Gurushetra por( Dronacharriya & Abhimanyu Death)

பத்தாம் நாள் போர் கௌரவர்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.பீஷ்மர் வீழ்ச்சிக்குப் பின் யார் தலைமை ஏற்று போர் தொடர்வது என்ற சிந்தனை எழுந்தது.துரோணர் தளபதியாக நியமிக்கப்பட்டார்.அவரிடம்..துரியோதனன்'எப்படியாவது தருமரை உயிருடன் பிடித்து என்னிடம் ஒப்படையுங்கள்'என வேண்டினான். தருமரை உயிருடன் பிடித்து விட்டால்..அவரை மீண்டும் சூதாட வைத்து..தோற்கடித்து..ஆயுட்காலம் முழுதும் வனவாசம் என்று அனுப்பி விடலாம் என்று திட்டமிட்டான் துரியோதனன். இந்த் செய்தி ஒற்றர்கள் மூலம் பாண்டவர்களை எட்டியது.அதனால்..தருமருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.துரோணர் சகட வியூகம் வகுத்தார்..பாண்டவர்கள் கிரௌஞ்ச வியூகம் வகுத்தனர். அன்றைய போரில் அபிமன்யூவின் கை ஓங்கியது.அவனுக்குத் துணையாக கடோத்கஜன் இறங்கினான்.துரியோதனின் லட்சியத்தை நிறைவேற்ற துரோணர் தருமர் மீதே குறியாக இருந்தார்.இதை உணர்ந்து அர்ச்சுனன் தருமர் அருகே வந்தான்.பீமனும் தருமரை காப்பதில் ஈடுபட்டான். அபிமன்யூவின் போர்த்திறன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.அவன் துரியோதனனின் மகன் லட்சுமணனைத் தாக்கி அவனைப் பிடித்துத் தேர்ச் சக்கரத்தில் கட்டிக் கொண்டு திரும்பினான்.இதனை அறிந்த சல்லியன் அபிமன்யூவைத் தடுத்து நிறுத்திப் போரிட்டான்.சல்லியனின் வில்லையும் தேரையும் முறித்தான் அபிமன்யூ. அர்ச்சுனனின் தாக்குதலைத் துரோணரால் சமாளிக்க முடியவில்லை.கௌரவர்கள் நடுங்க ஆரம்பித்தனர்.துரோணரும் சோர்ந்து போனார்.இந்நிலையில் சூரியன் மறைந்தான்.போர் நின்றது. பன்னிரண்டாம் நாள் போர் : தருமரை..உயிருடன் பிடிக்க வெண்டுமெனில்..அர்ச்சுனனை அவர் அருகில் இருக்க விடக்கூடாது.போரை வேறு திசைக்கு மாற்றி அர்ச்சுனனை அங்கு இழுக்க வேண்டும் எனத் திட்டம் தீட்டினர் கௌரவர்கள்.திரிகர்த்த வேந்தனாகிய சுசர்மனும் அவனது சகோதரர்கள் சத்தியரதன்,சத்தியவர்மன்,சத்தியகர்மன் ஆகியோரும் தென்திசையிலிருந்து அர்ச்சுனனுக்கு சவால் விட்டனர்.அர்ச்சுனன் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனின் சகோதரன் சத்யஜித்திடம் தருமரை பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு திரிகர்த்த மன்னனையும் அவருடைய சகோதரர்களையும் எதிர்த்துச் சென்றான். மும்மரமாக நடைபெற்ற போரில் கண்ணனின் திறமையால் அர்ச்சுனன் தேர் எல்லா இடங்களிலும் சுழன்றது.பகைவர்களும் அவனுடன் 'வெற்றி அல்லது வீரமரணம்' என்று போரிட்டனர்.திரிகர்த்தவேந்தனுக்குத் துணையாக அவனுடன் அவன் சகோதரர்களையும் தவிர்த்து பல்லாயிரக்கணக்கான வீரர்களும் சேர்ந்து போரிட்டனர்.அர்ச்சுனன் வாயுவாஸ்திரத்தை விடுத்து அனைவரையும் வீழ்த்தினான்.சுசர்மன் மட்டும் தப்பினான். தென்திசைப்போரை முடித்துக் கொண்டு பார்த்திபன் தருமரைக் காக்கும் பொருட்டுத் துரோணரை எதிர்த்தான்.ஆனால் துரோணரோ தருமரை உயிருடன் பிடிப்பதில் குறியாய் இருந்தார்.அன்றைய போரில் துரோணரின் திறைமையும் அனைத்துப்பேரையும் கவர்ந்தது.துரோணரை முறியடிக்க திருஷ்டத்துய்மன் முயன்றான்.தனது மரணம் இவனால்தான் என்பதை அறிந்த துரோணர் அவனைத் தவிர்க்கப் பார்த்தார்.அப்போது துரியோதனனின் தம்பியருள் ஒருவனான் துர்முகன் திருஷ்டத்துய்மனைத் தாக்கி போரிட்டான். அதே நேரத்தில் சத்யஜித் தன் திறமையைக் காட்டி தருமரைக் காக்க முற்பட்டான்.அவனுக்கும், துரோணருக்கும் நடந்த போர் தீவிரமாய் இருந்தது.துரோணர் மீது பல அம்புகளைச் செலுத்தினான் அவன்.அதனால் கோபமுற்ற துரோணர் விட்ட அம்பு ஒன்று அவன் தலையைக் கொய்தது.சத்யஜித்தின் மரணம் கண்ட விராடனின் தம்பி சதானீகன் துரோணரை எதிர்க்க..அவனையும் அவர் கொன்றார். துரோணர் தருமரை சிறைப்பிடித்து விடுவாரோ என்னும்பயம் ஏற்பட..பீமன் அங்கு வந்தான்.அவன் மீது பல யானைகளை ஏவினான் துரியோதனன்.அவைகளை பந்தாடினான் பீமன்.அபிமன்யூவும்..பாண்டவர்களின் குமாரர்களும் கௌரவர் படையை எதிர்த்து போராடினர். அப்போது ப்ராக்ஜோதிஜ மன்னனான பகதத்தன் சுப்ரதீபம் என்னும் யானையில் வந்து பீமனுடன் போரிட்டான்.அந்த யானை பீமனின் தேரை தகர்த்தது.பின் பீமனை தன் துதிக்கையால் பற்றி தூக்கி எறிய முற்பட்டது.பீமன் அதன் பிடியிலிருந்து தப்பி..அதன் மர்மஸ்தானத்தை தாக்கினான்.அந்த வேதனையிலும் அது பீமனை மிதித்துத் தள்ளப் பார்த்தது.ஆயினும் பீமன் அதனிடமிருந்து தப்பினான்.பின் அந்த யானை அபிமன்யூவின் தேரைத் தூள் தூளாக்கியது.சாத்யகியின் தேரும் அதே நிலையை எட்டியது.யானையின் அட்டகாசத்தை அறிந்த அர்ச்சுனன் விரைந்து வந்தான்..அதனைக் கொல்ல. அர்ச்சுனன் பகதத்துடன் கடும் போர் புரிந்தான்.அப்போது பீமன் அந்த யானையின் மீது சிங்கம் போல பாய்ந்தான்.அப்போது அர்ச்சுனன் ஒரு அம்பை எய்த ..அது யானையின் கவசத்தைப் பிளந்து மார்பில் ஊடுருவியது.யானை வீழ்ந்து மாண்டது.பின் அர்ச்சுனன் செலுத்திய ஓர் அம்பு மாவீரன் பகதத்தனைக் கொன்று வீழ்த்தியது. பின்னர் அர்ச்சுனன் திருதிராட்டிர மன்னனின் மைத்துனர்களான அசலன்,விகுஷன் ஆகியோரைக் கொன்றான்.சகோதரர்களின் மரணத்தை அறிந்த சகுனி மாயையால் இருள் பரவச் செய்தான்.அர்ச்சுனன் ஒளிமய கணை ஒன்றால் அந்த இருளைப் போக்கினான்.சகுனி பயந்து வேறிடத்திற்கு நகர்ந்தான்.தருமரை..பிடித்துவிடலாம் என்ற துரோணரின் கனவு தகர்ந்தது.கௌரவர்கள் கலங்க..பாண்டவர்கள் மகிழ அன்றைய போர் முடிவுக்கு வந்தது. அன்றைய போர் கண்டு சினம் கொண்ட துரியோதனன்..துரோணரிடம் சென்று கடுமையாகப் பேசினான்.'தருமரைப் பிடிக்கும் வாய்ப்பை தவற விட்டீர்கள்.வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டீர்.நீர் சொல்வது ஒன்று..செய்வது ஒன்று'என்றான். இதனால் துரோணர் கோபம் அடைந்து'துரியோதனா..உனக்கு பலமுறை சொல்லியுள்ளேன்.அர்ச்சுனனைப் போரில் வெல்ல முடியாது.போர்க்களத்தில் அவன் எப்படி தருமரைப் பாதுகாத்தான் என்று பார்த்தாயா?எப்படியும் நாளை நான் உன்னத போர் முறை ஒன்றைக் கையாளப் போகிறேன்.அர்ச்சுனனை நீ எப்படியாவது வெளியே கொண்டு செல்' என்றார். துரோணரின் பேச்சில் நம்பிக்கை வர துரியோதனன் சென்றான். பதின்மூன்றாம் நாள் போர் : படைகள் அணிவகுத்து நின்றன.துரோணர் பத்மவியூகம் அமைத்தார்.முகப்பில் அவர் இருந்தார்.துரியோதனன் நடுவில் நின்றான்.பத்மவியூகத்தை உடைத்துச் செல்வது கடினம்.அந்த அமைப்புக் கண்டு தருமர் கலக்க முற்றார்.அபிமன்யூவிடம் ஒரு தனி ஆற்றல் இருந்தது.அவனால்..பத்மவியூகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே செல்லமுடியும்.இந்த பயிற்சியைப் பெற்றிருந்த அபிமன்யூ வெளியே வரும் பயிற்சியைப் பெற்றிருக்கவில்லை.ஆயினும்..அவனுக்குத் துணையாக பல்லாயிரக் கணக்கில் வீரர்கள் உள்ளே புகுந்தால்..கௌரவர் படை சிதறி ஓடும் என தருமர் எண்ணினார்.அபிமன்யூவும் துணிச்சலாக உள்ளே சென்று தாக்கினான்.ஆனால் மற்ற வீரர்கள் உள்ளே செல்லுமுன் வியூகம் மூடிக் கொண்டது.ஜயத்ரதன் யாரையும் உள்ளே நெருங்க விடவில்லை. ஆகவே..துரோணர்,அசுவத்தாமா,கர்ணன் ஆகியோருடன் தனித்து நின்று போரிட்டான் அபிமன்யூ.அவன் வீரம் கண்டு துரோணர் கிருபரிடம் 'இவன் வீரத்தில் அர்ச்சுனனைவிட சிறந்து காணப்படுகிறான்'என்று வியந்து பாராட்டினார்.இதைக் கண்ட துரியோதனன்..'எதிரியை புகழும் நீர் செய்வது நம்பிக்கைத்துரோகம்..இதனால் நம் படையின் உற்சாகம் குறையும்' என்றான். அவனுக்கு பதில் அளிக்கும் விதத்தில் போரில் வீரம் காட்டினார் துரோணர்.எப்படியாவது அவனை வீழ்த்த எண்ணி..அதரும யுத்தத்தில் ஈடுபலானார்.கர்ணன் யுத்த நெறிக்குப் புறம்பாக பின்னால் இருந்து அபிமன்யூவின் வில்லை முறித்தான்.பின்புறமிருந்து தாக்கியவன் யார் என அபிமன்யூ திரும்பி பார்த்தபோது..துரோணர் அவனின் தேர்க் குதிரைகளை வெட்டிச் சாய்த்தார்.ஆனால்..இதற்குத் தளராத அபிமன்யூ வாளைக் கையில் ஏந்தி ..தேரிலிருந்து குதித்து பல நூறு வீரர்களை வெட்டி வீழ்த்தினான். உணர்ச்சிவசப்பட்ட துரோணர் மீண்டும் புறம்பாக பின்புறத்திருந்து வாளைத் துண்டித்தார்.அதேமுறையில் கர்ணன் அவனது கேடயத்தைத் தகர்த்தான். மாவீரன் அபிமன்யூ தேரையும்,வில்லையும்,வாளையும்,கேடயத்தையும் இழந்தாலும்..வீரத்தை இழக்கவில்லை.ஒரு கதாயுதத்தைக் கையில் ஏந்தி அசுவத்தாமாவை விரட்டினான்.பல வீரர்களைக் கொன்றான். முன்னர் திரௌபதியை தூக்கிச் செல்ல முயன்று தோல்வியுற்று, பாண்டவர்களால் அவமானப்பட்ட ஜயத்ரதன், பாண்டவர்களை பழிதீர்த்துச் சிவனை நோக்கித் தவம் செய்து , அர்ச்சுனனைக் கொல்ல இயலாது எனினும் ஒரு நாள் மற்றவர்களை சமாளிக்கக்கூடும் என்னும் வரத்தை பெற்றிருந்தான் அல்லவா?அதற்கான வாய்ப்புக் கிடைத்தது.பீமன்,நகுலன்,சகாதேவன் ஆகியோர் அபிமன்யூவிற்கு உதவி செய்யாதவாறு த டுத்தான்.கையில் ஆயுதமும் இன்றி..துணைக்கும் யாருமின்றி போர் செய்த சிங்கக்குட்டியை (நரிகள் ஒன்று சேர்ந்து )மாவீரனான அபிமன்யூவைக் கொன்று விட்டனர். தென்திசையில் சம்சப்தர்களை ஒழித்துத் திரும்பிய அர்ச்சுனன் காதில் இச் செய்தி விழ..அவன் மயங்கி விழுந்தான்.அவன் துயரத்தை எழுத்தில் வடிக்க இயலாது.மகனின் மரணத்திற்கு மூலக் காரணம் ஜயத்ரதன் என அறிந்தான்.பின்'ஜயத்ரதனை நாளை மாலைக்குள் கொல்வேன்..அல்லாவிடின்..வெந் நரகில் வீழ்வேன்' என சூளுரைத்தான். அதன் அறிகுறியாக தன் காண்டீபத்திலிருந்து ஒலி எழுப்பினான்.அவ்வொலிக் கேட்டு அண்ட கோளங்களும் அதிர்ந்தன.பூமி நிலை குலைந்தது.இந்நிலையில் அன்றைய போர் நிறைவுப் பெற்றது. 70-பதினான்காம் நாள் போர் அர்ச்சுனனின் சபதத்தைக் கேட்ட ஜயத்ரதன்..போர்க்களத்தை விட்டு ஓடிவிடலாமா..என யோசித்தான்.அது வீரர்க்கு அழகன்று என மற்றவர்கள் தடுத்தனர்.அர்ச்சுனனை எண்ணி துரோணர் கலங்கினார்.அன்றைய போர் பயங்கரமாய் இருக்கும் என உணர்ந்தார்.அதற்கேற்ப பத்மவியூகம்,சகடவியூகம் என வியூகங்களை வகுத்தார். எங்கே அர்ச்சுனன்? என ஆர்ப்பரித்த கௌரவர்கள்..துரியோதனனின் தம்பியான துர்மர்ஷணனை பெரும்படையுடன் அர்ச்சுனனை நோக்கி அனுப்பினர்.அப்போது கண்ணன் தேரை ஓட்ட..காண்டீபத்துடன் உள்ளே வந்தான் பார்த்தன்.அனுமக்கொடியுடன்..ஆக்ரோஷத்துடன் வந்த அர்ச்சுனனைக் கண்டு புறமுதுகிட்டு ஓடினான் துர்மர்ஷணன்.அவன் ஒட்டத்தைக் கண்ட துச்சாதனன் கடும் சினம் கொண்டு அர்ச்சுனனை எதிர்த்தான்.பின் முடியாமல் திரும்பினான். அர்ச்சுனன்..துரோணரைச் சந்தித்து போரிட்டான்.ஆனாலும் அவருடனான போர் நிலைக்கவில்லை.ஏனெனில்..அர்ச்சுனனுக்கு அன்றைய இலக்கு ஜயத்ரதன். ஜயத்ரதனை நோக்கி வந்த அர்ச்சுனனைக் கண்டு துரியோதனன் மிகவும் கோபம் கொண்டு..துரோணரைக் கடிந்துக் கொண்டான். 'அவனை ஏன் உங்களைக் கடந்து ஜயத்ரதனை நோக்கி செல்ல அனுமதித்தீர்.உங்கள் அன்பும்..பரிவும் எப்போதும் பாண்டவரிடம்தான்' என்றான். "துரியோதனா..என் திட்டம் என்ன தெரியுமா? அர்ச்சுனனை வேறு பக்கம் போக வைத்தால்..தருமரை பிடித்து விடலாம்.என்னிடம் மந்திர சக்தி வாய்ந்த கவசம் இருக்கிறது.உனக்குத் தருகிறேன்.அதை யாரும் பிளக்க முடியாது.முன்னர் சிவபெருமான் இதை இந்திரனுக்கு அளித்தார்.அவன் ஆங்கீசரருக்குக் கொடுத்தான்.அவர் அவர் புதல்வன் பிரகஸ்பதிக்கு அருளினார்.பிரகஸ்பதி அக்னியேச்யருக்குக் கொடுத்தார்.அவர் எனக்குத் தந்தார்.அதை உனக்கு நான் தருகிறேன்..இனி உனக்கு வெற்றியே..போய் அர்ச்சுனனுடன் போரிடு' என்றார் துரோணர். மகிழ்ச்சியுடன்..அக்கவசத்தை அணிந்து..அர்ச்சுனனைத் தாக்கினான் துரியோதனன்.அர்ச்சுனனின் அம்புகள் கவசத்தைத் துளைக்க முடியவில்லை.ஆகவே அர்ச்சுனன் கேடயம் இல்லாத இடமாக அம்புகளைச் செலுத்தினான்.துரியோதனன் வலி பொறுக்காது..வேறு பகுதிக்கு நகர்ந்தான். பின்..அர்ச்சுனன் துரியோதனனிடமிருந்து விலகி ஜயத்ரதனை தாக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.அர்ச்சுனன் ஜயத்ரதனைக் கொல்லாதபடி..பூரிசிரவஸ் தாக்கினான்.உடன் சத்யகி அர்ச்சுனனின் உதவிக்கு வந்து பூரிசிரவஸைத் தாக்கத் தொடங்கினான்.சாத்யகியை கீழே தள்ளினான் பூரிசிரவஸ்..காலால் மார்பில் உதைத்தான்..மயக்கம் அடைந்தான் சாத்யகி...உடன் அவன் தலையை துண்டிக்க முயற்சித்தான் பூரிசிரவஸ்.உடன் அர்ச்சுனன் அவன் கையை வெட்டினான்.அந்த கை வாளுடன் வீழ்ந்தது...பூரிசிரவஸ் அர்ச்சுனனைப் பார்த்து'நான் வேறு ஒருவருடன் போரிடும் போது அறநெறிக் கெட்டு கையை வெட்டினாயே..தருமரின் தம்பி நீ அதர்மம் செய்யலாமா?' என்றான். 'நேற்று என் மகன் அபிமன்யூ மீது தர்ம வழி மீறி போரிட்டவன் நீயும் அல்லவா?' என்றான்.உடன் பூரிசிரவஸ் தன் செயல் குறித்து நாணினான்.பரமனை எண்ணி தியானம் செய்தான்.அப்போது மயக்கம் தெளிந்த சாத்யகி தியானத்தில் இருந்தவன் தலையை வெட்டினான். மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.பலரையும் வென்றவாறு..அர்ச்சுனன் ஜயத்ரதனை நெருங்கினான்.அக்கணத்தில் ஜயத்ரதன் துரோணரைப் பார்த்து..'நீங்கள் அனைவருக்கும் விற் பயிற்சி அளித்தீர்..ஆனால் அர்ச்சுனன் போல் மற்றவர்கள் சிறக்கவில்லையே ஏன்?' என்றான். அதற்கு துரோணர்,'அர்ச்சுனன் தவ வலிமை உடையவன்..ஆகவே மேம்பட்டு விளங்குகிறான்' என்றார். பின் அர்ச்சுனனை ஜயத்ரதன் தாக்கத் தொடங்கினான்.கண்ணபிரான்..சூரியன் மறைந்தாற் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்.சூரியன் மறைந்ததா எனப் பார்க்க ஜயத்ரதன் மேற்குத் திசையை நோக்கினான்...'அர்ச்சுனா..அம்பை செலுத்து'எனக் கூறி இருளைப் போக்கினார் கண்ணன்.அர்ச்சுனன் உடனே தன் பாசுபதாஸ்திரத்தை செலுத்தினான்.அது ஜயத்ரதனின் தலையை துண்டித்தது.அப்படி துண்டித்த தலை தவம் செய்துக் கொண்டிருந்த ஜயத்ரதனின் தந்தை விருத்தாட்சத்திரன் மடியில் போய் விழுந்தது.அதை ஏதோ என நினைத்தவன்...தன் கையால் தள்ளிவிட அது தரையில் விழுந்தது..ஜயத்ரதனின் தந்தையின் தலையும் சுக்கல் சுக்கலாகியது.தன் மகனின் தலையைத் தரையில் வீழ்த்துபவர் தலை சுக்கலாக வேண்டும்..என அத்தந்தை பெற்ற வரம்..அவருக்கே வினையாயிற்று.ஜயத்ரதன் மறைவு அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால்..துரியோதனனோ பெரும் கவலை அடைந்தான்.துரோணரிடம்..'இன்று என் தம்பியர் பலர் மாண்டனர்.பீமனும் சாத்யகியும் செய்த போரில் வீரர் பலர் இறந்தனர்.ஜயத்ரதனும் மாண்டான்.அர்ச்சுனனின் வல்லமையை யார் வெல்ல முடியும்..இனிப் பேசிப் பயனில்லை..வெற்றி அல்லது வீர மரணம்' என்று புலம்பினான். இவ்வாறு..ஒரு தரத்திற்கு மகிழ்ச்சியும்..மற்றவருக்கு சோகமுமாக அன்றையப் போர் பகல் போர் முற்றுப் பெற்றது. பதினான்காம் நாள் இரவுப் போர் : துரியோதனனின் மன வேதனையை உணர்ந்த துரோணர்..தன் முழு ஆற்றலையும் செலுத்திப் போரிடத் துணிந்தார்.பகைவரை ஒழித்தப் பின்தான் கேடயத்தை கழட்டுவேன் என்று சவால் விட்டு..மாலை மறைந்தும்..இரவுப் போரைத் தொடர்ந்தார்.தன்னை எதிர்த்து வந்த சிபி என்னும் மன்னனின் தலையைக் கொய்தார்.தன்னை எதிர்த்த திருஷ்டத்துய்மனின் மைந்தரைக் கொன்றார். பீமன் வேறு புறத்தில் துரியோதனனின் தம்பியரான துர்மதனையும்,துஷ்கர்ணனையும் கொன்றான்.சாத்யகி சோம தத்தனை எதிர்த்தான்.சகுனி சோம தத்தனுக்கு உதவினான். கடோத்கஜன் ஒரு புறம் கடும் போர் புரிந்தான்.அவன் மகன் அஞ்சனபர்வா அஸ்வத்தாமாவை எதிர்த்து போரிட்டான்.ஆயினும் அம்மகன் கொல்லப்பட்டான்.மகனை இழந்த ஆத்திரத்தில்..அஸ்வத்தாமாவுடன் கடும் போரிட்டான் கடோத்கஜன்.இருவரும் சளைக்கவில்லை.பின்னர் கர்ணனிடம் வந்தான் கடோத்கஜன்.அவனது பேராற்றலைக் கண்ட துரியோதனன் நடுங்கினான்.பயம் மேலிட்டதால்..சக்தி மிகுந்த சக்தி ஆற்றலை கர்ணன் கடோத்கஜன் மீது செலுத்த வேண்டியதாயிற்று.அது இந்திரனிடம் இருந்து கர்ணனால் பெறப்பட்டது.அந்த சக்தி ஆயுதம் ஒருமுறை மட்டுமே பயன் படும்.அதை அர்ச்சுனனைக் கொல்ல கர்ணன் வைத்திருந்தான். கடோத்கஜன் யாராலும் வெல்ல முடியாதபடி போர் புரிந்ததால்..அதை அவன் மீது செலுத்தி கடோத்கஜனைக் கொன்றான். ஆயினும்..இனி எப்படி அர்ச்சுனனைக் கொல்வது என கவலையில் மூழ்கினான் கர்ணன். பாண்டவர்களோ பதின் மூன்றாம் நாள் போரில் அபிமன்யூவை இழந்ததற்கும்..பதினான்காம் நாள் போரில் கடோத்கஜனை இழந்ததற்கும் வருந்தினர். இந்த அளவில் போர் நின்றது. பதினைந்தாம் நாள் போர் (துரோணரின் முடிவு) தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்து வந்த துரியோதனன் நம்பிக்கையை இழக்கவில்லை.துரோணர் வெற்றியை பறித்துத் தருவார் என எண்ணினான்.துரோணரும் கடுமையாகப் போரிட்டார்.போரின் உக்கிரத்தைக் கண்டு கண்ணன் ஆழ்ந்து சிந்தித்தார்.அறநெறிப்படி துரோணரை வெல்ல முடியாது என உணர்ந்தார்.பிரமாஸ்திரத்தையும் துரோணர் பயன்படுத்தக் கூடும் என எண்ணினார். ஏதேனும் பொய் சொல்லித் துரோணரின் கவனத்தைத் திருப்பினாலன்றி வெற்றி கிடைக்காது என எண்ணினார் கண்ணன்.ஒரு முனையில் யுத்தகளத்தை கலக்கிக் கொண்டிருந்தான் பீமன்.'அசுவத்தாமன்'என்ற புகழ் மிக்க யானையைக் கதாயுதத்தால் கடுமையாக தாக்கினான்.அது சுருண்டு விழுந்தது.அசுவத்தாமன் என்ற அந்த யானை இறந்ததில் அசுவத்தாமனே இறந்தாற்போல..உணர்ச்சி வயப்பட்ட பீமன், 'அசுவத்தாமனை கொன்றுவிட்டேன்' என கத்தினான்.இது துரோணர் காதில் விழுந்தது..தலையில் இடி விழுந்தாற் போல ஆனார்.ஆனால் பின் மனம் தெளிந்தார்.அச் செய்தி பொய்யாய் இருக்கும் என எண்ணினார்.ஆற்றல் மிக்க தன் மகன் அசுவத்தாமனை யாராலும் கொல்லமுடியாது என நினைத்து போரைத் தொடர்ந்தார்.ஆயிரக்கணக்கான குதிரைகளையும்,வீரர்களையும்,யானைகளையும் கொன்று குவித்தார்.ரத்த வெள்ளம் பெருக்கெடுத்தது.போர்க்களம் ரத்தக் கடல் போல் காட்சியளித்தது. துரோணர்..விண்ணுலகம் செல்லும் காலம் வந்ததை உணர்ந்த வஷிஷ்டர் முதலான ரிஷிகள் அவரிடம் வந்தனர்.'சாந்த நிலை அடையுங்கள்' என வேண்டினர்.முனிவர்கள் கூற்றும்..சற்று முன்னர் பீமன் கூற்றும் அவரது போர்ச்செயலை அறவே நிறுத்தின.உண்மையில் மகன் கொல்லப்பட்டானா? என்ற வினா உள்ளத்தை வாட்ட, சத்தியமே பேசும் தருமரிடம் கேட்டால் உண்மை தெரியும் என அவரை அணுகினார். இதற்கிடையே..ஒரு நன்மையின் பொருட்டு..பொய் சொல்லுமாறு தருமரிடம் கண்ணன் கூறினார்.தருமர் மறுத்தார்.'அசுவத்தாமன் என்னும் யானை இறந்தது உண்மைதானே! அதையாவது சொல்லுங்கள் 'என கண்ணன் வற்புறுத்த ,தருமரும் சரியென அதை அவர் கூற முற்பட்டபோது 'அசுவத்தாமன் இறந்தான்' என்ற செய்தி மட்டும் காதில் விழுமாறும்..மற்றவை விழாதவாறும் சங்கை எடுத்து முழங்கினார் கண்ணன்.தருமரின் கூற்று பொய்யாய் இராது என துரோணர் ஆயுதங்களைத் தூக்கி எறிந்து விட்டு தியானத்தில் ஆழ்ந்தார்.அந்த நேரம் பார்த்துத் திருஷ்டத்துய்மன் வாள் கொண்டு துரோணரின் தலையைத் துண்டித்தான்.அவரது தலை தரையில் உருள, உடலிலிருந்து கிளம்பிய ஜோதி விண் நோக்கிச் சென்றது. அசுவத்தாமன் கொல்லப்பட்டான் என்பதை சொல்ல கண்ணன் வற்புறுத்திய போது..அதில் உள்ள சூழ்ச்சியை தருமர் உணர்ந்தார்.பின்னரும் அப்படிச் சொல்ல உடன்பட்டது அவரின் பண்பில் நேர்ந்த குறை என்று இன்றும் விவாதிப்பவர்கள் உண்டு. துரோணரின் வீழ்ச்சியோடு பதினைந்தாம் நாள் போர் முடிந்தது.

Related Articles

  • Mahabharatha
    Mahabharatha
    மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது…
  • Vyasarin Mahabharatham
    Vyasarin Mahabharatham
    பராசர மகரிஷியின் புத்திரர் வியாசர்.வேதங்களை தொகுத்தளித்தவர்.இவர்தான் மகாபாரதம்…
  • Aadi Parvam
    Aadi Parvam
    இட்சுவாகு குலத்தைச் சேர்ந்த மகாபிஷக் என்ற மன்னன்…
  • Maganai Kanda Mannan
    Maganai Kanda Mannan
    சந்தனு..காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது..கங்கை நதியைக் கண்டான்..இந்த…
  • Bhishmar
    Bhishmar
    தந்தையை எண்ணி..சிந்தனை வயப்பட்டான் தேவவிரதன்.பின் எப்படியாவது..அந்த பெண்ணை…