Lakshmana Kills Indrajit

இந்திரஜித் ஏவிய பிரம்மாஸ்திரம் இராமன் முன்பு வந்து நின்று, “என்னை வில்லில் பூட்டி செலுத்திய பின் யான் கொல்லுதல் உறுதி” என்ற உண்மையை நீ நிலை நிறுத்திவிட்டாய்!” அதாவது, பிரம்மாஸ்திரத்தை மாற்ற நாராயணாஸ்திரத்தை இராமன் (மகாவிஷ்ணு) பயன் படுத்தியிருந்தால், பிரம்மாஸ்திரம் சக்தி இழந்து போயிருக்கும். அப்படியில்லாமல் இலக்குவனை இறக்கவிட்டு, பிரம்மாஸ்திரத்தின் புனிதத்தை இராமன் காப்பாற்றிவிட்டான் என்கிறது அது. சஞ்ஜீவி மலையைக் கொண்டு வந்து அனைவரையும் உயிர்பெற்று எழச் செய்து நம்பிக்கையூட்டிய அனுமனை இராமன் தழுவிக் கொண்டு, கண்களில் நீர் ததும்ப அவனை வாழ்த்தினான். அனுமன் ஒன்றும் பேசாமல் அடக்கத்தோடு இராமனை வணங்கினான். அனவரும் அனுமனைச் சூழ்ந்துகொண்டு வாழ்த்துகிறார்கள். ஜாம்பவான் அனுமனைப் பார்த்த், சஞ்ஜீவி மலையை சிறிதும் தாமதிக்காமல் அதை எடுத்த இடத்திலேயே கொண்டு போய் வைத்துவிட்டு வா என்று சொல்கிறான். அனுமனும் ‘இதோ’ என்று ஓர் நாழிகையில் மீள்வேன் என்று சொல்லி மீண்டும் பறந்து சென்று, சஞ்ஜீவி மலையை அதன் உரிய இடத்தில் கொண்டு போய் வைத்துவிட்டு, அதனைக் காக்கும் தெய்வங்களிடமும் சொல்லிவிட்டு திரும்ப வந்தான். இந்திரஜித் ஏவிய பிரம்மாஸ்திரத்தால் இராம லக்ஷ்மணர் தன் சேனையுடன் மாண்டார்கள் என்ற செய்தி கேட்டு, இராவணன் வெற்றி விழா கொண்டாடினான். அரக்கர்களும், அரக்கப் பெண்டிரும் கள் உண்டு ஆடுகிறார்கள். அரம்பையர், வித்யாதரர், நாகர், இயக்கர், சித்தர் என அனைவரும் வந்து மகிழ்ந்து ஆடிப்பாடி இன்புறுகிறார்கள். அப்போது ஒற்றர்கள் வந்து பகைவர்கள் உயிர் பெற்று எழுந்து விட்டார்கள் என்ற செய்தியை கொண்டு வந்தார்கள். இராவணன் கொதிக்கின்ற மனத்தினனாய் ஆலோசனை மண்டபம் அடைகிறான். இராவணன் மந்திராலோசனை மண்டபம் சென்ற செய்தி கேட்டு இந்திரஜித்தும், மகோதரன், மாலியவான் மற்றும் அமைச்சர்கள் வந்து கூடினர். இராவணன் தமக்கு நேர்ந்துள்ள துன்ப நிலையை எடுத்துரைத்தான். அதுகேட்டு மாலியவான் சொல்கிறான், “அவசரப்பட்டு அரக்கர்களுடைய பிணங்களையெல்லாம் எடுத்துக் கடலில் போடாமல் இருந்திருந்தால், அரக்கர்களும் பிழைத்து எழுந்திருப்பர்கள். அவசரப்பட்டு விட்டோம். பிரம்மாஸ்திரமே வீணான பிறகு நாம் அழிவது நிச்சயமாகி விட்டது. அந்த இராமன் பரம்பொருளே! அவனை வெல்லும் ஆற்றல் அரக்கருக்கு உண்டோ? சீதையை அவர்களிடம் கொண்டுவிட்ட பின் சரண் அடைந்தால், பிழைப்போம்” என்றான். “நன்று! நன்று!” என்று இராவணன் வெகுண்டு சொன்னான். “அரக்கர் அனைவரும் அழிந்து பட்டாலும், நான் ஒருவன் மட்டும் வாள் எடுத்துப் போர் புரிவேன்” என்கிறான் இராவணன். “மகனாகட்டும்! மற்றவர்களாகட்டும், பயம் கொண்டவர்கள் ஓடிவிடுங்கள். எதிரிகளை நானே அழிப்பேன்” என்றான். இந்திரஜித் எழுந்து தான் நிகும்பலை யாகம் செய்தால் வெற்றி பெறலாம். அதை விபீஷணன் இராமனிடம் சொல்லிக் கெடுக்காமல் இருக்க வேண்டும். அதற்கு என்ன உபாயம் என்று சிந்திக்கிறான். இந்திரஜித் சொல்லுகிறான், “சீதை போன்ற உருவம் செய்து அவலை அனுமன் முன்பு கொண்டு போய் கொன்றுவிட்டு, அயோத்திக்குச் சென்று அங்குள்லவர்களைக் கொல்வேன்” என்று வடக்கே போகிறேன். இராம லக்ஷ்மணரும் படையுடன் ஊருக்குத் திரும்புவார்கள். நான் சென்று நிகும்பலை யாகம் செய்து முடிக்கிறேன்” என்றான். இந்திரஜித்தின் யோசனையை இராவணனும் ஏற்றுக் கொண்டான். இந்திரஜித் சொன்னபடி, சஞ்ஜீவி மலையைக் கொண்டு போய் அதன் உரிய இடத்தில் சேர்த்துவிட்டு வான்வெளி மார்க்கமாக வந்து கொண்டிருக்கும் அனுமன் முன்பாக சீதையைப் போன்ற ஓரு மாயவடிவம் எடுத்த உருவத்தைக் கொல்கிறான். அனுமன் அது கண்டு அழுது புரண்டு, இராமனிடம் ஓடிப்போய் சொல்ல, அவர்கள் அயோத்தி சென்று அங்குள்ளவர்களையாவது காப்பேன் என்று புறப்படுகிறான். அப்போது விபீஷணன் “இது அரக்கர்களின் மாயையாகத்தான் இருக்க வேண்டும். இப்படி உங்களை திசை திருப்பிவிட்டு, இந்திரஜித் நிகும்பலை யாகம் செய்யப் போயிருக்கலாம். அப்படி அவன் அந்த யாகத்தைச் செய்து முடித்து விட்டால், அவனை வெல்வது என்பது இயலாது” என்றான். “நான் போய் ஒரு சிறு வண்டு உருவம் எடுத்துக் கொண்டு அசோக வனம் சென்று அன்னை நலமாக இருக்கிறார்களா என்று பார்த்து வருகிறேன்” என்று சொல்லி, அதன்படியே போய்ப் பார்த்துவிட்டு அங்கு அன்னை நலமாக இருப்பதை வந்து தெரிவிக்கிறான். அனைவருக்கும் மன நிம்மதி ஏற்படுகிறது. சீதை நலமாக இருக்கிறாள், அவளைக் கொல்வது போல மாயையால் நம்மை இந்திரஜித் ஏமாற்றிவிட்டு நிகும்பலையில் யாகம் செய்யப் போய்விட்டான் என்று இராமன் தெரிந்து கொண்டு, இந்திரஜித் செய்யப் போகிற நிகும்பலை யாகத்தை உடனே தடுக்க வேண்டும், அதற்கு வேண்டியதைச் செய்வோம் என்று அனைவரும் முடிவு செய்தார்கள். நிகும்பலை என்பது இலங்கையின் மேற்குப் பகுதியிலுள்ல ஒரு குகை. அங்கு பத்ரகாளி கோயில் ஒன்று உண்டு. அங்கு சென்று காளிக்கு யாகம் செய்தால் நினைத்ததைப் பெறலாம். இந்த நிகும்பலை பற்றிய தகவல் “வாசஸ்பதிய நிகண்டு” எனும் நூலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இராமன் விபீஷணனை நோக்கி, “ஐயனே! நீ துணை இருக்கிறாய். தெய்வம் உளது. அனுமன் இருக்கிறான். நான் துன்பம் தீர்வது பெரிய காரியமோ? என்றான். அதற்கு விபீஷணன், “இந்திரஜித் யாகத்தை முடித்துவிட்டால், அவனை யாராலும் வெல்ல முடியாது. நான் இலக்குவனோடு நிகும்பலை சென்று யாகத்தை அழித்து, அவனையும் கொன்று வருகிறேன். விடை தருக!” என்றான். உடனே இராமன் இலக்குவனை அழைத்து, விபீஷணனோடு சென்று அந்த யாகத்தை அழித்து இந்திரஜித்தையும் கொன்று வருக. அறவழியில் போர் செய்து அவனைக் கொல்க, என்று சொல்லி அவனைத் தழுவிக் கொண்டான். விபீஷணனுடன் இலக்குவன் நிகும்பலை சென்றடைகிறான். அங்கு ஆரவாரம் எதுவுமின்றி யாகம் நடப்பதையும், அந்த யாகத்துக்குக் காவலாக அரக்கர்கள் சக்கர வியூகமாக நின்று கொண்டிருப்பதையும் காண்கிறார்கள். விபீஷணன் இலக்குவனிடம், நாம் இப்போதே சென்று யாகத்தைச் சிதைப்போம் என்கிறான். இலக்குவன் உடனே தாக்குதலைத் தொடங்கி அரக்கர்களைக் கொன்று யாகத்தைச் சிதைத்துக் கெடுக்கிறான். இலக்குவனால் கொலையுண்ட அரக்கர் படையை இந்திரஜித் பார்க்கிறான். அங்கு கடுமையான போர் மூள்கிறது. அனுமன் போரிட்டு சோர்ந்து போகிறான். அங்கதன் பொருத வந்தான், அவனை விலக்கிவிட்டு இலக்குவனைத் தேடிப் போனான். வானர வீரர்களை வழி நெடுக துவம்சம் செய்து கொண்டே போகிறான். அப்போது விபீஷணன் இலக்குவனிடம், ” அவன் அப்படியே தப்பி ஓடிவிடுவான், அவனை விடாதே!” என்றான். இலக்குவன் அனுமனுடைய தோள் மீது ஏறிக்கொண்டு போருக்கு வந்தான். இருவருக்கும் கடும் போர் நடந்தது. அப்போது விபீஷணன் இலக்குவனிடம், “இந்திரஜித் சோர்ந்து போய்விட்டான், இனி இவன் பிழைக்கமாட்டான்” என்றான். தான் சோர்ந்து போவது அறிந்தும், இலக்குவனோடு தொடர்ந்து போரிடுவது சாத்தியமில்லை என்பதும் அறிந்து இந்திரஜித், “இந்தா, ஒழிந்து போ!” என்று சொல்லி மறுபடியும் பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அதே சமயம் இலக்குவனும் பிரம்மாஸ்திரத்தை எடுத்து, இதனால் உலகுக்கு ஒரு கேடும் நேராமல் போகட்டும், இந்திரஜித்தை விட்டுவிட்டு அவன் அஸ்திரத்தை மட்டும் அழிக்கட்டும் என்று வேண்டிக் கொண்டு செலுத்தினான். பகைமையிலும் பண்பு பாராட்டிய இலக்குவனை தேவர்கள் வாயாறப் புகழ்ந்தார்கள். இந்திரஜித் விட்ட பிரம்மாஸ்திரம் இலக்குவனுடைய அஸ்திர பலத்தால் அழிந்து வீழ்ந்தது. அதனால் ஏற்பட்ட வெப்பத்தை வேறொரு பாணத்தால் இலக்குவன் தணித்தான். கோபமடைந்த இந்திரஜித் இலக்குவன் மீது பாசுபதாஸ்திரத்தை ஏவி விடுகிறான். வானரக்கூட்டம் செய்வதறியாது இலக்குவனை பயத்தோடு பார்க்கின்றனர். அவன் சிரித்துக் கொண்டே, ஓர் கணையை ஏவி அந்த பாசுபதாஸ்திரத்தை விழுங்கச் செய்து விட்டான். இதற்கெல்லாம் இந்த விபீஷணனே காரணம் என்று இந்திரஜித்துக்குக் கோபம் வந்தது. உடனே அவன் கழுத்துக்கு குறி வைத்து ஒரு வலிய அம்பைச் செலுத்தினான் இந்திரஜித். அந்த அம்பு சீறிக்கொண்டு வரும்போது, இலக்குவன் ஓர் வலிய அம்பால் அதனை உடைத்தெறிந்தான். இனி தொடர்ந்து இங்கு இருந்து போரிட்டால் ஆபத்து என்பதைத் தெரிந்து கொண்டு இந்திரஜித் அங்கிருந்து மறைந்து போனான். விண்ணில் எழுந்து மறைந்து போன இந்திரஜித் நேரே இராவணன் முன்பாகப் போய் நின்றான். “உன் தம்பி, விபீஷணன் உளவு சொல்லி இலக்குவன் நிகும்பலை யாகத்தை அழித்து விட்டான்” என்று நடந்த வரலாற்றைத் தந்தையிடம் சொல்லி கோபப்பட்டான் இந்திரஜித். இலக்குவனின் வீரத்தையும், தெய்வப் பண்பினையும் சொல்லிவிட்டு, “நீ சீதை மேல் வைத்த காதலை மறந்து விடு. அவர்கள் போர் செய்வதை விட்டுவிடுவார்கள்” என்று அறிவுரை கூறுகிறான். அதற்கு மான உணர்ச்சி பொங்க இராவணன் சொல்கிறான், “நான் ஒருவரையும் நம்பி இந்தச் செயலைச் செய்யவில்லை. என்னையே நோக்கி, யான் இந்நெடும்பகை தேடிக் கொண்டேன்” என்கிறான். இறப்பது யார்க்கும் உறுதி. ஆனால் புகழுக்கு அழிவு இல்லை. சீதையை நான் விட்டுவிட்டு மற்றவர்க்கு எளியனாய் ஆவதைக் காட்டிலும் நான் இறந்தாலும் உறுதியாய் இறப்பேன். நீ போ! நானே போருக்குப் போகிறேன்” என்றான் இராவணன். தந்தையின் கோபத்தைத் தணிக்க விரும்பிய இந்திரஜித், இராவணனிடம், “சீற்றம் தணிக! நான் சொன்ன சொல்லை பொருத்தருள்க! நானே போருக்குப் போகிறேன்” என்று கிளம்பிப் போனான். அங்கிருந்து நேரே இலக்குவன் இருக்குமிடம் சென்றான். அங்கு இவ்விருவருக்கும் கடுமையான போர் நடக்கிறது. சிவபெருமான் கொடுத்த வில்லும், தேரும் இருக்கும் வரை இராவணனை எவராலும் வெல்ல முடியாது என்று விபீஷணன் இலக்குவனிடம் கூறி, அவற்றை எப்படியாவது அழித்துவிடக் கோருகிறான். உடனே இலக்குவன், இந்திரஜித்துடைய தேரை அடித்து வீழ்த்துகிறான். வாளைக் கையில் ஏந்தி வானத்தில் ஏறி மறைகிறான் இந்திரஜித். இலக்குவன் ஒரு அம்பை எடுத்து எய்தி, அவனுடைய ஒரு கையோடு வாளையும் துண்டித்து வீழ்த்துகிறான். வலது கரம் துண்டிக்கப்பட்ட நிலையில் தனது இடக்கையால் ஒரு சூலத்தை எடுத்து இலக்குவன் மீது வீசுகிறான் இந்திரஜித். அப்போது இலக்குவன் வேதங்களைத் தெளிந்து கூறும் கடவுளும், அந்தணர்கள் வணங்கும் கடவுளும் இராமனே என்பது உண்மையானால், இந்திரஜித்தைக் கொல் என்று ஓர் கடிய கணையை ஏவினான். அந்தக் கணை இந்திரஜித்தின் கழுத்தைச் சீவிக்கொண்டு, தலை மேற்புறமாகவும், உடல் கீழேயும் விழுகின்றன. அறுந்த தலையை அங்கதன் தனது கைகளில் ஏந்த, அனுமன் தோள்மீது அமர்ந்தபடி இலக்குவன், இராமனிடம் செய்தியைச் சொல்ல விரைகிறான். தேவர்கள் இலக்குவனை பூமாரிப் பொழிந்து வாழ்த்த, இராமன் இலக்குவனை ஆரத் தழுவி அவன் காயங்களை ஆற்றுகிறார். இவ்வாறு மகா வீரனும், மாயத்தில் வல்லவனும், இராவணனுடைய கடைசி பலமுமாக இருந்தவனான இந்திரஜித் இறந்து போனான். போர்க்களத்தில் இந்திரஜித் மாண்டுபோன செய்தியை ஒற்றர்கள், இராவணனிடம் சென்று சொல்லுகிறார்கள். இதனைக் கேட்டு கோபமும் ஆத்திரமும் கொண்டு ஒற்றர்களைத் தன் வாளால் வெட்டிக் கொன்றான் இராவணன். போர்க்களம் சென்று மகனுடைய வெட்டுண்ட இந்திரஜித்தின் கையையும், உடலையும் கண்டு கதறி அழுகிறான். அவற்றைக் கொண்டு வந்து தைலத்தில் இட்டு வைக்க உத்தரவிடுகிறான். மகன் இறந்த செய்தி கேட்டு மண்டோதரி அழுது புலம்புகிறாள். மகன் உடல் மீது விழுந்து கதறுகிறாள். இலங்கையின் அரக்கர்கள் அத்தனை பேரும் இந்திரஜித்தின் மரணச் செய்திக்கு வருந்துகிறார்கள். இவ்வளவு துயரமும் சீதையினால் அன்றோ வந்தது; அவளைக் கொன்று விடுகிறேன் என்று வாள் எடுத்துக்கொண்டு புறப்பட்டான் இராவணன். அமைச்சன் மகோதரன் அவனைத் தடுத்துப் பெண்ணைக் கொல்லுதல் வீரர்க்கு அழகல்ல என்று தடுத்து விடுகிறான். அமைச்சனின் அறிவுரை கேட்டு சினம் தணிகிறான் இராவணன். பகைவர்களின் சிரங்களை கொண்டன்றி மீளேன் என்று வஞ்சினம் கூறிவிட்டு இராவணன் போர்க்களம் போகிறான்.

Related Articles

  • Ramayana
    Ramayana
    இராமாயணம் வால்மீகி என்னும் முனிவரால் சமசுக்கிருத மொழியில்…
  • About Ayodhya
    About Ayodhya
    கோசலம், என்றொரு தேசம், இருந்தது. அதுல, சரயு…
  • Ashvemega Yaagam
    Ashvemega Yaagam
    இப்படி தர்மம் தவறாம தசரத மஹாராஜா, அயோத்தியை,…
  • Sri Rama Birth
    Sri Rama Birth
    ரிஷ்ய ஸ்ருங்க முனிவர் புத்திர காமேஷ்டி பண்ணி…
  • Vishwamithrar’s Teaching
    Vishwamithrar’s Teaching
    தசரதர், ராமனை விஸ்வாமித்ரர்ட்ட ஒப்படைகணும்னு முடிவு பண்ணவுடனே,…