Samskritham thamizh Verodaya Serndhadhu

ஆதி நூலான தொல்காப்பியத்திலிருந்தே ‘வடசொல்’ என்று புலவர்கள் சொல்கிற ஸம்ஸ்க்ருத வார்த்தைகளைக் கலந்து கொள்வதற்குத் தமிழ்ப் பெரியோர்கள் தயங்கவேயில்லை. தொல்காப்பியம் என்பதில் ‘காப்பியம்’ என்பதே காவ்யம் – காவியம் என்கிற ஸம்ஸ்க்ருத வார்தையிலிருந்து வந்ததுதான். காப்பியம் என்று வேத ரிஷி ஒருத்தருக்கும் பேர் இருந்திருக்கிறது ‘கவி’, ‘கவிதை’ என்கிறதெல்லாமும் ஸம்ஸ்க்ருத மூலத்திலிருந்து வந்ததுதான். ‘இலக்கணம்’, இலக்கியம்’ என்ற இரண்டுமே கூட லக்ஷணம் – இலட்சணம், லக்ஷ்யம் – இலட்சியம் என்ற ஸம்ஸ்க்ருத மூலத்திலிருந்தே வந்தவைதான். சிலப்பதிகாரத்தில் ‘அதிகாரம்’ என்பது ஸம்ஸ்க்ருதம்தான். ‘படலம்’, ‘சருக்கம்’ (ஸர்கம்) என்கிற மாதிரி உள்ள ஸெக்ஷன் பேர்களெல்லாம் ஸம்ஸ்க்ருதந்தான். ‘மூலம்- உரை’ என்பதில் ‘மூலம்’ என்பது ஸம்ஸ்க்ருதந்தான். இப்படிக் கணக்கு வழக்கில்லாமல் சொல்லிக் கொண்டே போகலாம். ஆத்ம ஸம்பந்தமாக எடுத்துக் கொண்டாலோ கேட்கவே வேண்டாம் யோகம், ஜபம், தபஸ், – ‘தவம்’ என்கிறது ‘தபஸ்’லிருந்து வந்ததுதான் – மந்த்ரம், தந்த்ரம், யந்த்ரம், ஆகமம், புராணம் போன்ற எத்தனையோ ஸம்ஸ்க்ருத வார்த்தைகளுக்குத் தமிழில் வார்த்தையே இல்லை. ஏனில்லை என்றால், நம்முடைய ஆதி காலத் தமிழ்ப் பெரியோர்களிலிருந்து ஆரம்பித்து எல்லோரும், ‘அதுதான் தமிழோடு வேரிலேயே, வேரோடு வேராகச் சேருவதாக உள்ள ஸம்ஸ்க்ருதத்தில் வார்த்தைகள் இருக்கின்றனவே! அவை நமக்கும் ஸொந்தம்தானே? அவற்றிலிருந்து எடுத்துக் கொண்டால் போயிற்று!’ என்று கொஞ்சங்கூட கல்மஷம் இல்லாமல் நினைத்து அப்படியே பண்ணியதால்தான் புதிதாகத் தமிழ் வார்த்கைள் உற்பத்தி பண்ணவில்லை. ஸம்ஸ்க்ருத வார்த்தைகளையே ‘ genius of the language’ – ‘ஒரு மொழியின் தனிப் பண்பு’ – என்கிறதற்கேற்பத் தமிழிலே கொஞ்சம் மாற்றி ரூபம் பண்ணி – ‘லக்ஷ்யம்’ என்பதை ‘இலக்கியம்’ என்று ஆக்கின மாதிரிப் பண்ணி – தமிழிலே சேர்த்துக் கொண்டார்கள். வேடிக்கையாக, வேடிக்கையிலேயே வருத்தமும் தருவதாக ஒன்று கேள்விப்பட்டேன். அரசியலில் முக்யமாயிருக்கிற ஒருத்தருக்குத் தங்கள் கட்சியில் எவரோ ‘விக்ஞாபனம்’ என்று எழுதி விட்டதைப் பார்த்து ஒரே கோபம் வந்தவிட்டதாம். ‘விண்ணப்பம்’ என்று மாற்றிப் போடச் சொன்னாராம். ஆனால் இதுவும் முன்னே ‘ஸ்நேஹம்’ – ‘நேயம்’ சொன்னேனே அந்த மாதிரி ஒன்றுதான்! ஸம்ஸ்க்ருத ‘விஜ்ஞாபன’மே ப்ராக்ருதத்தில் ‘விண்ணாபணம்’ என்று வரும்; ‘விண்ணாபம்’ என்றும் வரும். அதுதான் தமிழ் ‘விண்ணப்பம்’. ‘விஞ்ஞான’த்தைத் தமிழில் ‘விண்ணாணம்’ என்பதும் ப்ராக்ருதத்தைத் தழுவித்தான். எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், தமிழ் பாஷைக்கேயான தனி genius-ஏ ஸம்ஸ்க்ருதத்தின் பேச்சு மொழியான ப்ராக்ருதத்தின் genius-ஓடு நகமும் சதையும் மாதிரிச் சேர்ந்துதானிருக்கின்றது என்று காட்டுவதற்குத் தான்! எத்தனைதான் யத்தனம் பண்ணினாலும் அந்த ஸம்ஸ்க்ருத வேரைப் பிடுங்கமுடியாது, முன்னேயே சொன்னாற்போல, நாம் தமிழ் என்றே நினைத்துக் கொண்டிருக்கிற பல வார்த்தைகளே ஸம்ஸ்க்ருதந்தான்! ஒரு பெரிய அறிவாளி பேசியிருந்தார்:’வடமொழி சவப் பெட்டியில் ஆணி அறைவோம்’ என்று ஒரு தனித் தமிழன்பர் சொல்லியிருந்தார். அதைக் குறிப்பிட்டுத்தான் அந்த அறிவாளி பேசியது, அவர் என்ன சொன்னாரென்றால், “அந்த ஸம்ஸ்க்ருத த்வேஷக்காரர்கள் சொன்னதிலேயே மூன்று ஸம்ஸ்க்ருத வார்த்தைகள் இருக்கிறது. ஒன்று, ‘சவம்’. இரண்டாவதாக, ‘பெட்டி’என்பதும் ‘பேடம்’, ‘பேடகம்’ என்பதன் தமிழ்தான். மூன்றாவதாக, ‘ஆணி’. வேதத்திலேயே உள்ள வார்த்தை ‘ஆணி’. ‘சவ’த்துக்கும் ‘பெட்டி’க்கும் வேறே மூலமான தமிழ் வார்த்கைளும் உண்டு. அனால் ‘ஆணி’க்கு தமிழ் வார்த்தையே இல்லை” என்றார். ‘ஆணி’ மாதிரி ஸகல ஜனங்களும் சொல்வதாக உள்ள ஏகப்பட்ட வார்த்தைகள் ஸம்ஸ்க்ருதமாக இருக்கின்றன. ‘தச்சன்’, ‘கருமான்’ என்கிறோமே, அவை ‘தக்ஷன்’, ‘கர்மாரன்’தான். வேதத்திலேயே இருக்கிற ஸ்ரீ ருத்ரத்தில், ஈச்வரனே தக்ஷர்களாகவும், கர்மாரகர்களாகவும் இருக்கிறானென்று வருகிறது. இயற்கையாகவே ரொம்பவும் ஸம்ருத்தியுடன் — புஷ்டியாக நிறைந்த வளர்ச்சியுடன், வளத்துடன் தமிழுக்கென்றே லோகம் கொண்டாடுகிற மாதிரி ஏராளமான வார்த்தைகள், vocabulary உண்டாகத்தான் செய்தது. அப்படியிருந்தும் செயற்கையாகப் புது வார்த்தை உற்பத்தி பண்ணவேண்டாமென்றே அநேக இடங்களில், ‘ஸம்ஸ்க்ருதமும் நமக்கு இயற்கைதான், ‘second nature’ என்கிறார்களே, அப்படித்தான்! நம் வேரிலேயே பிரிக்க முடியாமல் நமதாக ஒன்றிப் போயிருக்கிற அந்த பாஷையிலிருப்பதையே நாமும் வைத்துக்கொள்வோம்’ என்று நம் முன்னோர்கள் அபிப்ராயப்பட்டு அப்படியே செய்திருக்கிறார்கள். அப்படி வேராக இருப்பதைத்தான் இப்போது வேறாக நமக்கு வேறுபட்டது, வேண்டாதது என்று நினைத்துப் பிடுங்கிப் போடப் பார்க்கிறார்கள். வேரைப் பிடுங்கினால் என்ன ஆகும்? வேருக்கு ‘மூலம்’ என்று பேர். மூலத்தைக் கெடுத்தால் நிர்மூலமாக அல்லவா ஆகிவிடும்? அப்படிப்பட்ட உத்பாதத்தைத்தான் தமிழ் பாஷைக்கு ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். எல்லாரும் நல்லவர்கள்தான். ஏதோ தெரியாத்தனம், யாரோ இரண்டொருத்தர் தப்பாக நினைத்து, தங்களுக்கு இருக்கிற வசீகரத்தால் மற்றவர்களையும் தப்பில் இழுத்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் தமிழன்பர்கள், தமிழடியார்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்களே அந்த பாஷையின் வேரில் வெட்டுப் போடுவதும், தமிழ் மரபு, தமிழ் மரபு என்கிறவர்களே அந்த மரபை உண்டு பண்ணி, வளர்த்துக் கொடுத்தவர்களின் அபிப்ராயத்துக்கு நேர் மாறாகப் பண்ணுவதாகவும் நடந்து வருகிறது. நாம் பதிலுக்குக் கோபப்பட்டு ப்ரயோஜனமில்லை. சாந்தமாக எடுத்துக் காட்டிப் புரிய வைக்கவேண்டும். எல்லோருக்கும் நல்லறிவு உண்டாவதற்கு வாக்தேவியைப் பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும். வேதவ்யாஸர் என்றே பேருள்ளளவர் பண்ணின மஹாபாரதம், நம்முடைய முத்தமிழ் இரண்டையும் ஒரே மாதிரி மலையிலே எழுதி வைத்த விக்நேச்வரரிடமும், நமக்கு இரண்டு கண் மாதிரி உள்ள இந்த இரண்டு பாஷைகளை வைத்துச் சண்டை – சாடி உண்டாகாமலிருக்க பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். இனம் என்றும் பாஷை என்றும் பிரிந்து போகாமல் நாம் அத்தனை பேரும் ஒரே பார்வதி – பரமேச்வரர்களின் குழந்தைகளாக, பிள்ளையாருக்குத் தம்பி – தங்கைகளாக ஒன்று சேரவேண்டும். அவரையே பிரார்த்தித்துக் கொள்ளுவோம்….

Related Articles

  • Arulmozhiyum iru arunmozhigalum
    Arulmozhiyum iru arunmozhigalum
    பன்னிரண்டு அடியார்களுடன் நம்பியாண்டார் நம்பி முடித்தாரென்றால், அவர்…
  • Thirumurai Kidaika seidhavar
    Thirumurai Kidaika seidhavar
    தேவார கர்த்தா, திருவாசக கர்த்தா கதைகள் சொன்னே.…
  • Vinayagarum Manikavasagarum
    Vinayagarum Manikavasagarum
    தேவாரம் பாடிய மூவரைப் பற்றி விக்நேச்வர ஸம்பந்தமாக…
  • Sundhararuku Arul
    Sundhararuku Arul
    அப்பர்-ஸம்பந்தர்களுக்கு அன்பிலில் ஏற்பட்டாற் போல ஸுந்தரரும் திருவையாற்றுக்குப்…
  • Devarathil Vinayagar
    Devarathil Vinayagar
    விக்நேச்வரரைப் பற்றி வருகிற இரண்டு தேவாரக் குறிப்புகளை…
  • Devarar Karthar iruvarukum arul
    Devarar Karthar iruvarukum arul
    முதலமைச்சர்’ என்கிற வார்த்தை பற்றிய வாதம் ஒரு…
  • Thiruvalluvarin Udharanam
    Thiruvalluvarin Udharanam
    தமிழை வளர்த்துக் கொடுத்தவர்களில் திருவள்ளுவரை மிஞ்சி ஒருத்தருண்டா?…
  • Samskritha Virodham
    Samskritha Virodham
    ஒரு ஊரிலே ஏழைகள் ‘பஞ்சம், பணம் வேணும்’…
  • Appar Swamigaludan
    Appar Swamigaludan
    ஸம்பந்தரை விக்நேச்வரருடன் ஸம்பந்தப்படுத்தும் இன்னும் இரண்டு ஸம்பவங்களில்…
  • sambhadharudan sambhadham
    sambhadharudan sambhadham
    ஸம்பந்தத்தைச் சொன்னேன். ஸம்பந்தரோடேயே ஆரம்பிக்கிறேன். அவர் குமாரஸ்வாமி…