டிக் கர்ப்பிணிப் பெண்ணாக காட்சி அளித்த ஆடவனைக் கண்ட அவர்கள் சினம் கொண்டனர்.'இவன் ஒரு இரும்பு உலக்கையைப் பெற்றெடுப்பான்.அந்த உலக்கையால் கண்ணனும், பலராமனும் தவிர விருஷ்ணி குலம் முழுதும் நாசம் அடையும்' எனச் சாபம் இட்டனர்.முனிவர்களின் சாபத்தைக் கேட்ட விருஷ்ணிகள் பயந்து ஓடோடிச் சென்று பலராமனிடமும், கண்ணனிடமும் நடந்ததை கூறினர். இரும்புத்துண்டை நன்றாகத் தூள் தூளாக்கிக் கடலில் போடுமாறு பலராமன் அவர்களுக்கு ஆலோசனைக் கூறினார்.விருஷ்ணி இளைஞர்களும் அப்படியேச் செய்தனர்.தங்களுக்கு நேர இருந்த ஆபத்து நீங்கியதாக நினைத்தனர்.ஆனால் கண்ணனின் மனநிலை வேறாக இருந்தது.முன்னொரு சமயம் மக்களை பறி கொடுத்த காந்தாரி தமக்கு இட்ட சாபத்தை நினைத்தார்.'நீ நினைத்திருந்தால் குருகுல நாசத்தைத் தடுத்திருக்கலாம்.ஆனால் நீ அவ்வாறு செய்யவில்லை.எனவே குருவம்சம் அழிந்தது போல உன் விருஷ்ணி வம்சமும் அழியட்டும்' என்று அவள் இட்ட சாபத்தை எண்ணி தமது விருஷ்ணி வம்சமும் அழியும் காலம் வந்துவிட்டதை உணர்ந்தார். கண்ணன் வர இருக்கும் ஆபத்தை மாற்ற விரும்பவில்லை.காலத்தின் இயல்பு அது.விருஷ்ணிகளின் ஒழுக்கக்கேடு வரம்பு மீறிச் சென்றது.ஆணவமும்,ஆடம்பரமும் அளவு கடந்து சென்றன.பலராமனையும், கண்ணனையும் தவிர மற்ற எல்லாரையும் அவர்கள் அவமானப் படுத்தினர்.ஐம்புல இன்பங்களில் எல்லை மீறிச் சென்றனர்.குறிப்பாகக் காமக் களியாட்டத்தில் பெரிதும் ஈடுபட்டனர்.கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் துரோகம் செய்தனர். சாபம் பலிக்கும் காலம் வந்து விட்டது.கடலுக்குள் போடப்பட்ட இரும்புத் தூள்கள் கரையோரத்தில் ஒதுங்கி நாணல்களாக வளர்ந்திருந்தன.குடித்து விட்டுக் கேளிக்கைகளில் ஈடுபட்ட விருஷ்ணிகள் அக்குடிவெறியில் ஒருவரோடு ஒருவர் சர்ச்சையில் ஈடுபட்டனர்.ஒருவரை ஒருவர் அடிக்கத் தொடங்கினர்.கடற்கரையில் வளர்ந்திருந்த நாணல்கள் அனைத்தும் முனிவர்கள் இட்ட சாபத்தால் உலக்கைகளாக மாறியிருந்தன.விருஷ்ணிகள் உலக்கையால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.தந்தையென்றும்,மகன் என்றும் உறவு என்றும் பாராது கடுமையாக இரும்பு உலக்கையால் அடித்துக் கொண்டு மாண்டனர். காலத்தின் போக்கை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் கண்ணன்.மண்ணுலகில் தன் வேலை முடிந்து விட்டது என எண்ணினார்.பலராமன் தன் உடலை ஒழித்து விட்டுப் பரத்தில் ஐக்கியமானார்.கண்ணனும் தன் உடலை மாய்க்கக் கருதினார்.காந்தாரி முன்னர் இட்ட சாபத்தை நினைத்துப் பார்த்தார்.இப்போது தமது உத்தம உலகை அடையும் நேரம் வந்துவிட்டது என உணர்ந்தார்.கண்ணன் ஐம்புலன்களையும் அடக்கி யோக நித்திரையில் ஆழ்ந்தார்.அதனை உணராது ஏதோ விலங்கு என எண்ணி ஜரன் என்னும் வீரன் அம்பை எய்தினான்.கூரிய முனையை உடைய அந்த அம்பு கண்ணனின் இகலோக வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்தது.முனிவர்கள் தொழ..ஜோதி உலகு எங்கும் பரவி ஆகாயம் நோக்கிச் செல்ல தம் உலகை அடைந்தார் கண்ணன்.அவரை அங்கு இந்திரனும்,அஸ்வினி தேவர்களும்,ருத்ரர்களும்,வசுக்களும்,சித்தர்களும்,முனிவர்களும் தாழ்ந்து பணிந்து வரவேற்றனர். தாருகன் அஸ்தினாபுரம் சென்று விருஷ்ணிகளும், போஜர்களும்,அந்தகர்களும் மாண்ட செய்தியை தெரிவித்தான்.உலக்கையால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு இறந்தனர் என்ற செய்தி அறிந்து அஸ்தினாபுரம் திடுக்கிட்டது.கண்ணனைக் காணலாம் என்று வந்த அர்ச்சுனன் ஏமாற்றம் அடைந்தான்.அவன் அங்கு வரும் முன் பரமாத்மா தனது உலகமான பரலோகத்தை அடைந்து விட்டார்.துவாரகை மயான பூமியாய் காட்சி அளித்தது. கண்ணன் இல்லாத துவாரகையையும், கணவனை இழந்து துடிக்கும் பெண்களையும் கண்ட அர்ச்சுனன் மயங்கி வீழ்ந்தான்.பார்த்தனைப் பார்த்த ருக்மணியும் சத்யபாமாவும் 'ஓ'வென கதறி அழுதனர்.மயங்கி வீழ்ந்தவன் மயக்கம் தெளிந்ததும் யாவரும் ஒன்றும் பேசாது மௌனமாக நின்றனர்.அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறிய அர்ச்சுனன் அவர்கள் அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொண்டான்.பலராமர்,கண்ணன் ஆகியோர் சடலங்களைக் கண்டெடுத்து எரியூட்டி ஈமச் சடங்குகளை முறையாக செய்து முடித்தான். அனாதைகளாகிவிட்ட பெண்களையும், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அர்ச்சுனன் அஸ்தினாபுரம் சென்றான்.அவர்கள் துவாரகையை விட்டுச் சென்றதும்..துவாரகை கடலில் மூழ்கியது.அர்ச்சுனனும் உடன் சென்ற மகளிரும் செல்லச் செல்ல அவர்கள் நீங்கிய நகரங்களும் கிராமங்களும் கடலால் கொள்ளப்பட்டன. அர்ச்சுனன் அத்தனை பெண்களையும், குழந்தைகளையும் அழைத்துச் செல்வதைக் கண்ட திருடர்களுக்கு பேராசை உண்டாயிற்று.அவர்கள் ஆயிரக் கணக்கில் அவர்களை வழிமறித்து தாக்கினர்.திருடர்களின் துணிச்சலைக் கண்டு அர்ச்சுனன் நகைத்தான்.'உயிரின் மீது உங்களுக்கு ஆசை இருக்குமாயின் ஓடி விடுங்கள்.இல்லையேல் எனது அம்பினால் கொன்றுவிடுவேன்;' என எச்சரிக்கை செய்தான்.ஆனால் திருடர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.பெண்களை மறித்துச் சூறையாடினர்.சினம் கொண்ட அர்ச்சுனன் காண்டீபம் என்னும் வில்லை எடுத்து நாண் ஏற்றி அம்பு தொடுக்க விறைந்தான்.ஆனால்...காண்டீபம் செயலிழந்துவிட்டிருந்தது.கற்ற மந்திரங்களும் நினைவுக்கு வரவில்லை.கற்ற கல்வியும் கேள்வியும் கடலில் கரைத்த காயம் போலாகின.'வில்லுக்கு விஜயன்' என்ற பெயர் போய்விட்டதோ என கலங்கினான்.காண்டீபம் செயலிழந்ததும்..அம்பறாத் துணியில் அம்புகளும் இல்லையாகின.யாவும் விதியின் பயன் என உணர்ந்தான்.இந்நிலையில் ஏராளமான பெண்களை திருடர்கள் கவர்ந்து சென்றனர்.பெரு முயற்சி செய்து எஞ்சியவர்களைக் காத்தான்.அவர்களை பொருத்தமான இடத்திலிருக்கச் செய்தான்.ருக்மணி அக்கினிப் பிரவேசம் செய்தாள்.சத்தியபாமையும் வேறு சிலரும் வனம் சென்று தவ வாழ்க்கை மெற்கொண்டனர். கண்ணீரும் கம்பலையுமாய் அர்ச்சுனன் வியாசரைக் காணச் சென்றான்.கண்ணனைப் பிரிந்தது..ஐந்து லட்சம் பேர் ஒருவரை ஒருவர் உலக்கையால் அடித்துக் கொண்டு மடிந்தது எல்லாவற்ரையும் கூறி அழுது புலம்பினான். வியாசர் அர்ச்சுனனுக்கு ஆறுதல் சொன்னார்..பின்.."அர்ச்சுனா..இறந்து போனவர்களைப் பற்றி கவலைப்படாதே.தெய்வ அம்சம் கொண்ட அவர்கள் கடமை முடிந்தது.அதனால் அவர்கள் ஆயுளும் முடிந்தது.இப்படி நடக்க வேண்டும் என்ற சாபம் அவர்களுக்கு இருந்தது.எல்லோரையும் ரட்சிக்கும் கண்ணன் நினைத்திருந்தால் இந்த அழிவைத் தடுத்து நிறுத்தி இருக்க முடியும்.ஆனால் அவரே இந்த முடிவை அங்கீகரித்து விட்டதாகவே நினை.உன் வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் உனக்கு வழிகாட்டிய பரமாத்மாவும் தமது கடமை முடிந்தது எனக் கருதித் தமது உலகை அடைந்து விட்டார்., நீயும் உன் சகோதரர்களும் ஆற்ற வேண்டிய அருஞ்செயலைத் தெய்வ சம்மதத்துடன் செய்து முடித்து விட்டீர்கள். பூமித்தாயின் பாரம் உங்களால் குறைந்தது.கடமையை நிறைவேற்றிய உங்கள் காலமும் முடிவடையும் நேரம் வந்து விட்டது.இந் நில உலக வாழ்க்கையைத் துறந்து நல்ல கதியை அடைய உன் சகோதரருடன் புறப்படுவாயாக.."என்றார். கருத்து மிக்க வியாசரின் இந்த நல்லுரையைக் கேட்ட அர்ச்சுனன்..தன் சகோதரர்களிடம் நடந்ததை எல்லாம் எடுத்துரைத்தான். (மௌசல பருவம் முற்றும்)

Related Articles

 • Mahabharatha
  Mahabharatha
  மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது…
 • Vyasarin Mahabharatham
  Vyasarin Mahabharatham
  பராசர மகரிஷியின் புத்திரர் வியாசர்.வேதங்களை தொகுத்தளித்தவர்.இவர்தான் மகாபாரதம்…
 • Aadi Parvam
  Aadi Parvam
  இட்சுவாகு குலத்தைச் சேர்ந்த மகாபிஷக் என்ற மன்னன்…
 • Maganai Kanda Mannan
  Maganai Kanda Mannan
  சந்தனு..காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது..கங்கை நதியைக் கண்டான்..இந்த…
 • Bhishmar
  Bhishmar
  தந்தையை எண்ணி..சிந்தனை வயப்பட்டான் தேவவிரதன்.பின் எப்படியாவது..அந்த பெண்ணை…

Be the first person to comment this article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *