GuruShetra por(Karnan Death)

பதினாறாம் நாள் போர் பிஷ்மர்,துரோணர்,ஜயத்ரதன் ஆகியோர் வீழ்ச்சிக்குப் பின் கௌரவர் படை கலகலத்தது.துரியோதனனின் தம்பியர் பலர்,உதவிக்கு வந்த அரசர்கள் பலர் கொல்லப்பட்டனர்.ஆயினும்..துரியோதனன் மாறவில்லை.எப்படியாவது பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்றே குறியாய் இருந்தான்.அசுவத்தாமன் ஆலோசனைப் பேரில் கர்ணன் தளபதியாக நியமிக்கப் பட்டான். போர் தொடங்கும் போது மகர வியூகம் அமைத்தான் கர்ணன்.திருஷ்டத்துய்மன் அர்த்த சந்திர வியூகம் அமைத்தான்.போர் ஆரம்பித்தது.முதலில் நகுலனை எளிதில் வென்றிடலாம்..என கர்ணன் அவனுடன் போரிட்டான்.எழுபத்து மூன்று அம்புகளை அவன் மீது செலுத்தினான்.அவன் வில்லை ஒடித்தான்.தேரை அழித்தான்.வாளை துணித்தான் .கேடயத்தைச் சிதைத்தான்.கதையைப் பொடியாக்கினான்.அவன் நகுலனை எளிதாகக் கொன்றிருப்பான்..ஆனால் தாய் குந்திக்கு கொடுத்த வாக்குறுதி காரணமாக அவனை கொல்லாது விடுத்தான்.ஒரு புறம் கிருபருக்கும்..திருஷ்டத்துய்மனுக்கும் கடும் போர் மூண்டது.கிருதவர்மா சிகண்டியைத் திணற அடித்தான்.அர்ச்சுனன் பலரைவீழ்த்தினான். துரியோதனனுக்கும் தருமருக்கும் போர் மூண்டது.தருமர் அவன் தேரை அழித்தார்.வில்லை முறித்தார்..தமது சக்தி ஆயுதத்தால் துரியோதனனின் உடம்பெங்கும் புண்ணாக்கினார்.பின் ஒரு அம்பை எடுத்து அவன் மீது எய்தார். அச்சமயம்..துரியோதனனைக் கொல்வேன் என்ற பீமன் சபதம் ஞாபகம் வர..அதை திரும்பிப் பெற்றார்.ஆகவே அன்று அவன் தப்பித்தான்.அன்றைய போர் அத்துடன் முடிந்தது.அனைவரும் பாசறைக்குத் திரும்பினர். கர்ணனின் செயல் துரியோதனனை வருத்தியது.அவன் நகுலனையாவது கொன்றிருக்கலாம் என எண்ணினான்.கர்ணனிடம் சென்று..தன் வாழ்வு அவனிடம்தான் இருப்பதாகக் கூறி..எப்படியேனும் அடுத்த நாள் அர்ச்சுனனை போர்க்களத்தில் கொன்றுவிடுமாறு கேட்டுக் கொண்டான். கர்ணன் மனம் திறந்து துரியோதனனுடன் பேசினான்.'பல விதங்களில் நான் அர்ச்சுனனைவிட ஆற்றல் மிக்கவன்.அம்பு எய்வதில் அவன் என்னைவிட சிறந்தவன் அல்ல.விஜயம் என்னும் எனது வில் சக்தி வாய்ந்தது.இந்த வில்லால்தான் இந்திரன் அசுரர்களை மாய்த்தான்.தெய்வத்தன்மை வாய்ந்த இந்த வில்லை இந்திரன் பரசுராமருக்குக் கொடுத்தான்.பரசுராமன் எனக்கு அளித்தார்.அர்ச்சுனனிடம் இரண்டு அம்புறாத் தூணிகள் உள்ளன..அவை போன்றவை என்னிடம் இல்லை.எல்லாவற்றிற்கும் மேலாக அவனுக்கு கண்ணன் தேர் ஓட்டுகிறான்.அத்தகைய சாரதி எனக்கு இல்லை.ஆயினும்..சல்லியன் என் தேரை ஓட்டுவானானால்..நான் நிச்சயம் அர்ச்சுனனைத் தோற்கடிப்பேன்" என்றான். துரியோதனன் உடன் சல்லியனிடம் சென்று..'நீர் தேரை ஓட்டுவதில் கண்ணனைவிட சிறந்தவர்..ஆகவே கர்ணனுக்கு தேரோட்டியாய் இருந்து தனக்கு வெற்றியை பெற்றுத் தர வேண்டும்' என வேண்டினான். சல்லியன் ஒரு நிபந்தனையுடன் கண்ணனின் தேரைச் செலுத்தச் சம்மதித்தான்.போரில் கர்ணன் தவறிழைத்தால் தனக்கு அவனை கண்டிக்கும் உரிமைவேண்டும்..என்பதே நிபந்தனை.துரியோதனன் அந்த நிபந்தனையை ஏற்றான். பதினேழாம் நாள் போர் போர் ஆரம்பிக்கையிலேயே கர்ணனுக்கும், தேரோட்டியான சல்லியனுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. 'இன்று பாண்டவர்களை வெல்வது உறுதி' என்றான் கர்ணன்.உடன் சல்லியன் 'உன் தற்பெருமையை நிறுத்தி வீரத்தை போர்க்களத்தில் காட்டு'என்றான் சல்லியன். 'தேவாதி தேவர்களையும், அசுரர்களையும் வென்ற எனக்கு அர்ச்சுனனை வெல்வது எளிது' என்றான் கர்ணன். 'வீண் தற்பெருமை வேண்டாம்..உன் வீரம் நான் அறிவேன்.சிவனுடன் போர் புரிந்தவன் அர்ச்சுனன்.சித்திரசேனன் என்னும் கந்தர்வனுடன் போரிட்டு துரியோதனனை மீட்டவன் அவன்.அப்போது, கர்ணா..நீ எங்கே போனாய்?விராட நகரில் ஆநிரைகளை மீட்ட போது அர்ச்சுனனுக்கு பயந்து ஓடியவன் நீ.உத்தரன் தேரோட்டிய போதே கங்கை மைந்தனையும்,துரோணரையும் வென்றவன்..கண்ணன் தேரோட்டும் போது..சற்று எண்ணிப்பார்.உன் ஆணவப் பேச்சை நிறுத்தி..ஆற்றலை செயலில் காட்டு ' என்றான் சல்லியன். துரியோதனன் இருவரையும் அமைதிப் படுத்தினான்.போர்ப் பறை முழங்கியது.போர் ஆரம்பித்தது.துச்சாதனன் பீமனைத் தாக்கினான்.போரின் ஆரம்பத்தில் பீமன் தன் முழு ஆற்றலைக் காட்டவில்லை.பின் தன் சபதம் நிறைவேறும் தருணம் நெருங்கிவிட்டது உணர்ந்து..தன் ஆற்றல் வெளிப்படும் வகையில் போரிட்டான்.துச்சாதனனின் வலிமை மிக்க தோள்களைப் பிடித்து அழுத்தி..'இந்த கைதானே திரௌபதியின் கூந்தலைத் தொட்டு இழுத்தது' என அவன் வலக்கையைப் பிய்த்து வீசினான்..'இந்தக் கைதானே..பாஞ்சாலியின் ஆடையைப் பற்றி இழுத்தது' என இடக்கையை பிய்த்து எறிந்தான்.அவன் சினம் அத்துடன் அடங்காமல் துச்சாதனன் மார்பைப் பிளந்தான்..துச்சாதனன் மாண்டு தரையில் கிடந்தான்.பீமனின் சபதத்தில் பாதி நிறைவுப் பெற்றது.(மறு பாதி துரியனைக் கொல்வதாகும்) தருமர் கர்ணனை எதிர்த்தார்.வச்சிரம் போன்ற கருவியைக் கர்ணன் மீது எறிந்தார்.கர்ணன் அதன் வேகத்தை தடுக்க முடியாது மயங்கினான்.பின் எழுந்த கர்ணன் தருமரின் தேரை முறித்தான்.தருமர் உள்ளம் தளர்ந்து பாசறைக்குத் திரும்பினார். தருமரைக் காண கவலையுடன் அர்ச்சுனன் கண்ணனுடன் பாசறைக்கு வர..அவன் கர்ணனைக் கொன்றுவிட்டு வந்ததாக மகிழ்ந்தார் தருமர்.அது இல்லை என்றதும் கோபம் மேலிட'அவனைக் கொல்லாமல் ஏன் இங்கு வந்தாய்..பயந்து ஓடி வந்து விட்டாயா?உன்னைப்போல ஒரு கோழைக்கு வில் வேண்டுமா?அந்தக் காண்டீபத்தைத் தூக்கி எறி' என்றார். தருமரின் எதிர்பாரா இப்பேச்சைக் கேட்ட அர்ச்சுனன்..உணர்ச்சி வசப்பட்டு தருமரை நோக்கி'நீயா வீரத்தைப் பற்றிப் பேசுவது?நீ எந்த போர்க்களத்தில் வென்றிருக்கிறாய்..சூதாடத்தானே உனக்குத் தெரியும்? அதில் கூட நீ வென்றதில்லை.இவ்வளவு துன்பங்களுக்கு நீயே காரணம்' என்றவாறே அவரை கொல்ல வாளை உறுவினான். உடன் கண்ணன் அவன் சினத்தைப் போக்க இன்சொல் கூறினார்.தன் தவறுணர்ந்த அர்ச்சுனன்..மீண்டும் வாளை உறுவினான்..ஆனால்..இம்முறை தனைத்தானே மாய்த்துக் கொள்ள.தருமரின் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான்.தருமரும்..தன் இயல்புக்கு மாறாக நடந்துக் கொண்டதற்கு வருத்தம் தெரிவித்தார்.அர்ச்சுனன்'அண்ணா, கர்ணனைக் கொன்று திரும்புவேன்'எனக் கிளம்பினான். கர்ணனும், அர்ச்சுனனும் போரில் இறங்கினர்.அம்புகள் பறந்தன.கர்ணனின் விஜயம் என்ற வில்லும்..காண்டீபமும் ஒன்றை ஒன்று மோதின.அர்ச்சுனனுக்கு தான் வைத்திருந்த சக்தி என்னும் வேல் இப்போது இல்லையே என கர்ணன் வருந்தினான்.(அதை கடோத்கஜனைக் கொல்ல கர்ணன் உபயோகித்து விட்டான்)பின் நாகாஸ்திரத்தை எடுத்து எய்தான்.அது மின்னல் வேகத்தில் பார்த்தனை நெருங்கியது.தேவர்கள் திகைக்க, மக்கள் கத்த..அந்த நேரம் பார்த்துப் பார்த்தஸாரதி தேர்க்குதிரைகளை நிறுத்தித் தேரைத் தம் காலால் மிதித்து ஓர் அழுத்து அழுத்தினார்.தேர் சில அங்குலங்கள் பூமிக்குள் இறங்க..அந்த நாகாஸ்திரம் அர்ச்சுனனின் முடியைத் தட்டிச் சென்றது. யார் வெற்றி பெறுவார் என்பது கணிக்க முடியாமல் இருந்தது..ஆனால் அச்சமயம் கர்ணனின் தேர்ச் சக்கரம் சேற்றில் சிக்கிக் கொண்டது.தனக்கு பாதுகாப்பாக இருந்த கவச, குண்டலங்களைக் கர்ணன் முன்னமேயே இந்திரனுக்குத் தானமாக வழங்கி விட்டான்.அந்த இந்திரனிடமிருந்து பெற்ற சக்தி ஆயுதமும் இல்லை..நிராயுதபாணி ஆன அவன்,,'தருமத்தின் பெயரில் கேட்கிறேன்..தேரை சேற்றிலிருந்து எடுக்க சற்று அவகாசம் கொடு' எனக் கெஞ்சினான். அப்போது கண்ணன்..'கர்ணா..நீயா தர்மத்தைப் பேசுகிறாய்.துரியோதனன், சகுனியுடன் சேர்ந்து தீமைக்குத் துணைப்போனாய்.அப்போது உன் தர்மம் என்ன ஆயிற்று..மன்னர் நிறைந்த அவையில்..பாஞ்சாலியின் உடையைக் களைய நீயும் உடந்தைதானே..அப்போது எங்கே போயிற்று உன் தர்மம்..பாண்டவர்கள் பதின்மூன்று காலம் வன வாசம் முடித்து வந்ததும்..நீ தர்மப்படி நடந்துக் கொண்டாயா..அபிமன்யூவை தர்மத்திற்கு விரோதமாக பின்னால் இருந்து தாக்கினாயே..அப்போது எங்கே போயிற்று உன் தர்மம்' எனக் கேட்டார். கர்ணன் பதில் பேச முடியாது நாணித் தலைக் குனிந்தான்.ஆயினும்..அர்ச்சுனனின் கணைகளை தடுத்து நிறுத்தினான்.இறுதியாக அர்ச்சுனன் தெய்வீக அஸ்திரம் ஒன்றை எடுத்து 'நான் தர்மயுத்தம் செய்வது உண்மையெனின் இது கர்ணனை அழிக்கட்டும்'என கர்ணன் மீது செலுத்தினான்.தர்மம் வென்றது.கர்ணனின் தலை தரையில் விழுந்தது.தன் மகனின் முடிவைப் பார்த்து சூரியன் மறைந்தான்.துரியோதனன் துயரம் அடைந்தான்

Related Articles

  • Mahabharatha
    Mahabharatha
    மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது…
  • Vyasarin Mahabharatham
    Vyasarin Mahabharatham
    பராசர மகரிஷியின் புத்திரர் வியாசர்.வேதங்களை தொகுத்தளித்தவர்.இவர்தான் மகாபாரதம்…
  • Aadi Parvam
    Aadi Parvam
    இட்சுவாகு குலத்தைச் சேர்ந்த மகாபிஷக் என்ற மன்னன்…
  • Maganai Kanda Mannan
    Maganai Kanda Mannan
    சந்தனு..காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது..கங்கை நதியைக் கண்டான்..இந்த…
  • Bhishmar
    Bhishmar
    தந்தையை எண்ணி..சிந்தனை வயப்பட்டான் தேவவிரதன்.பின் எப்படியாவது..அந்த பெண்ணை…