Gandhariyin Sinam

அஸ்தினாபுரமே துயரக் கடலில் ஆழ்ந்திருந்தது.போரில் இறந்தவர்கள் வீடுகள் எல்லாம் துயரத்தில் மூழ்கி இருந்தது.மைந்தரை இழந்த திருதிராட்டிரன்,காந்தாரி இருவரும் வேரற்ற மரமாய் வீழ்ந்து வேதனையில் துடித்தனர்.விதுரர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.இவை உலக மக்களுக்கு உரைத்த பொன்மொழிகளாக எண்ணலாம். விதுரர் - 'யாருக்குத்தான் மரணமில்லை.மரணத்திற்கு வயது வரம்பு கிடையாது.மரணம் எந்த வயதில் வேண்டுமானாலும் நிகழலாம்.போர்க்களத்தில்..போரில் ஈடுபடுவோர் பிழைப்பதும் உண்டு..வீட்டில் பலத்த பாதுகாப்போடு இருப்பவர் இறப்பதும் உண்டு.பழைய உடையை நீக்கிவிட்டு புதிய உடையை உடுத்துவது போல உயிர்கள் இந்த உடலை விட்டு வினைப்படி வேறு உடலை எடுத்துக் கொள்கிறது. வினைப்பயன் யாரையும் விடாது பற்றும் தன்மை உடையது.நாம் விதைக்கும் விதை முளைப்பது போல நாம் செய்த வினைப்பயன் நம்மை வந்து அடையும். மேலும் அவர் கூறுகிறார்..ஒருவன் ஒரு கொடிய காட்டை அடைந்தான்.அங்கு சிங்கம்,புலி முதலிய கொடிய விலங்குகள் அவனைத் துரத்தின.அவன் தப்பித்து ஓடினான்.ஓட..ஓட..ஒரு புலி அவனை துரத்தியது.விரைந்து அவன் ஒரு மரத்தின் மீது ஏறும் போது தவறிப் பாழுங் கிணற்றில் வீழ்ந்தான்.பாதிக் கிணற்றில் கொடிகளைப் பற்றிக் கொண்டு தலை கீழாகத் தொங்கினான்.கிணற்றுக்கடியில் இருந்த கரும்பாம்பு சீறியது.கிணற்றுக்கருகில் இரண்டு முகமும் ஆறு கொம்புகளும் பன்னிரெண்டு கால்களும் உடைய யானை ஒன்று பயங்கரமாகச் சுற்றித் திரிந்தது.ஆதரவாகப் பிடித்துக் கொண்டிருந்த கொடிகளை கருப்பும், வெள்ளையுமான இரண்டு எலிகள் கடித்துக் கொண்டிருக்கின்றன.அப்போது மரத்திலிருந்த தேன்கூட்டிலிருந்து தேன் சொட்டு சொட்டாகத்..துளித் துளியாகச் சிந்தியது.அவனோ தன்னைச் சூழ்ந்திருக்கும்..புலி,பாழுங்கிணறு,யானை,பாம்பு,எலிகள் ஆகிய ஆபத்துகளை மறந்து சிந்தும் தேன் துளியைச் சுவைத்திருந்தான்.அந்த ஆபத்திலும் உயிர் வாழ்க்கையை விரும்பினான்.. என்ற விதுரர் இந்த உருவகத்தை மேலும் விளக்கினார்.. மனிதன் சென்றடைந்த காடுதான் சம்சார வாழ்க்கை.நோய்கள் தாம் கொடிய விலங்குகள்.துரத்தி வந்த புலிதான் யமன்.ஏற முயன்ற மரம் தான் முக்தி.நரகம் தான் பாழுங்கிணறு.பற்றி பிடித்த கொடிகள் தாம் ஆசையும், பற்றும்.யானையின் இரு முகங்கள் அயணங்கள் (தக்ஷிணாயனம்,உத்தராயணம்).ஆறு கொம்புகள் ஆறு பருவங்கள்.பன்னிரெண்டு கால்கள் பன்னிரெண்டு மாதங்கள்.வருடமே யானை.காலபாசம் தான் கரு நாகம்.கொடிகளைக் கடிக்கும் கருப்பு,வெள்ளை எலிகள் இரவு பகல்கள்.அவை மனிதனின் வாழ்நாளை குறைத்துக் கொண்டே இருக்கின்றன.அவன் பெறுகின்ற தேன் துளி போன்ற இன்பமே இந்த உலக வாழ்வு.எனவே ஒவ்வொரு வினாடியும் நமது வாழ்நாள் குறைந்துக் கொண்டே வருகிறது என்பதை உணர வேண்டும்.இறுதியில் மரணம் என்பது யாவராலும் தவிர்க்க முடியாததாகும்! என நாளும் நாளும் மனிதன் சாகின்றான் என்பதை விதுரர் தெளிவாக விளக்கினார் வியாசரும்..திருதிராட்டிரனுக்கு ஆறுதல் கூறினார்.ஆயினும் அவன் சினம் அடங்கவில்லை.கண்ணன் தருமரை அறிமுகப் படுத்த சாதாரணமாக தழுவிக் கொண்ட திருதிராட்டிரன்..பீமனைத் தழுவும்போது அறிவிழந்தான்.அவன் மனநிலையை அறிந்திருந்த கண்ணன் பீமனைப் போன்ற இரும்பாலான ஒரு பதுமையைக் காட்டினார்.திருதிராட்டிரன் அந்த இரும்பு பதுமையை இறுகத் தழுவி பொடியாக்கினான்.'இன்னுமா உன் வெறுப்பு தீரவில்லை? இந்த கெட்ட எண்ணமே உன் குலநாசம் அடையக் காரணம்' எனக் கண்ணன் கூற நாணித் தலைக் குனிந்தவன், மனம் தெளிந்து பீமன்,அர்ச்சுனன்,நகுலன்,சகாதேவன் ஆகியோரை தழுவிக் கொண்டான் பாண்டவர்கள் காந்தாரியைக் காணச் சென்றனர்.காந்தாரியின் சினம் கண்ட வியாசர் 'நீ கோபப்படுவதால் பயன் இல்லை.நீ போருக்கு முன் துரியோதனனிடம் கூறியது என்ன..தருமம் உள்ள இடத்தில் வெற்றி நிச்சயம் என்றாய்..பாண்டவர்கள் பக்கம் தருமம் இருந்ததால் அவர்கள் வெற்றி பெற்றனர்.அவர்களை வாழ்த்துவாயாக..'என்றார். 'பாண்டவர்களும் என் மக்கள் தான்..ஆயினும் பீமன் மீது எனக்குக் கோபம் உண்டு.நெறிகெடத் துரியோதனனை தொடையில் அடித்து வீழ்த்தினான்.துச்சாதனனின் ரத்தத்தைக் குடித்தான்.இந்த கொடுமைகளை எப்படி மன்னிப்பேன்?' என்ற காந்தாரிக்கு பீமன் பதிலளித்தான். 'தாயே! துரியோதனன் எங்களுக்கு இழைத்த கொடுமைகளை நீங்கள் அறிவீர்கள்.உச்சக் கட்டமாக..பாஞ்சாலியைத் தன் தொடைமீது வந்து அமரும்படிக் கூறினான்.துச்சாதனன் அவளின் ஆடையைக் களைய முற்பட்டான்..ஆனாலும் நான் மேற்கொண்ட சபதப்படி அவன் ரத்தத்தைக் குடிக்கவில்லை.பல்லுக்கும்,உதட்டுக்கும் கீழே செல்லவில்லை ரத்தம்.அதனை உமிழ்ந்து விட்டேன்.விகர்ணனைப் பொறுத்தவரை நான் எவ்வளவோ..கேட்டுக் கொண்டும் அதனை செவி சாய்க்காமல் போரிட்டு மாண்டான்' என்றான். பின் காந்தாரியின் அருகில் வந்து தருமர் வணங்கினார்.கட்டியிருக்கும் துணி வழியே தருமரின் கால் விரல்களின் நகங்களைக் கண்டாள்.அவை சினத் தீயால் கருத்து விகாரம் அடைந்தன.அது கண்டு அர்ச்சுனன் அச்சம் கொண்டான்.பின் ஒருவாறு காந்தாரி சாந்தம் அடைந்தாள். பாண்டவர்கள் பின் பெற்ற தாயான குந்தியைக் காணச் சென்றனர். வியாசரின் அருளால் காந்தாரி இருந்த இடத்திலிருந்து போர்க்களத்தைக் கண்டாள்.துரியோதனன் தரைமீது மாண்டுக் கிடப்பதுக் கண்டு..கதறி அழுதாள்.கண்ணனைப் பார்த்து..'உன்னால்தான் எல்லாம்..சகோதரர்களிடையே பூசலை அவ்வப்போது தடுத்து நிறுத்தியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்காது..என் குலம் நாசம் அடைந்தாற் போல உன் குலமும் நாசம் அடைவதாக' என சபித்தாள்.அவளுக்கு நல்லுணர்வு ஏற்படுமாறு கண்ணன் ஆறுதல் அளித்தார். இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்யும் நேரம் வர..குந்தி..கர்ணன் தன் மூத்த மகன் என்ற ரகசியத்தை வெளிப்படுத்தினாள். பின்..முறைப்படி ஈமச் சடங்குகள் நடை பெற்றன. ஸ்திரீ பருவம் முற்றிற்று

Related Articles

 • Mahabharatha
  Mahabharatha
  மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது…
 • Vyasarin Mahabharatham
  Vyasarin Mahabharatham
  பராசர மகரிஷியின் புத்திரர் வியாசர்.வேதங்களை தொகுத்தளித்தவர்.இவர்தான் மகாபாரதம்…
 • Aadi Parvam
  Aadi Parvam
  இட்சுவாகு குலத்தைச் சேர்ந்த மகாபிஷக் என்ற மன்னன்…
 • Maganai Kanda Mannan
  Maganai Kanda Mannan
  சந்தனு..காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது..கங்கை நதியைக் கண்டான்..இந்த…
 • Bhishmar
  Bhishmar
  தந்தையை எண்ணி..சிந்தனை வயப்பட்டான் தேவவிரதன்.பின் எப்படியாவது..அந்த பெண்ணை…

Be the first person to comment this article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *