gurushetram por (Bhishmar Vizhchi)

விதிமுறைகளுக்கு உட்பட்டுப் போர் தொடங்கும் நேரம்..தருமர்..தன் போர்க்கருவிகளைக் கீழே வைத்தார்.போருக்குரிய கவசங்களை நீக்கினார்.எதிரணியிலிருந்த பீஷ்மரை நோக்கிப் போனார்.இதைப் பார்த்தவர்கள் வியந்தனர். பீஷ்மர்..முதலியவர்களிடம் ஆசி பெறவே தருமர் செல்வதாக கண்ணன் நினைத்தார்.துரியோதனன் பக்கம் இருந்தவர்கள்..அவர் சரணடைய வருவதாக எண்ணினர். ஆனால் தருமர்..பீஷ்மரிடம் சென்று அவரை வணங்கி அவருடன் போரிட அனுமதி வேண்டினார்.அதுபோலவே.துரோணர்,கிருபர் ஆகியோருடனும் அனுமதி வேண்டிப் பெற்றார்.பிறகு தமது இடம் சென்று..போர்க்கோலம் பூண்டார்.. முதலாம் நாள் போர் முதலாம் நாள் போர் சங்குல யுத்தம் என அழைக்கப் படுகிறது.ஓர் ஒழுங்குக்கு உட்படாமல் முறை கெடப் போரிடல் 'சங்குல யுத்தம்' ஆகும்.இருதிறத்துப் படைகளும் மோதின.வீரர்கள் சிங்கம் போல கர்ஜித்தனர்.யானைப்படையும்..குதிரைப்படையும் மூர்க்கத்தனமாக மோதிக் கொண்டன.அதனால் எழுந்த தூசு விண்ணை மறைத்தது.வீரர்கள் ஈட்டி,கத்தி,கதை,வளைதடி,சக்கரம் முதலியக் கொண்டு போரிட்டனர்.பீஷ்மர் வீராவசத்தோடு போர் புரிந்து..எண்ணற்ற வீரர்களைக் கொன்றார்.சுவேதனுடன் அவர் போர் பயங்கரமாய் இருந்தது.பீஷ்மரால் அவன் கொல்லப்பட்டான்.அவன் மரணம் பாண்டவ வீரர்களை நடுங்க வைத்தது.கௌரவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இரண்டாம் நாள் போர் முதலாம் நாள் போரில் உத்தரனும்..சுவேதனும் கொல்லப்பட்டதால்..அதை மனதில் கொண்டு இரண்டாம் நாள் போர் படைகள் திருத்தி அமைக்கப் பட்டன.கிரௌஞ்சப் பறவை வடிவில் படைகளை அமைப்பதால்..அதற்கு கிரௌஞ்ச வியூகம் என்று பெயர்.துருபத மன்னன் அதற்குத் தலையாக நின்றான்.தருமர் பின் புறத்தில் நின்றார்.திருஷ்டத்துய்மனும்,பீமனும் சிறகுகளாக இருந்தனர். அந்த வியூகத்தை..எளிதில் உடைத்து உள்ளே சென்று போரிட்டார் பீஷ்மர்.கண்ணபிரான் தேரை ஓட்ட..அர்ச்சுனன்..பாட்டனாரைப் பயங்கரமாக தாக்கினான்.பீஷ்மர் ..அர்ச்சுனன் மீது எழுபத்தேழு அம்புகளை செலுத்தினார்.மற்றொரு புறம்..துரோணரும்,திருஷ்டத்துய்மனும் கடும் போர் புரிந்தனர்.திருஷ்டத்த்ய்மனுக்கு..உதவியாக பீமன் வந்தான்,அவனைத் தடுத்து நிறுத்த துரியோதனன்..கலிங்கப் படையை ஏவினான்.ஆனால் பீமன் ..அப்படையைக் கதிகலங்க வைத்தான்.அப்படைக்கு உதவ பீஷ்மர் வந்தார்.அவரை அபிமன்யூவும்..சாத்யகியும் சேர்ந்து தாக்கினார்.அவர்களது தாக்குதலால்..பீஷ்மரின் தேர்க் குதிரைகள் நிலை குலைந்து தாறுமாறாக ஓடின.இதனால்..அர்ச்சுனனை..எதிர்ப்பார் இல்லை.அவன்..விருப்பம் போல கௌரவ வீரர்களைக் கொன்று குவித்தான்.அவன் யாராலும் வெல்ல முடியாதவனாகக் காட்சியளித்தான்.அப்போது சூரியன் மறைய..அன்றைய போர் முடிவுற்றது. இரண்டாம் நாள் போரில் கௌரவர் கை தாழ்ந்திருந்தது.அதனால் மூன்றாம் நாள் போரை மாற்றி அமைக்க பீஷ்மர் விரும்பினார்.படைகளை கருட வியூகமாக அமைத்தார்.அதன் தலைப்பக்கம் பீஷ்மர்,துரோணர்,கிருபர்,அஸ்வத்தாமா,சல்லியன்,பகதத்தன் ஆகியோர் பொருத்தமான இடத்தில் நின்றனர்.துரியோதனன்..அவ்வியூகத்தின் பின் புறத்தில் நின்றான்.அதை முறியடிக்கும் விதத்தில் பாண்டவர்களின் தளபதியான திருஷ்டத்துய்மன் தன் படைகளை பாதி சக்கர வியூகமாக அமைத்தான்.அவன் வலப்பக்கமாக நின்றான்.அதன் இரண்டு பக்கங்களிலும் பீமனும்,அர்ச்சுனனும் நின்றனர்.தர்மர் இடையில் நின்றார்.மற்றவர்கள் பொருத்தமான இடங்களில் நிறுத்தப்பட்டனர். உச்சக்கட்டம் அடைந்தது அன்றைய போர்.அர்ச்சுனன் அம்பு மழை பொழிந்து கௌரவர் படையை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தான்.பீமன் ,துரியோதனன் மார்பில் அம்பை செலுத்தினான்.ரத்தம் பீரிட துரியோதனன் பீஷ்மரிடம் சென்று 'உண்மையில் நீங்கள் முழு பலத்தையும் காட்டி போரிடவில்லை.இது நியாயமா? பாண்டவரிடம் நீங்கள் கருணை காட்டினால்..என்னிடம் முதலிலேயே தெரிவித்திருக்கலாம்' என்றான். அது கேட்டு நகைத்த பீஷ்மர்..'உனக்கு நான் பலமுறை சொல்லியுள்ளேன்.பாண்டவர்களை யாரும் கொல்ல முடியாது.என் ஆற்றல் முழுதும்..ஆயினும் உனக்கே தருவேன்..'என்று கூறி போர்க் களம் சென்று சங்கநாதம் செய்தார்.கௌரவர் படை உற்சாகம் அடைந்தது.பாண்டவர் படையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.அர்ச்சுனன் உள்பட அனைவரும்..தளர்ந்து காணப்பட்டனர். கண்ணன் அர்ச்சுனனிடம்' அர்ச்சுனா ..என்னவாயிற்று உனக்கு? பீஷ்மரையும்,துரோணரையும் வெல்வேன் என்றாயே..அதை மறந்து விட்டாயா?'என்றார். உற்சாகம் அடைந்த அர்ச்சுனன் தனது ஒரு அம்பால்..பீஷ்மரின் வில்லை முறித்தான்.பீஷ்மர் வேறு அம்பை எடுத்தார்.எட்டு திசைகளிலும் அம்புகளைச் செலுத்தி மறைத்தார்.பல அம்புகள் அர்ச்சுனன் மேல் பாய்ந்தன.ஆனால்..அர்ச்சுனனின் திறமை இயல்பாய் இல்லாததை கண்ணன் உணர்ந்தார். பீஷ்மர் மீது கொண்ட அன்பினால்..அப்படி இருப்பதாய் எண்ணிய கண்ணன்..தானே பீஷ்மரைத் தாக்க எண்ணி..தேரை நிறுத்தி..ஆயுதம் ஏந்தி அவரை நோக்கி போனார்.சுதர்சன சக்கரத்தைக் கையில் ஏந்தினார்.இதைக் கண்ட பீஷ்மர் ஆனந்தம் அடைந்தார்.''கண்ணன் கையால் மரணமா?அதை வரவேற்கிறேன்' என்று தூய சிந்தனை அடைந்தார். அர்ச்சுனன் ..கண்ணனின் செயல் கண்டு மனம் பதறி...ஓடோடி கண்ணனிடம் சென்று..காலைப் பிடித்துக் கொண்டு..'நீங்கள் ஏன் ஆயுதம் ஏந்த வேண்டும்.நான் போரிடேன் என்ற உங்கள் சபதம் என்னவாயிற்று? என்னை உற்சாகப் படுத்த இச் செயலா?அப்படியாயின் இதோ புறப்பட்டேன்..சினம் வேண்டாம்'என வேண்டினான். கண்ணனின் ஆவேசம் தணிந்தது.பின் அவனின் காண்டீபம் இடியென முழங்கியது.யானைகள் சாய்ந்தன..குதிரைகள் வீழ்ந்தன..காலாட் படையினர் சரிந்தனர். மாலை நெருங்க..அன்றைய போர் முடிவுக்கு வந்தது. நான்காம் நாள் பீஷ்மர் வியாளம் என்ற வியூகத்தை அமைத்தார்.ஐந்து பனைகளை அடையாளமாக உடைய கொடியுடன் போர் புரிந்தார்.அனுமானைச் சின்னமாகக் கொண்ட கொடியுடன் ..அவ்வனுமானின் பேராற்றலுடன் போரிட்டானர்ச்சுனன்.அபிமன்யு போர் முனைக்கு வந்தான்.அவனைப் பூரிசிரவசு,அஸ்வத்தாமா,சல்லியன் ஆகியோர் எதிர்த்துப் போர் புரிந்தனர்.ஒரு புறம் பீமன்..துரியோதனின் தம்பியர் எண்மரைக் கொன்றான்.தன் கதையால் யானைகளை வீழ்த்தினான்.பீமனின் மைந்தன் கடோத்கஜன் வெற்றி மேல் வெற்றி பெற்றான்.துரியோதனின் வீரர்கள் சோர்ந்து போயினர்.பலர் மாண்டனர். தம் மக்கள் மாண்டது குறித்து திருதிராட்டினன் மனம் கலங்கியது. நான்காம் நாள் போர் நின்றது.பீஷ்மரைக் காணச் சென்ற துரியோதனன்'நீங்களும்,துரோணரும்,கிருபரும் இருந்தும் என் தம்பியர் மாண்டனரே!பல வீரர்கள் உயிர் இழந்தனரே1பாண்டவர்கள் வெற்றியின் ரகசியம் என்ன?'என்றான். 'இது குறித்து பலமுறை உன்னிடம் சொல்லி இருக்கிறேன்.பாண்டவர்களுடன் சமாதானமாகப் போவதே நன்று என வற்புறுத்தி இருக்கிறேன்.எங்கு கண்ணன் உள்ளாரோ..அங்கு தர்மம் இருக்கிறது. எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கு வெற்றி இருக்கிறது.இப்போதும் காலம் கடந்து விடவில்லை.போரைக் கைவிட்டு அவர்களுடன் இணை.இல்லையேல் மீளாத்துயரில் ஆழ்வாய்'என்றார் பீஷ்மர். துரியோதனன் இணங்கினான் இல்லை. ஐந்தாம் நாள் போர் பீஷ்மர் மகர வியூகம் வகுத்தார்.வடிவத்தில் இது முதலைப்போல் இருக்கும்.திருஷ்டத்துய்மன் சியேன வியூகம் அமைத்தான்.இது பருந்து போன்றது.பல ஆயிரம் பேர் மாண்டனர்.துரியோதனன் துரோணரைப் பார்த்து' குருவே நீர் பாண்டவர்களைக் கொல்லும் செயலில் ஈடுபடுங்கள்.உம்மையும்,பீஷ்மரையுமே நான் நம்பியுள்ளேன்' என்றான். அதற்கு துரோணர் 'பாண்டவரிடம் பகை வேண்டாம்..என ஏற்கனவே பலமுறை சொல்லியும் நீ கேட்கவில்லை.ஆயினும் என்னால் இயன்ற அளவு போரிடுவேன்' என்றார். சாத்யகியும்,பீமனும் துரோணருடன் சண்டையிட..அர்ச்சுனன் அஸ்வத்தாமாவுடன் போரிட்டான்.அபிமன்யூ துரியோதனனின் மகன் லட்சுமணனுடன் போரிட்டான்.கிருபர் தன் தேரை பாதுகாப்பாக வேறிடம் கொண்டு சென்றார். சூரியன் மறைய அன்றைய போர் முடிந்தது. ஆறாம் நாள் போரில் திருஷ்டத்துய்மன் மகர வியூகம் அமைத்தான்.பீஷ்மர் கிரௌஞ்ச வியூகம் அமைத்தார்.ஒருவருடன் ஒருவர் போர் புரிந்தனர்.பீமன் அன்று சிறப்பாக போரிட்டான்.பகைவர்களக் கொன்று குவித்தான்.துரியோதனன் பீமனுடன் போர் புரிய நெருங்கினான்.அதைக் கண்ட பீமன் 'துரியோதனா..நீ இங்குத்தான் இருக்கிறாயா?உன்னைப் போர்க் களம் எங்கும் தேடி அலைந்தேன்..இன்றுடன் உன் வாழ்வு முடிந்தது' என்று கூறி அவன் தேர்க் கொடியை அறுத்துத் தள்ளினான்.பெரும் போருக்குப் பின் துரியோதனன் சோர்ந்து வீழ்ந்தான்.சூரியன் மறைய அன்றைய போர் நின்றது. ஏழாம் நாள் போர் ஆறாம் நாள் போரில் மயங்கி விழுந்த துரியோதனன் மயக்கம் தெளிந்து பீஷ்மரிடம் முறையிட்டான்.'எனது அச்சமும்..சோர்வும் என்னைவிட்டு அகவில்லை.உங்கள் உதவி இல்லையேல் எப்படி வெற்றி பெறுவேன்'எனக் கெஞ்சிக் கேட்டான்.பீஷ்மர்..தன்னால் முடிந்த அளவிற்கு போரிடுவதாகக் கூறி பாண்டவர்களை எதிர்த்தார்.துரியோதனன்..உடலெங்கும் புண்பட்டு வருந்தினான். துரோணருக்கும் விராடன் மைந்தனுக்கும் நடந்த போரில் அம் மைந்தன் மாண்டான்.ஒரு புறம் நகுலனும்,சகாதேவனும் சேர்ந்து சல்லியனை எதிர்த்து போரிட்டனர்.அவன் மயக்கம் அடைந்தான்.பழைய பகையைத் தீர்த்துக் கொள்ளக் கருதிய சிகண்டி பீஷ்மருடன் போரிட்டான்.கடுமையாய் இருந்த போர் ..சூரியன் மறைய முடிவுக்கு வந்தது.அன்று இரவு கிருஷ்ணருடைய வேணுகானம் புண்பட்ட வீரர்க்கு இதமாக இருந்தது. எட்டாம் நாள் போர் பீஷ்மர் மகர வியூகம் அமைத்தார்.அது கடல் போல் காட்சி அளித்தது.நாற்சந்தி போன்ற சிருங்கடக வியூகத்தை திருஷ்டத்துய்மன் வகுத்தான்.இது வலுவானது.பகைவரின் வியூகம் எதுவானாலும் அதைச் சிதறச் செய்யும் ஆற்றல் உடையது.பீமன் துரியோதனன் தம்பியர் எண்மரைக் கொன்றான்.அது கண்டு துரியோதனனும்,திருதிராட்டிரனும் வருந்தினர்.கௌரவர்கள் படை தோல்வி மேல் தோல்வி கண்டது. அன்று நடந்த போரில் பீமன் யனைப் படையை அழித்தான்.கடோத்கஜன் வீரர்கள் பலரைக் கொன்றான்.துரியோதனனை எதிர்த்து கடும் போர் செய்து,,அவன் தேரை அழித்தான்.அவன் மார்பில் அம்புகளைச் செலுத்தினான்.ரத்தம் பீரிட்டது.ஆயினும் துரியோதனன் கலங்காது நின்றான்.கடோத்கஜன் போர் வலிமைக் கண்டு துரோணர் முதலானோர் கடோத்கஜனைத் தாக்கினர்.பீமன் தன் மகனுக்கு உதவிட விரைந்தான்.பீமன் மேலும் துரியோதனன் தம்பியர் எண்மரைக் கொன்றான்.இதுவரை..பீமன் துரியோதனன் தம்பியர் இருபத்தினான்கு பேரைக் கொன்றிருந்தான்.இரவு வர அன்றைய போர் நின்றது. பீஷ்மர் சர்வதோபத்ர வியூகம் வகுத்தார்.பாண்டவர்களும் அதற்கேற்ப ஒரு வியூகம் வகுத்தனர்.பார்த்தனின் சண்டைமுன் கௌரவர் படை பரிதாபமாக காட்சி அளித்தது.அபிமன்யூவும் போரில் பல வீரர்களைக் கொன்றான்.திரௌபதியின் புதல்வர்கள் ஐவரும் அபிமன்யூவுடன் சேர்ந்து அவனுக்கு துணை நின்றனர்.அனைவரும் அலம்புசன் என்பவனுடன் போர் புரிந்தனர்.அவனோ மாயப்போர் புரிந்தான்.எங்கும் இருள் சூழும்படி அம்பு மழை பொழிந்தான்.அபிமன்யூ மாற்றுப் படையால் மாயையை விலக்கி அலம்புசனைத் தாக்கினான்.அலம்புசன் போர்க்களம் விட்டு ஓடினான். துரோணருக்கும்..அர்ச்சுனனுக்கும் போர் மூண்டது.குருவும் சீடன் என எண்ணவில்லை..சீடனும் குரு என எண்ணவில்லை.பின்..பாண்டவர்கள் ஒன்று கூடிப் பாட்டனாராகிய பீஷ்மரை எதிர்த்தனர்.ஆயினும் பீஷ்மரை அசைக்க முடியவில்லை. பாண்டவர்கள் முயற்சி..தளர்ச்சி ஆனதை அறிந்து கண்ணன் சக்கரத்தை கையில் ஏந்தினார்.பீஷ்மரை வீழ்த்த எண்ணம் கொண்டார்.தம்மை நோக்கி பரந்தாமன் வருவதுக் கண்டு பீஷ்மர் 'கண்ணா..என் உடலிலிருந்து உயிரைப் பிரித்து அப்புறப்படுத்த வேண்டுகிறேன்.'என வேண்டிக் கொண்டார். பரமனைத் தொடர்ந்து ஓடிய பார்த்தன்..'போர்க்களத்தில் ஆயுதம் ஏந்த மாட்டேன்..என்ற கண்ணனின் பிரதிக்ஞையை நினைவூட்டினான். சூரியன் சாய..அன்றைய போர் முடிந்தது. அன்று இரவு பாண்டவர்கள் கண்ணனை வணங்கி..இதுவரை நடைபெற்ற போரில் பீஷ்மரை வெல்ல முடியவில்லையே என்ற கவலையை வெளியிட்டனர்.நீண்ட யோசனைக்குப் பின்..அவரை வெல்வது குறித்து அவரையேக் கேட்க முடிவெடுத்தனர்.பின் பீஷ்மர் இருக்குமிடம் சென்று வணங்கினர்.பீஷ்மர் அனைவரையும் அன்புடன் தழுவிக் கொண்டார்.பின் அர்ச்சுனன்'பிதாமகரே! போர் தொடக்கத்திற்கு முன் "உங்களுக்கு வெற்றி கிடைக்கட்டும்" என வாழ்த்தினீர்கள்.தங்களை வென்றால்தானே எங்களுக்கு வெற்றி?தங்களைத் தோற்கடிப்பது எப்படி?' என்றான். அதற்கு பீஷ்மர்..'நான் போரில் புறமுதுகு காட்டி ஓடுபவரோடோ,ஆயுதம் இல்லாதவரோடோ,பெண்ணோடோ,பேடியினிகளிடனோடோ போரிட மாட்டேன்.பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய சிகண்டியை முன் நிறுத்தி நாளை என்னுடன் போரிடு.சிகண்டியின் முன்..என் ஆயுத பலனன்றி போய்விடும்.அப்போது நீ என்னை எதிர்த்துப் போர் செய்.வெற்றி கிட்டும் 'என்றார். கங்கை மைந்தன் கூற்றைக் கேட்டு..பாண்டவர்கள் அமைதியாகப் பாசறைக்குத் திரும்பினர். பீஷ்மர் வீழ்ச்சி அடையும் நாள் வந்தது.கௌரவர்கள் அசுர வியூகத்தை அமைக்க...பாண்டவர்கள் தேவ வியூகத்தை அமைத்தனர்.சிகண்டியை முன் நிறுத்திப் பாண்டவர்களின் படை முன்னேறியது.இதுவரை இல்லாத பாதுகாப்பு இன்று பீஷ்மருக்கு இருந்தது.சிகண்டியின் அம்புகள் பீஷ்மர் மார்பில் பாய்ந்தன.விரதப்படி பீஷ்மர் சிகண்டியைத் தாக்கவில்லை.ஆயுதம் ஏதும் கையில் இல்லை.அர்ச்சுனன் அம்பு செலுத்தி..பீஷ்மரின் கவசத்தைப் பிளந்தான்.வில்லை முறித்தான்.அவரின் வேலாயுதத்தையும்,கதாயுதத்தையும் தகர்த்தான்.அர்ச்சுனனின் அம்புகள் பீஷ்மரின் உடலெங்கும் தைத்தன. தேரிலிருந்து பீஷ்மர் சாய்ந்த போது தேவர்கள் மலர் மழை பொழிந்தனர்.இரு தரப்பாரும் பீஷ்மரின் வீழ்ச்சிக் கண்டு திகைத்தனர்.கீழே வீழ்ந்தவரின் உடல் தரையில் படவில்லை.உடம்பில் தைத்திருந்த அம்புகள்..அவர் உடல் பூமியில் படாது தடுத்தன.அவரைக் கௌரவிக்க..கங்காதேவி..பல ரிஷிகளை அனுப்பினாள்.அன்னப் பறவை வடிவம் தாங்கி அவர்கள் பீஷ்மரிடம் வந்து பணிந்து சென்றனர்.அவர் உத்தராயண புண்ணிய காலம் வரை உயிருடன் இருக்கத் தீர்மானித்திருந்தார்.இப்படி மரணத்தைத் தள்ளிப்போடும் வரத்தை தந்தை சாந்தனுவிடமிருந்து பெற்றிருந்தார். அவர் உடல் பூமியில் படவில்லையாயினும்..தலை தொங்கி இருந்தது.அருகில் இருந்தோர் தலயணைக் கொணர்ந்தனர்.ஆனால் அவற்றை விரும்பாத பீஷ்மர் அர்ச்சுனனைப் பார்த்தார்.அர்ச்சுனன் மூன்று அம்புகளை வில்லில் பொருத்தி வானத்தில் செலுத்தினான்.அவை..நுனிப்பகுதி மேலாகவும்,அடிப்பகுதி தரையில் பொருந்துமாறும் அமைந்து பீஷ்மரின் தலையைத் தாங்கின.பீஷ்மர் புன்னகை பூத்தார். பீஷ்மருக்கு தாகம் எடுத்தது.பல மன்னர்கள் தண்ணீர் கொணர்ந்தனர்.பீஷ்மர் அர்ச்சுனனை நோக்கினார்.குறிப்புணர்ந்த அர்ச்சுனன்..அம்பு ஒன்றை பூமியில் செலுத்தினான்.கங்கை மேலே பீரிட்டு வந்தது.கங்கை மைந்தன் அந்த நீரைப் பருகினார். பீஷ்மர்..பின் துரியோதனனைப் பார்த்து..'அர்ச்சுனனின் ஆற்றலைப் பார்த்தாயா?தெய்வ பலம் பெற்றவன் இவன்.இவனிடம் சிவனின் பாசுபதக் கணையும் உள்ளது.விஷ்ணுவின் நாராயணக் கணையும் உள்ளது.அது மட்டுமின்றி..அனுமனின் ஆற்றலைப் பெற்ற பீமனின் வல்லமையும் உனக்குத் தெரியும்.இப்போதேனும் நீ சமாதானமாய் போய் விடு.அவர்கள் நாட்டை அவர்களிடம் ஒப்படைத்து விடு.இப்போர் என்னுடன் முடியட்டும்' என்றார்.அவரின் அறிவுரையை அவன் ஏற்கவில்லை. எல்லோரும் பிரிந்து சென்றதும்..நள்ளிரவில் கர்ணன் ஓடிவந்து அவர் பாதங்களில் வீழ்ந்து அழுதான்.;'ராதையின் மைந்தனான நான்..சில சமயங்களில் தங்களுக்கு மரியாதைத் தர த்தவறிவிட்டேன்.என்னை மன்னித்து விடுங்கள்' என்றான். அது கேட்ட பீஷ்மர்..'கர்ணா..நீ ராதையின் மகன் அல்ல.குந்தியின் மைந்தன்.சூரிய குமரன்.இதை வியாசர் எனக்குக் கூறினார்.காரணமின்றி நீ பாண்டவர்களை பகைத்ததால்..நானும் உன்னிடம் கோபமாக நடந்துக் கொண்டேன்.பாண்டவர்கள் உன் தம்பியர்.நீ அவர்களுடன் சேர்ந்து தருமத்தைப் போற்று' என்றார். கர்ணன் கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை.'துரியோதனனுக்கு எதிராகப் போர் புரிவதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.மன்னியுங்கள்' என்றான். கர்ணா..அறம் வெல்லும்.நீ விரும்பியப்படியே செய் என்று கூறிவிட்டு நித்திரையில் ஆழ்ந்தார் பிதாமகன்.

Related Articles

  • Mahabharatha
    Mahabharatha
    மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது…
  • Vyasarin Mahabharatham
    Vyasarin Mahabharatham
    பராசர மகரிஷியின் புத்திரர் வியாசர்.வேதங்களை தொகுத்தளித்தவர்.இவர்தான் மகாபாரதம்…
  • Aadi Parvam
    Aadi Parvam
    இட்சுவாகு குலத்தைச் சேர்ந்த மகாபிஷக் என்ற மன்னன்…
  • Maganai Kanda Mannan
    Maganai Kanda Mannan
    சந்தனு..காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது..கங்கை நதியைக் கண்டான்..இந்த…
  • Bhishmar
    Bhishmar
    தந்தையை எண்ணி..சிந்தனை வயப்பட்டான் தேவவிரதன்.பின் எப்படியாவது..அந்த பெண்ணை…