Sri Rama Birth

ரிஷ்ய ஸ்ருங்க முனிவர் புத்திர காமேஷ்டி பண்ணி முடித்த உடனே, அந்த அக்னில இருந்து, தேஜோ மயமா, ஒரு பெரிய, மஹானுபாவர் வந்தார், அவர் கையில ஒரு தங்க பாத்திரம், வெள்ளி மூடி போட்ட ஒரு தங்கப் பாத்திரம் வெச்சிருந்தார். அதை பார்த்த உடனே, எல்லாரும் எழுந்துக்கறா. தசரதரும், எழுந்து, அவரை கைகூப்பி வணங்கி, நீங்க யார், நான் உங்களுக்கு என்ன பண்ணனும், அப்படீன்னு கேட்கறார். வந்தவர் சொல்றார், “ராஜன் அர்ச்சயதா தேவான் அத்ய ப்ராப்தம் இதம் த்வயா” இவ்வளவு நாள் நீங்க பண்ணின பூஜையினால திருப்தி ஆகி, தேவதைகள் எல்லாம், இந்த திவ்யமான பாயஸத்தை உங்களுக்குக் கொடுத்துருக்கா. இதை பொருத்தமான உங்களுடைய மனைவிகளுக்குக் கொடுங்கோ, உங்களுக்குப் புத்திர பாக்கியம் ஏற்படும்”, அப்படீன்னு அனுக்ரகம் பண்ணிட்டு மறைஞ்சு போயிடறார்.. பரம சந்தோஷம் அடைஞ்ச தசரத மஹாராஜா, அதை வாங்கி, அந்த பாயஸத்துல பாதியை கௌசல்யா தேவிக்கிட்ட கொடுக்கறார். அவா அதை சாப்பிடறா. மீதியில பாதியை, கால் பகுதியை ஸுமித்ரைக்கு கொடுக்கறார். மிஞ்சினதுல பாதியை, அதாவது, அரைக்கால் பகுதியை, கைகேயிக்கு கொடுக்கறார். மீதி இருந்த அரைக்காலை, ஸுமித்ரைக்கே கொடுத்துடறார். அவாளாம் அதை சந்ஷோமாக ப்ராசனம் பண்றா. ரொம்ப ஆச்சரியமும், சந்தோஷமும் அடைஞ்ச தசரத மஹாராஜா, இப்படி தன்னுடைய வேள்விக்கு, கைமேல பலன், கிடைச்ச சந்தோஷத்துல பூரிச்சுப் போயிடறார். எல்லாரையும் நமஸ்காரம் பண்றார்.. யாகத்துக்கு வந்தவா எல்லாரும் சந்தோஷப் பட்டு, விடைபெற்று, எல்லா ராஜாக்களும், ரிஷிகளும், தசரதர்கிட்ட உத்தரவு வாங்கிண்டு கிளம்பரா. ரிஷ்யஸ்ருங்கரும் தன்னுடைய மனைவி சாந்தாவோட, எல்லாரும் அவா அவா ஊருக்குப் போயி சேரறா. தசரத மகாராஜாவும் புத்ரோத்பத்தியை எதிர்பார்த்துண்டு காத்துண்டு இருக்கார்.. இப்படியாக அந்த யாகம் முடிஞ்சதுல இருந்து, பன்னிரெண்டாம் மாசம், புனர்வஸு நக்ஷத்ரத்துல, சாக்ஷாத் விஷ்ணு பகவான், கௌசல்யாதேவிக்குப் புத்திரனாக, ராமனாக, அவதாரம் பண்ணினார். கைகேயி பரதனைப் பெற்றெடுத்தாள். ஸுமித்ரை, லக்ஷ்மண, சத்ருக்னர், அப்படீன்னு ரெட்டை குழந்தைகளைப், பெற்றெடுத்தாள். வானத்துல இருந்து, தேவர்கள் எல்லாம் பூமாரி பொழிந்தார்கள். தேசத்துல எல்லாரும், ராஜாக்கு குழந்தை பொறந்துருக்குன்னு, சந்தோஷமா கொண்டாடினா. ராஜாவும் பரம சந்தோஷப் பட்டு, எல்லாருக்கும் சாப்பாடு போட்டார். அளவற்ற செல்வத்தை தானங்கள் பண்ணினார்.. வசிஷ்டர், குழந்தைகளுக்கு, கௌசல்யையோட பிள்ளைக்கு, ராமன்னு, பேர் வெச்சார். எல்லாருக்கும் இவன் சந்தோஷத்தை கொடுக்கப் போறான், அப்படீன்னு, ரம்யதேதிஹி ராமஹா, அப்படீன்னு, எல்லாரும் ரமிக்கப் போறா இவன்கிட்ட அப்டீன்னு, ராமன்னு, பேர் வெச்சார். பரதன் பக்தியோட இருப்பான், ராம பக்திக்கு பேர் போனவனா விளங்கப் போறான்னு, பரதன்னு பேர் வெச்சார். லக்ஷ்மணன், இவன் வந்து நிறைய கைங்கர்ய லக்ஷ்மியை, சம்பாதிக்கப் போறான்னு, அவனுக்கு லக்ஷ்மணன்னு பேர் வெச்சார். சத்ருக்னன், இவன் பரதனுக்கு அடியவனாக, அடியார்க்கு அடியனா, இருந்து, ஷட் சத்ருக்களையும் ஜயிக்கப் போறான், அப்படீன்னு சத்ருக்னன்னு பேர் வெச்சார்.. இராம லக்ஷ்மண பரத சத்ருகுனர்கள் பிறந்து வளர்ந்து அப்பா அம்மாவுக்கு வெகு சந்தோஷம் அளிக்கிறார்கள். வசிஷ்டர் அவர்கள் அனைவருக்கும் எல்லா வேத வித்தைகளையும் சொல்லி குடுக்கிறார். மேலும் அவர்கள் ராஜகுமரர்களாய் இருப்பதனால், யானை ஏற்றம், குதிரை ஏற்றம், வில் மற்றும் வாள் வித்தை என்று எல்லா வித்தைகளும் சொல்லி தருகிறார்கள். இதனை எல்லாம் கற்றுக்கொண்டு குழந்தைகள் நால்வரும் வளர்ந்து வருகிறார்கள். முக்கியமாக பித்ரு பக்தியுடன், பித்து ஷுச்ருஷை செய்கிறார்கள். இராமரிடம் லக்ஷ்மணர் “பஹி பிராணா இவ”,வெளியில் உள்ள இன்னொரு உயிர் போல, அதாவது இராமனுக்கு இன்னொரு உயிர் போல லக்ஷ்மணர் விளங்கினார். இராமர் இல்லாமல் லக்ஷ்மணர் எந்த ஒரு பண்டத்தையும் உண்ண மாட்டார், ருசியான பண்டமாக இருந்தாலும் சாப்பிடமாட்டார். லக்ஷ்மணர் இல்லாமல், இராமர் தூங்கமாட்டார். லக்ஷ்மணர் இல்லாமல் எப்படி இராமரால் உறங்கமுடியும், லக்ஷ்மணர் தானே ஆதிசேஷன், இராமர் ஸ்ரீ விஷ்ணு பகவான், ஆதி சேஷனில் தானே படுத்து விஷ்ணு உறங்குவார். இது போல இராமரிடம் லக்ஷ்மணர் தனது உயிரையே வைத்திருந்தார். இதே போல, பரதனிடம் சத்ருக்னன் உயிராக இருந்தார் , அவருக்கு இராமர் கூட வேண்டாம், பரதன் போதும், பரதன் என்பவர் பக்தர், அந்த பக்தருக்கு சேவை செய்கிறார் சத்ருகுக்னன். அடியார்க்கு அடியராய் இருக்கிறார் என்று சத்ருக்னன் கொண்டாடபெற்றார். இப்படிப்பட்ட லக்ஷ்மணனையும் சத்ருக்னனையும் பெற்றெடுத்து குடுத்த அந்த சுமித்ரா தேவி, கைங்கர்யம் செய்வதற்காகவே இரண்டு குழந்தைகளை பெற்ற பாக்கியசாலி, அவர் பெரிய ஞானியுமாவார், அவரை பற்றி பின் வரும் படலங்களில் மேலும் பார்க்கலாம். இந்த குழந்தைகள் வளர்ந்து ஆளாகி ஒரு பன்னிரண்டு பதிமூன்று ப்ராயத்தின் போது, ஒரு நாள் சபையில் தசரத மஹராஜா, இவர்கள் நால்வருக்கும் தகுந்த பெண்களை பார்த்து திருமணம் செய்து வைக்கவேண்டியதன் பொருட்டு பந்துக்கள், உபாத்யாயர்களிடம் விவரித்து கொண்டிருந்தார், அந்த சமயத்தில் வாசலில் விஸ்வாமித்ரா மஹரிஷி வருகிறார். மஹரிஷி விஸ்வமித்ரர் பெரிய தபஸ்வி, அவர் அரசராக இருந்து தவம் செய்து பிரம்மரிஷியானவர். அவர் வாயிற்காப்போனிடம் உள்ளே சென்று “குசிக குலத்தில் பிறந்த விஸ்வாமித்திரன் வந்திருக்கிறேன் என்று உன் அரசரிடம் சொல்” என்கிறார். இவருடைய தேஜஸ் கண்டு அவர்கள் மெய்சிலிர்த்து, உள்ளே ஓடி சென்று தசரத மஹராஜாவிடம் விஸ்வாமித்ரர் என்று ஒரு மஹரிஷி வந்திருக்கிறார் என்று கூறிய உடனே, தசரதரும், வசிஷ்டரும், மற்ற எல்லாரும், உடன் ஜல பாத்திரத்தினோடும், ஆசனத்ததோடும் ஓடோடி வந்து மகரிஷியை வரவேற்று, உட்காரவைத்து அவருக்கு முறையாக அர்க்யம், பாத்யம், ஆசமநீயம், எல்லாம் செய்வித்து , தகுந்த முறையில் பூஜை செய்து அவரை சபைக்கு அழைத்து வந்து உயர்ந்த ஆசனத்தில் அமரசெய்து, தசரத மஹாராஜா அவரை வாயார போற்றுகிறார். தசரத மஹாராஜா அவரை பார்த்து “ஆஹா என்ன பாக்கியம், குழந்தை இல்லாதவற்க்கு, குழந்தை பிறந்த மாதிரியும், மழை இல்லாத க்ஷேத்ரத்தில் மழை கொட்டின மாதிரியும், தரித்திரனுக்கு பணம் கிடைத்த மாதிரியும், எனக்கு தங்களின் தரிசனம் அவ்வளவு சந்தோஷம் தருகிறது. புண்ய க்ஷேத்ரங்களுக்கு சென்று வந்தது போல மனம் கூதுகலிக்கிறது, அஹோ பாக்கியம், தாங்களாகவே வந்து எங்களுக்கு தரிசனம் அளித்தீர்கள், தாங்கள் பிரம்மரிஷி ஆவதற்கு செய்த தவ முயற்சி பற்றியெல்லாம் நான் அறிந்ததுண்டு. தங்களுக்கு என்ன வேணுமோ அதை கூறுங்கள், தங்களை போன்ற மகான்களை தரிசனம் செய்து அவர்களுக்கு கைங்கரியம் செய்வதற்காகவே நான் அரசனாக இருக்கிறேன், தாங்கள் என்ன ஆணை இட்டாலும் நான் அதனை செய்கிறேன் என்று வணங்கி கூறுகிறார். “இதி ஹ்ருதய சுகம் சுருதி சுகம் வாக்கியம்” என்று கூறுகிறார். மனதுக்கும் , காதுக்கும் இனிமையான வார்த்தைகளை தசரத மஹாராஜா பேசினார் என்று வால்மீகி கூறுகிறார். சிலர் பேசினால் கேட்பதற்கு நன்றாக இருக்கும், அனால் பிறகு என்ன சொன்னார் என்று யோசித்து பார்த்தால், சில சமயம் வருத்தத்தை கூட குடுக்கும்,அப்படி இல்லாமல், மனசுக்கும் காதுக்கும் இனிமையா பேசுவது மிகவும் ‘ஆர்ஜவம்”.(straight forward) வாயில் ஒன்று, மனதில் ஒன்று, காரியத்தில் ஒன்று என்று இருக்ககூடாது, வாய், மனம் மற்றும் காரியத்தில் ஒன்றாக இருப்பதற்கு பெயர் “ஆர்ஜவம்”. இது போன்று ஆர்ஜவமாக இருப்பவர் பேசினால், கேட்பதற்கும் சந்தோசம் தருவதாக் அமையும், பின் அதனை நினைத்து பார்த்தாலும் சந்தோசமாக இருக்கும். இது போல தசரத மஹாராஜா விஷ்வாமித்ரரை போற்றி, வார்த்தைகள் சொல்லி அவரை உபசரித்த உடனே, விஸ்வாமித்ரர் சொல்கிறார் – நீ நல்ல குலத்தில் பிறந்தவனாகவும், வஷிஸ்டர் போன்ற மஹான்களின் சிஷ்யனாக இருப்பதினாலும், உனது குலத்திற்கு பொருத்தமான வார்த்தைகளை பேசினாய். நான் ஒரு காரியமாகத்தான் வந்திருக்கிறேன் என்று கூறுகிறார். “ஹே ராஜன், நான் சித்தாஸ்ரமம் என்கிற இடத்தில், ஒரு யாகத்தை பூர்த்தி செய்து சித்தி அடையவேண்டும் என்று முயற்சித்து கொண்டிருக்கிறேன், ஆனால் மாரிசன், சுபாகு என்று இரண்டு இராக்ஷஸர்கள் அதற்கு தடையாக மாமிசாதிகளை யாகத்தில் இட்டு,அதனை தடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நீ உன்னுடைய ஜேஷ்ட புத்திரனான இராமனை என்னுடன் அனுப்பு. நான் இராமனுக்கு எல்லா அஸ்திரங்களையும் சொல்லிக்குடுத்து , அவன் மூலமாக இந்த யாகத்தை காப்பாற்றிக்கொள்வேன். நீ, இராமன் உன்னுடைய குழந்தை ஆயிற்றே என்று புத்திர ஸ்னேகத்தினை நினைக்காமல் என்னுடன் அனுப்பு. நான் அவனுக்கு பல விதத்தில் ஸ்ரேயஷை உண்டுபண்ணுவேன்”,. “ஷ்ரேயஸ்சாஸ்மை ப்ரதாஸ்யாமி பஹுரூபம் ந சம்ஷய:” என்று கூறுகிறார். அதாவது சீதா கல்யாணம் பரியந்தம் எல்லாம் செய்து வைப்பேன் உனது குழந்தைக்கு என்று சொல்வது போல மறைமுகமாக சொல்கிறார்.. மேலும் சொல்கிறார். “அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்ரமம் |. வஸிஷ்டோபி மஹாதேஜா: ஏசேமே தபஸி ஸ்திதா: ||. தபஸ்விகளான வசிஷ்டர் போன்ற மஹான்களும், என்னை போன்றோரும் தான் இராமனுடைய பராக்கிரமத்தையும், அவன் உள்ளபடி யாரென்பதையும் அறிவோம். அதாவது ஞான கண் இருந்தால் தான் பகவானுடைய அவதாரங்கள் தெரியும். ஆதலால் உனது குழந்தையை என்னுடன் அனுப்பு “ராமம் மே தாதுமர்ஹசி” என்று பல்லவி பாடுகிறார்.. இதனை கேட்ட தசரதர் மயக்கம் அடைந்து விழுந்துவிட்டார். அப்புறம் தெளிந்து, “எத்தனையோ காலம் காத்திருந்து இந்த குழந்தை எனக்கு கிடைத்திருக்கிறான், இந்த நால்வரில், இவன் ஜேஷ்டன், தர்மத்திலும் ஜேஷ்டன், தர்மத்திலும் மூத்தவனாக இருக்கிறான் என்று இவன் மீது மிக அதிகமாக பிரியம் வைத்திருக்கிறேன் .. ஸ்வாமிகள் இந்த இடத்தில், “அர்த்த ஜேஷ்டன்” ஆக, பணத்தில் பெரியவனாக இருப்பவனைதான் இந்த காலத்தில் தாய் தந்தையர்க்கு பிடிக்கிறது. இராமர் தர்ம ஜேஷ்டராக இருந்ததினால் தசரதர் அவரிடம் ப்ரியம் வைத்தார், என்று கூறுவார். தர்ம பிரதானமாக இருந்தால் எல்லாம் நல்லபடியாக முடியும் என்று ஸ்வாமிகள் அடிக்கடி இதனை வலியுறுத்தி கூறுவார்கள்.. தசரதர், என் குழந்தையை நான் தர மாட்டேன் , நான் எப்படி இந்த குழந்தையை தருவேன் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் “ந ராமம் நேதுமர்ஹஸி, ந ராமம் நேதுமர்ஹஸி” என்று அவர் பல்லவி பாடுகிறார்.. வந்திருக்கும் இந்த மாரிசன், சுபாகு முதளியவர்கலானவர்கள் யாரென்று தசரதர் கேட்கிறார், அவர்கள் இராவணனுடைய ஆட்கள் என்று விஸ்வமித்ரர் கூறியவுடன், அப்படியென்றால் நான் இராமனை தரவே மாட்டேன் என்று உறுதியாக கூறிவிடுகிறார்.. இதை கேட்ட விஸ்வாமித்ரர் கோபமடைகிறார், “என்ன வேண்டுமோ கேளுங்கள் செய்கிறேன் என்று கூறிவிட்டு, மறு நிமிடத்தில் பேச்சை மாற்றி பேசுகிறீர்களே, ரகு குலத்தில் பிறந்த உங்களுக்கு இது அழகா! க்ஷேமமாக இருங்கள் நான் வருகிறேன்” என்று கோபமுடன் புறப்படுகிறார்.. இப்படி ரகு குலத்தினை ஏன் குறிப்பிடுகிறார் என்றால். ரகுவின் கதையான ரகுவம்சத்தில், (காளிதாசரின் ரகுவம்சம், வால்மீகி ராமாயணத்தில் இல்லை) கௌத்ஸர் என்று ஒரு ரிஷி, படிப்பு முடிந்தவுடன் தனது குருவான வரதந்துவிடம், தங்களுக்கு குரு தக்ஷிணை என்ன தரவேண்டும் என்று கேட்கிறார், அவர் அதற்கு, நீ நன்றாக படித்தாய், அதுவே எனக்கு திருப்தி, சுஸ்ருக்ஷை எல்லாம் நல்லபடியாக செய்தாயே, அதுவே போதும் என்று சொல்கிறார். அனால் அவர் தன் குருவிடம் தாங்கள் எதுவேண்டுமோ கேளுங்கள் தருகிறேன் என்று மீண்டும் மீண்டும் கூறவே, குருவும், சரி, பதினான்கு கோடி வராகன் கொண்டுவா என்று ஒரு வார்த்தை கூறுகிறார்.. உடனே கௌத்ஸர், ரகு மகாராஜாவிடம் வந்து கேட்கலாம் என்று வருகிறார். இந்த ரகு மஹாராஜா ஆனவர், அப்பொழுது தான் உலகத்தையெல்லாம் வெற்றி கொண்டு, “விஸ்வஜித்” என்கிற யாகம் செய்து, எல்லாவற்றையும் தானம் செய்துவிடுகிறார். அவரிடம் எதுவும் இல்லை. அதனை கண்ட கௌத்ஸர், திரும்ப செல்ல நினைக்கிறார், அவரிடம் ரகு மகராஜா, என்ன வேண்டும், வந்துவிட்டு திரும்ப செல்கிறீர்களே என்று கேட்கிரார். கௌத்ஸர் கூறுகிறார், எனக்கு பதினான்கு கோடி வராகன் வேண்டும், அதை தங்களிடம் யாசிக்கலாம் என்று வந்த பொழுது, தாங்கள் எல்லாவற்றையும் தானம் செய்து விட்டீர்கள் என்று அறிந்து திரும்பப் போகிறேன் என்கிறார்.. அதற்கு ரகு, இன்று ஒருநாள் இங்கு தங்குங்கள், நான் நாளை உங்களுக்கு, நீங்கள் கேட்டதை சம்பாதித்து தருகிறேன் என்று கூறி அவரை தங்க வைக்கிறார். அன்றிரவு, நாம் நாளை குபேரனை படையெடுப்போம் என்று முடிவு செய்து , அதற்கான ஏற்பாடு செய்துவிட்டு உறங்க போகிறார். இதனை அறிந்த குபேரன், ரகு படையெடுத்தால் நாம் என்னாவது, இந்த்ரனுடைய வஜ்ராயுதமே ரகுவை ஒன்றும் செய்யமுடியவில்லை என்று நினைத்து, பதினான்கு கோடி வராகனுக்கு மேலாகவே இரவோடு இரவாக, ரகுவின் கஜானாவில் ஸ்வர்ண மழையாக பொழிந்துவிடுகிறார்.. அடுத்த நாள் காலையில் இதை அறிந்த ரகு, ஆச்சரியப்பட்டு, கௌத்ஸரிடம் இவை எல்லாவற்றையும் எடுத்துகொள்ளுங்கள் என்று வேண்டுகிறார். அதற்கு கௌத்ஸர், எல்லாம் எனக்கு வேண்டாம், நான் கேட்ட பதினான்கு கோடி வராகன் மட்டும் வேண்டும், அதனை என் குருவிற்கு தரவேண்டும் என்று அதனை எடுத்துக்கொண்டு செல்கிறார்.. இதுபோல, இல்லாத போதும் ரகு கேட்டதை குடுத்தார், நீயோ கையில் ராமனை வைத்துக்கொண்டு, கேட்கும் பொழுது தரமறுக்கிறாயே என்று சொல்வது போல, ரகு வம்சத்தில் பிறந்து, இப்படி செய்யலாமா, அது அழகா என்று விஸ்வாமித்ர மஹரிஷி கேட்கிரார்.. அப்பொழுது, குல குருவான வஷிஸ்டர் தசரதருக்கு சதுபதேசம் செய்கிறார். தாங்கள் தர்மிஷ்டன் என்று பெயர்பெற்றுவிட்டு, இதுபோல குடுத்த வார்த்தையை மறுத்தல் கூடாது. குடுத்த வாக்கினை காப்பற்றவில்லை என்றால், இது வரைக்கும் சேர்த்த புண்ய பலன்கள் எல்லாம் போய்விடும்.. ஆதலால் தாங்கள், இந்த விஸ்வமித்ர மஹரிஷி பற்றி அறிந்துகொள் அவர், முன்பு அரசராக இருந்த பொழுது ஐநூறு அஸ்திரங்களையும் தெரிந்துகொண்டிருக்கிறார், பரமேஸ்வரனிடம் இருந்து தபஸ் செய்து பெற்றிருக்கிறார், அதனை எல்லாம் இராமனுக்கு உபதேசிப்பார். விஷ்வாமித்ரரின் ரக்ஷணையில் இருக்கும் போது, குழந்தைகளுக்கு ஒரு ஆபத்தும் இல்லை, தாங்கள் கவலைகொள்ளவேண்டாம், குழந்தையை அனுப்பி வையுங்கள் என்று எடுத்து சொல்கிறார்.. இப்படி குருவானவர் கூறியவுடன், தசரதர் மனம் தெளிந்து இராம லக்ஷ்மணர்களை அழைத்து விஸ்வமித்ரரிடம் ஒப்படைக்கிறார்.

Related Articles

  • Ramayana
    Ramayana
    இராமாயணம் வால்மீகி என்னும் முனிவரால் சமசுக்கிருத மொழியில்…
  • About Ayodhya
    About Ayodhya
    கோசலம், என்றொரு தேசம், இருந்தது. அதுல, சரயு…
  • Ashvemega Yaagam
    Ashvemega Yaagam
    இப்படி தர்மம் தவறாம தசரத மஹாராஜா, அயோத்தியை,…
  • Vishwamithrar’s Teaching
    Vishwamithrar’s Teaching
    தசரதர், ராமனை விஸ்வாமித்ரர்ட்ட ஒப்படைகணும்னு முடிவு பண்ணவுடனே,…
  • Rama-Sita Marriage.
    Rama-Sita Marriage.
    முனிவர்கள் விஸ்வமித்ரரிடம் ‘ராம லக்ஷ்மணர்களை மிதிலைக்கு அழைத்துச்…

Be the first person to comment this article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *