Sita meets hanuman

அப்படிச் செல்லும் சீதாபிராட்டியின் உள்ளக் கருத்தை உணர்ந்த அனுமன் அச்சமடைந்தான். சீதையைத் தீண்டி தடுக்க அஞ்சி, “ராம், ராம்” என்று இராமபிரானின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே, அண்ட நாயகனின் அருள் தூதன் நான் என்று சொல்லிக் கொண்டே, அன்னை சீதாதேவியின் முன் சென்று குதித்துத் தொழுது வணங்கினான்.“தாயே! இராமபிரானது ஆணையால் அடியனேன் இங்கு வந்தடைந்தேன். உலகத்தின் எல்லா பகுதிகளிலும் சென்று தங்களைத் தேடும்படி அனுப்பிய அளவற்ற பலரில், முற்பிறப்பின் தவப்பயனாய் அடியேன் தங்கள் சேவடியைத் தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்றேன். அன்னையே! தாங்கள் இங்கே இருப்பதை இராமன் அறியவில்லை. உன்னைப் பிரிந்த துக்கத்தில் உழன்று கொண்டிருக்கிறான். நான் யார் என்று என் மீது சந்தேகம் வேண்டாம். அதற்கு சரியான அடையாளம் என்னிடம் இருக்கிறது. உன்னிடம் சொல்லி, இராமன் சொல்லி அனுப்பிய சில உரைகளும் உண்டு, அவற்றையும் சொல்லுகிறேன்” இப்படிச் சொல்லிக் கொண்டே சீதையைத் தொழுதான் அனுமன். திடீரென்று வந்து குதித்து ஏதோ பேசுகின்ற இவனைப் பார்த்து சீதைக்குக் கடும் கோபம் ஒருபுறம். ஏனோ மனதில் தோன்றும் கருணை ஒருபுறம். இவன் அரக்கனாக இருக்கமுடியாது. ஐம்பொறிகளை அடக்கிய முனிவன் போலத் தோன்றுகிறான். ஒருக்கால் இவன் தேவனோ? இவன் இனிய சொற்களைப் பேசுகிறான், தூய்மையானவனாகத் தோன்றுகிறான். இவன் அரக்கனோ, தேவனோ, அல்லது குரக்கினத் தலைவனோ, யாராய் வேண்டுமானாலும் இருக்கட்டும். இவனால் ஏற்படப்போவது நன்மையோ, தீமையோ, எதுவானாலும் ஆகட்டும், என் எதிரில் வந்து இராமன் பெயரைச் சொல்லி, என்னை உருகச் செய்து விட்டானே. இதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு? இப்படி நினைத்துக் கொண்டு சீதை அனுமனை உற்று நோக்குகிறாள். “வீரனே! நீ யார்?” என்று வினவினாள். சீதையின் சொற்களைத் தன் தலைமேல் கொண்ட அனுமன், தன் இரு கரங்களையும் தலைக்குமேலாகக் குவித்துக் கொண்டு பேசலானான்: “தாயே! உன்னைப் பிரிந்த பிறகு இராமனுக்கு ஒரு நண்பன் கிடைத்தான். அவன் சூரிய குமாரன், பெயர் சுக்ரீவன். குரக்கினத் தலைவன் அவன். அவனுடைய அண்ணனான வாலி முன்னர் இராவணனைத் தன் வாலில் பிணைத்து எட்டுத் திசைகளிலும் தாவி வெற்றி கொண்டவன். அவனை இராமன் ஒரே அம்பினால் கொன்றான். வாலியின் அரசை சுக்ரீவனுக்குக் கொடுத்தான் இராமன். நான் அந்த சுக்ரீவனுடைய அமைச்சன், என் பெயர் அனுமான்” என்றான். “சுக்ரீவனுடைய எழுபது வெள்ளம் அளவுள்ள சேனை, இராமபிரான் இடும் கட்டளைகளை நிறைவேற்றத் தயாராக இருக்கின்றன. அவற்றில் பல தாங்களைத் தேடி நாலாபுறத்திற்கும் விரைந்து சென்றுள்ளன. இழிதொழில் புரியும் இராவணன் தங்களைக் கவர்ந்து சென்ற போது, தாங்கள் அணிகலன்களை ஓர் துணியில் கட்டி நாங்கள் இருந்த ருசியமுக பர்வதத்தில் போட்டீர்கள். இந்தச் செய்தியை நான் இராமனிடம் சொன்னேன். அவர் என்னைத் தனியே அழைத்துத் தென் திசைக்குச் செல் என்று என்னைப் பணித்தார்.” “உன் அணிகலன்களைக் கண்டதும், இராமபிரான் பட்ட பாட்டைச் சொற்களால் சொல்ல முடியாது. நீங்கள் அன்று எறிந்து விட்டுச் சென்ற அணிகலன்களே இன்று உங்கள் மங்கல அணியைக் காப்பாற்றின. தெற்குப் புறமாகத் தங்களைத் தேடிவந்த இரண்டு வெள்ளம் வானர சேனைக்கு வாலியின் புதல்வன் அங்கதன் தலைவன். அவனே என்னை இலங்கைக்கு அனுப்பியவன். அவர்கள் என்னுடைய வரவை எதிர்நோக்கிக் கடலுக்கு அப்பால் காத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் அனுமன். இதைக் கேட்டதும் சீதை மகிழ்ச்சியடைந்தாள். ஆனந்தக் கண்ணீர் உகுத்தாள். “பெரியோனே! இராமர் எப்படி இருக்கிறார்?” என்றாள். “அன்னையே! இராமனின் திருவுருவை வர்ணிக்க வார்த்தைகள் ஏது? இருந்தாலும் சொல்கிறேன் கேளுங்கள்” என்று இராமனது திருவடி முதல் திருமுடி வரை வர்ணிக்கலானான். ஒவ்வோர் அங்கத்தையும், அதன் பெருமை அழகு முதலியவற்றைச் சொல்லி விளக்கினான். இவ்வாறு அனுமன் சொன்ன சொற்களைக் கேட்ட சீதை தீயிலிட்ட மெழுகு போல உருகினாள். அவளை அனுமன் தரையில் விழுந்து வணங்கினான். “அன்னையே! இராமபிரான் என்னிடம் சொல்லி அனுப்பிய வேறு சில குறிப்புகளும் உண்டு. சில அடையாளச் சொற்களும் உண்டு. அவற்றைக் கேட்பீர்களாக!” என்று சொல்லத் தொடங்குகிறான். “காட்டில் வசிப்பது என்பது சிரமம், ஆகையால் நான் திரும்பி வரும்வரை என் அன்னையர்க்கு பணிவிடை செய்து கொண்டிரு என நான் சொல்லி முடிக்கும் முன்பாக, மரவுரி தரித்து தவ வேடத்தோடு சீதை எனக்கு முன்பாக நின்றாள், என்று இராமபிரான் கூறி தங்களிடம் நினைவு படுத்தச் சொன்னார்”. “மணிமுடி சூட நாள் குறித்து ஆட்சியைத் தந்து, பிறகு கானகம் செல்ல தந்தையின் உரை கேட்டு, நான் புறப்பட்டு கோட்டையைத் தாண்டுமுன்பாக கானகம் எங்கே இருக்கிறது, என்று தாங்கள் கேட்டதையும் தங்களிடம் நினைவு படுத்தச் சொன்னார்”. “தேரைச் செலுத்தி வந்த அமைச்சர் சுமந்திரனிடம் தாங்கள் வளர்த்து வந்த கிளிகளையும், நாகணவாய்ப் பறவைகளையும், ஊர்மிளை முதலானோரைக் கவனித்துக் கொள்ளச் சொல்லி அனுப்பியதை தங்களிடம் நினைவூட்டச் சொன்னார்”. “வேறு எந்த அடையாளச் சொல்லும் தேவையில்லை, என் பெயர் பொறித்த இந்த மோதிரத்தை அவளிடம் காட்டு என்று இந்த கணையாழியைக் கொடுத்தார்” என்று சொல்லித் தன் மடியில் கட்டிவைத்திருந்த கணையாழியை எடுத்து மாருதி பிராட்டியின் கையில் கொடுத்தான். அந்த கணையாழியைக் கண்டதும், சீதை பெற்ற உணர்வுகளை என்னவென்று சொல்வது, எங்ஙனம் வர்ணிப்பது? வாழ்நாளையெல்லாம் வீணாக்கியவர்கள், மறுமைப் பயனைத் தற்செயலாய் பெற்றது போல என்பேனா? விலைமதிப்பற்ற ஓர் பொருளை தொலைத்துவிட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகு அது இருக்குமிடத்தைக் கண்டு பிடிக்கும்போது கொள்ளும் மகிழ்ச்சி என்பேனா? உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிர் மீண்டும், அந்த உடலை அடைந்தால் மற்றவர் படும் ஆனந்தம் என்பேனா? கணையாழியைக் கண்ட சீதை, புற்றிலிருந்த பாம்பு, தான் இழந்த மாணிக்கத்தை மீண்டும் பெற்றது போல மகிழ்ந்தாள். பிள்ளைப் பேறு இல்லாமல் நீண்ட காலம் மலடியாக இருந்தவளுக்குப் பிள்ளைப் பேறு கிட்டிய காலத்து அடையும் மகிழ்ச்சியை அடைந்தாள். கண்ணற்ற குருடனாக இருந்தவனுக்குக் கண் பார்வை கிட்டிய போது அடையும் மகிழ்ச்சியை சீதை அடைந்தாள். சீதை, தன் கையில் வாங்கிக் கொண்ட அந்த கணையாழியைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டு, ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். தலைமேல் வைத்துக் கொண்டாள். கண்ணிலே ஒற்றிக் கொண்டாள்; மகிழ்ந்தாள், உருகினாள், உடல் பூரித்தாள், பெருமூச்சு விட்டாள். அடடா! இந்த காட்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லையே! கணையாழியை முகர்ந்தாள்; மார்பின் மீது வைத்துத் தழுவிக் கொண்டாள்; கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்; மீண்டும் கண்களில் கண்ணீர் பொங்கி வர, நீண்ட நேரம் அந்த கணையாழியையே பார்த்துக் கொண்டிருந்தாள். கணையாழியிடம் ஏதோ பேச விரும்பினாள்; ஆனால் வாயைத் திறக்கவில்லை. மேலே கிளர்ந்து எழுகின்ற விம்மலை அடக்கிக் கொண்டாள். கணையாழியைக் கண்டதும் சீதையின் முக ஒளி பொன்னிறம் பெற்று ஒளிர்ந்தது. ஆம்! இராமனது மோதிரம் தன்னை நெருங்கும் பொருட்களைப் பொன்னாக மாற்றும், ‘ஸ்பரிசவேதி’ எனும் ரசவாதப் பொருளே! சீதைக்கு அந்த கணையாழி, பசியால் துன்புற்றவனுக்குக் கிடைத்த அமுதம் போன்றது. இல்லறத்தாரைத் தேடி வந்த விருந்தினரைப் போன்றது. உயிர் போகும் தறுவாயில் ஒருவனுக்குக் கிடைத்த சஞ்சீவி மருந்து போன்றது. கணையாழியை வணங்கிப் போற்றுவோம். அனுமனைப் பார்த்து சீதாபிராட்டி சொல்கிறாள், “உத்தமனே! எனக்கு நீ உயிரைக் கொடுத்திருக்கிறாய். நான் உனக்கு எவ்வகையில் கைமாறு செய்யப் போகிறேன். நீ எனக்கு உயிர் கொடுத்த வகையில் தாயாகவும், தந்தையாகவும், தெய்வமாகவும் ஆனாய். அருளுக்கு இருப்பிடமானவனே! நீ எனக்கு இம்மைக்கும் மறுமைக்குமான இன்பத்தை அளித்தாய். வலிமைமிக்க மாருதி! துணையற்ற எனக்குத் துன்பம் நீக்கிய வள்ளலே! நீ நீடூழி வாழ்வாயாக! நான் கற்பு நெறியில் களங்கமற்றவள் என்பது உண்மையானால், யுகயுகாந்திரத்திலும், ஈரேழு பதினான்கு உலகங்கள் அழிகின்ற காலத்தும், நீ இன்று போல என்றும் சிரஞ்ஜீவியாக வாழ்வாய்!” என்று வாழ்த்தினாள். “ஆஞ்சநேயா! இராமனும், இலக்குவரும், எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் உன்னை எங்கே சந்தித்தார்கள். இராவணன் என்னைக் கவர்ந்து சென்ற செய்தியை அவர்கள் எப்படி அறிந்தார்கள்” என்று வினவினாள். உடனே அனுமன் நடந்த வரலாற்றைச் சொல்லத் தொடங்கினான். “அன்னையே! மாயமுள்ள மாரீசன் எனும் அரக்கன் இராவணனின் தூண்டுதலால், மாயமான் உருவில் உன் எதிரில் தோன்றினானல்லவா? உன் ஏவலின்படி இராமன் அதைப் பிடிக்கச் சென்றார். அது மாயமான் என்பது தெரிந்து அதன் மீது தனது அம்பை செலுத்தினார். அம்பு அடித்து அந்த அரக்கன் மாரீசன் ஓ! சீதா!, ஓ! லக்ஷ்மணா! என்று குரல் எழுப்பிவிட்டு, தனது சுயரூபம் வரப்பெற்று இறந்து வீழ்ந்தான். அது தங்களை ஏமாற்றுவதற்காக எழுப்பப்பட்ட குரல்”. “இந்தக் குரலைத் தன் குரல் என்று இலக்குவன் நம்பாமல் இருக்கட்டும் என்று இராமன் தன் கோதண்டத்தில் ஓர் ஓசை எழுப்பினார், என்றாலும் ஊழ்வினை பலித்தது. திரும்பி வந்துகொண்டிருந்த இராமன், எதிரில் இலக்குவன் வருவதைக் கண்டு, ஏதோ ஒரு தீமை நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து கொண்டார். அபயக் குரல் கேட்டதும், சீதாபிராட்டி தன்னை உடனே சென்று இராமனுக்கு என்ன நேர்ந்தது என்று பார்த்து வருமாறு பணித்தச் செய்தியை இலக்குவன் சொன்னான். இருவரும் பர்ணசாலையை அடைந்ததும், அங்கே தங்களைக் காணாமல் இராமன் மயங்கி சோர்ந்து விழுந்து விட்டார்.” “இராமன் துன்பத்தில் வாட இதனினும் வேறு காரணங்கள் வேண்டுமோ? தங்களைத் தேடி தென் திசைக்கு வந்த அடியேன் தங்களை நேரில் கண்டுவிட்டேன். தாயே! நீ வாழ்க! அன்னையே! தங்களைக் காணாமல் இராமன் பஞ்சவடியில் புறப்பட்டு, காடு, மலை, ஆறுகளைக் கடந்து தேடி உயிரற்ற உடலாக ஆனார். வழியில் “உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட” ஜடாயுவைக் கண்டார். அவரிடமிருந்து நடந்த செய்திகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அளவற்ற கோபம் கொண்டார். தன் கை வில்லினை எடுத்து ‘மூவுலகங்களும் எரிந்து சாம்பலாகும்படி, என் ஒரு அம்பினால் அழிப்பேன்’ என்று சபதமிட்டார். ஆனால் ஜடாயு, ஓர் அற்பன் ஒரு தீமை செய்து விட்டதற்காக, மூவுலகங்களையும் அழிப்பது தவறு. கோபத்தைத் தணித்துக் கொள் என்று ஆறுதல் கூறினார். இராமனும் கோபம் தணிந்தார்.” “இராவணன் எங்கு சென்றான், எங்கு இருப்பான் சொல் என்று இராமன் கேட்டதற்கு, ஜடாயு பதில் சொல்வதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது. இராமனும், இலக்குவனும் ஜடாயுவுக்குத் தந்தைக்குச் செய்ய வேண்டிய ஈமக் கடன்களைச் செய்து முடித்தனர். பிறகு பல மலைகளைத் தாண்டி தங்களைத் தேடிக்கொண்டு வந்தனர். வழியில் எமது அரசன் சுக்ரீவனிடம் நட்பு பூண்டனர். சுக்ரீவனிடம் வன்மம் கொண்டு அவனைக் கொல்லத் துணிந்த வலிமையுள்ள வாலியை இராமன் ஓர் அம்பினால் கொன்றார். அவனது இராஜ்யத்தை அவனது தம்பி, எமது அரசன் சுக்ரீவனுக்குத் தந்தார். மழைக்காலம் முடியும் வரை கிஷ்கிந்தையில் தங்கியிருந்து, அது முடிந்தவுடன் நாலாபுறமும் தங்களைத் தேடி படைகளை அனுப்பி வைத்தார். அதன்படி அடியேன் தங்களைத் தேடி தென் திசை நோக்கி வந்தேன். இதுவே எனது வரலாறு” என்றான் அஞ்சனை புத்திரன். இதைக் கேட்டதும் சீதை இராமனுக்கு ஏற்பட்ட துன்பத்தை எண்ணி எலும்பும் உருகும்படி இரங்கி ஏங்கினாள். “மாருதி! அதுசரி நீ இந்த அலைகடலைத் தாண்டி வந்தது எவ்வாறு? அதைச் சொல்” என்றாள். “அன்னையே! உம் தலைவன் இராமபிரானின் திருவடிகளைத் தியானிக்கும் அறிவுடைய ஞானிகள் மாயை எனும் பெருங்கடலையே தாண்டிச் செல்லும் தன்மை போல, நானும் காற்றையே பற்றுக் கோடாகக் கொண்டு வான வழியில் அலைகடலைத் தாண்டி வந்தேன்” என்று அடக்கத்தோடு சொன்னான். வெண்முத்துப் பற்களையுடைய சீதாபிராட்டி அனுமனிடம், “இவ்வளவு சிறிய உடலோடு, நீ எப்படி கடலைத் தாண்டி வந்தாய்? உன் தவத்தின் பலனா? அல்லது அட்டமா சித்தியாலா? எனக்குச் சொல்” என்றாள். பிராட்டி இப்படிக் கேட்டதும், அனுமன் தனது விஸ்வரூபத்தை சீதைக்குக் காட்ட நினைத்தான். அப்படி நினைத்த மாத்திரத்தில் அவன் உடல் வளர்ந்தது. வானத்தின் மீது உயர உயர விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்து நின்றான். தலை வானத்தில் முட்டுமோ என்று தலையை மட்டும் குனிந்து தேவியை வணங்கினான். நன்னெறி மூலம் அடையும் பெருமை இந்த அனுமனின் விஸ்வரூபத்தைப் போல நெடிதானதோ? எதிரே வானத்துக்கும் பூமிக்குமாக பேருரு கொண்டு நிற்கும் அனுமனைக் கண்டாள் சீதாபிராட்டி. அவன் பாதங்களைக் கூட முழுமையாகக் காண முடியாத பெரிய உரு. இனி அரக்கர்கள் அழிந்தனர் என்று அன்னை மகிழ்ந்தாள். “மாருதி! போதும்! போதும்! உன் உருவத்தை ஒடுக்கிக் கொள். எனக்கு பயமாக இருக்கிறது” என்றாள் சீதை. “உன் விஸ்வரூபத்தை முழுமையாகப் பார்க்கக் கூடியவர்கள் இவ்வுலகத்தில் யாரும் இல்லை. அதனால் அனுமனே, ஒடுங்குக” என்றாள். “தாங்கள் அருளியபடி அங்ஙனமே நடப்பேன்” என்று கூறி அனுமன் தன் பெரிய உருவத்தை ஒடுக்கிக் கொண்டு, அனைவரும் காணத் தக்க சிறிய உருவத்தை மேற்கொண்டான். அப்போது சீதை கூறுகிறாள்: “காற்றினும் கடுகிய வேகம் கொண்ட மாருதி! உன் ஆற்றலை முழுவதுமாக அறிந்து கொண்ட எனக்கு நீ கடலைக் கடந்து வந்த செய்தி ஆச்சரியம் அளிக்கவில்லை. வீரனே! இராமபிரானின் அருளும், புகழும் பல யுகங்கள் நிலைபெறச் செய்ய வல்லவன் நீ ஒருவன் போதும். உன் ஆற்றலுக்கு இந்த ஒரு கடல் என்ன, ஏழு கடல்களைத் தாண்டும் வல்லமை படைத்தவன் நீ”. “மாருதி! எவ்வளவு பெருமையுடையது நின் தோற்றம். அறிவு, ஆற்றல், பொறிகளின் மீது நீ செலுத்தும் தனி அரசாணை, மனத் தெளிவு, தெளிவின் பயன், நீதி ஆகியவற்றிலும் நீ பிரம்மாண்டமாக வளர்ந்து இருப்பவன். கொடிய அரக்கர்களோடு போரிட இலக்குவனைத் தவிர வேறு துணை இராமனுக்கு இல்லையே என்று வருந்தியிருந்தேன். உன்னைக் கண்டபின் எனது அந்த வருத்தம் நீங்கிவிட்டது. அதனால் உயிர் பெற்றேன். என் இராமனுக்கு நீ துணை என்றதும், வெற்றி நிச்சயம் என்றாகிவிட்டது”. “இனி நான் இறந்தாலும் கவலை இல்லை. என்னை வருத்திய அரக்கர்களை அழித்தவள் ஆனேன். அரக்கர்களின் வஞ்சகச் சிறையிலிருந்து விடுதலை பெற்றவளும் ஆனேன். என் தலைவன் இராமனின் திருவடிகளை அடைந்தவளும் ஆனேன். இனி புகழ் பெறுவேனே தவிர பழியை அடைய மாட்டேன்” என்று மகிழ்ந்து பேசினாள் சீதை. அதற்கு அனுமன், “அன்னையே! வானரர்களின் படை எழுபது வெள்ளம் அளவினை உடையது என்பதைக் கூறினேன். இந்த கடலானது அவர்களுக்கு ஒரு சிறு குட்டை போன்றது. இந்த இடம் எங்கிருக்கிறது என்பது தெரியாததால், இலங்கை இன்னமும் அழியாமல் இருக்கிறது. வானரப் படையில் வாலியின் தம்பி சுக்ரீவன், வாலியின் மகன் அங்கதன், வசந்தன், துமிந்தன், வெற்றியை உடைய குமுந்தன், நீலன், இடபன், குமுதாக்கன், பனசன், சரபன், வயதான ஜாம்பவான், எமனை நிகர்த்த துன்மருடன், காம்பன், கவயன், கவயாக்கன், உலகம் அறிந்த உத்தமசங்கன், வினதன், துவிந்தன், நளன், தம்பன், தூமன் என்னும் ஒப்பற்ற வீரர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட வானர சைன்யத்துக்கு முன்பாக இந்த அரக்கர் படை எம்மாத்திரம்” என்றான். தனக்கு நிகரில்லாத வலிமையுடைய ஆஞ்சநேயன், அன்னை சீதாபிராட்டியை எடுத்துக் கொண்டு, இராமனிடம் கொண்டு சேர்ப்பதே தன் கடமை என்று நினைத்து, சீதையிடம், “அன்னையே! அடியவனாகிய என் கருத்தைக் கேட்டருள் புரிவீராக! நான் சொல்வதைக் கேட்டு என்மீது கோபம் கொள்ள வேண்டாம். கொடியவன் இராவணன் தங்களைக் கொன்று விடுவானாயின், பிறகு அவனை வெல்வதில் பயன் இல்லை. இப்போதே தங்களைத் தூக்கிக் கொண்டு போய் இராமனிடம் சேர்த்து விடுகிறேன். தாங்கள் என் தோள்மீது ஏறிக் கொள்ளுங்கள். நொடிப் பொழுதில் வழியில் எங்கும் தங்காது, இராமன் இருக்குமிடம் சென்று குதிப்பேன். அரக்கர்கள் வழி மறித்தால், அவர்களைக் கொன்று குவிப்பேன். தங்களைக் கொண்டு செல்லாமல், வெறுங்கையுடன் திரும்பிச் செல்ல மாட்டேன்” என்றான். “தங்களை இப்பொழுதே எடுத்துச் சென்று இராமபிரானிடம் ஒப்படைக்காமல், நான் அங்கு சென்று இராமனிடம், தேவி அரக்கர் சிறையில் பெரும் துயரத்தோடு இருக்கிறார் என்று சொல்வதால் என்ன பயன் உண்டு?” என்கிறான் மாருதி. இதைக் கேட்டு சீதை, இந்த அனுமன் சொல்வதை செய்து முடிக்கும் வல்லமை படைத்தவன் என்பதை உணர்ந்தாள். “ஆஞ்சநேயா! நீ சொன்ன செயல் உனக்கு அரியதன்று. உன் ஆற்றலுக்கும் ஏற்புடையதே. ஆனால், அப்படிச் செய்வது ஏற்கத் தக்கது அன்று என்று பெண்ணாகிய நான் கருதுகிறேன். என்னை எடுத்துச் செல்லும்போது கடலுக்கு நடுவில் அரக்கர் வந்து தடுத்து போரிட்டால், அவர்களோடு போரிடவும் என்னைக் காப்பாற்றவும் முடியாமல் நீ தவிக்க நேரிடும். நான் வர மறுப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. நீ சொல்வது போல் செய்தால், அது இராமனது வில்லுக்கும், அவன் வீரத்துக்கும் இழுக்கு, வீண் பழி உண்டாகும். அதுமட்டுமல்ல, மருதி! இராவணன் என்னைக் கவர்ந்து வந்தது போல, நீயும் என்னை பிறர் அறியாவண்ணம் எடுத்துச் செல்வதை, பிறர் நியாயம் என்று ஏற்றுக் கொள்வார்களா?” “இன்னொன்றையும் கேள்! போரில் இராமன் அம்புக்கு பலியாகி இராவணன் வீழ்ந்து கிடக்க, அவன் கண்களை காக்கைகள் குத்தித் தின்கிற காட்சியை, நான் காணாமல் மன நிறைவு பெற முடியுமா? நான் உனக்குச் சொல்ல விரும்புகின்ற மற்றொன்றையும் கேள்! நீ ஐம்பொறிகளையும் அடக்கி ஆளும் நைஷ்டிக பிரம்மச்சாரி என்றாலும்கூட, உன்னை ஆண்பிள்ளை என்றுதான் உலகம் அறியும். இராமபிரான் திருமேனியல்லாது வேறு எந்த ஆண்மகனையும் நான் தீண்டுவது தகுமோ? இராவணனாலும் என்னைத் தீண்ட முடியாது, அதனால்தான் அவன் மண்ணோடு பெயர்த்து என்னை எடுத்து வந்தான். என்னைத் தீண்டினால் இராவணன் உயிர் போய்விடும், என்பது அவனுக்குத் தெரியும்.” “பிரமதேவன் இராவணனுக்கு இட்ட சாபம் ஒன்று உண்டு. உன்மீது விருப்பமில்லாத பெண்களை தீண்டுவாயானால், உன் பத்து தலைகளும் சிதறி இறந்து போவாய் என்பது அந்த சாபம். இராவணனுக்கு வாய்த்த அந்த சாபமே என் உயிரைக் காத்தது. இராவணன் மண்ணோடு பெயர்த்து எடுத்து வத பர்ணசாலை இங்குதான் இருக்கிறது. அதை உன் கண்களால் பார்” “அஞ்சனா புத்திரா! நான் சொன்ன காரணங்களால் எல்லாம், என்னை நீ கொண்டு செல்லுதல் இயலாது. நீ இராமனிடம் சென்று நான் சொல்லும் சில விவரங்களையும் தெரிவிப்பாயாக! அதுதான் நீ இப்போது செய்யக்கூடியது” என்றாள். சீதாபிராட்டியாரின் கற்புத் திறனையும், தவ வலிமையையும் கண்டு, அனுமன் வியந்து பாராட்டினான். “அன்னையே! இராமன் வந்து தங்களை மீட்பார். அதற்குள் தாங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். இராமனுக்குத் தாங்கள் சொல்ல வேண்டிய செய்திகளைச் சொல்லியருள வேண்டும்” என்றான். “ஆஞ்சநேயா! நான் இன்னும் ஒரு மாத காலம் இலங்கையில் உயிரோடு இருப்பேன். அதற்குள் இராமன் வந்து என்னை மீட்காவிட்டால், பின்பு நான் இறந்து போவேன். இது இராமன் கழல்மேல் ஆணை. இதை உன் மனதில் பதித்துக் கொள். இராமபிரானிடமும் சொல்லிவிடு! அவருக்கு ஏற்ற மனைவியாக நான் இல்லாவிட்டாலும், ஓர் அபலைப் பெண்ணைக் காக்க வேண்டும் என்னும் கருணை இல்லாவிட்டாலும், தன் வீரத்தைக் காத்துக் கொள்ளவாவது இராவணனுடன் போரிட்டு என்னை மீட்க வேண்டும் என்பதை நான் சொன்னதாக அவரிடம் சொல்.” “இலக்குவரிடம் நான் சொன்னதாகச் சொல், பஞ்சவடியில் எனக்குக் காவலாக இருந்த அவருக்கு, இப்போது எனக்கு ஏற்பட்டிருக்கிற இந்த கொடிய சிறையிலிருந்து என்னைக் காக்கும் கடமை உண்டு என்று சொல். இலங்கையில் சீதை இறக்கும்போது, தன் மாமியர் மூவரையும் வணங்கினாள் என்று அவர்களிடம் இராமனைச் சொல்லச் சொல்; அப்படி அவர் சொல்ல மறந்தாலும் நீ மறக்காமல் அவர்களிடம் இதனைச் சொல்.” “மிதிலை நகருக்கு வந்து எனது கரம் பற்றிய அந்த நாளில், ‘இவ்வுலகில் எடுத்துள்ள இப்பிறவியில் உன்னையன்றி வேறு ஒரு பெண்ணை என் மனதாலும் தொடமாட்டேன்’ என்று எனக்கு அவர் சொன்ன உறுதிமொழியை அவரது செவியில் இரகசியமாகச் சொல். என் தாய் தந்தையருக்கு என் வணக்கங்களைச் சொல்.உன் மன்னன் சுக்ரீவனிடம் இராமனைக் காப்பாற்றி அவரை அயோத்திக்கு அரசராக்கும்படி சொல்” இப்படியெல்லாம் சீதை பேசுவதைக் கேட்ட அனுமன் “அம்மையே! தாங்கள் இன்னம் துன்பப் படுவதை விட்டபாடில்லை. தாங்கள் பேசுவது சரியா? தாங்கள் இங்கேயே இறப்பதும், நீங்கள் இறந்தபின்னும் இராமன் உயிர் வாழ்வதும், அயோத்தியில் முடிசூடுவதும் நடக்கக் கூடிய காரியங்களா?” என்று சீதைக்கு பலவாறாக ஆறுதலும் ஊக்கமும் அளிக்கிறான் அனுமன். அதற்கு சீதாபிராட்டி அனுமனை நோக்கி, “மேன்மையானவனே! நீ உடனே விரைந்து இராமனிடம் செல். வழியில் இடையூறு ஏற்பட்டால் அனைவரையும் வெல்வாயாக! அதுமட்டுமல்ல அனுமான், நான் சொல்லும் சில நிகழ்ச்சிகளையும் இராமனிடம் சொல்லி, அவருக்கு நினைவு படுத்து”. “வனவாச காலத்தில் சித்ரகூட மலையில் என் அருகில் வந்து என் மார்பைத் தன் அலகினால் கொத்திய காக்கையை கோபித்து, ஓர் புல்லை எடுத்து மந்திரம் சொல்லி பிரம்மாஸ்திரமாக இராமன் செலுத்திய செய்தியை அவரிடம் நான் சொன்னதாகச் சொல்லு. அப்போது அந்த காகம் தன்னைக் கொல்ல பிரம்மாஸ்திரம் வருவது கண்டு, நடுங்கி பிரம்மலோகம் செல்ல, அங்கு பிரமன் இங்கு ஏன் வந்தாய் என்று கேட்க, அங்கிருந்து சிவபெருமான் இருக்கும் கைலாயம் மற்றும் எண் திசைகளுக்கும் செல்ல, அனைவரும் அதை விரட்டிவிட, அஸ்திரத்தால் தானும் தன் காக்கை இனமும் ஓர் கண் இழந்ததை அவருக்கு நினைவு படுத்து.” “இன்னொரு செய்தியையும் கேள். என் இனிய கிளிக்கு என்ன பெயர் வைப்பது என்று நான் கேட்டதற்கு, என் அன்பு அன்னை கைகேயி பெயரை வைக்கச் சொல்லி இராமன் சொன்னதையும் அவரிடம் நினைவு படுத்து.” இப்படி சொல்லி முடித்தபின் சீதை, தன் ஆடையில் முடிந்து வைத்திருந்த, ஒளி பொருந்திய சூரியனைவிட ஓளிவீசும் சூளாமணியைத் தன் மலர்க்கையால் எடுத்தாள். “இது என்ன?” என்றான் அனுமன். “என்னைத் தேடி வந்து, என் உயிரைக் காத்த நம்பி! நான் கொடுத்த அடையாளமாக இந்த சூளாமணியைப் பெற்றுக் கொள்” என்று அதை அனுமனிடம் தந்தாள் சீதை. சீதாபிராட்டியைத் தொழுதுவிட்டு அந்த சூளாமணியைத் தன் கைகளில் வாங்கிக் கொண்டான் அனுமன். அதைத் தன் ஆடையில் பத்திரப்படுத்திக் கொண்டான். சீதையை மறுபடி தொழுது, அவளைப் பிரிய வேண்டுமே என்று கண்ணீர் சிந்தினான். அவளை மூன்று முறை வலம் வந்து கீழே விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான். சீதாபிராட்டியும் அவனை அன்போடு வாழ்த்தி வழி அனுப்பி வைத்தாள்.

Related Articles

  • Ramayana
    Ramayana
    இராமாயணம் வால்மீகி என்னும் முனிவரால் சமசுக்கிருத மொழியில்…
  • About Ayodhya
    About Ayodhya
    கோசலம், என்றொரு தேசம், இருந்தது. அதுல, சரயு…
  • Ashvemega Yaagam
    Ashvemega Yaagam
    இப்படி தர்மம் தவறாம தசரத மஹாராஜா, அயோத்தியை,…
  • Sri Rama Birth
    Sri Rama Birth
    ரிஷ்ய ஸ்ருங்க முனிவர் புத்திர காமேஷ்டி பண்ணி…
  • Vishwamithrar’s Teaching
    Vishwamithrar’s Teaching
    தசரதர், ராமனை விஸ்வாமித்ரர்ட்ட ஒப்படைகணும்னு முடிவு பண்ணவுடனே,…