Unmai Neri Vilakam

உண்மை நெறி விளக்கம், தமிழில் எழுதப்பட்ட சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்று. சைவ சித்தாந்தத்தை விளக்கும் இன்னொரு நூலான சிவப்பிரகாசத்தில் குறிப்பிடப்பட்ட தசகாரியம் என்பது பற்றி விரிவாக விளக்குவதே இந் நூலின் நோக்கமாகும். இதில் ஆறு பாடல்கள் உள்ளன. இந் நூலை எழுதியவர் உமாபதி சிவாச்சாரியார்.

நூல்

1.
மண்முதற் சிவம தீறாய் வடிவுகாண் பதுவே ரூபம்
மண்முதற் சிவம தீறாய் மலஞ்சட மென்றல் காட்சி
மண்முதற் சிவம தீறாய் வகையதிற் றானி லாது
கண்ணுத லருளால் நீங்கல் சுத்தியாய்க் கருதலாமே.

2.
பாயிரு ணீங்கிஞானந் தனைக்காண்ட லான்ம ரூபம்
நீயுநின் செயலொன் றின்றி நிற்றலே தரிச னந்தான்
போயிவன் தன்மை கெட்டுப் பொருளிற்போயங்குத் தோன்றா
தாயிடி லான்ம சுத்தி யருணூலின் விதித்த வாறே.

3.
எவ்வடி வுகளுந் தானா யெழிற்பரை வடிவ தாகிக்
கௌவிய மலத்தான் மாவைக் கருதியே யொடுக்கியாக்கிப்
பௌவம்விண் டகலப் பண்ணிப் பாரிப்பானொருவனென்று
செவ்வையேயுயிரிற் காண்டல் சிவரூபமாகுமன்றே.

4.
பரையுயிரில் யானெனதென் றறநின்ற தடியாம்
பார்ப்பிடமெங் குஞ்சிவமாய்த் தோன்றலது முகமாம்
உரையிறந்த சுகமதுவே முடியாகு மென்றிவ்
உண்மையினை மிகத்தெளிந்து பொருள்வேறொன்றின்றித்

தரைமுதலிற் போகாது தன்னிலைநில் லாது
தற்பரையி னின்றழுந்தா தற்புதமே யாகித்
தெரிவரிய பரமாநந் தத்திற் சேர்தல்
சிவனுண்மைத் தரிசனமாச் செப்பு நூலே.

5.
எப்பொருள்வந் துற்றிடினு மப்பொருளைப் பார்த்தங்
கெய்துமுயிர் தனைக்கண்டிங் கவ்வுயிர்க்கு மேலா
மொப்பிலருள் கண்டுசிவத் துண்மை கண்டிங்
குற்றதெல்லா மதனாலே பற்றி நோக்கித்

தப்பினைச்செய் வதுமதுவே நினைப்புமது தானே
தருமுணர்வும் புசிப்புமது தானே யாகும்
எப்பொருளு மசைவில்லை யெனவந்தப் பொருளோ
டிசைவதுவே சிவயோக மெனுமிறைவன் மொழியே.

6.
பாதகங்கள் செய்திடினுங் கொலைகளவு கள்ளுப்
பயின்றிடினு நெறியல்லா நெறிபயிற்றி வரினுஞ்
சாதிநெறி தப்பிடினுந் தவறுகள்வந் திடினுந்
தனக்கெனவோர் செயலற்றுத் தானதுவாய் நிற்கின்

நாதனவ நுடலுயிரா யுண்டுறங்கி நடந்து
நானாபோ கங்களையுந் தானாகச் செய்து
பேதமற நின்றிவனைத் தானாக்கி விடுவன்
பெருகுசிவ போகமெனப் பேசுநெறி யிதுவே.

எண்ணும் அருள்நூல் எளிதின் அறிவாருக்(கு)
உணமை நெறிவிளக்கம் ஓதினான் – வண்ணமிலாத்
தண்காழித் தத்துவனார் தாளே புனைந்தருளும்
நண்பாய தத்துவநா தன்.

உண்மை நெறி விளக்கம் முற்றும்.

Related Articles

  • Sangarpa Niragaranam
    Sangarpa Niragaranam
    சங்கற்ப நிராகரணம் என்பது உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பட்டது. இது சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று. இது சைவ சித்தாந்தத்துக்கு நெருக்கமான, அகச்…
  • Nenju Vidu Thuthu
    Nenju Vidu Thuthu
    நெஞ்சு விடு தூது என்பது உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பட்டது. இது சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று. இது இறைவனிடம் தூது விடுவதுபோல…
  • Kodi Kavi
    Kodi Kavi
    கொடிக்கவி, மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்று. இவற்றுள் மிகச் சிறியதும் இதுவே. நான்கு வெண்பாக்களை மட்டுமே கொண்டது இந் நூல். இதை…
  • Potri Patrodai
    Potri Patrodai
    பூமன்னு நான்முகத்தோன் புத்தேளி ராங்கவர் கோன் மாமன்னு சோதி மணிமார்ப – னாமன்னும் வேதம்வே தாந்தாம் விளக்கஞ்செய் விந்துவுடன் நாதநா தாந்த…
  • Vina-Venbha
    Vina-Venbha
    வினா வெண்பா சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்று. உமாபதி சிவாச்சாரியாரால் 14ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இது பதின்மூன்று பாக்களை மட்டுமே…