Saiva Siddhantha

சைவ சித்தாந்தம் என்னும் தத்துவப் பிரிவு சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற சமய நெறி சைவ சமயத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. சித்தாந்தம் என்பது சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மை எனப்பொருள்படும். (அந்தம் – முடிவு). ஆன்மீகம் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் ஆராய்ந்து சிந்தித்து முடிந்த முடிவாகக் காணப்பட்டது சைவசித்தாந்தம்.

சைவ சித்தாத்தினை வேதாந்தம் எனும் மரத்தில் காய்த்த பழுத்த கனி என்கிறார் குமர குருபரர். சைவ சித்தாந்தம் திராவிட அறிவின் சிறந்த வெளிப்பாடு என்று ஜி.யு.போப் குறிப்பிடுகின்றார்.

சிவ வணக்கம்:

சிவ வணக்கம் ஆரியருக்கு முற்பட்ட இந்தியாவிலேயே தோன்றியதாகச் சில அறிஞர்கள் கருதுகிறார்கள். சிந்து வெளியில் கண்டெடுக்கபட்ட சிவலிங்க வடிவங்கள் இதற்குச் சான்றாக இருப்பதாகவும் அவர்கள் கருதுவர்.

இவ்வாறு சிவ வணக்கத்துக்குரிய சான்றுகள் ஆரியருக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே கிடைத்து வந்தாலும், சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப்படுகின்றது. இக்காலப் பகுதியில் வாழ்ந்த திருமூலரால் எழுதப்பட்டதும், சைவ சித்தாந்தத்தின் சாரம் என்றும் கருதப்படும் திருமந்திரம் என்னும் நூலிலேயே சைவ சித்தாந்தம் என்ற சொற்பயன்பாடு முதல் முதலில் காணப்படுகின்றது.
சைவ சித்தாந்தத்தின் அடிப்படை நூல்கள்:
இந்தியாவில் இந்து சமயத்தின் பெரும்பாலான தத்துவப் பிரிவுகள் வேதங்களையும் அவற்றின் இறுதிப்பகுதியாகக் கொள்ளப்படும் உபநிடதங்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்க, சைவ சித்தாந்தம் வேதங்களையும், ஆகமங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏராளமான ஆகமங்கள் உள்ளன. இவற்றுள் சில சைவ சமயத்துக்கும், வேறுசில வைணவ சமயத்துக்கும், மற்றவை சாக்த சமயத்துக்கும் உரியவை. சைவ சித்தாந்தத்துக்கு அடிப்படையான சைவ ஆகமங்கள் 28 ஆகும். இவற்றுட் தலையாயவை காமிகாகமம், காரணாகமம் என்பன.

சைவ சித்தாந்தத்தை விளக்கும் நூல்களில் சிறப்பானதாகக் கருதப்படுவது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் ஆகும். இதனுடன் சேர்த்து பல ஆசிரியர்களால் எழுதப்பட்ட 14 நூல்கள் சைவ சித்தாந்தத் தத்துவ விளக்க நூல்களாகும். இவற்றுட் தலையாய சிவஞான போதத்தை இயற்றிய மெய்கண்டாரின் பெயரைத் தழுவி இவை மெய்கண்ட சாத்திரங்கள் என வழங்கப்படுகின்றன.

Related Articles

  • Sangarpa Niragaranam
    Sangarpa Niragaranam
    சங்கற்ப நிராகரணம் என்பது உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பட்டது. இது சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று. இது சைவ சித்தாந்தத்துக்கு நெருக்கமான, அகச்…
  • Unmai Neri Vilakam
    Unmai Neri Vilakam
    உண்மை நெறி விளக்கம், தமிழில் எழுதப்பட்ட சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்று. சைவ சித்தாந்தத்தை விளக்கும் இன்னொரு நூலான சிவப்பிரகாசத்தில் குறிப்பிடப்பட்ட தசகாரியம்…
  • Nenju Vidu Thuthu
    Nenju Vidu Thuthu
    நெஞ்சு விடு தூது என்பது உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பட்டது. இது சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று. இது இறைவனிடம் தூது விடுவதுபோல…
  • Kodi Kavi
    Kodi Kavi
    கொடிக்கவி, மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்று. இவற்றுள் மிகச் சிறியதும் இதுவே. நான்கு வெண்பாக்களை மட்டுமே கொண்டது இந் நூல். இதை…
  • Potri Patrodai
    Potri Patrodai
    பூமன்னு நான்முகத்தோன் புத்தேளி ராங்கவர் கோன் மாமன்னு சோதி மணிமார்ப – னாமன்னும் வேதம்வே தாந்தாம் விளக்கஞ்செய் விந்துவுடன் நாதநா தாந்த…