Vina-Venbha

வினா வெண்பா சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்று. உமாபதி சிவாச்சாரியாரால் 14ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இது பதின்மூன்று பாக்களை மட்டுமே கொண்டது. வினா வடிவில் அமைந்துள்ள வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஆசிரியர் தம் குருவாகிய மறைஞான சம்பந்தரை வினவுவது போலவும், அவரைப் பாராட்டுவது போலவும் பாடலிலுள்ள வினாக்கள் அமைந்துள்ளன. இதற்குத் திருவாடுதுறை நமச்சிவாய தம்பிரான் எழுதிய உரை ஒன்றும் அச்சாகியுள்ளது. இவையன்றி, சில ஏட்டுப்பிரதிகளில் காணப்படுவதாக அருணாசலம் குறிப்பிடுகிறார்.

இவற்றில் ஆசிரியர் உமாபதியார் தம் ஆசிரியர் மறைஞான சம்பந்தரை ‘மருதைச் சம்பந்தா’, ‘கடந்தைச் சம்பந்தா’ என விளித்து வினாக்களை வினவியுள்ளார்.

நூல்

நீடு மொளியு நிறையிருளு மோரிடத்துக்
கூட லரிது கொடுவினையேன் – பாடிதன்மு
னொன்றவார் சோலை யுயர்மருதைச் சம்பந்தா
நின்றவா றெவ்வாறு நீ.
1

இருளி லொளிபுரையு மெய்துங் கலாதி
மருளி நிலையருளு மானும் – கருவியிவை
நீங்கி லிருளா நிறைமருதச் சம்பந்தா
வீங்குனரு ளாலென் பெற.
2

புல்லறிவு நல்லுணர்வ தாகா பொதுஞான
மல்லதில துள்ளதெனி லந்நியமாந் தொல்லையிருள்
ஊனமலை யாவா றுயர்மருதைச் சம்பந்தா
ஞானமலை யாவாய் நவில்.
3

கனவு கனவென்று காண்பரிதாங் காணி
னனவி லவைசிறிது நண்ணா – முனைவனருள்
தானவற்றி லொன்றா தடமருதைச் சம்பந்தா
யானவத்தை காணுமா றென்.
4

அறிவறிந்த வெல்லா மசத்தாகு மாயின்
குறியிறந்த நின்னுணர்விற்கூடா – பொறிபுலன்கள்
தாமா வறியா தடமருதைச் சம்பந்தா
யாமா ரறிவா ரினி.
5

சிற்றறிவு முற்சிதையிற் சோர்வாரின் றாஞ்சிறிது
மற்றதனி நிற்கிலருண் மன்னாவாந் துற்றமுகின்
மின்கொண்ட சோலை வியன்மருதைச் சம்பந்தா
வென்கொண்டு காண்பேனி யான்.
6

உன்னரிய நின்னுணர்வ தோங்கியக்காலொண்
தன்னளவு நண்ணரிது தானாகு – மென்னறிவு கருவி
தானறிய வாரா தடமருதைச் சம்பந்தா
யானறிவ தெவ்வா றினி.
7

அருவே லுருவன் றுருவே லருவன்
றிருவேறு மொன்றிற் கிசையா – வுருவோரிற்
காணி லுயர்கடந்தைச் சம்பந்தா கண்டவுடல்
பூணுமிறைக் கென்னாம் புகல்.
8

இருமலத்தார்க் கில்லை யுடல்வினையென் செய்யு
மொருமலத்தார்க் காரை யுரைப்பேன் – திரிமலத்தார்
ஒன்றாக வுள்ளா ருயர்மருதைச் சம்பந்தா
வன்றாகி லாமா றருள்.
9

ஒன்றிரண்டாய் நின்றொன்றி லோர்மையதா மொன்றாக
நின்றிரண்டா மென்னிலுயிர் நேராகுந் துன்றிருந்தார்
தாங்கியவாழ் தண்கடந்தைச் சம்பந்தா யானாகி
யோங்கியவா றெவ்வா றுரை.
10
காண்பானுங் காட்டுவதுங் காண்பதுவு நீத்துண்மை
காண்பார் கணன்முத்தி காணார்கள் – காண்பானுங்
காட்டுவதுங் காண்பதுவுந் தன்கடந்தைச் சம்பந்தன்
வாட்டுநெறி வாரா தவர்.
11

ஒன்றி நுகர்வதிவ னூணு முறுதொழிலும்
என்று மிடையி லிடமில்லை – யொன்றித்
தெரியா வருண்மருதைச் சம்பந்தா சேர்ந்து
பிரியாவா றெவ்வாறு பேசு.
12

அருளா லுணர்வார்க் ககலாத செம்மைப்
பொருளாகி நிற்கும் பொருந்தித் – தெருளா
வினாவெண்பா வுண்மை வினாவாரே லூமன்
கனாவின்பா லெய்துவிக்குங் காண்.
13

வினா வெண்பா முற்றும.

Related Articles

 • Sangarpa Niragaranam
  Sangarpa Niragaranam
  சங்கற்ப நிராகரணம் என்பது உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பட்டது. இது சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று. இது சைவ சித்தாந்தத்துக்கு நெருக்கமான, அகச்…
 • Unmai Neri Vilakam
  Unmai Neri Vilakam
  உண்மை நெறி விளக்கம், தமிழில் எழுதப்பட்ட சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்று. சைவ சித்தாந்தத்தை விளக்கும் இன்னொரு நூலான சிவப்பிரகாசத்தில் குறிப்பிடப்பட்ட தசகாரியம்…
 • Nenju Vidu Thuthu
  Nenju Vidu Thuthu
  நெஞ்சு விடு தூது என்பது உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பட்டது. இது சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று. இது இறைவனிடம் தூது விடுவதுபோல…
 • Kodi Kavi
  Kodi Kavi
  கொடிக்கவி, மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்று. இவற்றுள் மிகச் சிறியதும் இதுவே. நான்கு வெண்பாக்களை மட்டுமே கொண்டது இந் நூல். இதை…
 • Potri Patrodai
  Potri Patrodai
  பூமன்னு நான்முகத்தோன் புத்தேளி ராங்கவர் கோன் மாமன்னு சோதி மணிமார்ப – னாமன்னும் வேதம்வே தாந்தாம் விளக்கஞ்செய் விந்துவுடன் நாதநா தாந்த…