Gurushetra por mudivu ( Duryodhanan & Saguni Death)

பதினெட்டாம் நாள் போர் கௌரவர்கள் பக்கம் மீதம் இருந்தது சில வீரர்களே..இந்நிலையில், துரியோதனன் வேண்டுகோளை ஏற்றுச் சல்லியன் அன்றைய போருக்குத் தளபதி ஆனான்.கர்ணன் போர்க்களத்தில் இறந்தால் தானே போர்க்களம் சென்று கண்ணனையும், அர்ச்சுனனையும் கொல்வதாகக் கர்ணனிடம் கூறிய உறுதிமொழியை மனதில் கொண்டான்.சல்லியனை எதிர்த்து போராட தருமர் முன் வந்தார். இரு திறத்துப் படை வீரர்களும் போர்க்களம் அடைந்தனர்.இதுவரை நடந்த போரில் ஏராளமான உயிர்ச் சேதம்,பொருட் சேதம் ஏற்பட்டிருந்தது.தவிர யானைப்படை, தேர்ப்படை, காலாட் படை, குதிரைப் படை என்ற நால்வகைப் படைகளின் அழிவு பேரழிவுதான். சல்லியன் சிறு வியூகம் வகுத்தான்.அதற்கேற்பப் பாண்டவர்களும் வியூகம் அமைத்தனர்.நகுலன் கர்ணனின் புதல்வன் சித்திரசேனனுடன் போரிட்டான்.இருவரும் கடுமையாக போரிட்டனர்.இறுதியில் சித்திரசேனன் இறந்தான்.கர்ணனின் மற்ற இரு மைந்தர்களும் நகுலனுடன் போரிட்டு மாண்டனர்.சல்லியனின் புதல்வனைச் சகாதேவன் கொன்றான்.சல்லியனை எதிர்த்து..தருமர் போரிட்ட போது..பீமன் தருமருக்குத் துணையாக வந்தான்.அவனை சல்லியன் தாக்கினான்.தருமருக்கும்,சல்லியனுக்கும் விற்போர் நீண்ட நேரம் நடந்தது.கடைசியில்..தருமர் சீற்றம் கொண்டு..ஒரு வேலைச் செலுத்த அது சல்லியனை கொன்றது. பின்..சகுனி போருக்கு வந்தான்.அவனைச் சகாதேவன் எதிர்த்து போரிட்டான்.சகுனியின் மகன் உலூகனுக்கும் நகுலனுக்கும் போர் நேர்ந்தது.உலூகன் நகுனனால் கொல்லப்பட்டான்.அதை அறிந்த சகுனி..பல பாண்டவ வீரர்களைக் கொன்றான்.ஆனால்..சகாதேவனை எதிர்த்து நீண்ட நேரம் அவனால் போரிட முடியவில்லை.அப்போது சகாதேவன்..'அடப்பாவி..உன்னால் அல்லவா இந்தப் பேரழிவு..குல நாசம் புரிந்த கொடியவனே! இது சூதாடும் களம் அல்ல..போர்க்களம்..இங்கு உன் வஞ்சம் பலிக்காது' என்றபடியே சகுனியின் தலையை ஒரு அம்பினால் வீழ்த்தினான்.பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் செய்த சபதம் நிறைவேறியது. துரியோதனன் படைகள் அழிய,தளபதிகள்,உடன் பிறந்தோர் என பலரை இழந்தான்.போர்க்களத்தை உற்று நோக்கினான்.தன்னைத் தவிர யாரும் இல்லை என உணர்ந்தான்.ஒரு கதையை எடுத்துக்கொண்டு நடந்தான்.தன்னைக் காண வந்த சஞ்சயனிடம் 'நான் ஒரு மடுவில் இருப்பதாகக் கூறிவிடு' என்று அனுப்பி விட்டு மடுவில் புகுந்துக் கொண்டான்.பாண்டவர்கள் துரியோதனனைத் தேடினர்.அவன் மடுவில் இருப்பதை சில வேடர்கள் தெரிவித்தனர். அவன் இருக்குமிடம் வந்த தருமர் 'துரியோதனா..சத்ரியனான நீ போர்க்களத்தை விட்டு ஒடி வந்து பதுங்கிக் கொண்டாயே..அதுவா வீரம்..எழுந்து வெளியே வந்து போர் செய்' என்றார்.அதற்கு துரியோதனன்..'தருமரே..நான் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்.நாளை வந்து போர் செய்வேன் அல்லது காட்டிற்குச் சென்று தவம் செய்வேன்.எனக்குரிய நாட்டை தருமமாகத் தருகிறேன் .பெற்றுக்கொள்' என்றான். நடுவே புகுந்த பீமன்..'வீண் பேச்சை நிறுத்து..கதை யுத்தம் செய்வோம் வா' என்றான்.வேறுவழியின்றி துரியோதனனும் சம்மதித்தான்.இருவரும் குருசேத்திரத்தின் மெற்குப் பகுதியில் உள்ள புனிதமான சமந்த பஞ்சக மடுவின் கரைக்குச் சென்றார்கள்.சமமாகவே போரிட்டனர்.இரண்டு கதாயுதங்களும் மோதும் போது ஏற்பட்ட ஒலி எட்டு திக்கும் எதிரொலித்தது.போர் முடிவிற்கு வருவதாகத் தெரியவி ல்லை. அப்போது கண்னன்..யுத்த நெறிக்கு மாறாகப் போர் செய்தால்தான் அவனை வீழ்த்தமுடியும் என்பதை உணர்ந்து..அவன் தொடையைப் பிளக்க வேண்டும்..என அர்ச்சுனனிடம் குறிப்பால் தெரிவிக்க..அர்ச்சுனனும் பீமன் பார்க்குமாறு தன் தொடையைத் தட்டிக்காட்டினான்.குறிப்பறிந்த பீமன்..தனது கதாயுதத்தால் துரியோதனனின் இரு தொடைகளையும் முறித்தான்.நிற்கவும் இயலாது துரியோதனன் கீழே வீழ்ந்தான்.ஆத்திரமும், சினமும் கொண்டு'பீமா இதுவா போர் முறை?இதுவா சத்திரிய தர்மம்?' என்றான். (தொடரும்) 76-பதினெட்டாம் நாள் போர் (தொடர்ச்சி) துரியோதனனின் கூற்றைக் கேட்ட பீமன் கூறுகிறான்.. 'துரியோதனா நீயா தர்மத்தைப் பற்ரிப் பேசுகிறாய்?அன்று ஒருநாள் எனக்கு விஷம் கொடுத்தாயே அது தர்மமா? கொடிகளால் கட்டி நதியில் வீசினாயே..அது தர்மமா? அரக்கு மாளிகையில் எங்களைத் தங்கவைத்து தீயிட்டாயே..அது தர்மமா? பாஞ்சாலியை மன்றத்தில் பலர் முன்னிலையில் துகில் உரிந்து மான பங்கம் செய்தாயே..அது தர்மமா? எங்கள் குலக்கொழுந்தான அபிமன்யூவை நிராயுதபாணியாக்கி..மூலைக்கு ஒருவராக நின்று கொன்றீர்களே..அது தர்மமா? பாவத்தின் மொத்த வடிவமான நீயா தர்மத்தைப் பற்றியும்..வீரத்தைப் பற்றியும் பேசுகிறாய்? என்றவாறு பீமன் அவனை எட்டிக் காலால் உதைத்துக் காலை அவன் தலையின் மீது வைத்து அழுத்தினான்,. ஆனால் தருமர் பீமனின் இச் செயலை விரும்பவில்லை..'வீழ்ந்து கிடப்பவன் தலையில் காலை வைத்து அழுத்துதல் தர்மம் அன்று'என பீமனைக் கண்டித்தார்.பலராமனும் பீமனைக் கண்டித்தார். ஆனால்..துரியோதனன் தன் தவறுகளுக்கு வருந்தவில்லை.உலகெலாம் ஒரு குடைக்கீழ் ஆண்ட வீரமும், சத்திரிய தர்மத்தின்படி போர்க்களத்தில் போரிட்ட பெருமிதமும் தோன்ற உயிர் துறப்பேன் என்றான். பின்னர்..கண்ணன்..அர்ச்சுனனை தேரில் உள்ளக் கருவிகளை எடுத்துக் கொண்டு தேரில் இருந்து இறங்கச் சொன்னார்.அவர்கள் இறங்கியதுமே..தேர் பற்றியெரிந்தது. உடன் கண்ணன் 'பீஷ்மர்,துரோணர்,கர்ணன் ஆகியோர் செலுத்திய அம்புகளால் முன்னமே தேர் எரிந்திருக்கும்.நான் அதில் இருந்ததால் அழிவு ஏற்படவில்லை.நான் இறங்கியதும்..அம்பு தாக்கிய வெப்பத்தால் தேர் எரிந்து விட்டது' என்றார்.பாண்டவர்கள் கண்ணனை வணங்கி நன்றி கூறினர். திருதிராட்டினனுக்கும்..காந்தாரிக்கும் கண்ணன் ஆறுதல் கூறினார்.'உங்கள் துயரத்திற்கு துரியோதனனே காரணம்.அவன் சன்றோர்களின் அறிவுரையை ஏற்கவில்லை.'தான்' என்னும் ஆணவத்தால் அழிந்தான்.அவனால் பாண்டவர்கள் பட்ட கஷ்டத்தை சொல்லி மாளாது.காந்தாரி ஒருமுறை உன் மகன் துரியோதனனிடம் நீ என்ன கூறினாய் "மகனே..தர்மம் எங்கு உண்டோ அங்கு வெற்றி உண்டு ' என்றாயே...அஃது அப்படியே நிறைவேறியது.எல்லாம் விதி.எனவே பாண்டவர்களிடம் கோபம் கொள்ள வேண்டாம்.' என்ற கண்ணபிரானின் அறிவுரையைக் கேட்ட காந்தாரி சற்று ஆறுதல் அடைந்தாள்.கண்ணன் பின் பாண்டவர்கள் இருக்குமிடம் சென்றார். அஸ்வத்தாமனின் அடாத செயல் : தொடைகள் முறிந்ததால் நகர முடியாது துரியோதனன் துயரமுற்றான்.தான் அணு அணுவாக செத்துக் கொண்டிருப்பதை அறிந்தான்.அப்போது கிருபர்,கிருதவர்மா,அஸ்வத்தாமா ஆகியோர் அவனைக் கண்டு வேதனைப் பட்டனர்...அவனுக்கு ஆறுதல் கூறும் வகையில் பொழுது விடிவதற்குள் பாண்டவர்களை கொன்று வருவேன் என அஸ்வத்தாமன் கூறினான்.சாகும் நிலையில் இருந்தும் துரியோதனன் மனம் மாறவில்லை.அஸ்வத்தாமனுக்கு ஆசி வழங்கி அவனை தளபதி ஆக்கினான். பாண்டவர் பாசறை நோக்கிச் சென்ற மூவரும் ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்தனர்.அந்த மரத்தில் இருந்த பல காகங்களை ஒரு கோட்டான் கொன்றதை அஸ்வத்தாமன் கவனித்தான்.அதுபோல உறங்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களையும்..பாஞ்சாலியையும் கொல்ல வேண்டும் எனக் கருதினான்.ஆனால் கிருபர் அத்திட்டத்தை ஏற்கவில்லை. ஆனால் அஸ்வத்தாமன் பாண்டவர் பாசறையில் நுழைந்தான்.அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.அவன் திரௌபதியிம் புதல்வர்களான உபபாண்டவர்களைக் கொன்றான்,தன் தந்தையைக் கொன்ற திருஷ்டத்துய்மனைக் கொன்றான்.சிகண்டியையும் கொன்றான்.அப்போது பாண்டவர்களும்,கண்ணனும் அங்கு இல்லை.அஸ்வத்தாமன் செயல் அறிந்த துரியோதனன் மகிழ்ந்தான்.பின் அவன் உயிர் பிரிந்தது.வாழ்நாளில் ஒரு கணம் கூட அவன் தன் செயலுக்கு வருந்தவில்லை. செய்தி அறிந்து பாண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தன் மைந்தர்கள் மாண்டு கிடப்பதைக் கண்ட பாஞ்சாலி மயங்கினாள்.அஸ்வத்தாமனை யாராலும் கொல்ல முடியாது என அவள் அறிவாள்.'அவன் தலையில் அணிந்திருக்கும் மணியைக் கவர்ந்து அவனை அவமானப் படுத்த வேண்டும்..இல்லையேல் பட்டினி கிடந்து இறப்பேன்' என சூளுரைத்தாள். உடன் பீமன் தேரில் ஏறி கிளம்பினான். அவனை எளிதில் பிடிக்க முடியாது என்பதால் கண்ணன் அர்ச்சுனனை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.கங்கைக் கரையில் முனிவர்களோடு முனிவராக வியாசருடன் இருந்த அஸ்வத்தாமனைக் கண்டனர்.பீமன் அவன் மீது பல அம்புகளை செலுத்தினான்.அஸ்வத்தாமன் பிரமாஸ்திரத்தை செலுத்த..அர்ச்சுனனும் பிரமாஸ்திரத்தை செலுத்தினான்.இரண்டும் மோதுமாயின் உலகம் அழியும் என அறிந்த வியாசரும்,நாரதரும் உலகைக் காக்க நினைத்தனர். அவர்கள் கட்டளைக்கு பணிந்த அர்ச்சுனன் பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்டான். ஆனால் அஸ்வத்தாமனுக்கு..திரும்ப அழைத்துக் கொள்ளும் ஆற்றல் இல்லை.அந்த அஸ்திரம் ஏதேனும் ஒரு இலக்கை அழித்தே தீரும்.அஸ்வத்தாமன் பாண்டவர் வம்சத்தையே பூண்டோடு ஒழிக்க எண்ணி'பாண்டவர் மனைவியர்களின் கர்ப்பத்தில் இருந்த சிசுக்கள் அனைத்தும் அழியட்டும்;' என அந்த அஸ்திரத்திற்கு இலக்கு நிர்ணயித்தான்.ஆனால் கண்ணனின் அருளால் உத்திரையின் கரு காப்பாற்றப்பட்டது. சிசுக்களை அழித்த அஸ்வத்தாமனை கண்ணன் பழித்தார்.தலையில் இருந்த மணியை வியாசர் தருமாறு கூற அவ்வாறே அளித்தான்.'அறிவிலியே..நீ தொழுநோயால் பீடிக்கப்பட்டுக் காட்டில் தன்னந்தனியாய்ப் பல ஆயிரம் ஆண்டுகள் தவிப்பாயாக' என்று அஸ்வத்தாமனை சபித்தார் வியாசர். உத்தரையின் கருவில் உள்ள குழந்தை நல்லபடியே பிறந்து பரீட்சித் என்னும் பெயருடன் இந்நில உலகை ஆளுவான் என்றும் கூறினார்.சாபப்படி அஸ்வத்தாமன் காட்டிற்குச் சென்றான்.பாசறைக்குத் திரும்பிய கண்ணனும்,பீமனும்,அர்ச்சுனனும் திரௌபதியிடம் அஸ்வத்தாமனின் மணியைக் கொடுத்து ஆறுதல் கூறினர்.

Related Articles

 • Mahabharatha
  Mahabharatha
  மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது…
 • Vyasarin Mahabharatham
  Vyasarin Mahabharatham
  பராசர மகரிஷியின் புத்திரர் வியாசர்.வேதங்களை தொகுத்தளித்தவர்.இவர்தான் மகாபாரதம்…
 • Aadi Parvam
  Aadi Parvam
  இட்சுவாகு குலத்தைச் சேர்ந்த மகாபிஷக் என்ற மன்னன்…
 • Maganai Kanda Mannan
  Maganai Kanda Mannan
  சந்தனு..காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது..கங்கை நதியைக் கண்டான்..இந்த…
 • Bhishmar
  Bhishmar
  தந்தையை எண்ணி..சிந்தனை வயப்பட்டான் தேவவிரதன்.பின் எப்படியாவது..அந்த பெண்ணை…

Be the first person to comment this article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *