Siva Puranas-Vayusamhithai-Uttira Bhagham-1

வாயு ஸம்ஹிதை (உத்திர பாகம்): நமச்சிவாய ஸோமாய ஸகணாய ஸூநவே, ப்ரதாந புருஷேஸாய ஸர்கஸ்தித்யந்த ஹேதவே
சர்வ மங்களங்களைக் கொடுப்பவனும் ஸோம ஸ்வரூபியும் அஷ்டாதச கணங்களோடும் புத்திரர்களுடனும் கூடியிருப்பவனும், பிரகிருதிக்கும் புருஷனான நாராயணனுக்கும் பிரபுவும், சிருஷ்டி ஸ்திதி சங்காரங்களுக்கு காரண பூதனுமாகிய சிவமூர்த்தியை வணங்குகிறேன்.
சந்திர ப்ரதி பூயஸ்ய ஐஸ்வர்யஞ்சாபி ஸர்வகம்
ஸ்வாமித் வஞ்சவி புத்வஞ்ச ஸ்வபாவம் ஸம்ப்ரசக்ஷதே
தமஜம் விஸ்வகர்மாணம் சாஸ்வதம் சிவமத்வயம்,
மஹாதேவம் மஹாத்மாநம் வ்ரஜாமி சரணம் சிவம்.
எந்த இடத்தும் தடைபடாத சக்தியும் எல்லா இடத்திலும் உள்ள ஐஸ்வரியமும், சுவாமித்துவமும் சர்வ வியாபித்துவமும் எவனுக்கு இயல்பாக இருக்கிறதோ, அத்தகைய பிறப்பில்லாதவனும் பிரபஞ்சங்களையெல்லாம் படைத்தவனும் நிலையாக இருப்பவனும் மங்களஸ்வரூபனும் (தனக்கொத்த) இரண்டாவது பொருள் இல்லாதவனும் பரமாத்ம ஸ்வரூபனு மாகிய மஹாதேவனைச் சரணமடைகிறேன்.

1.கண்ணன் சிவதீøக்ஷ பெற்றது
முனிவர்கள் வாயுதேவனை நோக்கி, சுவாமி, சிவ கடாக்ஷம் பெற்ற உபமன்யு முனிவரிடம், விஷ்ணுவின் அவதாரமாகிய ஸ்ரீ கிருஷ்ணன் வந்து, தன் வினைச் சம்பந்தம் ஒழியும்படி ஞானதீøக்ஷ செய்து கொண்ட வரலாற்றையும் நாங்கள் தங்களிடமிருந்து கேட்க விரும்புகிறோம். ஆகையால் அதையும் தாங்கள் தயவுசெய்து எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று வேண்டினார்கள்.
வாயுதேவன் மகிழ்ச்சியாகக் கூறத் துவங்கினார். முனிவர்களே! பூபாரம் தீர்த்தத் திருவவதாரஞ் செய்த கிருஷ்ணமூர்த்தி சிவஞானத்தை அடையவும் ஒரு நற்புத்திரனைப் பெறவுங் கருதி உபமன்யு முனிவரிடம் வந்து அவரை வலம் வந்து பணிந்தார். அப்போது உபமன்யு முனிவர் தம் கரத்தால் திருநீற்றை எடுத்து கண்ணனின் தேகத்தில் அணிவித்து பாசுபத தீøக்ஷ செய்து, பன்னிரண்டு மாத காலம் பாசுபத விரதத்தை அனுஷ்டிக்கச் செய்து, குற்றமில்லாததும் உயர்கதியைக் கொடுக்கவல்லதுமாகிய சிவஞானத்தை உபதேசித்தார். அந்த உபதேசம் பெற்ற ஸ்ரீகிருஷ்ணர் ஒரு நற்புத்திரனைப் பெறக்கருதிச் சந்திரசேகரனாகிய சிவபெருமானைக் குறித்துப் பெருந்தவஞ் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவரது தவத்துக்கு மகிழ்ந்த சிவபெருமான் உமாதேவியோடு அவர் முன் காட்சியளித்தார். ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி சிவபிரானைச் சாஷ்டாங்கமாகப் பணிந்து துதித்து நின்றார். சிவபெருமான் உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். அதற்கு கண்ணன் எனக்கு ஓர் வல்லமை மிக்க நற்புதல்வன் வேண்டும் என்று விண்ணப்பித்தார். அன்பர்கள் விரும்பியவற்றையெல்லாம் கொடுக்கும் விரதத்தை மேற்கொண்ட சிவபெருமான் அவருக்கு அவ்வாறே ஒரு புத்திரன் உண்டாவான் என்று திருவருள் செய்து அந்தர்த்தானமானார். அத்தகைய வரத்தைப் பெற்ற கண்ணபிரான் களிப்புடன் தம் மனைவியை அடைந்து வாழ்ந்திருக்கும்போது தம் சாம்பவதி என்னும் மனைவியானவள் கருவுற்று உடல் மதர்ப்புற்று, இடை பருத்து, நடை தள்ளாடிச் சிவ கடாக்ஷத்தால் மஹா பலசாலியான ஒரு நற்புத்திரனை உத்தம முக்ஷர்த்தத்தில் பெற்றாள். அந்தப் புதல்வனைக் கண்டு மனமகிழ்ந்த கண்ணபிரான், அந்தணர், யாகசர் முதலியோருக்கு பொன்னும் மணியும் ஆடைகளும் அவர்கள் மகிழத் தானஞ் செய்தார். அம்பிகையுடன் கூடிய சிவபெருமான் அருளிய புத்திரனாகையால், அவனுக்குச் சாம்பன் என்று பெயரிட்டார். பிறகு, கண்ணன் தம் மனைவியோடும் புதல்வனாகிய சாம்பனோடும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும்போது, சாம்பன் பால் பருகியும், தவழ்ந்தும், நடந்தும், சிறுதேர் உருட்டியும் வளர்ந்து முனிவர்களால் ஞானமடைந்து, யானை, குதிரை, தேர் இவற்றைச் செலுத்தும் வல்லமையும் வில், வாள், அஸ்திரம் முதலியவற்றில் பயிற்சியும் பெற்றுச் சிறந்து விளங்கினான். இந்தச் சரிதத்தைப் படித்தவர்கள் வைகுண்ட பதவியில் ஸ்ரீ விஷ்ணுவினால் ஞானமடைந்து சிவகதியை அடைவார்கள் என்று வாயுதேவன் கூறினார்.

2.சிவனே – பசுபதி
முனிவர்கள் வாயுதேவனை நோக்கி, சுவாமி! பாசுபத ஞானம் என்பது யாது? சிவன் எங்ஙனம் பசுபதியாவான்? இந்த விஷயத்தைப் பற்றி ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி, உபமன்யு முனிவரிடம் எவ்வாறு விசாரித்தார்? இந்த விஷயங்களைத் தாங்கள் தயவு செய்து தெளிவுப்படுத்த வேண்டும் என்று கேட்டார்கள். வாயுதேவன் சொல்லத் துவங்கினார்.
முன் மந்திரகிரியில் நீலகண்டனாகிய சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசித்த விஷயமே பாசுபத ஞானமாகும். அந்த ஞானத்தையே கிருஷ்ண பகவானுக்கு உபதேசித்தவாறே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். பூர்வம் உபமன்யு முனிவரிடம் கண்ணபிரான் சென்று, அவரைச் சாஷ்டாங்கமாகப் பணிந்து முனிவர் தலைவரே! சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசித்துள்ள பாசுபத ஞானத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும் என்றும் பசுக்கள் யாவர் என்றும் பசுக்கள் எவ்வகையாகப் பாசத்தால் பிணிக்கப்பட்டுள்ளன என்றும் அந்தப் பசுக்கள் தம்மை பந்தித்துள்ள பாசத்திலிருந்து விடுபடும் வகை இன்னதென்றும் அறிந்துகொள்ளவும் தங்களிடம் வந்தேன். அவற்றைத் தயவுசெய்து எனக்குக் கூறவேண்டும்! என்று கேட்டார். உபமன்யு முனிவர் சிவபெருமானையும் உமாதேவியாரையும் தியானித்துச் சொல்லத் துவங்கினார்.
பிரமன் முதல் தாவரம் ஈறாகவுள்ள யாவும் பசுக்களே! அந்தப் பசுக்களுக்கெல்லாம் பிரபுவாக இருக்கும் சிவபெருமானே! பசுபதி இவ்வகையாக வேதங்கள் நான்கும் சிவபெருமானே பசுபதி என்று கூறுகின்றன. மாயா மலங்களாகிய பாசத்தால், பசுக்களைப் பதியாக உள்ள பகவான் கட்டுகிறான். மாயாபோக்தர்கள் சிவபெருமானை நன்றாக உபாசித்தால், அதே சர்வேசுவரன் அந்த மலசம்பந்தத்தை அகற்றுகிறான். இருபத்து நான்கு தத்துவங்களும் மாயா கர்ம குணங்கள் விஷயம் என்று சொல்லப்படும். இவையே ஜீவர்களுக்குப் பந்தனம் செய்பவை. பிரமாதி ஸ்தம்ப பரியந்தமான பசுக்களை மஹேஸ்வரன் பாசத்தால் கட்டி, அவரவர்கள் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்விக்கிறான். அந்த மஹாதேவனுடைய ஆக்ஞையாலேயே பிரகிருதியும் புருஷனும் கூடி புத்தியை உண்டாக்கும். புத்தி அகங்காரத்தை உண்டாக்கும். அகங்காரம் மனத்தையும் ஞானேந்திரிய கர்மேந்திரங்களையும் பஞ்ச தன்மாத்திரைகளையும் படைக்கும். அவை பஞ்சமஹாபூதங்களைத் தோற்றுவிக்கும். அந்தப் பஞ்ச பூதங்களும் பிரமன் முதல் எறும்பு ஈறாகவுள்ள எல்லா உயிர்களுக்கும் தேகத்தை உண்டாக்கும். புத்தி நிச்சயத்தைச் செய்யும். அகங்காரம் அதிக ஆசையால் நான் என்று அபிமானிக்கும். சித்தமானது நிச்சயத்தை உண்டு பண்ணும். மனம், சங்கற்பத்தை உண்டாக்கும். ஞானேந்திரியங்கள் ஐந்தும் விஷயங்களை உணரும் கர்மேந்திரியங்கள் ஐந்தும் ஐந்து கர்மங்களைச் செய்யும். இவை யாவும் சர்வேசனது கட்டளையால் தத்தமது தொழிலைச் செய்யும், அவருடைய கட்டளையில்லாத வேறு கர்மங்களை அவை செய்யமாட்டா. அந்தச் சர்வேசனுடைய ஆக்ஞை, எல்லாராலுமே அதிக்கிரமிக்க முடியாது. ஆகாயம், சர்வேசனுடைய ஆக்ஞையாலேயே சர்வ வியாபியாக இருந்து, எல்லாப் பூதங்களுக்கும் அவகாசத்தைக் கொடுக்கிறது. வாயு, பிராண அபானாதி பெயர்களை வெவ்வேறாகப் பெற்று, எல்லாப் பிரபஞ்சத்தையும் பரிக்கிறது. அக்கினி, தேவர்களுக்குரிய ஹவ்யத்தையும் பிதுர்களுக்கு உரிய கவ்யத்தையும் பிறர்க்குரிய பாகத்தையும் செய்கிறது. ஜலம், எல்லாப் பிராணிகளுக்கும் பிழைப்பைக் கொடுக்கிறது. பிருத்வி ஜகம் முழுவதையும் தாங்குகிறது.
இந்திரன் அந்த சர்வேசனுடைய ஆக்ஞையாலேயே தேவராஜனாகி தேவர்களைக் காத்தும் அசுரர்களை அழித்தும் மூவுலங்களையும் காக்கிறான். இயமன் பாவிகளாக இருந்து இறந்தவர்களுக்கு நரக வாதனையையும் பிழைத்திருப்பவர்களுக்கு வியாதிகளையும் கொடுத்துத் தர்மன் என்று வழங்கப்படுகிறான். நிருதி, சாஸ்திர ஹீனமாகச் செய்த கர்ம பலன்களை அழித்து ராக்ஷசர்களுக்குப் பிரபுவாக இருக்கிறான். வருணன் ஜலத்திற்குப் பிரபுவாக இருந்து, பாவிகளைப் பாசத்தால் கட்டுகிறான். குபேரன், பிராணிகள் செய்த புண்ணியத்திற்கு ஏற்ப நவநிதிகளையும் கொடுக்கிறான். ஈசானன், நல்ல புத்திமான்களுக்கு சம்பத்தையும் ஞானத்தையும் கொடுத்து துன்மார்க்கனுக்கு நிக்கிரகத்தையும் ஈஸ்வராக்ஞையாலேயே செய்கிறான். சர்வேசனுடைய கட்டளையாலேயே ஆதிசேஷன் உலகம் முழுவதையும் தன் தலைக்கு மேல் வைத்துத் தாங்குகிறான். பிரமன் சிவாக்ஞையாலேயே சிருஷ்டி செய்கிறான். தானே மும்மூர்த்திகளாகி முத்தொழிலையும் செய்கிறார் விஷ்ணு. உலகம் முழுவதையும் சிவாக்ஞையாலேயே பரிபாலிக்கிறார். உருத்திரன் சிவாக்கினியாலேயே உலகத்தை அழிக்கிறார். இந்த மூர்த்திகள் ஒவ்வொருவரும் மும்மூர்த்திகளாகி முத்தொழில்களையும் செய்கிறார்கள். காலமானது ஈஸ்வராக்கினையால் யாவற்றையும் உண்டாக்கிக் காத்து, அழிக்கிறது. இவ்வகையாக ஈசனே எல்லாவகையிலும் உலக காரியங்களைச் செய்து வருகிறான். ஆகாயத்திலுள்ள சூரியன் மேகங்களால் மழையைப் பெய்வித்தும், பனியைப் பெய்வித்தும், வெய்யிலை காயவைத்தும் பணிசெய்கிறான். சந்திரன் சிவாக்கினையால், மலர்களை மலர்த்தி, எல்லாப் பயிர்களையும் வளர்த்து காய்க்கனி முதலியவற்றை விருத்திசெய்து, தேவர் முதலியவர்களுக்கு ஆகாரம் கொடுத்து உதவுகிறான். ஆதித்தர்கள், வசுக்கள், உருத்திரர்கள், அஸ்வினி தேவர்கள் மருத்துக்கள், கேசரர்கள், முனிவர்கள், சித்தர்கள், நாகர்கள், மானுடர்கள், மிருகங்கள், பக்ஷிகள், கீடகாதிகள், நதிகள், சமுத்திரங்கள், பர்வதங்கள், வனங்கள், சரசுகள், வேதங்கள், சாஸ்திரங்கள், மந்திரங்கள், யாகங்கள் முதலிய யாவையும் பசுக்கள், காலாக்கினியாதி சிவ பரியந்தமான யாவும் பசுக்களே. பிரமாண்டங்களும் அவற்றின் ஆவரணங்களும், சென்றவை இனி வருவதையும் எண்ணிறந்தனவும் திக்குகளும், கால பேதங்களும் நாம் காண்பனவும் கேட்பனவும் சங்கரனுடைய கட்டளையாலேயே நிலை பெற்றிருக்கின்றன. சர்வேசனுடைய உத்தரவினாலேயே பூமி நிலைத்துள்ளதும் பர்வதங்கள் இருப்பதுவுமாம். மேகங்கள் சமுத்திரங்கள் ஜோதிஷ்கணங்கள் இந்திராதி தேவர்கள் சராசரம் முழுவதும் தத்தமது நிலையில் இருப்பனவாம்.

3.யாவும் சிவன் செயல்
உபமன்யு முனிவர் ஸ்ரீ கிருஷ்ணனை நோக்கி, கிருஷ்ணா! வேதத்தில் சிவபெருமானைப் பற்றிச் சொல்லப்பட்ட ஒரு கதையுண்டு அதைக் கேட்பாயாக. முன்பொரு சமயம் இந்திரன் முதலிய தேவர்கள் போர் செய்து அரக்கர்களை வென்று ஒருவரோடொருவர், நான் வென்றேன், நான் வென்றேன் என்று கலகஞ் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது சாம்பவமூர்த்தி தம் சொரூபத்தை விலக்கி ஒரு யக்ஷ வடிவம் கொண்டு, தேவர்களே! நீங்கள் ஏன் போர் செய்கிறீர்கள்! என்று ஒரு துரும்பை பூமியின் மேல் வைத்து, இதை அசைத்து விகாரப்படுத்தக்கூடியவனே, அரக்கர்களை வென்றவன் என்று சொல்ல அதைக் கேட்ட இந்திரன் கோபத்துடன் புன்னகை செய்து அந்தத் துரும்பை எடுக்க எத்தனித்து, தன்னால் முடியாது இருந்தான். அப்போது அவன் தன் வஜ்ராயுதத்தை எடுத்து அதன்மீது செலுத்த, அதன் கூர்வாய் மழுங்கி நிலத்தில் விழுந்தது. இவ்வகையாக இந்திரன் ஆற்றலிழந்தான். பிறகு அக்கினித்தேவன், நான் இதை எரித்துவிடுவேன்! என்று சமீபத்து, அதை எரிக்க முயலும் போது அவனே எரிந்தான். அதைக்கண்ட வாயுதேவன் நான் இந்தத் துரும்பை ஊதிவிடுவேன்! என்று சொல்லிப் பிரளயகாலத்தில் வீசும் பிரசண்டவேகத்துடன் அதன்மீது மோதினான். அப்போதும் அது இடம் விட்டு அசையவில்லை. காற்றுத்தேவன் தூரமாகச் சென்று விழுந்தான். அதைக்கண்ட வருணன், இந்தத் துரும்பை ஒழிப்பேன் என்று கூறி, தண்ணீர் வெள்ளத்தை உண்டாக்கினான். அதனால் வெள்ளம் ஒழிந்ததேயல்லாமல் அந்தத் துரும்பு அசையவே இல்லை. இவற்றையெல்லாம் கண்ட இந்திரன் மிகவும் ஆச்சரியமடைந்து, யக்ஷரூபத்தில் இருந்த சிவபெருமானை நோக்கி, நீ யார்? என்று கேட்க யக்ஷரூபி ஒன்றும் பதில் சொல்லாமல் அங்கிருந்து மறைந்தார். அந்தச் சமயத்தில் உலக மாதாவாகிய உமாதேவி, அமரர்களின் அகந்தையையும் சந்தேகத்தையும் விலக்கக் கருதி, தேவர்கள் அனைவருக்கும் தெரியும்படி, ஆகாயத்திலே தங்கினாள். ஈஸ்வரியைக் கண்ட இமையவர்கள் கூட்டமாகச் சென்று, தேவியைப் பணிந்து துதித்து, தேவி! இங்கு ஒருவன் வந்து, துரும்பு ஒன்றை நட்டு, எங்கள் வலிமையைத் தொலைத்துச் சென்றான். அவன் யார்? இதை எங்களுக்குச் சொல்ல வேண்டும்? என்று கேட்டார்கள். தேவியானவள் மகிழ்ந்து, அமரர்களே! அங்ஙனம் செய்தவர், மனம், வாக்கு, காயம் என்ற திரிகரணங்களாலும் அறியத்தக்கவர் அல்லர். தேவர், மாநுடர், சராசரங்களோடு அண்டாண்ட பிரம்மாண்டங்களையும் படைத்தும் அவற்றைப் பாலித்தும் அழித்தும் விளங்குவர் அவரே சிவபெருமான். அவரே நமது தலைவர். அவரே எங்களுடைய வல்லமையை உங்களுக்கு உணர்த்தும் படி, அந்தத் துரும்பை, அளவறி கருவியாக அமைத்தார் என்று கூறி, ஜகன் மாதாவாகிய தேவியும் மறைந்தாள். தேவர்கள் அனைவரும் விஷயத்தை உணர்ந்து, சிவபெருமானின் கருணையை வியந்து, தமக்குள் கலகம் ஒழிந்து, சந்தோஷத்துடன் தங்கள் இருக்கைகளை அடைந்தார்கள் என்று கூறி, அந்தச் சிவபெருமானாலேயே உலகம் முழுவதும் நிலைத்துள்ளவகையும் கூறுவேன் என்று உபமன்யு முனிவர், கண்ணனை நோக்கி, மேலும் சொல்லத் துவங்கினார் என்று வாயுதேவன் தொடர்ந்து கூறலானார்.

4.பஞ்சபிரமமும் அஷ்ட மூர்த்தமும்
கிருஷ்ணா! சர்வ ஆத்மஸ்வரூபியான சாம்பவமூர்த்தியின் மூர்த்திச் சிறப்பால் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானே தனது மூர்த்தி பேதங்களால், எங்கும் வியாபித்திருப்பதாலேயே சராசரப் பிரபஞ்சம் முழுவதும் அவரை சிவன் என்று கூறும். அவை பிரமன், விஷ்ணு, ருத்திரன், மஹேஸ்வரன், சதாசிவன் என்ற மூர்த்திகளாகும். அவை தவிர பஞ்சப்பிரமம் என்று சொல்லப்படும் ஐந்து மூர்த்தங்களும் உள்ளன. அந்த மூர்த்தங்களால் வியாபிக்கப்படாதது எது ஒன்றுமில்லை. ஈசானம், தற்புருஷம். அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் என்ற ஐந்துமே பஞ்சப் பிரமமூர்த்தங்களாகும். முற்பட்டதாகிய ஈசானமூர்த்தி மிகச் சிறந்தது. அது பிரகிருதியை அனுபவிக்கும் புருஷனைச் சாக்ஷõத்தாக அதிஷ்டித்துள்ளது. தற்புருஷ மூர்த்தியானது திரிகுணாத்தும் சொரூபமும் போக்கியமயமுமான அவ்வியக்கத்தை அதிஷ்டித்துத் தொழில்கள் நடத்தும். மஹாபூஜ்யமாகவுள்ள அகோரமூர்த்தி தர்மாதி அஷ்டாங்க சம்யுக்தமான புத்தி தத்துவத்தை நடத்தும் வாமதேவமூர்த்தி, அகங்காரத்தை அதிஷ்டித்து உள்ளது என்று ஆகமங்கள் கூறும். சத்தியோஜாத மூர்த்தி மனதை நடத்தும் என்று விவேகிகள் சொல்லுகிறார்கள். ஈசானன், செவி, வாய், சப்தம், ஆகாயம் ஆகியவற்றுக்குத் தலைவன். தற்புருஷன் துவக்கு, பரணி ஸ்பரிசம் வாயுக்கள் ஆகியவற்றுக்குத் தலைவன் அகோரமூர்த்தி சட்சுசு, பாதங்கள் உருவம், அக்கினி இவற்றுக்கு ஈஸ்வரன், வாமதேவ மூர்த்தி, நா, குதம், இரசம், ஜலம் இவற்றுக்குத் தலைவன், சத்தியோஜாத மூர்த்தி நாசி, உபஸ்தம், கந்தம், பூமி, இவற்றுக்குப் பிரபு என்று உபமன்யு முனிவர் உரைத்தார்.

5.சிவசக்தி மகிமை
கிருஷ்ணமூர்த்தி, ஷட்குண ஐஸ்வரியரான உபமன்யு முனிவரை நோக்கி, சுவாமி! உலகம் யாவும் இஷ்டமூர்த்திகளால் வியாப்தமாகவுள்ளது என்று தேவரீர் சொல்லக்கேட்டு உணர்ந்தேன். பார்வதி பரமேஸ்வரருடைய விபூதியை உண்மையாக உணரவிரும்புகிறேன். அந்தப் பார்வதி பரமேஸ்வரர்கள் எப்படிப் பிரபஞ்சத்தை அதிஷ்டித்திருக்கிறார்கள்? என்று கேட்க, உபமன்யு முனிவர், சிவபெருமானைக் தியானித்துச் சொல்லத் துவங்கினார்.
கிருஷ்ணா! நீ கேட்ட பார்வதி பரமேஸ்வரருடைய விபூதியையும் உண்மை நிலையையும் சுருக்கமாகச் சொல்லுகிறேன். விவரமாகச் சொல்ல நான்முகனாலும் இயலாது. உமாதேவியே சக்தி சிவபெருமானே சக்தியையுடையவன். சக்தி சக்திமான்களுடைய விபூதிலேசமே இந்தப் பிரபஞ்சம் முழுதுமாகும். ஜடரூபமான பொருளும், சித்ரூபமான பொருளும் ஆகிய இரண்டும் சுத்தம் என்றும் அசுத்தம் என்றும் பெயர்களைப் பெறும். அன்றியும் பரம் என்றும் அபரம் என்றும் பெயர்களைப் பெறும். சித்ரூபமானது ஜடத்தைப் பொருந்திய பிரகிருதியை உண்டு செய்யும். அந்த ஞான ரூபமே சுத்தம் என்றும் பரம் என்றும் சொல்லப்படும். சித்து அசித்து முதலியவற்றுக்கெல்லாம் சிவனுஞ்சக்தியுமே தலைவர்கள். ஆகையால் பிரபஞ்ச முழுவதும் சிவசக்திகளின் ஸ்வாதீனத்தில் இருக்கும். அவ்வாறில்லாமல், இவர்கள் பிரபஞ்சத்தின் வசத்தில் இருப்பவர்களல்ல. இவர்கள் இருவரும் பிரபஞ்சத்துக்குப் பாலகர்களாகையால் விஸ்வேஸ்வரர் என்று சொல்வார்கள். சந்திரிகையில்லாமல் சந்திரனும், பிரபை இல்லாமல் சூரியனும் பிரகாசியாததுபோல, சிவபெருமான் இருந்தாலும் சக்தியில்லாமல் பிரகாசிக்க மாட்டான். ஆகையால் சிவனைப் போலவே சக்தியும் சக்தியைப் போலவே சிவனும் ஆகும். இவர்களுக்குத் தாரதம்மியம் கிடையாது. சக்தியில்லாமல் சிவனில்லை! சிவனில்லாமல் சக்தியில்லை. சிவன் சக்தியுடன் கூடியிருந்தே தேகிகளுக்குப் பக்தி முக்திகளைக் கொடுக்க வல்லவனாவான். ஏகமாகிய பராசக்தி அபர சக்திகளைச் சிருஷ்டி செய்யும். அந்தச் சக்தியே மூலப்பிரகிருதி, மாயை முக்குணங்கள் என்று சொல்லும்படிப் பிரியும் பராசக்தியே சிவதத்துவம் முதலாகப் பிரகிருதி ஈறாக ஜகம் முழுவதையும் விரிக்கும். எம்பெருமானைப் பிரியாமல் எள்ளில் எண்ணெயைப்போல விளங்கும் பராசக்தி, படைப்புக்காலத்தில் ஜனித்தும், அதனிடமாகக் கிரியாசக்தி தோன்றும். அந்த கிரியாசக்தியே மூலப்பிரகிருதியை அதிஷ்டித்து, நாத தத்துவத்தை உண்டு செய்யும் நாததத்துவத்திலிருந்து விந்து ஜனிக்கும். விந்துவிலிருந்து சதாசிவன் உதிப்பான். சதாசிவத்திலிருந்து மஹேஸ்வரன் உதிப்பான். மஹேஸ்வரனிடத்தில் சுத்தவித்தை தோன்றும். அந்தச் சுத்தவித்தையை வாகீஸ்வரருக்குச் சக்தியாகிய வாகீஸ்வரி என்று கூறப்படும்.
இவ்விதமாகச் சுத்த தத்துவங்கள் ஐந்தும் தோன்றிய பிறகு, அனந்தன் என்னும் வித்தியேஸ்வரனால் மாயை யானது காலம், நியதி, கலை வித்தைகளைத் தோன்றச் செய்யும். கலையிலிருந்து இராசத்துவமும் புருஷதத்துவமும் தோன்றும். மாயையிலிருந்து திரிகுணப்பகுதி ஜனிக்கும். அவற்றிலிருந்து எண்ணற்ற அண்டங்களும் தேகங்களும் ஜனிக்கும். ஆகையால் உலகம் முழுவதும் சக்தி மயமேயாகும். இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்திகளால் சிவன் இவ்வுலகக் காரியத்தை நடத்துகிறான். அவற்றில் இச்சாசக்தி அறியும் ஞானசக்தி அதற்கு இது காரணம் என்று உணர்த்தும். கிரியாசக்தி விரும்பிய தொழிலைச் செய்யும். பராசக்தியின் ஏவலால் அபரசக்தி உலகை உண்டாக்கும். சிவனும் சக்தியும் இல்லாவிட்டால் ஜகத் இல்லை. சிவனும் சக்தியுமாகப் படைத்த உலகைச்சாத்தம் என்பார்கள். சிவனே தந்தை; சக்தியே தாய் சிவனே பரமான்மா. சக்தியே மனோன்மணி, சிவனே மஹேஸ்வரன்; சக்தியே மாயை; சிவனே புருஷன், சக்தியே பிரகிருதி, அச்சிவனும் சக்தியுமே உருத்திரனும் உருத்திராணியும் திருமாலும் கமலையும், பிரமனும் பிரமிணியும் சூரியனும் பிரபையும் இந்திரனும் இந்திராணியும் அக்கினியும் ஸ்வாஹா தேவியும், யமனும் யாமியும், நிருதியும் நைருதியும் குபேரனும் புத்தியும் சந்திரனும் ரோகிணியும், ஈசானனும் ஈசானியும் அனந்தனும், அனந்தையும், காலாக்கினி. ருத்திரனும். காளியும் சுவாயம்பு மனுவும் சதருபையும், தக்கனும், பிரசூதியும் ருசியும் ஆஹூதியும், பிருகுவும், கியாதியும், மரீசியும், சம்பூதியும், அங்கிரசும், ஸ்மிருதியும், அத்திரியும், அநுசூயையும், காசிபனும் அதிதியும், வசிஷ்டனும் அருந்ததியுமாக ஆணுருவங்கள் எல்லாம் சிவனும் பெண்ணுருவங்கள் எல்லாம் சக்தியுமாம். விஷயங்கள் எல்லாம் சக்தி; அவைகளை நுகர்வோன் சிவன், கேட்பவன் சிவன், கேட்டிடப்படுவது சக்தி தொடுவோன் – சிவன்; தொடப்படுவது சக்தி காண்பவன்- சிவன். காணப்படுவது சக்தி, சுவைகள் சக்தி; சுøவுப்போன் சிவன் கணங்கள் சக்தியும் அவற்றை அநுபவிப்பவன் சிவனுமாகும்.
அறிபவன் சிவன் அறிபவை சக்தி; உயிரே சிவன் உடலை சக்தி பகல் சிவன், இரவு சக்தி ஆகாயம் சிவன் பூமி சக்தி சமுத்திரஞ் சிவன் அதன் கரை சக்தி மரங்கள் சிவன் அவற்றில் படரும் கொடிகள் சக்தி சொல் சக்தி அதன் பொருள் சிவன் இவ்வகையாகச் சிவனும் சக்தியும் எப்பொருளிலும் ஒருவரையொருவர் பிரியாது உறைவார்கள். சிவ சக்திகளின் விபூதிகளில் சிலவற்றையே நான் கூறினேன். அநேக ஆயிரம் ஆண்டுகள் சொன்னாலும் அது சொல்லி முடியாதது பிரகிருதி முதலிய விபூதியானது. இப்பொழுது நான் சொன்ன விபூதியாகும். பிருகிருதிக்கு மேற்பட்ட விபூதியை எனக்குத் தெரிந்தவரையில் சிறந்த சிவபக்தனான உனக்குச் சொன்னேன். இந்தச் சிவசக்திகளின் விபூதியைப் பக்தியில்லாதவர்களுக்கும் பாவிகளுக்கும் மாணவ ரல்லாதவருக்கும் சிவனடியாரல்லாதவருக்கும் சொல்லக்கூடாது. இதுவே, நான்கு வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ள பரம இரகசிய பொருள். இந்தக் கதையைச் சொன்னவர்களும் கேட்டவர்களும் தமது உறவினரோடு நெடுங்காலம் வாழ்ந்து உத்தம மைந்தர்களைப் பெற்று, சிவபக்தியில் சிறந்தவராகி தமது பாவங்களையெல்லாம் ஒழித்து சுகவாழ்வு வாழ்வார்கள்! என்று உபமன்யு முனிவர் சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தார்.

6.ஈஸ்வரப் பிரபாவம்
கிருஷ்ணா! தாவரச் சங்கமங்களாகிய பிரபஞ்சம் முழுவதும் சிவசொரூபமேயாகும். இந்த உலகம் முற்றும் சிவரூபம் என்பதைப் பசுக்கள் அறியமாட்டா. அந்தச் சிவபெருமானை உள்ளபடியே உணர்ந்த பெரியோர்கள் அபர பிரமம் என்றும் பரப்பிரமம் என்றும் மஹாதேவன் என்றும் சிவன் என்றும் சர்வசாக்ஷி என்றும் பலவகையாகச் சொல்லுவார்கள். பூதம் முதல் பிரகிருதி ஈறாகவுள்ளவை அபர பிரமமாகும் ஞானரூபமே பரப்பிரமம். யாவற்றையும் படைக்குந்தன்மையாலும் பரம், அபரம் என்பவற்றை அறியும் மேம்பாடுடையவர்கள் பிரமம் என்பார்கள். வித்தை அவித்தைகளின் வடிவமென்றும் சத்து அசத்துக்களுக்கு முதற்பொருள் என்றும் சொல்லுவார்கள். க்ஷரம் என்றும் அக்ஷரம் என்றும் அந்த க்ஷரா க்ஷரங்களுக்குப் பரம் என்றும் சமஷ்டி என்றும் வியஷ்டியென்றும் இரண்டிற்கும் காரணம் என்றும் பிரதானம் என்றும் புருஷன் என்றும் மகா வியக்தம் என்றும் காலம் என்றும் விராட் என்றும் ஹிருண்ய கர்ப்பன் அந்தர்யாமியென்றும் பரன் என்றும் விசுவன் என்றும் தைசதன் என்றும் பவன் என்றும் பர்க்கன் என்றும் சொல்லுவார்கள். கருத்தாவுடன் கிரியை கூடுவதே காரியம் என்பதாகும். குற்றமற்ற தவமுடையவர்கள், கரணம் காரணம், சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம், விருணன், குணன், சுதந்திரன் சுதந்திரமில்லாதவன், குரூரன், சவுமியன் ஆசையுடையவன், நிராசையுடையவன். கிரியாவான் கிரியையில்லாதவன், இந்திரியமுள்ளவன். இந்திரியமில்லாதவன், அக்ஷரன், அழிவுடையவன் என்று பலவாறாகக் கூறுவார்கள். உருவம் அருவம் காணப்படுவது, காணப்படாதது, சொல்லப்படுவது சொல்லப்படாதது. சிந்தாஸ்வரூபம் சிந்தாதீதம், ஞானம், அஞ்ஞானம் உணர்வு, உணவற்றது என்று இவ்வகையாக அந்தப் பொருளைப் பலர் பலவகையாகச் சொல்வார்கள். எந்தவகையாகச் சொன்னாலும் இறுதியில் அந்தச் சிவபகவானையே அடைந்து அவன் திருவடி நிழலிலேயே வசிப்பார்கள். சிவபெருமானை உணரமாட்டாத, பசுக்கள், சக்கரம் போலச் சுழன்று வரும் பிறவிகளில், சிவ பெருமானை நன்றாக உணர்வார்களானால் பசுத்துவமும் பாசமும் ஒழிந்து, சிவபெருமானையடைந்து சிவபெருமானுடைய திருவடிகளில் கலப்பார்கள்.

7.நிஷ்களமும் சகளமும்
கிருஷ்ணா! இன்னும் கேட்பாயாக, அந்தச் சிவபெருமானுக்கு ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் பிரகிருதி, புத்தி, அகங்காரம், மனம், சித்தம், இந்திரியம் முதலியவற்றால் பந்தமும் இல்லை. பூதங்கள், தன்மாத்திரைகள், காலம், வித்தை, நியதி, ராகம் இவற்றாலும் பந்தமில்லை விருப்பு வெறுப்புகள் இல்லை, இருவினையும் இல்லை. கர்த்தா ஒருவனுமிலன். காரணமுங் கிடையாது. ஆதியும் அந்தமும் இல்லை. பகையும் இல்லை. உறவும் இல்லை. குருவுமில்லை. தலைவனும் இல்லை. இறப்பும் பிறப்பும் இல்லை. அவனே பிரமன் விஷ்ணு முதலிய யாவருக்கும் மேம்பட்டவனாய் அந்த அநந்த கல்யாண குணமுடையவனாய் பாவிகளால் அறியப்படாமல் புண்ணியர்களுக்கே காணப்படுவானாகையால் ஞானிகள் அவனைத் தாணு என்று சொல்வார்கள். அந்தச் சிவபெருமானே யாவுமாகி விளங்குவதால் சரவன், மஹான், புருஷன், ஒப்பற்றவன், நீலலோஹிதன் என்ற பெயர்களில் ஞானிகள் உணரும்படி விளங்குவான். உடலில் தகராகாயத்தில் தமது ஞானத்தாலே காணும் முனிவர்களுக்குக் காட்சியளிப்பான். மோகத்தையுடையவர்களுக்கு ஒருபோதும் காட்சிதர மாட்டான். சூரியனும் மின்மினி போல ஒளி குன்றும்படியான பெருஞ்ஜோதிப் பிழம்பாக உள்ளவன், கிருபாமூர்த்தி, உக்கிரரூபி, சாந்தமும் கோபமும் கலந்த குணத்தினன், நிர்க்குணன் அக்ஷரங்களின் வடிவாகவுள்ளவன், அமிர்தசொரூபி, உலகிற்கு முழுமுதல்வன். அந்தகனுக்கு அந்தகன், சின்முத்திரை யுடையவன், அத்தகைய சிறப்பு வாய்ந்த சிவனுடைய சக்தியே சுத்தமாக இருக்கும். அவனையே பிரணவமானது உண்மை யுணர்ந்து கூறும் பிரணவத்தைக் குரு மூலமாக உபதேசம் பெற்றும் முறைப்படி ஜபஞ் செய்தால் சிவபெருமானைத் தரிசிக்கலாகும். சிவபெருமானைத் தரிசித்தால், அதைவிடச் சிறந்தது ஏதுமில்லை. சிவசொரூபத்தை உணர்வதற்கு, ஆகமங்களை ஐயந்திரிபறக்கற்று, மாயா சம்பந்தத்தை ஒழித்து, அப்பிரணவமே சிவசொரூபம் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என மேலோர் சொல்வார்கள். அந்தப் பிரணவமானது அகர, உகர மகரங்களுடன் நாதம் என்பது கூடியதாய் சொல்லப்படும். அந்தப் பிரணவமானது மூன்றரை மாத்திரைக்கான உச்சரிப்புடையதாய் விளங்கும். அவற்றுள் அகரமானது இருக்கு வேதமும், மகானும், பீஜமும், இராஜச குணமும், பிரமனுமாக, இருக்கும். உகாரமானது யஜுர்வேதமும், பிரகிருதியும், சாத்வீக குணமும், விஷ்ணுவுமாக இருக்கும். மகாரமானது சாம வேதமும் புருஷனும் தாமச குணமும் ருத்திரனுமாக இருக்கும். நாதம், அதர்வண வேதமும் செயலற்றதும் சிவசொரூபமாக இருக்கும் என்று சொல்லப்படும். பிரணவமானது நாத தத்துவத்தால் சிவனையறியச் செய்யும், சர்வத்துக்கும், ஆதிகாரணனாகிய சிவபெருமானே சர்வ வியாபியாக அமர்ந்துள்ளான். ஆகையால் அந்தப் பகவானையே பக்திச் சிரத்தைகளுடன் உபாசனை செய்து சிறந்த கதியை அடையவேண்டும் என்று உபமன்யு முனிவர் கிருஷ்ண பகவானுக்கு உபதேசம் செய்தார்.

8.உமாமகேஸ்வர உபாசனையும் ஆகம உற்பத்தியும்
உபமன்யு முனிவர், மேலும் தொடர்ந்தார். கண்ணா! தேவர்களுக்கெல்லாம் தேவனான பரமசிவன், பராசக்தி இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி, மாயாசக்தி, முதலிய சக்திகளாகப் பிரிந்து, தானே விளங்குவன். அந்தச் சக்திகளில், பராசக்தி சதாசிவனையும் மகேசனையும் வித்யேஸ்வரர்களையும் புருஷர்களையும் பிரகிருதியையும் தத்துவங்களையும் பிரமன் முதலானவர்களையும் படைக்கும். அந்தச் சக்தியே, சர்வ வியாபியாய் அணுமயமாய் ஞானமயமாய் ஒப்பற்று விளங்கும். சிவன், சக்தியோடு விளங்குவதால் சிவனை சக்திமான் என்று தவசிகள் கூறுவார்கள். தவமுனிவர்கள் சிவபெருமானைத் தமது அறிவாலறிவதால் வேத்தியன் (அறிவால் அறியத் தக்கவன்) என்றும் சிவனைச் சக்தியே அறியத் செய்தலால், அதனை விஞ்சை என்றும் சொல்வார்கள். மேலே சொன்ன பராசக்தி பிரமன் முதலிய எல்லோரையும் மயங்கச் செய்து அந்த மயக்கத்தை ஒழித்து, முக்தியடைய உதவுவான். அத்தகைய சக்தியாகிய மாதேவியின் பாதங்களைப் பணிந்து முக்தி வீட்டை அடைய வேண்டும். பூர்வத்தில் முனிவர்கள், உலகம் உண்டாவதற்குக் காரணம் என்ன? நாமெல்லோரும் எங்கிருந்து பிறந்தோம்? யாவரால் பிழைத்திருக்கிறோம்? இந்தச் சுக துக்கங்களை நமக்குக் கொடுப்பவர் யாவர்? கடல் சூழ்ந்த இந்தப் பூமியைப் படைத்தவர் யார்? என்ற சந்தேகங்களையடைந்து, யோக நிஷ்டையிலிருந்து, எமது சிவபெருமானுடைய வாமபாகத்தில் பொருந்திய உமாதேவியைத் தரிசித்தார்கள். அவ்வுமாதேவியின் திருவருளால் பாசங்களை ஒழித்து, மயிலின் சாயலையுடைய அந்தத் தேவியோடு சிவபெருமானையும் தமது ஞான திருஷ்டியால் கண்டார்கள். அவ்வாறு பார்த்து, மனம் மகிழ்ந்து இவனே, எல்லாப் பொருள்களுமாக வியாபித்துள்ளவன் என்று சந்தேகம் ஒழிந்து, இவனே பரம்பொருள் என்று தெளிந்து மோக்ஷம் அடைந்தார்கள். சிவபெருமானையும் உமாதேவியையும் மனதில் கொண்டு தியானம் செய்பவர்களே, மோக்ஷம் அடையத் தக்கவர்கள். கர்மயோகமும் ஞானயோகமும் இந்த விஷயத்தில் வேண்டுவதில்லை. சிவபெருமானின் கடாக்ஷத்தை அடைய வேண்டியதே ஜீவனின் தொழில். அந்தச் சிவபெருமானைக் கருதியவுடன் தேவர்கள் முதல் கிருமி ஈறாகவுள்ள ஜீவர்கள் யாவரும் பந்தம் ஒழிந்து முக்தியடைவதில் தடையில்லை.
கிருஷ்ணா! ஆன்மாக்கள் தாய் வயிற்றில் கருப்பையினுள் கட்டப்பட்டுக் கிடக்கும்போதாயினும் பிறக்கும்போதாயினும், வயோதிகத்திலாயினும், நரகமனுபவிக்கையிலாயினும், சுவர்க்கம் அனுபவிக்கையிலாயினும் நமது சங்கரன் திருவுளம் செய்தால் உடனே அந்த ஆன்மாவுக்கு முக்தி நிலை கைகூடுவது நிச்சயம் அவனுடைய திருவருளாலேயே பக்தி உண்டாக வேண்டும். சிவபக்தியினாலேயே சிவகடாக்ஷம் உண்டாக வேண்டும். அந்தச் சிவபக்தி எண்ணிறந்த பிறவிகளில் வேதோக்தமான நற்கர்மங்களைச் செய்த புண்ணிய பயனால் சிவபெருமான் அனுக்கிரகம் செய்ய உண்டாவதாகும். சிவபக்தியுண்டாவதால் அது சிவதர்மங்களைச் செய்விக்கும். சிவதர்மம் செய்வதால் சிவபெருமான் திருவருள் செய்வான். திருவருளால் இருவினைத் தொடர்பு அழியும். இருவினைத் தொடர்பு அழிந்தால் முக்தியுண்டாகும். சிவபெருமானுடைய திருவடியில் சிறிதளவு ஒருவகையாகப் பக்தி செய்தவர்களும் மேல் பிறவியடைய மாட்டார்கள். தேகத்தால் பணிதலே பக்தியாகும். உடலாற் பணிதலும் வாக்கால் அவனைத் துதித்தலும், மனதால் அவனைத் தியானித்தலும் கையால் பூஜித்தாலும் ஒவ்வொரு அவயவங்களாலும் அவனைப் பணிவிடை செய்தலுஞ்சிவ தர்மங்களாகும். தவம், கருமம், ஜபம், தியானம், ஞானம் எனப்படும். அவற்றுள் சாந்திராயணம் முதலியன தவங்கள். சிவலிங்கபூஜையே கருமம். பஞ்சாக்ஷ மந்தரஞ் செபித்தலே ஜபம். சிவ பெருமானை மனதால் தியானித்தாலே தியானம். சிவாகமங்கள் முறையிடுவதே ஞானம் பூர்வம். சிவபெருமான், ஆன்மகோடிகள் கடைத்தேறும்படி உமாதேவியாருக்கு விரித்துக் கூறியதாகவுள்ள ஆகமங்கள் இருபத்தெட்டே ஞானத்தை உதவ வல்லன். அவை, காமிசம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூஷ்மம், ஸஹஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம், விஜயம் நிஸ்வாஸம், ஸ்வயம் பூதம், ஆக்நேயம், வீரம், ரவுரவம், மகுடம், விமலம், சுந்தரஞானம் முகபிம்பம், ப்மோத்கீதம், இலளிதம், சித்தம் சந்திரதம், சர்வோத்தமம், பாரமேச்சரம் கிரணம், வாதுஞ்சம் என்பன. காமிசம் யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம் என்னும் ஐந்தையும் ஸத்தியோஜாத முகத்திலிருந்து கவுசிகரிஷியின் பொருட்டும், தீர்த்தம் சூஷ்மம், ஸஹஸ்ரம், அம்சுமான் சுப்ரபேதம் என்ற ஐந்தையும் வாமதேவ முகத்திலிருந்து காசிபரிஷியின் பொருட்டும், விஜயம், நிஸ்வாஸம் சுவாயம்பவம், ஆக்னேயம், வீரம் என்ற ஐந்தையும் அகோர முகத்திலிருந்து பாரத்வாஜ ரிஷியின் பொருட்டும், புரோகீதம், இலளிதம், சித்தம் சந்தாநம் சர்வோக்தம், பாரமேசுவரம் கிரணம் வாதுளம் என்ற எட்டையும் ஈசானமுகத்திலிருந்து அகஸ்திய ரிஷியின் பொருட்டும் அருளிச்செய்தார் என்பது நூல்வழக்கு. ஆகம என்னும் மொழியில் ஆ என்பது ஞானம் க என்பது மோக்ஷம் ம என்பது மலநாசமும் ஆம். ஆகவே, ஆன்மாக்களுக்கு மலத்தை நாசஞ்செய்து ஞானத்தை புதுப்பித்து மோக்ஷத்தைக் கொடுப்பதால் ஆகமம் என்ற பெயராயிற்று. வேதமும் ஆகமமும் சிவபெருமானாலேயே அருளப்பட்டவை. ஆகையால் அவை தம்முன் சிறிதும் பேதமில்லாமல் இயலுந்தன்மையுடையன.
சிவபெருமானுக்கு காமிசம் திருவடிகள், யோகசம் கணைக்கால்கள், சிந்தியம் திருவடி விரல்கள், காரணம் கொண்டைக்கால்கள், அசிதம் முழந்தாள்கள், தீப்தம், தொடைகள், சூஷ்மம் குய்யத்தானம், சகஸ்ரம் கடித்தானம், அம்சுமான் முதுகு சுப்பிரபேதம் கொப்பூழ், விஜயம் உதரம், நிஸ்வாஸம் நாசி, சுவாயம்புவம் முலைகள், ஆக்கினேயம் கண்கள், வீரம் கழுத்து, ரவுரவம் செவிகள், மகுடம் திருமுடி, விமலம் கைகள், சந்திரஞானம் மார்பு, முகபிம்பம் திருமுகம், புரோத்கீதம் திருநாக்கு, இலளிதம் கபோலம், சித்தம் திருநெற்றி, சந்தானம் குண்டலம், ம சருவோத்தமம் உபவீதம் பாரமேஸ்வரம் ஆரம், கிரணம் இரத்தின ஆபரணங்கள், வாதுளம் திருப்பரி வட்டம், காலோத்தரம் திருமேற்பூச்சு, மற்றைய உப ஆகமங்கள் எல்லாம் பரிமள திரவியங்களும் புஷ்பங்களும் சைவசித்தாந்தம் நைவேத்தியமுமாம் அவற்றுள் காமிசத்துக்கு மூன்று யோகஜத்துக்கு ஐந்து சிந்தியத்துக்கு ஆறு காரணத்துக்கு ஏழு, அசிதத்துக்கு நான்கு, தீப்தத்துக்கு ஒன்பது சூஷ்மத்துக்கு ஒன்று, சகஸ்ரத்துக்குப் பத்து அம்சுமானுக்குப் பன்னிரண்டு சுப்பிரபேதத்துக்கு ஒன்று விஜயத்துக்கு எட்டு, சுவாயம்புவத்துக்கு மூன்று, ஆக்னேயத்துக்கு ஒன்று வீரத்துக்கு பதின்மூன்று ரவுரவத்துக்கு ஆறு, மகுடத்துக்கு இரண்டு விமலத்துக்குப் பதினாறு சந்திரஞானத்துக்கு பதினான்கு முகபிம்பத்துக்குப் பதினைந்து, புரோத்கீதத்துக்குப் பதினாறு. இலளிதத்துக்கு மூன்று சித்தத்துக்கு நான்கு; சந்தானத்துக்கு ஏழு, சர்வோத்தத்துக்கு ஐந்து, பாரமேஸ்வரத்துக்கு ஏழு: கிரணத்துக்கு ஒன்பது வாதுளத்துக்கு பன்னிரண்டு உபபேதங்கள் உள்ளன. இந்த ஆகமங்களும் முதலில் சொன்ன பத்தும் சிவபேதம் என்றும் இறுதியிற் சொன்ன பதினெட்டும் சூத்திரபேதங்கள் என்றும் சொல்லப்படும்.
இவை ஞானபாதம், யோகபாதம், சிரியாபாதம், கிரியாபாதம் என்று தனித்தனி நான்கு பாதங்கள் உடையன. இவற்றுள், ஞானபாதத்தில் பரமசிவனுடைய சொரூபமும் விஞ்ஞான கலர் பிரளயாகரர் சகலர் என்ற ஆன்மாக்களின் சொரூபமும் ஆணவம் காமியம் மாம்யேயம் வைந்தவம் திரோதான சக்தி என்னும் பாசங்களின் சொரூபமும் சக்தியின் சொரூபமும் சிவதத்துவம் முதல் பிருத்வி தத்துவம்வரை முப்பத்தாறு தத்துவங்கள் உற்பத்தியும், இவை ஆன்மாக்கள் போகம் புசிக்கைக்குக் கருவியாகும் முறைமையும் பாசுபதம், மஹாவிரதம் கபாலம் முதலிய மதங்களின் சொரூபமும் சொல்லப்படும். இனி கிரியாபாதத்தில் மந்திரங்களின் உத்தாரணம் சந்தியாவந்தனம், பூஜை ஜபஹோமங்களும் சமய விசேஷநிருவாண ஆசாரிய அபிஷேகங்களும் புக்தி முக்திகளுக்கு உபாயமாகிய தீøக்ஷயும் கூறப்படும். இனி யோகபாதத்தில் இந்த முப்பத்தாறு தத்துவங்களும் தத்துவேசுரரும் ஆன்மாவும், பரமசிவனும் சீதையும் ஜகத்துக்கு காரணமாகிய மாயை மஹாமாயைகளைக் காணும் வல்லமையும் அணிமாதி சித்திகள் உண்டாகும் முறைமையும் இயமம், நியமம் ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தியானம், தாரணம் சமாதிகளினுடைய முறைமையும் மூலாதாரம் முதலிய ஆதாரங்களின் முறைமையும் கூறப்படும். இனி சரியாபாதத்தில் பிராயச்சித்த விதியும் பவித்திர விதியும் சிவலிங்க லக்ஷணமும் நந்தி முதலிய கணநாதர் லக்ஷணமும், ஜபமாலை, யோகபட்டம், தண்டம், கமண்டலம் முதலியவற்றின் லக்ஷணமும் அந்தியேஷ்டி விதியும் சிரார்த்த விதியும் கூறப்படும்.
சிவபேதம் பத்தையும் கேட்டவர் ஒருவரிடத்தொருவராக ஒவ்வோராகமத்துக்கு மும்மூன்று பேராம் அணு சதாசிவருடன் அனைவராகிய பிரணவர் முதல் முப்பதின்மராவர். அவர்கள் பெயர் வருமாறு: காமிகங் கேட்டவர் பிரணவர் திரிகலா; ஹரர்; யோகசங்கேட்டவர் சுதாக்கியர் பஸ்மர்; விபு; சிந்தியக்கேட்டவர் சுதீப்தர், கோபதி, அம்பிகை, காரணம் கேட்பவர் காரணர் சர்வருத்திரர்; பிரசேசர்; அசிதங் கேட்டவர்; சுசிவர்; சிவர்; அச்சுதர்; தீப்தம் கேட்டவர் ஈசர்; திரிமூர்த்தி உதாசனர்; சூஷ்மங்கேட்டவர் சூஷ்மர் வைசிரவணர்; பிரபஞ்சனர்; சகஸ்ரங் கேட்டவர் காலர்; வீமர்; தர்மர் அம்சுமான் கேட்டவர் ஒருவரிடத்தொருவராக ஒவ்வோராக மத்துக்கு இவ்விரண்டு பேராய் அநாதி ருத்திரர் முதல் முப்பத்து அறுவராவர் அவர் பெயர் வருமாறு விசுபங்கேட்டவர்; அநாதி ருத்திரர்; பரமேசர்; நிஸ்வாஸங் கேட்டவர், தஸார்ணர் பார்ப்பதி; சுவாயம்புவங்கேட்டவர்; நிதனேசர் பத்மபூ; ஆக்நேயங்கேட்டவர்; வியோமர்; உதாசனர்; வீரங்கேட்டவர் தேசர் பிரஜாபதி; ரவுரவங் கேட்டவர்; பிரமேசர் நந்திகேசர்; மகுடங் கேட்டவர்; சிவர்; மஹாதேவர்; விமலங் கேட்டவர்; சர்வாத்மர்; வீரபத்திரர் சந்திரஞானம் கேட்டவர்; அநந்தாபிரகஸ்பதி; முகபிம்பம் கேட்டவர்; பிரசாந்தர் ததீசி புரோத்கீதம் கேட்டவர் சூலி கவசர்; இலளிதம் கேட்டவர் ஆலயேசர், இலளிதர்; சித்தங்கேட்டவர்; விந்து சண்டேசர்; சந்தானங்கேட்டவர்; சிவ நிஷ்டர்; அசம்பாதர் சர்வோத்தங் கேட்டவர் சோமதேவர் நிருசிங்கர் பாரமேஸ்வரங்கேட்டவர்; ஸ்ரீதேவி உசனர் கிரணங்கேட்டவர்; தேவவிபுசம் வர்த்தர், வாதுளங்கேட்டவர்; சிவர், மகாகாளர் விஷய வாதனையில் மனஞ் செல்லாது அடங்கி அவ்விறைவனுடைய திருவடியை இத்தகைய ஆத்மமார்க்கத்தாலேயே அடையவேண்டும் என்று உபமன்யு முனிவர் கூறினார்.

9.தேவர்களுக்குச் சிவாகமம் அளித்தல்
கிருஷ்ணர் உபமன்யு முனிவரை நோக்கி, தவசியே! சந்திர சேகரனும் சர்ப்ப ஆபரணனுமாகிய சிவபெருமான் உமா தேவியாருக்கு சிவாகமங்களைக் கூறியவகையில் எனக்கும் அவற்றைக் கூறவேண்டும் என்று கேட்க, உபமன்யு முனிவர் சொல்லத் துவங்கினார்.
பூர்வத்தில் சிவபெருமான் அவ்யக்தத்திலிருந்து தோன்றிப் பதுமாசனனாகிய பிரமதேவனைப் படைத்தான். அந்தப் பிரம தேவன் உலகு வர்ணம், ஆச்சிரமம், சோமம் என்பனவற்றைப் படைத்தான். சோமத்திலிருந்தும் உலகையெல்லாம் தன்னிடத்து ஒடுக்கியுள்ள ஆகாயம் தோன்றியது. அதற்குப்பிறகு ஆகாயத்திலிருந்து பிற பூதங்களும் அவற்றிலிருந்து எல்லாப் பொருள்களுமாக முறையே தோன்றின. பிரமன் முதலிய தேவர்கள் உருத்திர மந்திரத்தினால் சிவபகவானை துதிக்க, சிவபெருமான் அவர்கள் நேரே நின்று அவர்களது அறிவை மயக்க அவர்கள் இறைவனை உணராமல் நீ யாவன்? என்று கேட்டார்கள். அப்போது சிவபகவான் அமரர்களே! யானே இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் காலத்திரயங்களிலும் உள்ளவன். பகைப்புலன்கள் துன்பஞ் செய்யவொட்டாமல் அவற்றைத்தடுத்து எம்மை யடைந்தவர்கள் மோட்சமடைவார்கள். எம்மை அடையாதவர்கள் ஒருகாலத்திலும் மோக்ஷம் என்பதைக் கண்ணாலும் காண மாட்டார்கள் என்று கூறி அங்கிருந்து மறைந்தார். அப்போது அங்கிருந்த தேவர்கள் சிவபெருமானே! இவ்வாறு அருளிச் செய்தனன் என்று தெரிந்துகொண்டு, சிவபக்தியுடையவர்களாய்ப் பாசுபத விரதத்தை மேற்கொண்டு சிவதியானபரர்களாய் நெடுங்காலம் கழித்து வந்தார்கள். சிவபெருமான் அவர்களுடைய அன்புக்கு அகமிகமகிழ்ந்து தமது ஸ்வரூப தரிசனம் தந்தார். அதனால் தேவர்கள் சிவபெருமானையும் வாமபாகத்தில் இருக்கும் மலைமகளையும் மான், மழு, திரிசூலம் முதலியவற்றையும் கண்கள் களிக்கக்கண்டு, அளவில்லாத மகிழ்ச்சிக் கொண்டு சிவபெருமானையும் உமாதேவியாரையும் பலவாறு துதித்து, அஷ்டாங்க பஞ்சாங்க நமஸ்காரஞ் செய்து நிற்க, சந்திரசேகரனாகிய சங்கரன் தேவர்களே! உங்கள் தோத்திரத்திற்காக மனமகிழ்ந்தோம் என்றார்.
தேவர்கள் கடவுளே! தங்களை நாங்கள் பூஜிக்க விரும்புகிறோம் என விண்ணப்பஞ் செய்ய அப்படியே செய்வீர்களாகவென்று அவர்கட்கு அனுமதி கொடுத்துச் சூரியமண்டல நடுவில் பிரகாசிக்கும் நான்கு முகங்களுடன் காட்சி தந்தனர். அதை உணர்ந்த தேவர்கள் அவ்விறைவனுக்கு அர்க்கியம் கொடுத்துப் பலவாறு பூஜை செய்தார்கள். அவர்கள் செய்த பூஜைக்கு அகங் களிகொண்ட சிவபகவான் பூர்வம் உமாதேவியாருக்கு உபதேசித்த ஆகமங்களை அவர்களுக்கு முழுதுங் கூறியருளி மறைந்துபோனார். அவ்வாறு சிவபெருமான் மறைந்த பிறகு தேவர்கள் அவ்வாகமங்களை உணர்ந்து இதனால் வேதியர், அரசர், வணிகர் என்ற குலத்தினர் பூஜை செய்வதற்குரியவர்கள் என்று தீர்மானித்துக்கொண்டு, சுயேச்சையாக சென்றார்கள். தேவர் சென்ற பிறகு நாட்கள் கடந்தன. இறைவன் அளித்த ஆகமங்களில் சிற்சில இருந்தன. அதைக் கண்ட உமாதேவியார் மனங்கனிந்து சிவபெருமானை நோக்கி, கடவுளே! இறந்த ஆகமங்களை மீண்டும் சரிவர நடத்தச் செய்ய வேண்டும் என்று கேட்ப, சிவபெருமான் தேவியின் விருப்பத்தை ஏற்று, ஓர் இரவில் அதை மீண்டும் கூறினார். அந்த ஆகமங்களைச் சிவகடாக்ஷத்தால் அகஸ்திய முனிவரும், யானும் குருவும் ததீசியும் கற்று உணர்ந்து உலகில் பலருக்கும் வெளிப்படுத்தினோம். கலியுங்கள் தோறும் அந்தச் சங்கர பகவானே யோகாசாரியராகத் தோன்றி சிவாம்சங்களை விளக்குவான். அந்தச் சமயத்தில் அவருக்கு மாணவர்களாக நால்வர் தோன்றி அதனைப் பிரபலப்படுத்துவார்கள். ஆகமத்தை உணர்ந்து சிவபெருமானே கடவுள் என்று உறுதி கொண்டு, அவ்விறைவனை அடைந்தவர்களே, முக்தியிற் கலப்பார்கள் என்று உபமன்யு முனிவர் கண்ணபிரானுக்குக் கூறியருளினார்.

10.ஆசிரியர் பெயரும் மாணவர் பெயரும்
கிருஷ்ணமூர்த்தி உபமன்யு முனிவரைப் பணிந்து, தவஞானியே! கலியுகந்தோறும் ஆகமத்தை விளக்கும்படி வருகின்ற ஆசிரியர்கள் பெயர்களையும் அவர்களிடம் கற்று உலகினருக்கு உரைக்கும் மாணவர்களின் பெயர்களையும் கேட்க, உபமன்யு முனிவர் சொல்லலானார்.
அந்த ஆசாரியர்கள் சுவேதன், சுதாரன், தமணன், சுகோத்திரன், சுங்கன், லோகாஷிசைகிஷவ்யன், திவாகரன், குஷபன், ருத்திரன், அத்திரி, ஜ்வலைகன், கவுதமன், வேதசிரன், கோகர்ணன், குஹாவாசி, ஜிகண்டி, ஜடாமாலி அட்டகாசன், தாருகன், இலாங்கதி, மஹாகாயன், சூலி, ஜண்டி, முண்டிசன், சயிஷ்ணு, சோமசன், வருணேசன் என்று சொல்லப்பட்டவர்கள். அந்த யோகசாரியார்களுக்கு மாணவர்களாக இருந்தவர்கள் சுவேதன், அவேதாசியன், சுவேதலோகீதன், துந்துபி, சதரூபன், ருக்ஷிகன், கேதுமான், விகோசரன், விசேகன், விசாகன், சாபசாதனன், சமூகன், துன்மதன், துன்முகன், துரதுக்கிரமன், சனகன், சனந்தனன், சனாதனன், சனத்குமாரன், சுதர்மன், விரசன் சங்வவான், விநதன், சாரசுதன், மேஹன், மேஹவாஹனன், கபிலன், ஆசுசி, பஞ்சசகன், பயிலன் பராசரன், கற்கன், பார்க்கவன், அங்கிரசு, நிராமித்திரன், பலவேந்தன், தபேர்தனன், லம்போதரன், லம்பன், லம்பாக்ஷன், ஸம்கேசன், சர்வக்ஞன், சமபுத்தி, சாத்தியன், சுதாமா, சத்தியன். காசிபன், அத்திரி, வசிஷ்டன், உக்கிரன், சிரவணன், சிரவிஷ்டகன், குணி, குணிவாகு, குசரீரன், குநேத்திரன், காஷ்யபன், உசன், சியவனன் உசத்தியன், பிருஹஸ்பதி, வாமதேவன், மஹிகாயன், மஹாநீலன், வாசச்சிரவா, சவாசன், கிருதுமான், கவுதமன், மதுபிங்கன், சுவேதன், கேது, உசிதன், பிருஹதுக்கதன், தேவலன், சாலிகோத்திரன், சுவசியன் உலனாசுவன், சரத்துவசு குண்ட கன்னன் மஹாகும்பன், சகலன், பிரபாகுகன், உலூகன், சம்புகன் மத்யுதன், ஜவலாயனன், அக்ஷபாதன், குமாரன் உத்தியோனன் அச்சன்னாகுசிகன், கர்ப்பன் மித்திரகன் என்று சொல்லப்படுவார்கள்.
இவர்கள் யாவரும் அந்தந்தக் கலியுகங்களில் உண்டாகும் ஆசிரியர்களைப் பணிந்து அவர்கள் பால் சிவதீøக்ஷப் பெற்றுத் திருவெண்ணீறு பூசி, உத்திராக்ஷ மாலையணிந்து, பஞ்சாக்ஷர மந்திரம் ஓதி, வேதசிவாகமங்களை ஆய்ந்து அறிந்து பாசுபத விரதிகளாகிச் சிவபெருமானை இடைவிடாமல் தொழுது அவ்வெம்பிரானுடைய மஹிமா அதிசயங்களை விளங்கச் செய்வார்கள். இவர்கள் யாவரும் ஆசிரியர்கள். ஆகையால் இவர்களுடைய பாதங்களைப் பணிந்து சிவபெருமானிடத்துப் பக்தியுடன் சிவபூஜை செய்பவர்கள் அழியாத முக்தி வீட்டை அடைவார்கள் என்று உபமன்யு முனிவர் ஸ்ரீகிருஷ்ண மூர்த்திக்கு உரைத்தருளினார்.

11.சிவபெருமான் மகாதேவிக்கு அருளியது
உபமன்யு முனிவர் அவ்வாறு கூறியதும், ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி அவரை நோக்கி, மானுட தேகங்கொண்டு வந்த தெய்வமே! அந்தச் சிவபகவானே உமாதேவியார் கேட்ட கேள்வியையும் அதற்கு அவர் சொன்ன பதிலையும் கேட்க ஆவலாக இருக்கிறேன். தயவு செய்து கூறுங்கள் என்றார்.
உடனே உபமன்யு முனிவர், சிவபெருமானைத் தியானித்து சொல்லத் துவங்கினார். கிருஷ்ணா! முன்பு ஒரு காலத்தில், மந்தர பர்வதத்தின் சாரலில் ஒரு நந்தவனத்தில் சிவபெருமான் உமாதேவியின் தோழிகளில் ஒருத்தியாகிய சுபாவதி என்பவள் பலவகை மலர்களைக் கையில் தாங்கிவந்து அவற்றால் விநோதமான மாலைகளைத் தொடுத்துத் தேவியின் கூந்தலைச் சீவி அழகுப்படுத்திப் பின்னி அதில் அந்த மலர் மாலைகளை அணிவித்தாள். சிவபெருமான் அப்பொழுது உமாதேவியை எடுத்து தம் தொடை மீது இருத்திக் கணங்கள் எல்லோரும் வந்து துதி செய்யும்படி ஒரு சிங்காதனத்தில் எழுந்தருளியிருந்தார். அப்போது உமாதேவி சிவபெருமானை நோக்கி, தலைவரே! அறியாமையுடைய மானுடருக்கு எவ்வகையாக எதனால் கிருபை செய்கிறீர்? இந்த விவரத்தை எனக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்க, சிவபெருமான் கூறலானார். பிராண நாயகி, கேட்பாயாக! கருமம், தவம், ஜெபம், சமாதி, ஞானம் முதலியவற்றைச் செய்பவர்களுக்கு யாம் சுவாதீன மல்லோம். ஆனால் பிறருக்குத் தீமை செய்யாது எம்மிடத்திலேயே இடையறாப் பக்தியுடையவர்களுக்கே சுவாதீனமாக இருப்போம். அவர்களுடைய மனதிலேயே வசிப்போம். பிரமதேவன் கூறிய வகையில் வர்ணாசிரம தர்மங்களை நிறைவேற்றுதல் அசாத்தியம் என்று நாம் அதை வேறு வகையாகக் கூறியுள்ளோம். நம்முடைய அன்பர்கள் அதையே கடைப்பிடித்து ஒழுகுவார்களாயின், மும்மலங்களும் பாசபந்தங்களும் ஒழியப் பெற்று, தேவர் உலகத்தை அடைந்து நம்முலகத்தைப் பெற்று, மோக்ஷத்தை அடைந்து அனுபவிப்பார்கள். ஆசாரியனிடத்தில் முறைப்படி தீøக்ஷ செய்து கொண்டு சிவதர்மத்தை அனுசரித்து நடப்பார்களாயின், சிவ தீøக்ஷயில்லாதவர்களுக்குச் சொல்லி தர்மப்படி நடப்பவர்கள் அடையும் பயனைவிடக் கோடி பங்கு விசேஷப் பயனையடைவார்கள். ஆகையால் சிவதீøக்ஷ செய்து கொண்டே வர்ணாசிரம தர்மங்களை விதிப்படி செய்யவேண்டும். கலியுகங்களிலெல்லாம் இவ்வேற்பாடுகள் நிலைதவறுதலால், நாமே மனங்கனிந்து யோகாசாரியனாகி மாணவர்கள் புடைசூழ வந்து சிவ தருமங்களை நிலைபெறச் செய்வோம். நம்மிடம் விசாரணை செய்தறிந்த மாணவர்களை வழிபட்டு அவர் கூறியபடி சிவ தர்மங்களைச் செய்தவர்களே உண்மையை அறிந்து மோக்ஷம் அடைவார்கள். அவ்வாறல்லாமல் அவர்கள் சொல்லியதைக் கொள்ளாமல் வெவ்வேறு மார்க்கங்களைக் கைக்கொள்வோர்கள் தீயநெறியில் பிரவேசித்து, இம்மை மறுமைப் பயன்களையும் இழந்து துன்பமடைவார்கள். முக்தியைத் தரவல்ல உத்தம வழியில் முயன்று செல்லாதவர்கள் உத்தமர்களாகமாட்டார்கள். ஆனால் அவர்கள் அறிவிருந்தும் அறிவீனர்களும், கண்கள் இருந்தும் குருடர்களும், வாயிருந்தும் ஊமைகளும், செவிகள் இருந்தும் செவிடர்களாகவும் ஆவார்கள்.
மோக்ஷப் பிராப்தமான சிவதர்மமானது, ஞானம், கிரியை, சரியை, யோகம் என்ற நான்கு பாதங்களையுடையதாய் அநாதியாக இருக்கும். பதி பசு பாசங்களின் இலக்கணங்களை உணர்வதே ஞானம், தவம், ஜபம் முதலியவற்றால் சாதிக்கத்தக்க ஷடத்துவாக்களை சுத்தி செய்வதே கிரியை வர்ணாசிரமங்களுக்குத் தக்கவாறு நடப்பதே சரியை, என்னால் கூறப்பட்ட வகையிலேயே என்னிடத்திலேயே பக்தியும் பிற தேவர்களிடத்திலேயே மனதை நிறுத்தி பிற இடங்களில் செலுத்தாது இருப்பது நூறு அசுவமேத யாகங்களை செய்ததைவிட உயர்ந்த பயனைத்தரும். விஷய விருப்பம் உடையவர்களுக்கு அது சாத்தியப்படாது. இமய நியமாதிகளால் இந்திரிய நிக்கிரகஞ் செய்து விரக்தனானவனுக்கு எல்லாப் பாவங்களையும் விலக்கத்தக்க சித்தப் பிரசாதன ரூபமான இந்த யோகங்கைகூடும், ஞான யோகத்துக்குச் சாதனங்களையும் சொல்லுகிறேன். வைராக்கியத்தால் ஞானமும், ஞானத்தால் யோகமும் உண்டாக வேண்டும். அதை உணர்ந்தவன் பெரும்பாவியாக இருந்தாலும் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான். தயை, அஹிம்சை, ஞான உணர்வு, சத்தியம், களவாடாமை, ஆஸ்திக்யம், சிரத்தை, இந்திரியை நிக்கிரகம், அத்தியாபனம், அத்தியயனம், ஈசுவரபாவம், ஞானசீலத்துவம் இவை யாவும் இருந்தாலன்றி ஞானயோகம் சித்திக்க மாட்டாது. அவ்வாறு இருந்தால் அதிவிரைவில் ஞானம் உண்டாகி அந்த ஞானத்தால் யோக சித்தி உண்டாகும். அத்தகைய ஞானி, தனது ஞானாக்கினியால் இந்தத் தேகத்தைத் தகிக்கச் செய்து, என் அனுக்ரகத்தால் கர்மபந்தங்களை ஒழிப்பான். புண்ணிய பாவஸ்வரூபமான கர்மமே, முக்திக்குத் தடையாக இருப்பதாகும். ஆகையால் யோகவான் தனது யோகத்தால் புண்ணிய பாவங்களை விலக்கிக் கர்மங்களிலே பலா பேஷையில்லாமல் கர்மங்களை மட்டுமே செய்கிறான். கர்மங்களை அறவேயொழிக்கக்கூடாது. பார்வதி என்னை முதலில் கர்மயோகத்தாலேயே பூஜிக்க வேண்டும். அதற்குப் பிறகு ஞான யோகத்தில் விருப்புண்டாகும். பிறகு யோகத்தைப் பயின்று வரவேண்டும். எனது உண்மை நிலையை உணர்ந்தவர்கள் கர்மயாகத்தால் என்னைப் பூஜிக்கமாட்டார்கள். நிம்மதியாக என்னிடத்திலேயே பொருந்திய மனமுடையவர்கள், ஞான யோகிகளாகி உன்னுடைய சாயுஜ்ஜியத்தையடைவார்கள். என்னை ஆஸ்ரயித்து விரக்தர்களாக இருப்பவர்கள், ஞான சரியா கிரியைகளிலே சிறந்தவர்கள் என்று கருதப்படுவார்கள்.
பார்வதி! என் பூஜையானது பாஹ்யபூஜை என்றும் ஆப்யந்தர பூஜை என்றும் இருவகைப்படும். அவற்றுள் புறத்தில் செய்கிற பாஹ்ய பூஜையைவிட மனத்தில் செய்யும் ஆப்யந்திர பூஜையே சிறந்தது. அது மனம் வாக்கு காயங்களால் மூவகைப்படும். சிலர் அதை ஜபம், கர்மம், தவம், தியானம், ஞானம் என்று ஐவகைப்படும் என்பார்கள். பிறரறியும்படி என்னைப் பூஜிப்பது – பாஹ்யம் அதையே தனக்கு மட்டும் தெரியும்படிச் செய்வது ஆப்யந்தரம் எனப்படும். என்னிடத்தில் ஆசக்தியுடைய மனமும் என்னுடைய நாமங்களை இடைவிடாமல் உச்சரிப்பவருக்கும் என்னுடைய சின்னங்களைத் தரித்து என் உபசாரத்தையே செய்யத்தக்க காயமும் ஆகிய இம்மூன்றும் மூவகைப்படும். யாகாதிகளால் என்னை ஆராதிப்பதே கர்மம். எனக்காக தேகத்தைச் சோஷிக்கும் வண்ணம் சாந்திரயணாதி விரதங்களைச் செய்வதே – தவம். பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜெபிப்பதே ஜபம் பிரணவத்தை ஜபித்தலும் ஜபமாம். வேதத்தை மட்டுமே அத்தியயனஞ் செய்தல் ஜபமாகமாட்டாது. என்னையே தியானித்து, வேறு ஒன்றையும் சிந்திக்காமல் இருப்பதே – தியானம், என்னால் சொல்லப்பட்ட சிவாகமங்களை உணர்தலே ஞானம். சிவாகமங்களுக்கு வேறான நூல்களை உணர்வது ஞானமல்ல – பாஹ்யம் பூஜையிலாவது ஜன்மாந்தர வாசனையால் உண்டாகும். மனோவிருப்பத்தின் படி நிஷ்டையை ஆசரியக்க வேண்டும். பாஹ்யத்தைவிட ஆப்யந்தரம் நூறு பங்கு அதிகப்பட்டதாக இருக்கும். ஆப்யந்திர பூஜையில் சிறிதும் தோஷம் உண்டாகாது. ஆகையாலும் சங்கிரமமாகச் செய்யக் கூடியதாகையாலும் அதுவே சிறந்ததாயிற்று. ஆப்யந்திர சவுசமே சவுசமேயன்றி, பாஹ்ய சவுசம் சவுசமாகமாட்டாது.
மேலே பரிசுத்தனாகக் காணப்பட்டாலும் அந்தரத்தில் புனிதமில்லாதவன் அசுகியானவனே பாஹ்ய பூஜையாயினும் ஆப்யந்திர பூஜையாயினும் பக்தி பூர்வமாகச் செய்வதே – சேவை பக்தியில்லாமல் செய்வது பிறரை வஞ்சிக்கச் செய்வதேயல்லாமல் உண்மையிற் சேவையல்ல மாநுடர் செய்யும் அன்பை மட்டுமே அவர்களிடமிருந்து நான் பெறுகிறேன். அந்தப் பக்தியை மனம் வாக்கு காயங்களால் மற்றொன்றை விரும்பாமல் செலுத்தும் பக்ஷத்தில் நான் அதற்கே மனம் மகிழ்ந்து அவர்களுக்குத் திருவருள் புரிவேன். பயனை விரும்பும் ஒருவன் என்னிடம் பக்தி செய்வது அதனைப் பெறும்வரையில் அல்லது அதில் விரக்தியுண்டாகும் வரையேயன்றி, அவன் எக்காலத்தும் இடைவிடாமல் என்னிடத்தில் பக்தி செய்யாவிட்டால், அந்தப் பக்தி லகுபக்தியாகும். பலாபேøக்ஷயால் பக்தி செய்பவர்களுக்கு நானே பயன்களைத் தருபவன் பலாபேøக்ஷயின்றி எவருடைய மனம் என்னிடம் லயித்து பக்தியுக்தமாகப் பொருந்தியுள்ளதோ அவர்களே எனக்குப் பிரீதியைச் செய்யும் பக்தர்கள் – அவர்களுக்குப் பின்பு ஒரு காலத்தில் பிறர் பலாபேøக்ஷயாய் தம்மைத் தியானிக்கத்தக்கவர்களாவார்கள். பூர்வஜன்ம புண்ணிய விசேஷத்தால் பலாபலன்களை விசாரிக்காமல் என்னிடம் பக்தி செய்பவர்கள் எனக்குப் பிரியதமர்கள். என்னுடைய லாபத்தைவிட அவர்களுக்கு வேறு லாபம் ஒன்றுமில்லை. அவர்களுடைய லாபத்தைவிட எனக்கு வேறு லாபம் இல்லை. அவர்களுக்கு என்னுடைய அனுக்கிரகத்தால் என்னிடத்தில் நீங்காத பக்தி உண்டாகிறது. அதற்குப் பயன் மிகப்புனிதமான சுகத்தைக் கொடுக்கும்.
மலைமகளே! மகாத்மாக்களும் என்னிடத்திலன்றி பிறரிடத்திலும் மனத்தைச் செலுத்தாதவர்களுமாகி, என்னுடைய சிவதர்மத்தையே அனுஷ்டானம் செய்யும் பக்தர்களுக்கு எட்டுவகை லக்ஷணங்கள் உள்ளன. என்னுடைய பக்தர்களிடத்தில் மிக்கவிருப்பும் என்னுடைய பூஜையையும் பக்த பூஜையையும் விரும்பிக்காணலும், தாமாகவே பூஜித்தலும் எனக்காக உத்தம விரதங்களை ஆசரித்து உடலைச் சோக்ஷிக்கச் செய்தலும் என்னுடைய பிரபாவங்களைச் சிரவணஞ் செய்தலும் சிரம் கரம் நேத்திரம் முதலியவற்றை எனக்கே விநியோகித்தலும் மனதில் என்னையே ஸ்மரித்தாலும் முக்திப் பிரதாயகம் என்னிடத்திலேயே உண்டு என்று நம்பி என்னையே ஆசரித்தாலும், இவ்விதமான எட்டுவகைச் சின்னங்களையும் உடையவன், மிலேச்சனாக இருப்பினும் அவனே சிரேஷ்டமான பிராமணன். அவனே மஹத்தான முனிவான். அவனே ஸ்ரீயுக்தன் அவனே யதி: அவனே பண்டிதன்: இத்தகைய சின்னங்களையுடையவன் நான்கு வேதங்களைக் கரைகண்டவனை விட எனக்குப் பிரியமானவன். தானம் கொடுப்பது அத்தகையவனுக்கே கொடுக்கத்தகும். அவ்வகையினனே, உத்தமனான தாதாவும் ஆவான். என்னைப் போலவே அவனும் பிறரால் பூஜிக்கத் தக்கவன். அத்தகையவனுக்கே ஞானாதிகளைக் கொடுக்கத்தகும். பத்திரம், புஷ்பம், பழம், ஜலம் முதலிய எதையாவது பக்திபூர்வமாக எனக்குக் கொடுத்தாலும், கொடுத்தவனுக்கு நான் பிரசன்னமாகி அதனை அன்போடு பெறுகிறேன். அவன் எனக்கு யாவும் கொடுத்தவன். என்னுடைய பக்தர்களுடைய வருணதர்மத்தைச் சங்கிரகமாகச் சொல்லுகிறேன். திரிகாலங்களிலும் ஸ்நானம், அக்கினிகாரியம், சிவலிங்க அர்ச்சனம், தானம், ஈஸ்வர பாவம், தயை, சத்தியம், சந்தோஷம் ஆஸ்திக்கியம், அஹிம்சை, சிரத்தை அத்தியாபனம், அத்தியயனம், யோகம், வியாக்கியானம் சிவதர்ம உணர்ச்சி, பிரமசரியம், சிவாகம சிரவணம், தவம், பொறுமை, சவுசம், சிகாயக்ஞோபவீத தாரணம், விபூதிதாரணம், உருத்திராக்ஷம் அணிதல், நிஷித்த உணவுகளை விலக்குதல், பர்வகாலங்களில் பூஜை, சதுர்த்தசியில் சிறப்பான பூசை, மாதந்தோறும் பஞ்சகவ்விய பிராசனம் பிரம்ம சர்ச்சத்து நீரால் விசேஷமாக என்னை அபிஷேகித்தல், அந்நீரை உட்கொள்ளல் சிரார்த்தான்னம், விக்கிர அன்னம், நியமமில்லாத அன்னம், ஈஸ்வர நிவேதனஞ் செய்யாத அன்னம், பழஞ்சோறு முதலியவற்றை விலக்கல், கள் குடியாமை கள்ளின் மணம் பெறாமை முதலினவாகும்.
இனி வேதியருக்கு அவசியமான தர்மத்தைச் சொல்கிறேன். பொறுமை, சாந்தி, மகிழ்ச்சி, சத்தியம், திருடாமை, பிரமசரியம், சிவஞானம், வைராக்கியம், விபூதிப் பூச்சு, சர்வ சங்கநிவர்த்தி என்ற பத்தும் சிறப்புடையன. சந்நியாசிகளும் வானப்பிரஸ்தர்களும் பகற்காலத்தில் மட்டும் பிøக்ஷ எடுத்துப் புசிக்கவேண்டும். இவர்கள் நிலமிசையே துயின்று இரவுப் பொழுதில் உணவு கொள்ளாதிருக்க வேண்டும். பிரமசாரிகளுக்கு அத்தியயன அத்தியயனங்களே சிறப்பான தர்மங்கள். அவர்கள் விருப்பமிருந்தால் இரவிலும் புசிக்கலாம். க்ஷத்திரியர்கள் அத்தியயனஞ் செய்தல், பிரஜைகளை காத்தல், யுத்தத்தில் சத்துருக்களைக் கோறல், கொடுமைசெய்யும் மிருக பறவைகளையும் மனிதர்களையும் தண்டித்தல், சிவபக்த விசுவாசம் காலத்தில் பெண்ணின்பக் கூடல், படைகளைக் காத்தல் உலக நிலையை விசாரித்து அறிதல், அஸ்திர சஸ்திரங்களைத் தரித்திருத்தல், விபூதிப்பூச்சு, யாகஞ் செய்தல் இவற்றை எனது தர்மங்களாக அனுசரிக்க வேண்டும். வைசியன் பசுகாத்தல், வாணிபம், உழவு செய்தல் முதலியவற்றைத் தர்மங்களாக அனுசரிக்க வேண்டும். சூத்திரன் மேற்கூறிய மூவருக்கும் பணிசெய்தல் என்னுடைய ÷க்ஷத்திரங்களில் உத்தியான வனங்களை வளர்த்தல் இவை என்னுடைய தர்மங்களாகும். கிரகஸ்தன், ருதுகாலங்களில் தன் தர்ம பக்தினியுடன் கூடியிருத்தல் தகுதி. சந்நியாசி, வானப்பிரஸ்தன், பிரமசாரி இவர்கள் மூவருக்கும் பெண்ணின்பக்கூடல் எப்போதுங்கூடாது. பெண்களுக்குத் தங்கள் கணவனுக்குப் பணிசெய்வதைத் தவிர வேறு பணியொன்றுமில்லை. கணவன் விருப்பமிருந்து உத்தரவு கொடுத்தாலன்றி என்னைப் பூஜித்தலும் அவளுக்கு அவசியமில்லை. கணவனது கருத்தில்லாமல் என்னைப் பூஜித்தாலும் அந்தப் பெண் நரகத்தை அடைவாள். கணவனை இழந்த விதவையோ விரதம். தானம், தவம், பரிசுத்தம், நிலமிசை உறங்கல், ஆடவர்கலவி சக்திக்கேற்ற நீராடல், சக்தியில்லாவிட்டால் பஸ்மஸ்நானம், சாந்தி, மவுனம் க்ஷமை என்னைப் பூஜித்தல் துஷ்டர்களைக் கலவாமை ஒரு வேளை பகலிலேயே புசித்தல், அஷ்டமி, சதுர்த்தசி, பூரணை, ஏகாதசி இத்தினங்களில் உபவாசம் முதலியவற்றைக் கொண்டு, என்னுடைய ÷க்ஷத்திரத்தில் வசிக்க வேண்டும்.
பார்வதீ! பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர், பிரமசாரி, கிருகஸ்தர், வானப்பிரஸ்தர் சன்னியாசிகள் பெண்கள் முதலியவர்களுடைய தர்மத்தை பூரணமாகச் சொன்னேன். ஆகையால் என்னையே எப்போதும் தியானித்துப் பஞ்சாக்ஷர ஜபத்தை பிரணவசகிதமாகச் செய்ய வேண்டும். வேதாகமங்களில் சொல்லிய சிவதர்மங்கள் இவையாம். பூர்வ புண்ணியச் சிறப்பால் என்னிடத்தில் விசேஷ பக்தியுடையவர்களாக விளங்கும் சிவஞானிகள், விலாசார்த்தமாகத் தேகத்திற்கேற்ப பெண்ணின்பம் முதலிய விஷய விருப்பமுடையவர்களாயினும் விரக்தியுடையவர்ளாயினும், தாமரையிலேயிலுள்ள நீர், அந்த இலையில் ஒட்டாதிருப்பது போல, பாவங்கள் அவர்களை அடையமாட்டாது. பரிசுத்தர்களும் விவேகிகளும் என் அருள் பெற்றவர்களுமாகிய அவர்கள், ஆத்மஞான முண்டாயிருத்தலின் அவர்களுக்கு வருணாசிரம தர்மம் அவசியமில்லை. ஆகையால் அவர்களுக்கு செய்யத்தக்க கருமங்கள், செய்யத்தகாத கர்மங்கள் என்ற விதிமுறைகளில்லை. பரிபூரணனான எனக்கு கோரிக்கை எப்படியில்லையோ, அப்படியே கிருதகிருத்தியர்களான அவர்களுக்கும் இல்லை. பிரமாதி தேவர்களுக்கும் ஒவ்வொரு பிராணிக்கும் என் ஆக்ஞையே சிறந்து விளங்கும்.
என் ஆக்கினையிலாவது என்னிடத்திலுள்ள பக்தியினாலாவது சிவ தர்மங்களைக் கடைப்பிடித்தவர்களுக்குப் பாபநலிவு உண்டாகி, என் உலகவாசம் உண்டாகும். என் பக்தர்களுடைய லக்ஷணங்கள், உடல் நடுங்கல், வியர்வு, கண்ணீர், கண்டத்தில் ஸ்வரம் பேதித்தல் பரமானந்தம் முதலியனவாகும். இவையாவும் ஒருவனுக்கு இருக்குமானால் அவன் மனிதர்களில் உத்தமனாவான். இரண்டொன்று குறைந்தால் மத்திமன். ஒன்று இரண்டு மாத்திரம் இருப்பின் அவன் அதமன். அக்கினியும் இரும்பும் சேர்ந்த காலத்தில் அதைச் சாதாரண இரும்பு என்று கருதக்கூடாததுபோல மேற்கூறிய உத்தம மத்திம அதமர்களாகிய என் பக்தர்கள் என்னுடைய சாந்நித்யம் பெற்று இருப்பதால் அவர்களைச் சாதாரண மனிதர்கள் என்று நினைக்கக்கூடாது. அவர்கள் காஞ்சிபுரம் முதலியவற்றுடன் மனித உடல் எடுத்துத் தோன்றிய உருத்திரர்கள் என்று நினைக்கத்தக்கவர்கள். அவர்களை மனிதர்கள் என்று தீர்மானித்தவன், பண்டிதன் அல்லன். முழுமூடன் மஹாத்மாக்கள் விஷயத்தில் அஞ்ஞானிகள் அபசாரஞ்செய்தால் அவர்களுடைய செல்வம் ஸ்திரீ முதலியன நசித்துக் கடைசியில் நரகத்தை அடைவார்கள். என்னை விரும்பி பிறதேவர்களைப் பணியாத ஞானியர் பிரம விஷ்ணுவாதிகளின் பதவியைத் துச்சமாக மதிப்பவர்கள். பிருமா – விஷ்ணு, சுரேசர்கள், குணவிசிஷ்டர்களாøகாயல் அவர்களை நாடுபவர்கள் உயர் பதவியை செலுத்துவதே முக்கிய சாதனமாகும் என்று உமாதேவியாருக்கு சிவபெருமான் சென்னார்.
கிருஷ்ணா! பரமாத்மஸ்வரூபமான ஸ்ரீகண்ட பரமேஸ்வரன், உலகை உய்விக்கும் பொருட்டு ஞானமார்க்கத்தை இவ்வகையில் சுருங்கக் கூறினேன். இதுவே எல்லா வேதசாஸ்திரங்களாலும் உண்டாகும் ஞானத்தின் சுருக்கமாகும். இதிகாச புராணங்களின் தாற்பரியம் பரவலாயுள்ளது. ஆனால் ஞானம், நேயம், அநுஷ்டேயம், அதிகாரம் சாதனம், சாத்தியம் என்னும் இவற்றின் சங்கிரமேயாகும். ஞானம் என்பது குருவால் உபதேசிக்கப்பட்டு உணர்ந்து கொள்வது. ஞேயம் என்பது பசு, பதி, பாசம் என்பன. அநுஷ்டேயம் என்பது சிவ லிங்கார்ச்சனை முதலியன. பிரமக்ஷத்திரிய வைசியர்கள் அதிகாரிகள், சாதனம் என்பது சிவசமானத்துவம். இந்த ஆறு அர்த்தங்களையும் நன்றாக உணர்ந்தவனே சர்வக்ஞன் என்று சொல்லப்படுவான். முதலில் பக்தியுடன் பொருளாசை இல்லாமல் கர்ம யாகங்களால் சிவபெருமானைப் பாஹ்ய பூஜை செய்ய வேண்டும். பிறகு மனதில் சிவபக்தி உண்டாவதே ஆப்யந்தர பூஜை எனப்படும். அது பாஹ்ய பூஜையை விடச் சிறப்பானது. அந்தப் பூஜையைச் செய்பவன் பாஹ்ய கர்மம் செய்ய வேண்டுவதில்லை. ஞானாமிருதத்தால் திருப்தியடைந்த சிவசொரூபிக்கு பஹிர் பூஜை என்றும் அந்தர் பூஜை என்றும் அவசியமில்லை. ஆகையால் கிரமமாகப் பாஹ்யாப்பியந்தர பூஜைகளை விட்டு, ஞானத்தால் ஞேயத்தைக் கண்டு, பிறகு ஞானத்தையும் பரிகரித்து சிவத்தினிடத்தில் மனதை ஏகமாகச் செலுத்தினால் அவன் கர்மத்தால் அனுபவிக்க வேண்டியது ஒன்றுமில்லை. ஏகாக்கிரக மனமடைய விரும்புவான். பாஹ்யாந்தர கர்மங்களைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் எவ்வுபாயத்திலாவது சிவத்திடம் மனதைச் செலுத்த வேண்டும். சிவத்திடமே சித்தத்தைச் செலுத்திய பரம புருஷர்களுக்கு இம்மை மறுமை சுகம் உண்டாகும். பஞ்சாக்ஷர மந்திர உபாசனையாலேயே சித்தர்களாக இருப்பவர்கள் பராபர விபூதிக்காக அந்தச் சர்வேசனை ஆராதித்து பொருந்தியிருக்கிறார்கள் என்று உபமன்யு முனிவர் ஸ்ரீகிருஷ்ணரிடம் சொன்னார்.

Related Articles