Linguistics

மொழியியல் (Linguistics) என்பது ஒரு மொழியை அறிவியல் முறைப்படி ஆராய்வதற்குரிய ஒரு துறையாகும். மொழியின் வடிவம், பொருள், சூழல் போன்றவற்றையும் மொழியியல் ஆய்வு செய்கிறது.முன்னதாக 4 ஆம் நூற்றாண்டில் இந்திய இலக்கண அறிஞரான பானிணி மொழியைப்பற்றி ஒரு முறையான ஆய்வு விளக்கத்தை எழுதியுள்ளார் . இந்நூலில் இவர் சமசுகிருத மொழியைப் பற்றி ஆய்வு செய்து முறையான விளக்கத்தை எழுதியுள்ளார் .

மொழியியலாளர்கள் ஒலி மற்றும் அர்த்தத்திற்கு இடையிலான ஓர் ஒற்றுமையைக் கவனிப்பதன் மூலம் பாரம்பரியமாக மனித மொழியை பகுப்பாய்வு செய்கின்றனர் . ஒலிப்பியல் என்பது பேச்சு மற்றும் உரையாடல் ஒலிகளைப் பற்றிய ஆய்வு ஆகும், மேலும் இது அவர்களின் ஒலி தொடர்பான மற்றும் ஒலிகளை தெளிவாக உச்சரிப்பதற்குரிய உச்சரிப்பொலியியல் பண்புகளுக்குள்ளும் நுழைகிறது. மறுபுறம், மொழியின் அர்த்தத்தை ஆய்வு செய்து உலகின் பிற கூறுகள், பண்புகள் மற்றும் உலகின் பிற அம்சங்கள் ஆகியவற்றிற்கு இடையேயான உறவுகளை எவ்வாறு புரிந்துகொள்வது, செயல்படுத்துவது மற்றும் பொருளை வழங்குவது, அத்துடன் எவ்வாறு நிர்வகிப்பது, தோன்றும் கருத்து மயக்கத்தை எவ்வாறு தீர்ப்பது ஆகியவற்றைப் பற்றியும் மொழியியல் பேசுகிறது . அதேவேளையில் சொற்பொருள்களைப்பற்றிய ஆய்வு, சூழல் எவ்வாறு மொழிக்கான பொருளை உருவாக்குகிறது என்ற உண்மை நிலையையும் ஆராய்வதை மொழியியல் நடைமுறையாகக் கொண்டுள்ளது.

இலக்கணம் என்பது ஒரு மொழியில் சொற்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை நிர்வகிக்கும் விதிமுறைகள் தொடர்பான நடைமுறையாகும். இவ்விதிமுறைகள் ஒலிகளுக்கும்அவை தரும் பொருளுக்கும் பொருந்தும். மேலும், ஒலிக்கும் ஒலியமைப்புகளின் அமைப்பு சார்ந்த குரலியல், சொற்களின் அமைப்பு மற்றும் உருவாக்கம் சார்ந்த உருபனியல், சொற்றொடர்கள் உருவாக்கம் மற்றும் அமைப்பு சார்ந்த தொடரியல் உள்ளிட்டவற்றின் உட்கூறுகள் சார்ந்த துணைவிதிகளையும் இலக்கணம் வரையறை செய்கிறது. இலக்கணத்தின் கொள்கைகளில் நவீன இலக்கணக் கோட்பாடுகள் கவனம் செலுத்துகின்றன. இவை பெரும்பாலும் நோம் சோம்சுகியின் சித்தாந்தக் கல்வியின் பொது இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன.

மொழியியல் ஆய்வு, கீழே தரப்பட்டுள்ள மூன்று விதமான அடிப்படைகளில் நடைபெறுவதாகக் காணப்படுகிறது. பழங்கால இலக்காண பதிப்பான தொல்காப்பியம், தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் உலக மொழிகளில் ஒரு மொழியியல் அய்வு என்பதில் முதான்மயும், தொன்மையும் பெற்றது.

விளக்கமுறையும் வரலாற்றுமுறையும் (Synchronic and diachronic) — விளக்கமுறை, என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு மொழியின் நிலையைக் கருத்திலெடுத்து ஆய்வு செய்வதைக் குறிக்கும். வரலாற்றுமுறை என்பது ஒரு மொழியின் அல்லது ஒரு மொழிக் குழுவின் வரலாற்றையும், அவற்றில் எவ்வாறான அமைப்பு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் ஆராய்வதாகும்.
கோட்பாட்டு மற்றும் பயன்பாட்டு முறை — கோட்பாட்டு மொழியியல், தனிப்பட்ட மொழிகளை விவரிப்பதற்கான சட்டகங்களை (frameworks) உருவாக்குவதுடன், அனைத்து மொழிகள் தொடர்பான கோட்பாடுகள் பற்றியும் கவனத்திற் கொண்டுள்ளது.
சூழ்நிலைசார் மற்றும் சுதந்திரமான — இப்பகுப்பு தொடர்பில் சொற்கள் சரியாக நிலைநிறுத்தப்படாததால், வசதி கருதி இப் பெயர்கள் இங்கே பயன்படுத்தப் படுகின்றன. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் பெரு மொழியியல் (macrolinguistics), நுண் மொழியியல் (microlinguistics), என்னும் சொற்களைப் பயன்படுத்துகிறது. சூழல்சார் மொழியியல், ஒரு மொழி எவ்வாறு இந்த உலகத்துடன் பொருத்தப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதை, அதன் சமூகச் செயற்பாடு, எவ்வாறு பெறப்பட்டது, எவ்வாறு உருவானது மற்றும் எவ்வாறு நோக்கப்படுகிறது என்பவற்றைக் கருத்திலெடுத்து ஆராய்கின்றது.சுதந்திர மொழியியல், மொழிகளின் புறநிலை அம்சங்களைக் கருத்தில்கொள்ளாது, அம் மொழிகளைத் தனியாக ஆராய முற்படுகிறது.
இவ்வாறான பகுப்புகள் இருந்தாலும், பொதுவாக எவ்வித சிறப்பு அடைமொழிகளுமில்லாது, வெறுமனே “மொழியியலாளர்கள்” என்று அழைக்கப்படுபவர்கள், மொழியியலின் மையக்கருவாகக் கருதப்படும் சுதந்திர, கோட்பாட்டு விளக்கமுறை (synchronic) மொழியியல் பற்றியே முக்கியமாக ஆர்வமுடையவர்களாக உள்ளார்கள். இதுவே பொதுவாகக் “கோட்பாட்டு மொழியியல்” என்று அழைக்கப்படுகிறது.

கோட்பாட்டு மொழியியற் பகுதிகள்:

கோட்பாட்டு மொழியியல் பொதுவாக, ஓரளவுக்குத் தனித்தனியாக ஆராயத்தக்க வகையில் பல்வேறு பிரிவுகளாக வகுக்கப்படுகிறது. கீழ்வரும் பிரிவுகள் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன:

ஒலிப்பியல்:

மொழியியலில் ஒலியியல் (Phonetics) என்பது, மனிதர்கள் பேசும்போது உருவாகும் ஒலிகளைப் பற்றி ஆய்வு செய்யும் ஓர் அறிவியல் துறை ஆகும். இது மொழியியலின் ஒரு துணைப்பிரிவு ஆகும். இத்துறை, பேச்சு ஒலிகளின் இயற்பியல் இயல்புகள் பற்றிக் கவனம் செலுத்துகின்றது. இத்துறையின் ஆய்வுகள், ஒலிகளின் உடலியங்கியல் சார்ந்த உற்பத்தி, அவற்றின் ஒலியியல் தன்மைகள், அவற்றைக் கேட்டுணர்தல், அவற்றின் நரம்புசார் உடலியங்கியல் சார்பான விடயங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்றன.

ஒலியியல் ஆய்வின் கருப்பொருட்களான ஒலிகள் (Phones), மனிதர்களினால் உச்சரிக்கப்படும் உண்மையான பேச்சொலிகளாகும். எழுத்து மொழிகளும் எழுத்துக்களும் பேச்சின் ஒலிகளோடு நெருங்கிய தொடர்புடையன எனினும், உண்மையில் ஒலியியலாளர்கள் பேச்சொலிகளையே கவனத்தில் எடுக்கிறார்களேயன்றி அவைகளைக் குறிக்கும் குறியீடுகளை அல்ல. எனினும் முன் கூறிய நெருங்கிய தொடர்பு காரணமாக பல அகராதிகள் குறியீடுகள் பற்றிய ஆய்வை (சரியானது குறியியல்) ஒலியியலாய்வின் ஒரு பகுதியாகக் காட்டுகின்றன.

பிரிவுகள்:

பேச்சொலியை ஆராயும் ஒலியியல் முறை முக்கியமான மூன்று கிளைகளைக் கொண்டது:

ஒலிப் பிறப்பியல் (articulatory phonetics), பேச்சொலியை உருவாக்குவதில் உதடுகள், நாக்கு, மற்றும் ஏனைய பேச்சு உறுப்புகளின் அசைவுகள், நிலைகள் என்பன பற்றி ஆய்வு செய்வது;
அலை ஒலியியல் (acoustic phonetics), ஒலி அலைகளின் இயல்புகள் பற்றி ஆராய்வதால் இதை பெளதிக ஒலியியல் என்றும் அழைப்பர்.இங்கு ஒலிகளை ஆராய அறிவியல் கருவிகள், கணிதம், இயற்பியல் ஆகியன பயன்படுகின்றன; மற்றும்
கேட்பொலியியல் (auditory phonetics), பேச்சைக் கேட்டுணர்தலை அடிப்படையாகக் கொண்டு மொழியை ஆய்வு செய்வது.

மொழிகளில் பேச்சொலிகள்:

பல நூறு வேறுபட்ட ஒலிகளை (Phones) அனைத்துலக ஒலியியல் கழகம் (International Phonetic Association)அடையாளம் கண்டு அவற்றை அவர்களுடைய அனைத்துலக ஒலியியல் எழுத்து (International Phonetic Alphabet) முறைமையில் உள்ளடக்கியுள்ளனர்.

மனித குரல்வளையில் உருவாக்கப்படக்கூடிய பேச்சொலிகளுள் வெவ்வேறு மொழிகள் பயன்படுத்தும் ஒலிகளின் எண்ணிக்கைகள் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. இரண்டு உயிரொலிகளை மட்டுமே கொண்ட அப்காஸ் மொழி தொடக்கம் 55 உயிரொலிகளைக் கொண்ட செடாங் மொழி வரையான மொழிகளும், ஆறு மெய்யொலிகளை மட்டுமே கொண்ட ரொடோகாஸ் மொழி தொடக்கம் 117 மெய்யொலிகளைக் கொண்ட க்சூ மொழி வரையான மொழிகளும் உள்ளன. மிகக் குறைந்த எண்ணிக்கைகளாக பிராஹா மொழியில் 10 ஒலியன்களும், பப்புவா நியூ கினியாவில் பேசப்படும் ரோடோகாஸ் மொழியில் 11 ஒலியன்களும், ஹவாயன் மொழியில் 12 ஒலியன்களும், சேர்பிய மொழியில் 30 ஒலியன்களும் காணப்படும் அதேவேளையில் தெற்கு ஆபிரிக்காவின் கலஹாரி பாலைவனத்தில் பேசப்படும் !க்சூ மொழியில் 141 ஒலியன்கள் உள்ளன. இவற்றுள் பழக்கமான ஒலிகளான /t/, /s/, /m/ ஆகியவை தொடக்கம் அசாதாரணமான வழிகளில் உருவாக்கப்படும் மிகவும் வழமைக்கு மாறான ஒலிகள்வரை அடங்கியுள்ளன. (பார்க்கவும்: கிளிக் ஒலி, குரல்வளைச் செயல் (phonation), காற்றோட்டப் பொறிமுறை (airstream mechanism)).

ஆங்கில மொழி 13 உயிர் ஒலியன்களையும், 24 மெய் ஒலியன்களையும் கொண்டது. சில கிளை மொழிகள் பல மாற்றொலிகளைக் (allophone) கொண்டுள்ளன. இது லத்தீன் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட சாதாரன வரைவிலக்கணத்துக்கு மாறுபட்டது. மேற்படி வரைவிலக்கணம் 21 மெய்களையும், 5 உயிர்களையும் கொண்டது (சில சமயம் y உம் w வும் கூட உயிர்களாகக் கருதப்படுவதுண்டு).

ஒலிப்பியல் 2500 ஆண்டுகளுக்கு முன்னமே இந்தியாவில் ஆராயப்பட்டதாகத் தெரிகிறது.

ஒலியியல் :

ஒலியியல் (Acoustics) என்பது, திண்மம், நீர்மம், வளிமம் ஆகியவற்றினூடாகக் கடத்தப்படும் பொறிமுறை அலைகள் பற்றி ஆய்வுசெய்யும் பல்துறை அறிவியல் ஆகும். இது இயற்பியலின் ஒரு துணைப்பிரிவு. ஒலியியலின் ஆய்வுகள் அதிர்வுகள், ஒலி, மீயொலி, அகவொலி என்பவற்றை உள்ளடக்குகின்றன. ஒலியியல் துறைசார்ந்த அறிவியலாளர் ஒலியியலாளர் எனப்படுகிறார். ஒலியியல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்களை ஒலியியல் பொறியாளர்கள் என அழைப்பதும் உண்டு. ஒலியியல் தற்காலச் சமுதாயத்தின் பல்வேறு துறைகளிலும் பயன்பட்டு வருவதைக் காணமுடியும். எடுத்துக்காட்டாகக் கேட்பொலி, இரைச்சல் கட்டுப்பாடு போன்றவை தொடர்பில் ஒலியியல் பெரிதும் பயன்பட்டு வருகிறது.

கேட்டல், விலங்கு உலகில், வாழ்வதற்குத் தேவையான முக்கியமான விடயங்களுள் ஒன்று. அத்தோடு ஒலியை அடிப்படையாகக் கொண்ட பேச்சு, மனிதகுல வளர்ச்சியினதும், மனிதப் பண்பாட்டினதும் சிறப்பியல்புகளுள் ஒன்று. இதனால், ஒலியியலானது இசை, மருத்துவம், கட்டிடக்கலை, கைத்தொழில் உற்பத்தி, போர் போன்ற பல துறைகளிலும் பரவலாக ஊடுருவியுள்ளது.

ஒலியியலின் அடிப்படைக் கருத்துருக்கள்:

ஒலியியல் பற்றிய ஆய்வுகள் பொறிமுறை அலைகளின் அல்லது அதிர்வுகளின் பிறப்பு, அவற்றின் பரவுகை, அவற்றைப் பெறுதல் ஆகியவை தொடர்பானவையாகவே உள்ளன.

ஒலியியல் நிகழ்வொன்றுக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். இது இயற்கையானதாக அல்லது முனைந்து நிகழ்த்தப்படுவதாக இருக்கலாம். அதுபோலவே, ஏதோ ஒரு வடிவிலான ஆற்றலை ஒலியாற்றலாக மாற்றி ஒலியலைகளை உருவாக்குவதற்கான வழிமுறைகளும் பலவாறாகக் காணப்படுகின்றன. ஒலியலைகளின் பரவுகையை விளக்குவதற்கு ஒரு அடிப்படையான சமன்பாடு உண்டு. ஆனால், இதிலிருந்து உருவாகும் தோற்றப்பாடுகள் பலவாறானவையாகவும், பெரும்பாலும் சிக்கலானவையாகவும் உள்ளன. ஒலியலைகள் அவற்றைக் கடத்தும் ஊடகங்களினூடாக ஆற்றலை எடுத்துச் செல்கின்றன. இவ்வாற்றல் இறுதியில் வேறு வடிவங்களிலான ஆற்றலாக மாற்றம் அடைகின்றது. இம்மாற்றமும் இயற்கையாகவோ அல்லது வேண்டுமென்றே செய்யப்படுவதாகவோ இருக்கலாம். ஒரு புவியதிர்வு, எதிரிக் கப்பல்களைக் கண்டுபிடிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒலியலைகளைப் பயன்படுத்துதல், ஒரு இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி போன்ற எந்தவொரு நிகழ்விலும் முன்னர் குறிப்பிட்ட 5 படிமுறைகள் இருப்பதைக் காண முடியும்.

ஒலியியலில் மிகவும் முக்கியமானதாக அமைவது அலை பரவுகை ஆகும். இது இயற்பு ஒலியியல் பிரிவினுள் அடங்குகின்றது. பாய்மங்களில், அழுத்த அலைகளாகவே ஒலி பரவுகிறது. திண்மங்களில் ஒலியலைகள் பல வடிவங்களில் பரவக்கூடும். இவை நெடுக்கலை, குறுக்கலை அல்லது மேற்பரப்பலை ஆகிய வடிவங்களில் அமையக்கூடும்.

அலை பரவுகை: அழுத்த மட்டங்கள்:

நீர், வளி போன்ற பாய்மங்களில் சூழல் அழுத்த நிலையில் ஒலியலைகள் குழப்பங்களாகவே பரவுகின்றன. இக்குழப்பங்கள் மிகவும் சிறிய அளவினவாகவே இருந்தாலும் இவற்றை மனிதக் காதுகளால் உணர முடியும். ஒருவரால் கேட்டுணரக்கூடிய மிகவும் சிறிய ஒலி செவிப்புலத் தொடக்கம் (threshold of hearing) எனப்படும். இது சூழல் அழுத்தத்திலும் ஒன்பது பருமன் வரிசைகள் (order of magnitude) சிறியது. இக் குழப்பங்களின் உரப்பு ஒலியழுத்த மட்டம் எனப்படுகின்றது. இது மடக்கை அளவீட்டில் டெசிபெல் என்னும் அலகில் அளக்கப்படுகின்றது.

அலை பரவுகை: அதிர்வெண்:

இயற்பியலாளரும், ஒலியியற் பொறியாளரும், ஒலியழுத்த மட்டத்தை அதிர்வெண் சார்பில் குறிப்பிடுவதுண்டு. மனிதருடைய காதுகள் ஒலிகளை இதே அடிப்படையில் புரிந்துகொள்வதும் இதற்கான ஒரு காரணமாகும். ஒலியில் உயர்ந்த சுருதி, தாழ்ந்த சுருதி என நாம் உணர்வது ஒரு செக்கனுக்குக் கூடிய அல்லது குறைவான சுற்று எண்ணிக்கைகளல் ஏற்படும் அழுத்த வேறுபாடுகளே ஆகும். பொதுவான ஒலியியல் அளவீட்டு முறைகளில், ஒலியியல் சைகைகள் நேர அளவில் மாதிரிகளாகக் குறிக்கப்படுகின்றன. இவை பின்னர் எண்மப் பட்டைகள் (octave band), நேரம் – அதிர்வெண் வரைபுகள் போன்ற வடிவங்களில் கொடுக்கப்படுகின்றன. இவ்விரு வடிவங்களும், ஒலியைப் பகுப்பாய்வு செய்யவும், ஒலியியல் தோற்றப்பாடுகளைப் புரிந்துகொள்ளவும் பயன்படுகின்றன.

ஒலி தொடர்பில் முழு அலைமாலையையும் மூன்று பகுதிகளாகப் பிரிக்க முடியும். இவை செவிப்புல ஒலி, மீயொலி, அகவொலி என்பன. செவிப்புல ஒலிகள் எனப்படும் மனிதச் செவிகளால் உணரக்கூடிய ஒலிகள் 20 ஹெர்ட்ஸ் முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரையான அதிர்வெண் எல்லையுள் அடங்குவன. இவ்வெல்லையுள் அடங்கும் செவிப்புல ஒலிகள் பேச்சுத் தொடர்பு, இசை போன்றவற்றில் பயன்படுகின்றன. மீயொலி எனப்படுவது 20,000 ஹெர்ட்ஸ்களுக்கு மேற்பட்ட அதிர்வெண்களைக் கொண்ட குறைந்த அலைநீளம் கொண்ட ஒலியாகும். இவ்வொலி உயர் பிரிதிறன் (resolution) கொண்ட படமாக்கல் நுட்பங்களிலும், பல வகையான மருத்துவத் தேவைகளுக்கும் பயன்படுகின்றது. குறைவான அதிர்வெண்களைக் கொண்ட அகவொலிகள் புவியதிர்ச்சி போன்ற நிலவியல் தோற்றப்பாடுகளை ஆய்வு செய்வதற்குப் பயன்படுகின்றன.

உருபனியல்:

உருபனியல் (morphology) என்பது மொழியியலின் துணைத் துறைகளில் ஒன்று. இது சொற்களின் அமைப்புப் பற்றி ஆராயும் துறையாகும். பொருள் தரும் மிகச்சிறிய ஒலியக்கூறு உருபன் எனப்படுகிறது. உருபனே பொருளோடு நேரடியான தொடர்பு கொண்டது ஆகும். அன்பு, பண்பு, உலகம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உருபன். இவை ஒவ்வொன்றும் தனித்தனியே பொருள் உடையன. இவற்றை மேலும் சிறு கூறுகளாகப் பிரிக்கமுடியாது.

சொற்றொடரியலின் மிகச் சிறிய அலகாகக் கருதப்படுகின்ற சொல், வேறு பல சொற்களுடன் ஓர் ஒழுங்கு முறையில் தொடர்புபட்டு இருப்பதைக் காணமுடியும். எடுத்துக்காட்டாக, தொழில், தொழில்கள், தொழிலாளி என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. தமிழ் மொழி அறிந்தவர்கள் இவ்வாறான தொடர்புகளை அனுபவத்தின் வாயிலாக அறிந்திருப்பர். இந்த அனுபவத்தின் வாயிலான மொழியறிவின் மூலம் தொழில் என்பதற்குத் தொழில்கள் எப்படியோ, அதுபோல, போர் என்பதற்குப் போர்கள் என அவர்கள் அறிவார்கள். இது போலவே, தொழிலாளி என்ற சொல் உருவானது போல, போராளி என்ற சொல்லும் உருவாகும். இவ்வாறே அடிப்படையான சொற்கள் குறிப்பிட்ட ஒரு தொகுதி ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் பல்வேறு சொற்களாக உருவாகின்றன. இவ்வாறு ஒரு மொழியில், சொற்களின் உருவாக்கத்துக்கு அடிப்படையாக உள்ள விதிகளை ஆராய்ந்து வெளிக்கொணர்வது உருபனியலின் முக்கிய நோக்கமாகும்.

வரலாறு:

இந்தியாவில் மிகப் பழைய காலத்திலேயே உருபனியல் சார்ந்த பகுப்பாய்வுகள் நடைபெற்றுள்ளன. பாணினி எழுதிய சமஸ்கிருத மொழி இலக்கணமான அஷ்டாத்தியாயியும், தமிழ் மொழி இலக்கணமான தொல்காப்பியமும் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். பாணினி, சமஸ்கிருத சொல்லாக்கத்துக்கான 3959 விதிகளை விளக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதுபோலவே கிரேக்க – ரோமானிய மொழியியல் மரபிலும், உருபனியல் பகுப்பாய்வுகள் நடைபெற்றுள்ளன.

சொற்றொடரியல்:

சொற்றொடரியல் அல்லது தொடரியல் (syntax) என்பது, ஒரு சொற்றொடரில் சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் முறையைக் கட்டுப்படுத்துகின்ற, விதிகள், அல்லது ஒழுங்கமைந்த தொடர்புகள் பற்றிய ஆய்வாகும். இது, வெவ்வேறு சொற்கள் எவ்வாறு இணைந்து துணைத்தொடர்களாகவும் (clauses), அவை இணைந்து எவ்வாறு சொற்றொடர்கள் (sentences) ஆகவும், உருவாகின்றன என்பது பற்றிக் கவனத்தில் கொள்கிறது. சொற்றொடரியல் விளக்கமுறை (descriptive) இலக்கணத்தை ஒழுங்குபடுத்த முயல்கிறது.

மொழிநடை:

மொழிநடை என்பதை எழுதும்பாங்கு எனலாம்.எழுத்தின் வெற்றியானது மொழிநடையைப் பொறுத்தே அமையும்.

வகைகள்:

தனித்தமிழ் நடை,அடுக்குமொழிநடை,முடுக்கு(கடின)நடை,எளியநடை, இனியநடை, வினாவிடை நடை,மணிப்பிரவாளநடை,கலப்புமொழி நடை,உணர்ச்சிநடை.

சூழ்பொருளியல்:

சூழ்பொருளியல் (Pragmatics) என்பது, சொற்றொடரின் பொருளுக்கும், பேசுபவரின் பொருளுக்கும் இடையிலுள்ள தொடர்புகளை ஆராயும் துறையாகும். எனவே இத்துறையில், சூழ்நிலை (context) எவ்வாறு பொருள்கொள்ளலில் செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது பற்றிய ஆய்வு முக்கியத்துவம் பெறுகின்றது. சூழ்பொருளியல் பொதுவான மொழியியலின் ஒரு துணைப் பிரிவாகும்.

ஆய்வுமுறையும், முன்கருதற் குறிப்புகளும் (presuppositions):

சூழ்பொருளியல், பொதுவாக உரையாடற் சூழ்நிலையில், சொற்றொடர்களாலான பேச்சுத் தொடர்களிலேயே (utterances) முக்கியமாக ஆர்வம் காட்டுகின்றது. சூழ்பொருளியலில், சொற்றொடர்ப் பொருள் (sentence meaning), பேசுனர் பொருள் (speaker meaning) ஆகிய இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்தி அறியப்படுகின்றது. சொற்றொடர்ப் பொருள் என்பது சொற்றொடரால் குறிக்கப்படுகின்ற நேரடியான பொருளாகும். பேசுனர் பொருள் எனும்போது அது, பேசுனர் தெரியப்படுத்த விரும்பும் கருத்துருவைக் குறிக்கிறது.

இன்னொரு பேசுனர் தெரிவிக்க விரும்பும் பொருளைப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல், சூழ்பொருளியல் ஆற்றல் எனப்படுகின்றது.

இந்த ஒவ்வொரு பகுதியினதும் தனிப்பட்ட முக்கியத்துவம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை, எனினும், கிட்டத்தட்ட எல்லா மொழியியலாளருமே இந்தப் பிரிவுகள் குறிப்பிடத்தக்க அளவு பொதுப் பகுதிகளைக் கொண்டிருக்கின்றன என்பதை ஒத்துக்கொள்வர். இருந்தாலும் ஒவ்வொரு துணைப்பிரிவும், குறிப்பிடத்தக்க அறிவுபூர்வ ஆய்வுகளைச் செய்யக்கூடிய அளவுக்குத் தனியான அடிப்படையான எண்ணக்கருக்களைக் கொண்டுள்ளன.

வரலாற்று மொழியியல் (Diachronic linguistics):

கோட்பாட்டு மொழியியலின் மையக்கருவானது, மொழியை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (அநேகமாக நிகழ்காலம்) ஆராய்வதோடு சம்பந்தப்பட்டிருக்கும் அதேவேளை, வரலாற்று மொழியியல், எப்படி மொழி காலப்போக்கில், சிலவேளைகளில் நூற்றாண்டுகளில், மாற்றமடைகின்றது என்பதை ஆராய்கின்றது. வரலாற்று மொழியியல் வளமான வரலாற்றையும் (மொழியியல் துறை வரலாற்று மொழியியலிலிருந்தே உருவானது), மொழி மாற்றங்களை ஆராய்வதற்கான பலமான கோட்பாட்டு அடிப்படையையும் கொண்டுள்ளது.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில், வரலாறல்லாத நோக்கின் கையே ஓங்கியுள்ளதாகத் தெரிகிறது. வரலாறல்லாத நோக்கு சார்ந்த திருப்பம், பேர்டினண்ட் சோசருடன் தொடங்கி நோம் சொம்ஸ்கி காலத்தில் முன்னணிக்கு வந்தது.

வெளிப்படையாக வரலாற்று நோக்கு வரலாறுசார்-ஒப்பீட்டு மொழியியல் மற்றும் சொற்பிறப்பியல் (etymology) என்பவற்றை உட்படுத்தியுள்ளது.

பயன்பாட்டு மொழியியல்:

கோட்பாட்டு மொழியியல், ஒவ்வொரு மொழிக்கு உள்ளேயும், ஒரு குழுவாக எல்லா மொழிகளுக்கு இடையேயும் உள்ள பொதுவான தன்மைகளைக் கண்டுபிடித்து விளக்கமுயலுகின்ற அதேவேளை, பயன்பாட்டு மொழியியல், இந்தக் கண்டுபிடிப்புகளின் பெறுபேறுகளை ஏனைய துறைகளில் பயன்படுத்துகிறது. வழக்கமாகப் பயன்பாட்டு மொழியியல், மொழியியல் ஆய்வை, மொழி கற்பித்தல், மற்றும் ஏனைய துறைகளில் பயன்படுத்துவதைக் குறிப்பிடுகிறது. பேச்சுத் தொகுப்பு (Speech synthesis) மற்றும் பேச்சு அடையாளம்காணல்(Speech recognition), என்பன, கணனிகளில் குரல் இடைமாற்றிகளை ஏற்படுத்துவதற்கு மொழியியல் அறிவைப் பயன்படுத்தும் உதாரணங்களாகும்.

சூழ்நிலை மொழியியல்:

சூழ்நிலை மொழியியலே, மொழியியல் ஏனைய கல்வித்துறைகளுடன் தொடர்பு கொள்ளும் பகுதியாகும். சமூக மொழியியல், மானிடவியல்சார் மொழியியல் (anthropological linguistics), and மொழியியல்சார் மானிடவியல் (linguistic anthropology) என்பன சமூகத்தை முழுமையாகக் கருத்திலெடுக்கின்ற சமூக அறிவியலும், மொழியியலும் தொடர்பு கொள்ளுகின்ற இடமாகும்.

திறனாய்வுப் பேச்சுக்கூறுபாடு (critical discourse analysis) இலே தான்பேச்சுக்கலை (rhetoric) உம் தத்துவமும் மொழியியலோடு தொடர்புகொள்ளுகின்றன. உளமொழியியலும் (psycholinguistics) நரம்புமொழியியலும் (neurolinguistics), மருத்துவ அறிவியல்கள் மொழியியலைச் சந்திக்கும் இடமாகும். ஏனைய, மொழியியலின் வேறு துறைத்தொடர்புகளுள்ள பகுதிகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும். மொழி கற்றல் (language acquisition), படிமலர்ச்சி மொழியியல், stratificational linguistics, மற்றும் அறிதிற அறிவியல் (cognitive science).

தனிப்பட்ட, மொழிபேசுபவர்கள், மொழிச் சமுதாயங்கள், மற்றும் மொழியியற் பொதுமைகள் (linguistic universals):

எந்த அளவு பரந்த மொழி பயன் படுத்தும் குழுவினரை ஆராயவேண்டும் என்பதிலும் மொழியியலாளர்கள் வேறுபடுகிறார்கள். சிலர் குறிப்பிட்ட ஒருவருடைய மொழியை அல்லது மொழி அபிவிருத்தியை மிகவும் நுணுக்கமாக ஆராய்வர். சிலர் ஒரு முழு பேச்சுச் சமுதாயத்தினதுக்குத் தொடர்பான மொழிபற்றி ஆய்வு செய்வர். வேறு சிலர் எல்லா இடங்களிலும் உள்ள எல்லா மனித மொழிகளுக்கும் பொருந்தக்கூடிய விடயங்கள் பற்றி ஆராய முயல்வர். கடைசியாகக் குறிப்பிடப்பட்ட திட்டத்துக்காக நோம் சொம்ஸ்கி பிரபலமாக வாதிட்டார், அத்துடன் இது, உளவியல்சார் மொழியியல் (psycholinguistics) மற்றும் அறிதிற அறிவியல் துறைகளைச் சேர்ந்த பலரைக் கவர்ந்தது. மனித மொழியிற் காணப்படும் பொதுமைகள் மனித மனத்தின் பொதுமைகள் பற்றிய முக்கியமான உண்மைகளை வெளிப்படுத்தும் எனக் கருதப்பட்டது.

விளக்கமுறையும் (Description) விதிப்புமுறையும் (prescription):

“மொழியியல்” என்ற பெயரில் தற்போது நடைபெறும் பெரும்பாலான வேலைகள், சுத்தமாக விபரிப்பு சார்ந்தவையாகும். மொழியியலாளர்கள், கருத்துக்களெதையும் கூறாமல் அல்லது மொழியின் எதிர்காலப் போக்குத் திசைகளைக் குறிப்பிட்டுக் காட்டாமல், மொழியின் இயல்பை விளக்கவே முனைகிறார்கள். எனினும் பல தொழில்சார் மற்றும் அமெச்சூர் மொழியியலாளர்கள், எல்லோரும் பின்பற்றவேண்டிய நியமங்களை வைத்து, மொழிக்கான விதிகளையும் குறித்துக் காட்டுகிறார்கள்.

விதிப்புமுறை சார்பாளர்கள் (Prescriptivists), “பிழையான பயன்பாடு” என்று கருதி முத்திரை குத்தும் ஒரு விடயத்தில், விளக்கமுறையாளர்கள் (descriptivists) அப் பயன்பாட்டின் மூலம் எதுவென்று ஆராய முயல்வர்; அல்லது அதை “வினோதப் போக்கு” (idiosyncratic), என விளக்குவர், அல்லது, மிக நவீனமானது அல்லது அங்கீகரிக்க முடியாத வட்டார மொழிகளிலிருந்து பெறப்பட்டது போன்ற காரணங்களுக்காக விதிப்புமுறை சார்பாளர்களால் விரும்பப்படாத சில ஒழுங்குமுறைகளை வெளிப்படுத்துவார்கள்.

பேச்சு எதிர் எழுத்து:

பெரும்பாலான சமகால மொழியியலாளர்கள் பேச்சு மொழியே மிகவும் அடிப்படையானது அதனால், எழுத்து மொழியிலும், பேச்சு மொழி பற்றி ஆராய்வதே முக்கியமானது என்ற கருதுகோளுடன் வேலை செய்கிறார்கள். இதற்கான காரணங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்:

பேச்சு மனித இனம் முழுவதற்கும் பொதுவானதாகத் தெரிகின்ற அதேவேளை, பல பண்பாடுகளில், எழுத்துத் தொடர்பு முறை காணப்படவில்லை;
மக்கள், எழுதுவதிலும், பேசுவதற்கும் கிரகித்துக்கொள்வதற்கும் பேச்சு மொழி எளிதாகப் பழகி விடுகிறார்கள்;
பல அறிதிற அறிவியலாளர்களின் கூற்றுப்படி, மூளையில் உள்ளார்ந்த “மொழிப் பிரிவு” ஒன்று உள்ளதாகவும், அதற்கான அறிவு எழுத்தைவிடப் பேச்சைக் கற்பதன் மூலமாகவே கிடைக்கிறது என்றும் தெரிகிறது.
எழுத்து மொழியைப் பயில்வது பெறுமதியானது என்பதில் எல்லா மொழியியலாளர்களும் ஒத்த கருத்தையேகொண்டுள்ளார்கள். மொழித் தொகுப்பு மற்றும் கணிப்புமுறை மொழியியல் (computational linguistics), முறைகளைப் பயன்படுத்தும் மொழியியல் ஆராய்ச்சிகளில், பெருமளவு மொழியியல் தரவுகளைக் கையாள்வதற்கு, எழுத்து மொழி மிகவும் வசதியானதாகும். பெருமளவு பேச்சு மொழித் தரவுகளை உருவாக்குவதும், கண்டுபிடிப்பதும் கடினமாகும்.

மேலும், எழுத்து முறைமை பற்றிய ஆய்வும் மொழியியலின் பாற்பட்டதேயாகும்.

Tags

Related Articles

  • Vishnu sahasranama stotram
    Vishnu sahasranama stotram
    The Vishnu Sahasranama (Sanskrit: Viṣṇusahasranāma, विष्णुसहस्रनाम), a tatpurusha compound, is a list of 1,000 names (sahasranama)…
  • Lord Ganesh slogas
    Lord Ganesh slogas
    ஓம் ஷுக்லாம்பரதரம் விஷ்னும், ஷஷி வர்ணம் சதுர் புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத், ஸர்வவிக்னோப சாந்தயே Meaning: Lord Ganesha always dressed…
  • Ganesh Pancharatnam By Adi Shankara
    Ganesh Pancharatnam By Adi Shankara
    முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் கலாதராவ தம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம் நதாசுபாசு நாசகம்…
  • Ganesha Sankata Nashana Stotram
    Ganesha Sankata Nashana Stotram
    Sankat Nashan Ganesha Stotram is taken from the Narada Purana  and is one of the most…
  • Kanakadhara Stotram
    Kanakadhara Stotram
    அங்கம்ஹரே: புலகபூஷணமாஸ்ரயந்தீ ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம் அங்கீக்ராதாகில விபூதிரபாங்கலீலா மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாய. To the Hari who wears supreme…