Vishnu Puranas -2

6.வருணாசிரமங்கள்

தேவர்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் முதலியவற்றின் படைப்புக் கிரமங்களைப் பற்றிப் பராசர முனிவர் கூறியதும் மைத்ரேய முனிவர் அவரை நோக்கி, மகரிஷியே! மனிதர்கள் படைக்கப்பட்டதைப் பற்றி நீங்கள் சுருக்கமாகச் சொன்னீர்கள். இனி அவர்களுடைய குணங்களைப் பற்றியும், வருணாசிரம விவரங்களை பற்றியும், ஆசார வேறுபாடுகளைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்! என்றார். அதற்குப் பராசரர் பின்வருமாறு கூறலானார்: பூர்வத்தில் பிரமன் மனிதர்களைப் படைக்க வேண்டும் என்று சிந்தித்தபோது, அவரது முகத்திலிருந்து சத்வகுணமுடையவர்களான பிராமணர்கள் தோன்றினார்கள். அவரது மார்பிலிருந்து ராஜசகுணமுடைய க்ஷத்திரியர்கள் தோன்றினார்கள். தொடைகளிலிருந்து ராஜசகுணமும் தாமஸகுணமும் கலந்தவைசியர்கள் தோன்றினார்கள். பாதங்களிலிருந்து தமோ குணமுடைய சூத்திரர்கள் தோன்றினார்கள். இவ்விதம் பிரமதேவனின் முகம், மார்பு, தொடைகள், பாதங்கள் என்னும் அவயங்களிலிருந்து பிறந்த பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களை யாகங்களுக்குரிய செயல்களை செய்யும்படி அவர் நியமித்தார். மைத்ரேயரே! இந்த நால்வகையான மக்களும் யாகங்களுக்கு முக்கியமானவர்கள். யாகங்களால் தேவதைகள் திருப்தியடைந்து, காலாகாலத்தில் மழைபொழிந்து மனிதரைத் திருப்தியுறச் செய்வார்கள். ஆகவே உயர்வுக்கு ஏதுக்களான யாகங்கள் மக்களால் முக்கியமாகச் செய்யத் தக்கவையாகும். வேத சாஸ்திரத்திற்கு விரோதமான ஒழுங்கீனங்களை விட்டு சன்மார்க்கத்தில் நடக்கிற சத்புருஷர்கள் சொர்க்கசுகத்தையும் மோக்ஷõனந்தத்தையும் தம் மனிதப்பிறவியிலேயே அடைவார்கள். இவ்விதமாக இரண்யகர்ப்பனால் படைக்கப்பட்ட நான்கு வர்ண மக்களும், சாஸ்திர விசுவாசத்தினால் சதா சாரமும் விநயமும் அடைந்து, நிர்மலமான இருதயமுடையவராய் சகலவிதமான சத்கருமங்களையும் செய்துகொண்டு காமக்குரோத லோபம் இல்லாமல், நினைத்த இடத்தில் நினைத்தபடி வசித்து, நிர்மலமான இதயத்தில் இறைவனைத் தியானித்துத் தத்துவ ஞானம் பெற்று தெளிந்தவர்களாய் சற்கதியடைந்தார்கள்.

இதுபோல் கிருதயுகத்திலிருந்து திரேதாயுகத்தின் இடைக்காலம் வரை நடந்தது. பிறகு, நாராயணாம்சம் என்று சொல்லப்பட்ட காலவசத்தினாலே, மனிதருடைய சத்துவ புத்தியும் தைரியமும் ஆயுளும் குறையும்படி நேரிட்டது. அதனால் மோகமும் லோபமும் மேலிட்டன. அதருமம் மிகுதியாயிற்று அதனால் மோட்சமார்க்கத்திற்கு விரோதமான ராகத்துவேஷங்கள் பிரபலமாயின. ஆகையால் இயல்பாகவே உண்டாகத்தக்க ஞானமும், தொந்தங்களை வெல்லத்தக்க சக்தியும் மக்களிடம் குறைந்தன முன்பெல்லாம் பெண்கள் முதலியவை இல்லாமலேயே ஆனந்தம் உண்டாவதுண்டு. யோகப் பயிற்சியினால் சிரசிலுள்ள சந்திர மண்டலத்தினின்றும் ஒழுகும் அமிருதத்தினாலே பசியுங்கூட இல்லாமல் இருந்தது. ஒருமுறை மழை பெய்தாலே பயிர்கள் செழுமையாக வளர்ந்தன. நினைத்தபோதே மரங்கள் பலிதமாயின. நினைத்தவை நினைத்தவாறே கைகூடின பரத்வாச முனிவருக்கு நடந்தது. போலவே, கற்பக விருட்சங்கள் வந்து வேண்டியதைக் கொடுத்தன. வேண்டும்போதெல்லாம் மழை பெய்தது. உழுது வருந்தாமல் பூமி விளைந்தது இவ்விதமான எட்டுச் சித்திகளும் நாளடைவில் க்ஷீணித்து பாதகச் செயல்கள் அதிகமாயின.

அதனால் பூமியில் வாழும் மக்கள், ராகத்துவேஷ. லோப, மோகாதி தொந்த துக்கங்களினால் பீடிக்கப்பட்டு, ஒருவரையொருவர் விசுவாசியாமல் மலைப் பிரதேசங்களிலும், தண்ணீர் சூழ்ந்த நிலப்பகுதியிலும் வசித்தார்கள். அங்கு கோட்டைகள், கொத்தளங்கள், அகழிகள் முதலியவற்றை அமைத்தார்கள். நகரங்களையும் வீதிகளையும் வீடுகளையும் கட்டிக்கொண்டார்கள். மழை, காற்று, வெய்யில் இவற்றின் உபத்திரவங்களை நீக்கிக் கொள்வதற்கான உபாயங்களை உண்டாக்கிக் கொண்டார்கள். பிழைப்பிற்காகப் பயிர்த்தொழில்கள், ஆடு மாடுகள் வளர்த்தல் வாணிபம் முதலியவற்றைச் செய்தார்கள். பயிர்த்தொழிலால் விளைந்த சம்பா முதலிய நெல், யவம், கோதுமை, சோளம், கேழ்வரகு, தினை, உளுந்து, பயிறு சிறு கடலை, துவரை, மொச்சை, கொள்ளு, கடலை, சணல் ஆகிய தற்காலிக பயன்களை அனுபவித்தார்கள். இந்தப் பதினேழு வகையான தானியங்களும் கிராமியங்கள் என்று வழங்கப்படும். நெல், யவம், உளுந்து, கோதுமை, சிறுதானியம் என்ற பிரியங்கு, கொள்ளு, சாமை; செந்நெல், காட்டு எள், கெவீது, மூங்கிலரிசி, மற்கடகம் என்ற பதினான்கு விதமான தானியங்களும் கிராமிய ஆரணியங்கள் என்று பெயர் பெற்று யாகங்களுக்குப் பயன்பட்டன. இவை யக்கியங்களுக்கும் பிரஜா அபிவிருத்திக்கும் காரணமாயின. எனவே, அவற்றைக் கொண்டு, பராபரவிவேகமுள்ள ஞானிகள் நாள்தோறும் பாவங்களைப் போக்கதக்க பஞ்ச மகா யாக்கியங்களைச் செய்வார்கள். முனிவரே! தினமும் யாகாதி கர்மங்களைச் செய்வதால், புருஷர்கள் சகலபாவ விமுக்தராய்ப் பரம சுகத்தை அடைவார்கள். ஆதிகாலத்தில் எவருடைய மனமானது கால வசத்தால் பாபதூஷிதமாயிற்றே, அவர்கள் யக்கியாதி நற்கருமங்களில் விசுவாசமில்லாமல் பாதங்களை அபிவிருத்தி செய்து; வேதங்களையும் நற்கருமங்களையும் நிந்திக்கலானார்கள். யாகங்களுக்கு இடையூறுகளைச் செய்தார்கள். தேகத்தைப் போஷிப்பதற்கான செயல்களை மட்டுமே செய்தார்கள். லோக விருத்திக்கு விரோதிகளாய், துராத்மாக்களுமாய்; துராசாரமுடையவர்களுமாய்; குடில் புத்தியை உடையவர்களானார்கள். இது ஒருபுறம் இருக்கட்டும்.

பிரம; க்ஷத்திரிய: வைசிய; சூத்திராதி (நான்கு) வருணங்களையும் நான்கு ஆசிரமங்களையும் இரண்யகர்ப்பன் நிர்மித்து, வர்ணாசிரமத்திற்கு உரிய மரியாதைகளையும் ஏற்படுத்தி; அவரவரது தாரதம்மானு குணமாகப் புண்ணிய லோகங்களையும் ஏற்படுத்தினார். ஸ்வதர்ம அனுஷ்டான பராயணரான பிராமணர்களுக்குப் பிரஜாபத்திய லோகத்தையும், போரில் புறங்கொடாத க்ஷத்திரியர்களுக்கு; இந்திரலோகத்தையும், ஸ்வதர்ம நிரதரான வைசியருக்கு மருத்துக்களின் லோகத்தையும்; பணிவிடைக்காரரான சூத்திரர்களுக்கு கந்தர்வலோகத்தையும், குரு பணிவிடை செய்வதில் ஊக்கமுடைய பிரம்மச்சாரிகளுக்கு ஊர்த்தரே தஸரான எண்பத் தெண்ணாயிரம் யதீச்சுவர்கள் வாசம் செய்யும் திவ்விய லோகத்தையும்? வானப்பிரஸ்தருக்கு சப்தரிஷி லோகத்தையும், கிரகஸ்தருக்குப் பிரஜாபத்திய லோகத்தையும்; சந்நியாசிகளுக்குப் பிரமலோகத்தையும் தோற்றுவிக்க சங்கல்பம் செய்தார். இவையாவும் கர்ம மார்க்கத்தினால் உண்டான புண்ணிய லோகங்களாகும். இனி ஞானியருக்குக் கிடைக்கும் உலகங்களைச் சொல்கிறேன்; கேளுங்கள். ஆத்மத் தியானிகளான யோகீசுரர்களுக்கு அமிர்தஸ்நானம் உண்டாம். (அமிர்த ஸ்நானம் என்பது துருவலோகத்துக்கு மேலே; கங்கை தோன்றும் இடம்.) தினமும் யோகப்பயிற்சிகளைச் செய்தும்; பிரமத் தியானத்தை செய்து கொண்டும் இருக்கிற மகாத்மாக்களுக்கெல்லாம்; நித்திய சூரிகளாலே காணப்பட்ட பரமபதம் உண்டாகும். சந்திர சூரியாதி கிரகங்களும் காலக்கிரமத்தில் அதனதன் இடம் விட்டு; பலமுறைகள் நீங்குகின்றன. துவாதசாக்ஷர மந்திரத்தை ஜெபிக்கிற மகான்மாக்கள் என்றைக்கும் திரும்பி வராமல்; பரமனாந்தத்தை அனுபவிக்கிறார்கள். இனிப் பாபஞ்செய்கிற கெட்டவர்கள் அடையத்தக்க லோகத்தை அறிவிக்கிறேன். தாமிஸ்வரம்; அந்தாமிஸ்ரம்; ரௌரவம்; மகா ரௌரவம், அசிபத்ரவனம்; காலசூத்திரம்; அவீசிமத்து என்ற மகாகொடிய நரகங்கள் எல்லாம்; வேதங்களை நிந்தித்து; யக்கிய விக்னஞ்செய்கிற பாபாத்துமாக்களுக்கு உண்டாகும்.

7.பிருகு முதலியவர்களின் படைப்பு

சதுர்முகனாகிய பிரமதேவன்; பிரஜா சிருஷ்டி செய்ய வேண்டும் என்ற சிந்தனையோடு இருக்கும்போது அவனுடைய சங்கல்பத்தினால் அவனது அங்கத்திலிருந்து தர்மத்தை அனுபவிக்கும்படியான தேக; இந்திரியங்களுடன் கூடிப்பிறந்த தேவமனுஷிய திரியத் தாவரங்களான சதுர்வித சங்கங்களும் அபிவிருத்தியடையாமற் போயின. அதைக்கண்ட பதுமகர்ப்பன் மீண்டும் பிரஜா சிருஷ்டி செய்ய எண்ணி பிருகு புலஸ்தியர்: கிரது; அங்கிரசு; மரீசி; அத்திரி; தக்ஷர்; வசிஷ்டர்; நாரதர் என்ற ஒன்பது புத்திரர்களைத் தனது மனத்தாலே படைத்தான். அவர்கள் பிரம்மாவுக்கு இணையானவர்களாக இருந்ததால் நவபிரமாக்கள் என்று புகழ்பெற்றனர். இந்த நவப்பிரம்மாக்களுக்கு முன்பே பிதாமகன் ஸனக, ஸனந்தனாதிகளைச் சிருஷ்டித்தான். அவர்கள் பிரமாவுக்கு இணையானவர்களாக இருந்ததால் நவபிரமாக்கள் என்று புகழ்பெற்றனர். இந்த நவப்பிரம்மாக்களுக்கு முன்பே பிதாமகன் ஸனக, ஸனந்தனாதிகளைச் சிருஷ்டித்தான். அவர்கள் வைராக்கியத்துடன் மோட்சமார்க்க நிரதர்களாய்; பிரஜா சிருஷ்டியில் ஈடுபடாமல் சர்வ சங்கப் பரித்யாகிகளாய் யோக நிஷ்டை பெற்று, காமக்ரோத மதாச்சரியங்கள் இல்லாதவர்களாய் கிருதார்த்தர்களாக இருந்தார்கள். அவர்கள் பிரஜா சிருஷ்டியைச் செய்யாமல் இருந்ததால் பதும கர்ப்பனுக்கு பொறுக்கமுடியாத குரோதம் உண்டாயிற்று. அப்போது மூன்று உலகங்களையும் எரித்துவிடும்படியான கோபாக்கினி ஜ்வாலைகள் பொருந்தியும் பயங்கரமாகப் புருவங்களை நெறித்துக் கொண்டும், குரோதத்தினால் ஜ்வலித்துக் கொண்டும் இருக்கிற பிரம்மாவின் லலாடத்திலிருந்து நடுப்பகல் சூரியனைப் போன்ற பிரகாசமுடையவரும், அர்த்தநாரி ரூபத்தைத் தரித்தவரான ருத்திரமூர்த்தி தோன்றினார்.

அந்த ருத்திரமூர்த்தி அதியுன்னத சரீரமுடையவராகவும், உக்கிர குணமுள்ளவராகவும் பாதியுடம்பு ஆணும் பாதியுடம்பு பெண்ணுமாகவும் விளங்கினார். அம்மூர்த்தியை பிரம்மா நோக்கி; இரண்டு விதமாக இருக்கிற நீயே உன்னைத் தனித்தனியாக பிரிப்பாயாக! என்ற சொல்லி அந்தர்த்தானமானார், அதன் பிறகு அந்த ருத்திரமூர்த்தியும், ஆண் பெண் உருவமாக இருந்த தன் உடம்பை பெண் உருவாகவும், ஆண் உருவாகவும் தனியே பிரித்து, வேறாகிப் பின்பு அந்தப் புருஷரூபத்தையும் பதினோறு விதமாகப் பிரித்து, பெண் ரூபத்தையும் பலவிதங்களாகப் பிரித்தார். அவை சவுமியங்களாகவும், பயங்கரங்களாகவும், காந்தங்களாகவும், கோரங்களாகவும், கறுத்தனவாகவும், வெளுத்தனவாகவும் பலவகைப்பட்டிருந்தன. பிறகு இரணியகர்ப்பன், பிரஜைகளை காக்கும் பொருட்டுத் தன்னுடைய அம்சத்தினாலே புத்திரன் ஒருவனைச் சிருஷ்டித்தார். அவன் சுவாயம்புவமநு என்ற பெயரைப் பெற்று, பிரஜா பரிபாலனஞ் செய்து கொண்டிருந்தான். பிரம்மா, தம் அம்சத்தினால் தாமாகவே மநு என்ற புருஷன் ஆனதைப்போலவே, தமது பத்தினியின் அம்சத்தினாலே ஒரு ஸ்திரீயை உண்டாக்கினார். அந்த மங்கை சதரூபை என்ற பெயர் கொண்டு தனக்குச் சரியான புருஷன் வேண்டும் என்று தவஞ்செய்து, தூய்மையாக இருந்தாள். அப்போது பிரமனின் கட்டளைப்படி சதரூபையை மநுமணந்து அவளிடத்தில் பிரியவிரதன், உத்தானபாதன் என்னும் இரு பிள்ளைகளையும் பிரசூதி, ஆகுதி என்ற இரண்டு பெண்களையும் பெற்றான். பிறகு அழகும் குணமும் பொருந்திய இரண்டு பெண்களில், பிரசூதி என்பவனைத் தக்ஷனுக்கும், ஆகுதியை ருசி என்பவனுக்கும் மறுமணஞ்செய்து கொடுத்தான். ருசி என்பவன் ஆகுதி என்பவளைச் சேர்ந்து, யக்கியன் என்ற பிள்ளையையும் தக்ஷிணை என்ற பெண்ணையும் பெற்றான். பிறகு அந்த யக்கியன் தனக்குப் பத்தினியாகத் தன்னுடன் படைக்கப்பட்ட தக்ஷிணை என்பவனிடத்திலே பன்னிரண்டு பிள்ளைகளைப் பெற்றான். அவர்கள் முதல் மநுவந்தரத்தில் யாமர் என்ற தேவர்களாயினர்.

அதுபோலவே தக்ஷன் என்பவன் பிரசூதியின் மூலம் இருபத்து நான்கு பெண்களைப் பெற்றான். அவர்களிலே, சிரத்தை, லட்சுமி, திருதி, துஷ்டி, புஷ்டி, மேதை, கிரியை; புத்தி, லஜ்ஜை வபு, சாந்தி, சித்தி, கீர்த்தி என்ற பதின்மூன்று கன்னிகைகளைத் தர்மனுக்குத் திருமணஞ்செய்து கொடுத்தான். அந்த தர்மன் தன்பத்தினிகளில் ஒருத்தியான சிரத்தையிடத்தில் காமனையும், லக்ஷ்மியிடத்திலே தர்ப்பனையும், துஷ்டியிடம் சந்தோஷனையும், புஷ்டியிடம் லோபனையும், மேதையிடத்தில் சுருதனையும், கிரியையிடத்தில் தண்டன், நயன், விநயன் என்னும் மூவரையும், புத்தியிடம் போதனையும், லஜ்ஜையிடத்தில் விநயனையும், வபுவினிடத்தில் விவசாயனையும், சாந்தியினிடத்திலே ஷேமனையும், சித்தியிடம் சுகனையும், கீர்த்தியினிடத்திலே யசனையும் பெற்றான். அவர்களில் சிரத்தையின் புத்திரனான காமன் என்பவன் ரதி என்பவளிடத்தில் ஹர்ஷன் என்ற பிள்ளையைப் பெற்றான். பிறகு தக்ஷன் தன் பெண்களான கியாதி (மகிமை) சதி, (உண்மை) சமபூதி (தகுதி) ஸ்மிருதி (நினைவு), பிரீதி (அன்பு), க்ஷமை (பொறுமை) சன்னதி (எளிமை), அநுசூயை (தயை), ஊர்ச்சை (சக்தி), சுவாகை (சமர்ப்பணம்), சுவதை (துதி) என்ற பெயரையுடைய பதினோரு பெண்களையும் முறையே பிருகு மகரிஷிக்கும், ருத்திரனுக்கும், மரீசிக்கும், அங்கிரசுக்கும், புலஸ்தியனுக்கும், புலகனுக்கும், கிரதுவுக்கும், அத்திரிக்கும், வசிஷ்டனுக்கும், அக்கினிக்கும், பிதுர்த்தேவதைகளும் மணஞ்செய்து கொடுத்தான். இது இப்படியிருக்க அதர்மன் என்பவன் ஹிம்சை என்ற பெண்ணைச் சேர்ந்து, அநிருதன் (பொய்யை) என்கிற புதல்வனையும் நிகிருதி (வேசித்தன்மை) என்ற புத்திரியையும் பெற்றான். அவ்விருவரும் சேர்ந்து பயன், நரகன் என்ற இரு பிள்ளைகளைப் பெற்றனர். அப்பிள்ளைகள் தங்களுடன் பிறந்த மாயை வேதனா என்பவர்களையே மணந்தார்கள். அவர்களில் மாயை என்னும் மங்கை சர்வப் பிராணிகளையும் அபகரித்துக் கொள்ளும் மிருத்யுவைப் பெற்றாள். வேதனை என்பவள் ரவுரவனைச் சேர்ந்து துக்கன் என்பவனைப் பெற்றாள். அந்த மிருத்யுவுக்கு வியாதி, சூரை, சோகன், திருஷ்னை, குரோதன் என்ற பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள் அனைவரும் துக்கமயமான இயல்புடையவர்களாய், அதர்ம சொரூபிகளாய் ஊத்தரே தசுக்களாய், மனைவி மக்களற்றவர்களாய், ஜகத்தின் அழிவுக்கு ஏதுக்களாக இருந்தார்கள்.

முனிவரே! அதர்மாதி சொரூபங்கள் யாவும் ஸ்ரீவிஷ்ணுவினுடைய ரவுத்திரமான சரீரங்கள்! அவை நித்தியப் பிரளயத்துக்கு ஏதுக்கள், தக்ஷன், மரீசி, அத்திரி, பிருகு முதலிய பிரஜாபதிகள் நித்திய சிருஷ்டிக்கு காரணமாவர். மநுவும் மநுவின் புத்திரர்களும் சன்மார்க்கராயும் வீரியமே முக்கியமாக நினைத்தவராயுமுள்ள நித்திய சூரஸ்திதிக்கு காரணமாவார்கள். இவ்வாறு பராசரர் கூறியதும் மைத்ரேயர் அவரை நோக்கி, பிராணிகள் யாவும் அநித்தியங்களாக இருக்க, நித்திய ஸ்திதியும் நித்திய பிரளயமும் உண்டாவதற்குக் காரணம் என்ன? என்று கேட்டார். அதற்குப் பராசரர் பதில் கூறலானார். மைத்ரேயரே! பூதபாவனனும் அறியக்கூடாத சொரூபமுடையவனும் தடையற்றவனுமான ஸ்ரீமதுசூதனன் என்ற பெயரையுடைய பகவானே, தன் சக்தியினாலேயே சிறப்புடைய மநு முதலான அந்தந்த ரூபங்களைக் கொண்டு, சிருஷ்டி, ஸ்திதி, சங்காரங்களை நடத்துகிறான். அவற்றை நித்தியங்கள் என்றேன். இனி பிரளய பேதங்களைப் பற்றிச் சொல்கிறேன். பிரளயமானது, நைமித்திகம், பிராகிருதம், ஆத்தியந்திகம், நித்தியம் என்று நான்கு விதமாகும். அவற்றுள், எதனிடத்தில் ஜகத்பதியானவர் சயனிக்கிறாரோ அதுவே, பிரமனுடைய தனி அந்தியத்தில் உண்டாகும் நைமித்திகப் பிரளயமாகும். நான்முகப் பிரமனின் ஆயுள் முடிவில் பிரமாண்டம் உடைந்து சகல பூதங்களும் பிரகிருதியினிடத்தில் வயப்படுவது பிராகிருதப் பிரளயமாகும். யோகியானவன் ஞானதிசயத்தினால், அநாதி காம வாசனைகளால் செய்யப்பட்ட சங்கங்களையும் துறந்து, பரமாத்துமாவிடம் சாயுஜ்யத்தை அடைவது ஆத்தியந்திகப் பிரளயம் என்று வழங்கப்படும். சதுர்வித பூதங்களும் தத்தமது ஆயுள் முடிவில் மரணமடைவது நித்தியப் பிரளயம் என்று சொல்லப்படும். இனி, சிருஷ்டி பேதங்களைக் கேளும், பிரமன் பிறப்பதற்கு முன்பே, பிரகிருதியினால் மகத்தகங்கார தன்மாத்திரைகளை உண்டாக்குவது பிராகிருத சிருஷ்டி என்றும் தினப் பிரளயத்தின் முடிவிலே பிரஜைகளை உண்டாக்குவது நைமித்திக சிருஷ்டி என்றும் சொர்க்க நரகாதி போக அனுபவமான பிறகு ஜீவாத்துமாக்களே மனிதர், மிருகம், பறவை முதலான உருவங்களாகப் பிறப்பது நித்திய சிருஷ்டி என்றும் பவுராணிகர்கள் சொல்வார்கள். மைத்ரேயரே! ஜகத் காரண பூதரான ஸ்ரீவிஷ்ணு பகவான், சர்வபூத சரீரங்களிலேயும் இருந்து கொண்டே சிருஷ்டி, ஸ்திதி, லயங்களைச் செய்கிறார்.

ஆனால் எம்பெருமான் எல்லாச் சரீரங்களிலேயும் எப்போதுமே இருக்கும்போது, சிருஷ்டியாதிகள் காலபேதத்தினால் உண்டாக வேண்டுவது ஏன் என்று கேட்பீர்கள். சகல பூதங்களிலும் சிருஷ்டி ஸ்திதி, சங்கார சக்திகள் எப்பொழுதும் ஸ்ரீமந் நாராயணனுடைய சங்கல்பத்திற்குத் தக்கவாறே உண்டாகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்தப்படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய சக்திகள் மூன்றும் சத்வகுணம், ராஜஸகுணம், தாமச குணம் ஆகிய முக்குணங்களால் உண்டானவை. எவன் இவைகளுக்கு உட்படாமல் சர்வ சங்கவிமுக்தனாய், பிரம சாயுஜ்யத்தை அடைவானோ, அவன் அப்படியே இருப்பதன்றி மீண்டும் திரும்பமாட்டான்!

8.ருத்திர சிருஷ்டியும் ஸ்ரீதேவி வைபவமும்

பராசரர் தொடர்ந்து மைத்ரேயரை நோக்கிக் கூறலானார். மைத்ரேயரே! நான்முகனான பிரம்மதேவன் தாமச சிருஷ்டியைச் செய்தான் என்று முன் சொன்னேன் அல்லவா? அதைச் சொல்கிறேன்; கேளுங்கள். கல்பாதி காலத்திலே இரணியகர்ப்பன் தனக்குச் சமமான ஒரு குமாரனைப் பெற வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, அவனுடைய மடியில், கறுப்புஞ்சிவப்பும் கலந்த நீலலோகிதனான குமாரன் ஒருவன் தோன்றினான். அவன் இனிய குரலுடன் அழுதுகொண்டு ஓடினான். பிதாமகன் அவனை நோக்கி, மகனே! ஏன் ரோதனம் செய்கிறாய்? என்று கேட்க, அவன் எனக்கு நாமதேயம் கொடும் என்று கூறினான். அதைக் கேட்ட பிரும்மா, தேவனே நீ ருத்திரன் என்ற பெயர் பெற்று புகழ் அடையக் கடவாய்! ரோதனம் செய்யாமல் தைரியமாய் இரு என்று சொன்னார். அப்படிச் சொல்லியும் ருத்திரன் மீண்டும் ஒருதரம் ரோதனஞ் செய்ததால், பிரமன் அவனுக்குப் பவன், சர்வன், ஈசானன், பசுபதி, பீமன், உக்கிரன், மகாதேவன் என்ற ஏழு பெயர்களைச் சூட்டி, அப்பெயர்களையுடைய ருத்திர மூர்த்திகளுக்கு வெவ்வேறு ஸ்தானங்களையும், பத்தினிகளையும், புத்திரர்களையும் கொடுத்தார். அந்த எழுவரின் ஸ்தானங்களாவன? சூரியன், ஜலம், பூமி, அக்கினி, வாயு, ஆகாயம், தீட்சிதனான பிராமணன் சந்திரன் என்பனவாகும் அவன் அங்கு இருப்பதால் அதுவே சரீரமாயின. ருத்திராதி நாமமுடைய அந்த எட்டு மூர்த்திகளுக்கும் முறையே சுவர்ச்சலை, உஷை சுகேசி, சிவை சுவாகை. திசை, தீட்சை, ரோகிணி என்ற எட்டு பெண்களும் பத்தினிகளாவார்கள். இவர்களுக்கு சனி, சுக்கிரன், அங்காரகன், மனோஜவன், கந்தன், சொர்க்கன் சந்தானன், புதன் ஆகிய எண்மரும் பிள்ளைகள் இவர்களுடைய புத்திர பவுத்திராதி பரம்பரையினரால் கலகம் நிறைந்தது. இவ்விதம் அஷ்டமூர்த்தியாகிய ருத்திரன் தக்ஷப் பிரஜாபதியின் புத்திரியான சசிதேவியைக் கல்யாணம் செய்துகொண்டான். அந்தச் சசிதேவியும் தன் தந்தையின் கோபத்தால் தானும் கோபித்துத் தன் சரீரத்தை விட்டுவிட்டாள். பிறகு அவள் இமவானுக்கு மேனை என்ற மனைவியிடம் உமை என்ற பெயரோடு மறுபடியும் பிறந்தாள். சிவபெருமான் தன்னையே நினைத்துக் கொண்டிருந்த அந்தக் கன்னியை மீண்டும் திருமணஞ்செய்து கொண்டார். இது இப்படியிருக்க, முன்பு சொன்னபடி, பிருகு முனிவர் தம் மனைவியான கியாதியிடம் தாதா விதாதா என்ற பிள்ளைகளையும், ஸ்ரீமந்நாராயணனுக்குப் பிரிய பத்தினியான ஸ்ரீதேவி என்பவளையும் பெற்றார்.

இதைக் கேட்டதும் மைத்ரேயர், முனிவரே! அமிருதமதன காலத்தில் ஸ்ரீமஹாலட்சுமியானவள் திருப்பாற்கடலில் அவதரித்தாள் என்பது உலகம் அறிந்ததாயிற்றே! அப்படியிருக்க பிருகு முனிவரின் மகளாக ஸ்ரீதேவி பிறந்தாள் என்பது எவ்விதம் பொருந்தும்? என்று கேட்டார். அதற்குப் பராசரர் கூறலானார்; மைத்ரேயரே! உலக மாதாவான பிராட்டியானவள் என்றைக்கும் ஸ்ரீவிஷ்ணு பகவானை விட்டுப் பிரியாதவளாய், நித்யையாக இருப்பவள் அவளுக்கு பிறவிகள் இல்லை. ஆயினும் எம்பெருமானைப் போலவே, அவளும் அவதரிப்பதும் மறைவதுமாக இருப்பாள். எம்பெருமானைப் போலவே, ஸ்ரீதேவிப் பிராட்டியும், சகல கலியாண குணங்களோடு விளங்குவாள். சகல பூதங்களுக்கும் தாயும் தந்தையுமான அந்தத் திவ்வியத் தம்பதிகளுடைய விபூதி வைபவத்தைக் கூறுகிறேன், கேளும். சொல்லுக்குப் பொருள் அந்தப் பெருமாள். அந்தப் பொருளைத் தெரிவிக்கும் சொல் இந்தப் பிராட்டி; நீதி இவள்; அந்த நீதியின் உபாயமான நயம் அவன் இவள் புத்தி; அந்தப் புத்தியாலாகும் போதம் அவன். தருமம் அந்த ஸ்ரீமந்நாராயணன்; அந்தத் தருமத்திற்குச் சாதகமான சத்கிரியை ஸ்ரீதேவி; படைப்பவன் ஸ்ரீவிஷ்ணு; அந்தப்படைப்புச் சக்தி ஸ்ரீதேவி; படைப்பவன் ஸ்ரீவிஷ்ணு; அந்தப் படைப்புச் சக்தி ஸ்ரீதேவி; இவன் பூமி; இந்தப் பூமியை தரிப்பவன் விஷ்ணு; அந்தப் பகவான் சந்தோஷம்; அதை உண்டாக்கும் சந்துஷ்டி ஸ்ரீதேவி; இச்சை என்பது ஸ்ரீதேவி; காமம் என்பது பகவான்; யக்ஞம் ஜகந்நாதன். தக்ஷிணை ஜகன்மாதா! புரோடாசம் சனார்த்தனன்; ஆச்சியாகுதியானது கமலை. பிராக்கு வம்சம் என்பது மதுசூதனன்; பத்தினிச் சாலை என்பது ஸ்ரீதேவி யூபஸ் தம்பம் ஸ்ரீஹரி; யாகவயனம் ஸ்ரீலக்ஷ்மி! எம்பெருமான்-தர்ப்பை: பிராட்டியே சமித்து! சாமவேதம்-பகவான்; அதில் சேர்ந்த உத்கீதி என்பது லக்ஷ்மி! வாசுதேவன் அக்னி; இந்திரையானவள் சுவாகா தேவி.

ஸ்ரீவிஷ்ணு பகவானே சங்கரன்; ஸ்ரீ மகாலக்ஷ்மியே கவுரி. கேசவனே சூரியன்; அவனது பிரபையே கமலை! விஷ்ணுதேவன் பிதுர்தேவதா சொரூபி; ஜகன் மாதாவோ ஆகாயம் அதி விஸ்தாரமான அதன் பரப்பே விஷ்ணு அந்த ஸ்ரீயப்பதியே சந்திரன். அந்தச் சந்திரனின் காந்தியாகிய நிலவே ஸ்ரீதேவி! சர்வாக்தனான ஸ்ரீஹரியே வாயு; அந்தச் சந்திரனின் காந்தியாகியே நிலவே ஸ்ரீதேவி! சர்வக்தனான ஸ்ரீஹரியே வாயு; அந்தக் காற்றின் செய்கையே திருமகள்! சமுத்திரம் கோவிந்தன்; அந்தச் சமுத்திரத்தின் அலை முதலான விகிருதியெல்லாம் ஸ்ரீதேவி! மதுசூதனனே தேவேந்திரன்; இந்திரையே இந்திராணி சக்கரதரனான பகவானே யமன்; கமலாயையே யமபத்தினியான தூமார்னே! ஸ்ரீதரனே குபேரன்; ஸ்ரீதேவியே அந்தக் குபேரனின் பெருஞ்செல்வம்! விஷ்ணுவே வருணன் லக்ஷ்மியே வருணனின் பத்தினியான கவுரி! கோவிந்தனே தேவ சேனாதிபதியான கந்தன்; இந்திரையே தேவசேனை! கதாதரனே பிடிப்பு; அதற்கு காரணமான சக்தியே ஸ்ரீதேவி! நிமிஷம் நாராயணன் காஷ்டை லக்ஷ்மி! முகூர்த்தம்-வாசுதேவன் அந்த முகூர்த்தத்தின் அவயவமான கலை ஸ்ரீ லோகமாதா! திருவிளக்கு-சர்வேசுவரன்; அதன் காந்தி-லோகநாயகி! ஸ்ரீ மகாவிஷ்ணு விருட்சம்; ஸ்ரீதேவி கொடி! சக்கரதரன் பகல் ஸ்ரீகாந்தை இரவு! விஷ்ணுவே மணமகன்; ஸ்ரீதேவியே மணமகள்! பகவான் நதி! சொரூபன்; ஸ்ரீதேவி நதி சொரூபை நாராயணன் லோபம்; லக்ஷ்மியே ஆசை! கோவிந்தன் ராகம்; ஸ்ரீதேவியே அதன் காரணமாகிய காதல்! மைத்ரேயரே! இப்படி அநேக வாக்கியங்களைச் சொல்லிப் பயன் என்ன? அந்தத் திவ்விய தம்பதிகளின் விபூதியைச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேளுங்கள். தேவதைகளுக்குள்ளும், மனிதர்களுக்குள்ளும் திரியக்குகளிலும், மற்றுமுண்டான பொருட்களிலும் உள்ள ஆண் தன்மையான பெயரையுடையனவெல்லாம் ஸ்ரீஹரியே; பெண் லிங்கமான பெயருடையனவெல்லாம் ஸ்ரீதேவியே; என்று நினைப்பீராக! இவ்விருவரினும் வேறான வஸ்து ஒன்றும் இல்லை. எல்லாம் அவர்களில் வியாபிக்கப்பட்டு அவர்களது விபூதியாகவே இருக்கின்றன!

9.திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்த கதையும், ஸ்ரீதேவிப் பிராட்டியாரின் திருத்தோற்றமும்
பராசரர் மேலும் தொடர்ந்து கூறலானார்;
மைத்திரேயரே! நீர் அறிந்து கொள்ள விரும்பிய பிராட்டியாரின் திருவவதார சரித்திரத்தை, நான் முன்பு மரீசி மாமுனிவரிடம் கேட்டறிந்தபடிக் கூறுகிறேன், கேளும். ருத்திரருடைய அம்சமான மிகவுங்கோபமுள்ள துர்வாச மஹாமுனிவர், பூமண்டலமெங்கும் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு சமயம், மனிதர்கள் எளிதில் அடைய முடியாத வனத்தின் வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது, அங்கே ஒரு வித்தியாதர மங்கை தென்பட்டாள். அவளது கையில் பரிமள மிகுந்த ஒரு மலர் மாலை இருப்பதைத் துர்வாச முனிவர் கண்டார். அவர் அந்த மங்கையை நோக்கி, பெண்ணே! இந்தப் பரிமளம் மிகுந்த மலர் மாலையை என்னிடம் கொடுப்பாயாக என்று யாசித்தார். அந்த மாலையை வித்தியாதர மங்கை அவரிடம் பக்தியோடு கொடுத்தாள். அந்த மலர் மாலையை துர்வாசர் தமது தலையிலே சுற்றிக்கொண்டு சஞ்சரித்துக் கொண்டிருந்தார். அப்போது, வழியிலே தேவேந்திரன் தன் வாகனமான ஐராவதத்தின் மீது பவனி வந்து கொண்டிருந்தான், அவனை துர்வாசர் கண்டதும் தமது சிரசில் சுற்றியிருந்த மலர் மாலையை அவிழ்த்து யானையின் மீது அமர்ந்திருக்கும் இந்திரன் மீது விட்டெறிந்தார். இந்திரன் அந்த மலர் மாலையை பிடித்து, ஐராவத யானையின் மத்தகங்கள் மீது போட்டான். அதனால் அந்த யானை மதங்கொண்டு, அந்தப் பூமாலையை தன் துதிக்கையால் எடுத்து, முகந்து பார்த்துத் தரையில் எறிந்தது. அதைக் கண்டதும் துர்வாசருக்கு மிகவும் கோபம் பொங்கியது. அவர் இந்திரனை நோக்கி, அடா, வாசவா! ஸ்ரீ ஐசுவரிய கர்வத்தால் ஸ்ரீமகாலக்ஷ்மியின் வாசஸ்தலமான மலர்மாலையை அங்கீகரிக்காமற் போனாய். சிரசில் நான் சூடிய மாலையை நீ மதிக்காமல் தரையில் எறிந்துவிட்டாய். ஆகையால் உன்னுடைய ஐசுவரியங்கள் சீக்கிரம் நாசம் அடையக்கடவது! என்னை அவமதித்த காரணத்தால் உன் உலகம் மகாலட்சுமியின் வாசம் ஒழிந்து துர்த்தசை அடையக் கடவது என்று சபித்தார். பிறகு இந்திரன் வெகு பரபரப்புடன் தன் யானையிலிருந்து இறங்கி, துர்வாச முனிவரின் பாதங்களில் வீழ்ந்து, தன்னை மன்னிக்கும்படி கெஞ்சினான். அப்படியவன் வேண்டிக்கொண்டும், துர்வாசரின் கோபம் அடங்கவில்லை.
தேவேந்திரா! தயையுடைய இதயமற்றவன் நான்! என்னிடம் மன்னிக்கும் சுபாவம் இல்லை. உனக்கு உட்பட்டுப் பின் பாட்டு பாடும் முனிவர்கள் வேறே இருக்கிறார்கள்! நான் துர்வாசன்! மற்ற முனிவர்களைவிட மாறுபட்டவன்! கவுதமர் முதலியவர்கள், நீ முன்பு செய்த துரோகத்திற்காக உன்னைச் சபித்துப் பிறகு உன்னுடைய விநயத்தின் காரணமாக உனக்கு தயவுசெய்தார்கள். அதுபோலவே என்னையும் நினைத்து விட்டாய்! நான் அப்படிப்பட்டவனல்ல வசிஷ்டர் முதலிய முனிவர்கள் உன்னைச் சிறப்பாகத் துதிப்பதாலேயே உனக்கு இவ்வளவு இறுமாப்பு! அதனால் தான் என்னை நீ அவமதித்தாய். குற்றஞ்செய்தால் தண்டிப்பது தான், நீதியே ஒழிய மன்னிப்பது என் வழக்கமல்ல! நீ ஏன் பயந்தவனை போலக் கபட நாடகம் ஆடுகிறாய்? வந்த வழியே செல்! என்று சொல்லி விட்டுத் துர்வாச முனிவர் சென்று விட்டார். இந்திரனும் தன் யானையின் மீது ஏறித் தேவலோகம் சென்று விட்டான். கேளும் மைத்ரேயரே! அன்று முதல் மூன்று உலகங்களும் லட்சுமி கடாக்ஷமற்று, தாவரங்களுங்கூட க்ஷீணித்தன. அன்று முதல் யாகாதி கர்மங்களும் நன்றாக நடைபெறவில்லை. தவமுனிவர்கள் நன்றாகத் தவஞ்செய்யவில்லை. தான தருமங்களில் மக்கள் கவனஞ் செலுத்தவில்லை. மக்களிடையே சத்துவகுணம் நலிந்து லோபம் மிகுந்தது. அற்ப விஷயத்திலும் பேராசை மிகுந்தது. அது ஏனென்றால், சத்துவகுணம் எங்கே இருக்குமோ, அங்கே தான் திருமகள் வாசம் செய்வாள். சத்வகுணமும் லட்சுமி கடாட்சத்தையே அனுசரித்திருக்கும் லட்சுமி கடாட்ச மற்றவர்களிடம் சத்துவ குணமும் இராது இந்தப்படியே திரிலோகங்களும் லட்சுமி கடாட்சம் குறைந்தவனாய் மிகவும் துர்தசையடைந்ததால், அரக்கர் கூட்டத்தினர் தேவர்களுக்கு தீங்கிழைக்கலானார்கள்.
அதனால் லோபாதி துர்க்குணங்களுடையவர்களாகவும், லட்சுமி கடாட்சமில்லாதவர்களாகவும் பலமும் சத்துவமும் இல்லாமலும் இருந்த அசுரர்கள் துள்ளியெழுந்து தேவர்களுடன் போர் செய்யத் துவங்கினர். தேவர்கள் தோற்று, பிருமதேவனைச் சரணடைந்தார்கள். தேவேந்திரன் தனக்கு அசுரர்களால் ஏற்பட்டுள்ள துர்த்தசையைக் கூறினான். அதைக்கேட்டதும் பிருமதேவன், தேவர்களே! பராபரங்கள் என்று சொல்லப்படும் உயர்ந்தவைகளுக்கும், தாழ்ந்தனவற்றிற்கும் ஈசுவரனும் அசுரரையெல்லாம் நாசஞ்செய்ய வல்லவனும் உற்பத்தி, ஸ்திதி, லயங்களுக்குக் காரணமானவனும் தனக்கு ஒரு காரணமின்றிதானே சுதந்தரமாக இருப்பவனும், பிரஜாபதிகளுக்கெல்லாம் அதிபதியாக விளங்குபவனும் ஒருவராலும் வெல்ல முடியாதவனும், முடிவற்றவனும் பிரகிருதி புருஷாக்களிடம் உட்புகுந்து காரியங்களைச் செய்பவனும், தனது திருவடிகளையடைந்தவரின் துன்பங்களை நீக்க வல்லவனுமான ஸ்ரீமகாவிஷ்ணுவை சரணமடையுங்கள். அவர் உங்களுக்கு ஷேமத்தைச் செய்தருளுவார்! என்று சொல்லி, அவர்களையெல்லாம் அழைத்துக்கொண்டு திருப்பாற்கடலின் வடகரையிற்சென்று ஸ்ரீயப்பதியை உத்தேசித்துத் தேவர்களுடன் துதி செய்யலானார். சர்வமயனும், சர்வ ஈசனும், முடிவற்றவனும் பிறப்பில்லாதவனும்; சுருங்கல் முதலியவையற்றவனும் உலக ஆதாரனும் தனக்கு வேறு ஆதாரமற்றவனும்; அப்பிரமேயனும்; பேதிக்க முடியாதவனும் சூட்சுமத்திலும் அதிசூட்சுமமானவனும் ஸ்தூலங்களில் அதிஸ்தூலமானவனும் ஆகிய ஸ்ரீமந் நாராயணனுக்குத் தண்டனிடுகிறேன்! அடியேன் முதலான சகல பிரபஞ்சமும் எவனிடமிருந்து தோன்றியதோ; எவனிடம் இருக்கின்றதோ; எவனிடம் லயமாகுமோ; சர்வ பூதங்களும் எவனுடைய சரீரமோ எந்தத் தேவன் மேலானவர்களுக்கும் மேலானவனோ; எவன் இருபத்து நான்கு தத்துவங்களுக்கும் பரனான புருஷனுக்கும் மேற்பட்டவன் என்று பரமான்மா என்னும் மோட்சத்தை அபேட்சிக்கிற யோகிகளால் மோட்சத்துக்காக நினைக்கப்படுகிறானோ எவனிடத்தில் பிராகிருதமான சத்துவாதி குணங்களில்லையோ, தூய்மையான சகல வஸ்துக்களுக்கும் மிகவும் தூயவனான அந்த ஆதிபுருஷன் அடியவரான எங்களுக்குப் பிரத்தியட்சமாக வேண்டும். கலை; காஷ்டை; நிமிஷம் முதலிய கால சூத்திரத்திற்குக் கோசரமான இடத்தில் பிராட்டி, திவ்விய மங்கள விக்கிர சமபரி ஜனம் முதலான விபூதிகள் இல்லையோ அப்படிப்பட்ட ஸ்ரீஹரி, எங்களுக்குப் பிரசன்னமாவானாக!
எவன் பரமேசுவரனாயும் அஜனுமாக இருந்தும் எல்லோருக்கும் அந்தர்யாமியாக இருப்பதால் முக்தியடைந்த ஆன்மாவாக உபசார வழக்காகச் சொல்லப்படுகிறானோ, அந்த ஸ்ரீமந்நாராயணனானவன் எங்களுக்குப் பிரசன்னமாவானாக! எவன் காரணமாகவும், காரியமாகவும், காரணத்திற்குக் காரியமாகவும், காரியத்திற்குக் காரியமாகவும் இருக்கிறானோ, அவன் பிரசன்னமாவானாக! பிரகிருதியின் காரியமான மகத்தின் காரியமான அகங்காரம் எது உண்டோ, அதன் காரியமான தன் மாத்திரைகளும் உண்டல்லாவா? அவற்றின் காரியமான பஞ்ச மகாபூதங்கள் உண்டல்லவா? அவற்றின் காரியமான பிரம்மாண்டத்தின் காரியமாக இருக்கிற பிரம்மனும், அவனிடத்தில் உண்டான தட்சாதிகளும் ஆகிய இந்த லோகப் பிரவாகம் எல்லாம் எவன் தானேயாக இருக்கிறானோ, அத்தகைய எம்பெருமானை நாங்கள் சரணடைகிறோம்! எவன் சப்தம் முதலிய சகல போக்கியங்களையும் அனுபவிப்பவனாகவும், சப்தம் முதலிய அனுபவப் பொருளாகவும், சகலப் பிரபஞ்சங்களுக்கும் சிருஷ்டி கர்த்தாவாகவும், சிருஷ்டி காரியமாகவும், சர்வ சரீரகனாவும் இருக்கிறானோ அப்படிப்பட்ட கர்த்தனை நாங்கள் வணங்குகிறோம்! விசுத்த ஞானமயமும் அஜமும் அட்சரமும் அவ்யயமும் அவ்யக்தமுமாய்த் தூலமும் சூட்சுமமுமல்லாமல், சகல விசேஷண வர்ச்சினமாக இருக்கிற அந்த பரமாத்மாவான விஷ்ணு சொரூபத்தை வணங்குகிறோம்! பரப்பிரும்ம சொரூபனான அந்தப் புரு÷ஷாத்தமனுடைய பதினாயிரத்தில் பதினாயிரம் அம்சமான ஏகதேசமான அம்சத்தில், சகல பிரபஞ்ச சக்தியும் இருக்கிறதோ, அந்த அவ்யனுக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறோம்? எப்போதும் தியானத்தில் இருக்கிற யோகிகள் தங்களுடைய பாவ புண்ணிய ரூபமான கர்மங்கள் நசித்தவுடன் எந்தச் சொரூபத்தைப் பிரணவப் பொருளாகக் காண்கின்றனரோ, எந்த சொரூபத்தைத் தேவர்களும் முனிவர்களும் நானும் சங்கரனும் அறியமாட்டாமோ, தனக்கு முன்பு யாரும் இன்றி தானே யாவற்றுக்கும் முன்னாக இருக்கிற எந்தத் தேவனுடைய சக்திகள் பிரம்ம விஷ்ணு சிவாத்துமகங்களாகி சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களைச் செய்யுமோ அந்த ஸ்ரீமகாவிஷ்ணுவினுடைய சொரூபத்திற்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறோம். சர்வேசுவரா! சர்வபூத சொரூபா! அச்சுதா! ஸ்ரீவிஷ்ணுபகவானே! உனது திருவடித்தாமரையை நம்பியிருக்கும் அடியோர்களுடைய கண்களுக்கு எதிரே பிரசன்னமாவீராக! என்று சதுர்முகப் பிருமதேவன் துதித்தார் மற்ற தேவர்களும் எம்பெருமானைத் தெண்டனிட்டு, தேவதேவ! எங்கள் முன் பிரசன்னமாகிச் சேவை சாதித்தருள வேண்டும்! எம்பெருமானே ! இரண்யகர்ப்பனும் ருத்திரனும் உன்னுடைய பரமசொரூபத்தை மெய்யாக அறியமாட்டார்கள். ஜகத்நிவாசனாய் எங்கும் நிறைந்தவனான உனக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறோம்! என்று துதி செய்தார்கள். அதைக்கண்ட பிருகஸ்பதி முதலான தேவரிஷிகளும் துதி செய்வாராயினர்.
ஆதியாயும், யக்ஞ புருஷனாயும், சகல யக்கியங்களால் ஆராதிக்கத் தக்கவனாயும், பூர்விகர்களுக்குப் பூர்விகனாவும், ஜகத்தை சிருஷ்டிக்கிற பரமேஷ்டிக்குத் தந்தையாயும், இன்னபடி என்று சிறப்பிக்கப்படக்கூடாதவனாயும் இருக்கிற ஸ்ரீயப்பதிக்குத் தெண்டன் இடுகிறோம். ஆறுகுண சம்பன்னனே! முற்பட்டவைகளுக்கும் பிற்பட்டவைகளுக்கும் அதிபதியானவனே! பாக்கிய சொரூபியே! அழிவற்றவனே! உன்னுடைய திருவடித் தாமரைகளைச் சரணமாகப் பற்றிய அடியேங்கள்மீது கிருபை கொண்டு சேவை சாதிப்பாயாக! எம்முன் இந்தப் பிரமதேவனும், ஏகாதச ருத்திரர்களுடன் இந்த மகாதேவனும், துவாதச ஆதித்தர்களுடன் இந்தப் பூஷாவும், திரேதாக்கினிகளோடு இந்த அக்கினியும் அசுவினி தேவதைகளும் வசுக்களும் மருத்துகளும், விசுவ தேவதைகளும், சாத்தியரும்; மற்றுமுள்ள தேவகணங்களுடன் இந்தத் தேவேந்திரனும் அசுர சேனைகளால் ஜெயிக்கப்பட்டு உன் திருவடித் தாமரைகளையே தஞ்சமாகப் பற்றித் தெண்டன் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைக் கண்ணோக்கம் காட்டி அருள்செய்ய வேண்டும் பரமாத்மா! என்று தேவரிஷிகள் துதித்தார்கள். அப்போது எம்பெருமானான ஸ்ரீமகாவிஷ்ணு சக்கராதி லட்சணங்களுடன் அத்தேவ கணங்களுக்குப் பிரத்தியட்சமாகி சேவை தந்து அருளினார். இவ்விதம் திருவாழித் திருச்சங்குடன் திவ்விய மங்கள விக்கிரகாதிகளையுடையவராய், தேஜோராவியாய்ச் சேவை சாதித்த எம்பெருமானைச் சதுர்முகப் பிருமாவும் மற்ற தேவர்களும் சேவித்து ஆனந்தத்தால் கண்கள் மலர்ந்து, அதிசயத்தால் அடிக்கடி கீழே விழுந்து வணங்கி எம்பிரானைத் துதிக்கலானார்கள். சுவாமி! அநந்தமான தெண்டன் சமர்ப்பிக்கிறோம்! உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதமின்றி சமமான அனுக்கிரகம் செய்பவன் நீ! பிரமனும் ருத்திரமூர்த்தியும் இந்திரனும் அக்கினியும் வாயுவும் வருணனும் ஆதித்தனும் யமனும் வசுக்களும் மருத்துக்களும் விசுவதேவர்களும் மற்றும் இங்கு வந்திருக்கிற சகல தேவர்களும் நீயே! ஏனெனில் நீயே அனைவரிடமும் இருந்து நடத்துகிறாய், ஆத்மாவுக்குக் கரணங்கள் போல எல்லோரும் உனக்குச் சேஷபூதராக இருக்கிறார்கள். அன்றியும் உன்னுடைய ஆராதனையான யாகங்களும் சகலவேத மூலமான பிரணவமும் நீ! இவ்விதமான சகல ஆராதனைகளையும் ஏற்று மனமிரங்கிக் காப்பவனும் நீ! எல்லாவற்றையும் அறிபவனும் நீயே! எல்லாவற்றாலும் அறியப்படுவதும் நீயே! உன்னிடமே அகிலப்பிரபஞ்சமும் நிற்கின்றது. அடியேங்கள் அசுரர்களால் ஜயிக்கப்பட்டு மிகவும் விசனமடைந்து, சர்வலோக கரணியனான உன்னைச் சரணமடைந்தோம். சகல பாபநாசகரனான உன்னைச் சரணமடையுமளவு தான் புருஷனுக்கு உபத்திரவமும் விஷயா பிலாஷையும் மோகமும் துக்கமும் உண்டாகியிருக்கும். தயா சமுத்திரனே! சரணாககரான எங்கள் முன் பிரசன்னமாக வேண்டும், என்று கைகூப்பித் தொழுதார்கள். அப்போது சர்வக்ஞனான எம்பெருமான் முகம் மலர்ந்து அனுக்கிரகம் புரிந்து அருள்புரியலானார்.
தேவதைகளே! எனது தேஜஸ் சிறப்பினால் உங்களுடைய பல, சத்துவ, தேஜோ தைரியங்களை அபிவிருத்தியடையச் செய்கிறேன். அசுர தைத்தியர்களோடு நீங்கள் ஓர் உடன்பாடு செய்து கொண்டு திருப்பாற்கடலில் சகல அவுஷதிகளையும் போட்டு, மந்தர மலையை மத்தாகவும் வாசுகியைக் கடையும் கயிறாகவும் செய்து கொண்டு அமிர்தத்தை அடையவேண்டிக் கடையுங்கள். அதனால் உண்டாகும் பயனை நாம் இரு தரத்தாரும் சரியாகப் பங்கிட்டுக் கொள்வோமென்று அந்த தைத்திரியர்களிடம் பேசி, அவர்களை உங்கள் வசம் செய்து கொள்ளுங்கள். இவ்விதமாக, நீங்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடையும்போது உண்டாகும் அமிர்தத்தை நீங்கள் பானஞ்செய்து நீங்களே மகா பலசாலிகளாகி அமரர்களாவீர்கள்! நான் அந்த அமிர்தம் அசுரர்களுக்குக் கிடைக்காதவாறு செய்கிறேன். இந்தச் செயலில் உங்களுக்கு வேண்டிய சகாயங்களைச் செய்கிறேன் என்று மகாவிஷ்ணு கூறினார். அதைக் கேட்டு தேவர்கள் மகிழ்ந்து, சுவாமியின் சன்னதியிலிருந்து விடைபெற்றுச் சென்று, தங்களுடைய விரோதிகளான அசுரர்களோடு சாம உபாயத்தினால் சமாதானம் செய்து கொண்டு, அமிர்தம் கடைவதில் ஒன்றுபட்டார்கள். இருதரப்பினரும் திருப்பாற்கடலில் அமிர்தம் கடைவதில் முனைந்தார்கள். சகல மூலிகைகளையும் கொண்டு வந்து, சரத்கால மேகத்தைப் போல மிகவும் வெண்மையாக இருக்கும். திருப்பாற்கடலில் போட்டு, மந்தரமலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாகவும் கொண்டு, அதிக உற்சாகத்தோடு கடையத் துவங்கினார்கள். அப்பொழுது எம்பெருமானான விஷ்ணு ஒரு தந்திரம் செய்து, வாசுகி சர்ப்பத்தின் வாலைத் தேவர்கள் பிடிக்கும்படியும் அசுரர்கள் அதன் தலையைப் பிடிக்கும்படியும் செய்தார். அதன் விளைவாக வலுவும் பராக்கிரமங்களும் மிக்க அசுரர்கள் விஷாக்கினிச் சுவாலையுடன் கூடிய வாசுகி என்ற பாம்பின் பெருமூச்சுக் காற்றினால் தேஜசு குறைந்து, பலவீனர்களானார்கள். அந்தக் கொடிய பாம்பின் சுவாச வேகத்தினால் மேகங்கள் அடித்துத் தள்ளப்பட்டு அதன் வால் பக்கமாகச் சேர்ந்த அம்மேகங்கள் பெருமழை பொழியவே, தேவர்கள் அம்மழைத் திவலைகளால் களைப்பு நீங்கிச் சுகமடைந்தார்கள். அப்பொழுது ஸ்ரீமந்நாராயணன் திருப்பாற்கடலின் மையத்தில் மகா கூர்மரூபந்தரித்து, (ஆமை உருவம் தரித்து) மந்திர மலைக்கு ஆதாரமாக இருந்து அதைச் சுழலச் செய்யச் சாதகமாக இருந்தார். மேலும் வேறொரு திருமேனியுடன் அசுரர்களின் பக்கத்திலே நின்று சங்கு, சக்கராதி திவ்விய ஆயுதங்களைத் தரித்து வாசுகியின் வாலையும், தலையையும் பிடித்து இடமும் வலமுமாக இழுத்துக் கடைந்தார். அதுமட்டுமல்ல, அவர் மிகவும் பெரியதான ஒரு திவ்விய உருவமெடுத்து, அந்த மந்த மலையின், மேற்புறத்தை ஆக்கிரமித்து, அதைப் பலப்படுத்தியருளினார். பின்னர் விஷ்ணுபகவான், தேவரும், அசுரரும் அறியமாட்டாத அதிரகசியமான வேறொரு சொரூபத்தால் தேவர்களுக்கும் தைரியவுற்சாகங்களை அபிவிருத்தி செய்து கொண்டிருந்தார். இவ்விதமாக ஸ்ரீயப்பதியின் சகாயத்தைக் கொண்டு, தேவர்களும் அசுரர்களும் கடைந்த திருப்பாற்கடலிலிருந்து சகல தேவர்களாலும் பூஜிக்கத்தக்க காமதேனு உற்பத்தியாயிற்று. அதை கண்ட அசுரரும் தேவரும் மகிழ்ந்தனர்.
பின்னர் சித்தர்களும் மோகத்தால் கலக்கமுற்று அதிசயிக்க சகலலோக மோகினியான வாருணிதேவி, மோனமயக்கத்தால் சுழலும் கண்களுடன் தோன்றினாள். மீண்டும் மந்திரமலையால் கடையப்பட்ட திருப்பாற்கடலிலிருந்து அபூர்வமான திவ்வியப் பரிமள சுகந்தத்துடன் பாரிஜாத விருட்சம் தோன்றியது. அதன்பிறகு ஜகன்மோகன ரூபலாவண்யமுள்ள அற்புதமான அப்சரஸ்திரீகளும், குளிர்ச்சியடைய கிரணங்களைக் கொண்ட சந்திரனும் தோன்றினர். அந்தச் சந்திரனை ருத்திரமூர்த்தி எடுத்துக்கொண்டார். பிறகு பாற்கடலில் உற்பவமான ஆலகால விஷத்தைச் சிவபெருமானும் நாகேந்திரர்களும் கிரகித்துக் கொண்டார்கள். அதன் பிறகு, பகவதம்சமான தன்வந்திரி என்ற தேவன் வெண்மையான ஆடைகளையும், மலர் மாலைகளையும் அணிந்து, அமிர்தம் நிறைந்த கமண்டலத்தைக் கையிலே ஏந்திய வண்ணம், அந்தத் திருப்பாற்கடலிலிருந்து உதயமானான். அமிர்த கலசத்தோடு தோன்றிய அந்தத் தேவனைக் கண்ட தேவர்களும் அசுரர்களும் மனக்களைப்பு நீங்கி மகிழ்ந்தார்கள். பிறகு அதியற்புதமாகவும், அபூர்வமாகவும், திவ்வியப் பிரகாசச் சிறப்போடும் மலர்ந்த செந்தாமரை மலரை ஆசனமாகக் கொண்டும், தாமரை மலர்களைத் திருக்கரங்களில் தரித்து கொண்டும், மகாலட்சுமி வடிவமான ஜகன்மாதாவான பெரிய பிராட்டியார் திருவவதாரஞ் செய்வதைக் கண்டு, முனிவர்களெல்லாம் மகிழ்ந்து ஸ்ரீசூக்தங்களைக் கொண்டு துதித்தார்கள். அப்போது பிராட்டியின் சன்னதியில் விசுவாவசு முதலிய கந்தருவர்கள் கீதங்களைப் பாடினார்கள். கிருதாகி முதலிய அப்சரசுகள் நடனமாடினார்கள். கங்கை முதலிய மகாநதிகள் தங்கள் தூய நன்னீரைக் கொண்டு, பிராட்டியின் திருமஞ்சனத்திற்குச் சேவை செய்தன. திக்கு கஜங்கள் நவரத்தின கசிதமான பொற்கலசங்களில் அந்த நத நீரை எடுத்து, பிராட்டிக்குத் திருமாலையொன்றைத் தாயாருக்குச் சமர்ப்பித்து விசுவகர்மன் ரத்தினாபரணங்களைத் தாயாரின் திருமேனியிலே சாற்றினான். இவ்விதமாக அவரவர் செய்த கைங்கரியங்களைத் திருவுள்ளம் பற்றிப் பிராட்டியார் திருமஞ்சனம் செய்தருளி, திருவாபரணம் திருமாலை முதலியவற்றைச் சாற்றிக்கொண்டு, மூவரும் தேவரும் பார்த்திருக்க விஷ்ணுபெருமானின் திருமார்பில் எழுந்தருளினாள். பிறகு பெரிய பிராட்டியார் அகங்குளிர்ந்து கடாட்சித்ததால் தேவர்கள் மகிழ்ந்தார்கள். அசுரர்களோ பெருமானிடத்தில் பக்தியற்றவர்களாக இருந்ததால் பிராட்டியாரின் கடாட்சத்தை இழந்து தீன ஸ்திதியை அடைந்தார்கள். இப்படியிருக்கும்போது அசுரர்களான தைத்திரியர்கள், தன்வந்திரியின் கரத்திலிருந்த அமிர்த கலசத்தைப் பலாத்காரமாகக் கைப்பற்றிக்கொண்டார்கள். அப்போது ஸ்ரீமந்நாராயணன் ஜகன்மோகனகரமான மங்கையுருவமெடுத்து, அசுரர்களை மயக்கியிழுத்து, வஞ்சித்து அமிர்தம் அவ்வசுரர்களுக்கு எட்டாதபடி செய்து அமுதத்தைத் தேவர்களுக்கே கொடுத்தார். இவ்விதம் பகவத்கிருபையினால் கிடைத்த அந்த அமிருதத்தைத் தேவர்கள் அருந்தியதால் பலம் பெற்று விளங்கினார்கள். அதைக்கண்டு கோபங்கொண்ட அசுரர் தைத்ய தானவர்கள் பலவித ஆயுதங்களை ஏந்தித் தேவர்களுடன் போர் புரிந்தார்கள். அமிர்தபானஞ்செய்த அமரர்களோ, அசுரர்களுடன் தைரியமாகப் போரிட்டு, அவர்களைப் பாதாளத்திற்குத் துரத்தினார்கள். பிறகு தேவேந்திரனும் தேவர்களும் ஸ்ரீயப்பதியை வணங்கி விடைபெற்று தேவலோகம் சென்று சுகபோகங்களை இடையூறின் அனுபவித்து வரலானார்கள்.
முனிவரே! அப்போது சூரியன் பிரகாசமான கிரணங்களுடன் தன் வழியில் மாறாமல் சஞ்சரித்து வந்தான். மற்றுமுள்ள கிரகங்களும் நட்சத்திரங்களும் தம் வழியில் மாறாமல் சஞ்சரித்தன. அக்கினியும் வலஞ்சுழித்தது. சகல ஜனங்களும் தரும சிந்தையுடையவராய்ச் சுகமாக வாழ்ந்தார்கள். இவ்விதம் மூன்று உலகங்களும் லக்ஷ்மிகடாட்சம் பெற்றன. இப்படியிருக்குங் காலத்தில் தேவேந்திரன் தன் பதவியை அடைந்து மகாலட்சுமியான பிராட்டியைத் துதித்துத் தோத்திரம் செய்யலானான். சகல உலகத்திற்கும் தாயாராய், திருப்பாற்கடலில் திருவவதாரம் செய்தவளாய், மலர்ந்த தாமரையைப் போன்ற திருக்கண்களுடையவளாய், திருமாலின் திருமார்பில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீதேவிக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறேன். தாமரை மலரில் வீற்றிருந்து, தாமரை மலரைத் திருக்கையில் தரித்து, தாமரை மலர் போன்ற திருவிழிகளுடன் தாமரை மலரையொத்த திருமுக மண்டலமுள்ளவளும், உந்தித் தாமரை பூத்தவனின் திருவுள்ளத்திற்கு உகந்தவளுமான ஸ்ரீதேவியைச் சேவிக்கிறேன்! உலகங்களைத் தூய்மை செய்து அருள்கின்ற தாயே, சித்தியும் சுவாகையும் சுதையும் சொதையும் சந்தியும் ராத்திரியும் பிரபையும் மேதையும் சிரத்தையும் சரஸ்வதியும் எல்லாம் நீயே! சகலமங்கள சொரூபிணியான தாயே! யக்ஞவித்தை என்கின்ற கர்ம மீமாம்சையும், மகாவித்தையென்கின்ற இந்திர ஜாலவித்தையும் குஹ்ய வித்தை என்கின்ற வேதாந்த வித்தையும் நீயே! தர்க்க வித்தையும், வேத வித்தையும் கிருஷிகோரக்ஷண வாணிப வித்தையும், தண்டநீதி வித்தையும் நீயே! இவ்விதம் சாந்தங்களாகவும் அசாந்தங்களாகவும் இருக்கிற உருவங்களைக் கொண்டு மூன்று உலகங்களையும் நீயே நிறைந்திருக்கிறாய். தாயே! சகல யக்ஞ சொரூபனாகவும், மகா யோகிகளுக்கும் தியானித்து அறியத்தக்க தேவதேவனுமான கதாதரனின் திருமேனியில் உன்னைத் தவிர வேறு யார்தான் வீற்றிருக்க முடியும்? உலகமாதாவே! உன் கடாட்சத்தை இழந்த போது மூன்று உலகங்களும் நாசமடைந்தவை போலாகித் திரும்பவும் உனது கடாட்சத்தைப் பெற்றதால் சவுபாக்கியங்களைப் பெற்றன. தாயே! கருணை நிறைந்த உனது கடாட்ச வீட்சண்யத்தாலே பிராணிகளுக்கு பாரியா, புத்திர, பந்து, மித்திர, கிருக, ÷க்ஷத்திர, தன வாகனாதிகள் எப்பொழுதுமே உண்டாகின்றன.
எம்பெருமாட்டியே! உன் கடாட்சம் பெற்றவர்களுக்கு உடல் ஆரோக்கியமும் அதிகாரமும் சத்துரு வெற்றியும் சுகமும் கிடைப்பது அரிதல்ல. பிராட்டியே! சகல பிரபஞ்சத்துக்கும் நீயே அன்னை! தேவதேவனான நாராயணனே தந்தை! தாயே! நீங்கள் இருவரும் சேர்ந்தே சராசர ஸ்வரூபமான இந்த பிரபஞ்சமெல்லாம் வியாபித்திருக்கிறீர்கள். ஸ்ரீவிஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் தாயே! அடியேங்களது புத்திர, மித்திர வர்க்கங்களையும் பசுக்களையும், பூஷணங்களையும் ஒருநாளும் பிரியாது இருந்தருள வேண்டும். யாவற்றையும் தூய்மையாக்கவல்ல தாயே; எங்களுடைய தனகோசத்தையும் தொழுவத்தையும், இல்லங்களையும், உடலையும், களத்திரத்தையும், ஒருநாளும் பிரியாமல் இருந்தருள வேண்டும். நிர்மலையான தாயே! உன் கடாட்சம் தூரமானால் மக்கள் சவுசீல மகாகுணங்களும் தன தானியமும் இல்லாமற் போவார்கள். குணக்குறையுடையோராலும் உன் கடாட்சம் பெற்றவர்கள். எல்லா சவுபாக்கியங்களையும் பெற்றுப் பிரபுக்களாக வாழ்வார்கள். ஸ்ரீவிஷ்ணு வல்லபையான தாயே! உன் கருணைக்குப் பாத்திரமானவனே குணவான்; புண்ணியவான்; புத்திமான். சூரன், பராக்கிரமசாலியாவான்! ஜகத்தையெல்லாம் வளர்க்கும் தாயே! நீ வெறுத்தால், ஒருவனுடைய வாய்மை, சமதர்மம் முதலிய சற்குணங்களும் துர்க்குணங்களாகி விடும். உனது திருக்கல்யாண குணங்களை நான்முகப் பிரமனாலும் துதிக்க இயலாதே அப்படியிருக்க அடியேன் எப்படிப் புகழ்வேன்? ஆயினும் தாயே கருணை கூர்ந்து எம்மை விட்டுவிடாமல் காத்தருள வேண்டும் என்று தேவேந்திரன் துதித்தான். அப்பொழுது, எங்கும் நிறைந்தவளான ஸ்ரீதேவிப்பிராட்டியார் திருவுள்ளம் உவந்து புரந்தரன் முன்பு தோன்றி, தேவேந்திரா! நீ செய்த வழிபாட்டில் நான் மகிழ்ந்து உனக்கு வரமளிக்க வந்தேன். உனக்கு வேண்டிய வரங்களைக் கேள் என்று அருளிச்செய்தாள். தேவேந்திரன் உடனே ஸ்ரீதேவியை வணங்கித் தாயே, நீ திரிலோகத்திலும் இடைவிடாமல் எழுந்தருளியிருக்க வேண்டும். எவனருகிலும் இந்தத் தோத்திரத்தினால் உன்னைத் துதித்தால் அவனை நீ ஒருநாளும் கைவிடாமல் காத்து ரட்சிக்க வேண்டும்! என்று இரண்டு வரங்களைக் கொடுத்தருளும்படி வேண்டினான். அவன் வேண்டிய பிரார்த்தனையை ஸ்ரீதேவிப்பிராட்டியார் ஏற்றுக்கொண்டு, அமரேந்திரா! நீ விரும்பிய வண்ணம் ஆட்சிபுரியும் உனது உலகத்தை விட்டு நான் நீங்குவதில்லை. எவன் தினந்தோறும் காலை மாலைகளில் இந்த ஸ்ரீ தோத்திரத்தால் என்னைத் துதிக்கிறானோ, அவனுக்கு நான் அருள்புரிகிறேன்! என்று இரண்டு வரங்களைத் தந்தருளினாள்.
மைத்ரேயரே! பூர்வத்தில் ஸ்ரீதேவி, பிருகு முனிவருக்கு கியாதி என்ற மங்கையினிடத்தில் அவதரித்தாள் என்று சொன்னேனல்லவா? பிறகு அமிர்தங்கடைந்த காலத்தில், திருப்பாற்கடலிலும் அவதரித்தாள். இதுமட்டுமல்ல, உலகநாதரான ஜனார்த்தனன் எப்போதெப்போது உலகங்களில் அவதரிப்பானோ, அப்போதைக்கப்போது ஸ்ரீதேவியும் அவனுடன்கூட, அந்த அவதாரப் பயன்பெற, அவதாரம் செய்து அருள்வாள். முன்பு ஸ்ரீமந்நாராயணன் அதிதியின் குமாரனாக அவதரித்தபோது ஸ்ரீதேவிப்பிராட்டியார் பதுமை என்ற திருப்பெயரோடு அவதரித்தாள். விஷ்ணு, பரசுராமனாக அவதரித்தபோது இவள் தரணியாக அவதரித்தாள், அவன் சக்கரவர்த்தித் திருமகன் ராமனாக அவதரித்தபோது இவள் சீதா பிராட்டியாக அவதரித்தாள். அந்த எம்பெருமான் கண்ணனாக அவதாரம் செய்த போது இவள் ருக்மணியாக அவதரித்தாள். இதுபோலவே மற்றைய அவதாரங்களிலேயும் இப்பிராட்டி, பெருமாளை விட்டு பிரியாமல் கூடவே அவதரித்துக் கொண்டிருப்பாள். எம்பெருமான் தேவதா சொரூபத்தோடு அவதரித்தால் ஸ்ரீதேவியும் அதற்கேற்ற தெய்வத் திருமேனியுடன் அவதரிப்பாள். மனுஷ்ய சொரூபத்தோடு பெருமாள் அவதரித்தால் தேவியும் மனுஷ்ய ரூபத்தோடு அவதரிப்பாள். மைத்திரேயரே! ஸ்ரீமகாலக்ஷ்மியின் இந்த திருவவதாரத்தை எந்த மனிதன் பக்தியுடன் பாராயணம் செய்கிறானோ, எவன் பக்தியோடு கேட்கிறானோ, அவனுடைய இல்லத்தில் பெரிய பிராட்டியாரான ஸ்ரீதேவி என்றும் பிரியாமல் எழுந்தருளியிருப்பாள். எந்தக் கிருஹங்களிலே இந்த ஸ்ரீதேவியின் சரித்திரம் தினந்தோறும் படிக்கப்படுகிறதோ, அந்தக் கிருகங்களில் கலகத்திற்கு ஆதாரமான வறுமை இராது. ஸ்ரீதேவி, முன்பு பிருகு முனிவரின் புத்திரியாகிப் பின்னர் மீண்டும் திருப்பாற்கடலில் அவதாரஞ்செய்த விதத்தை உமக்கு அறிவித்தேன். சகல ஐசுவரிய காரணமாக, இந்திரனால் சொல்லப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை யாராகிலும் தினந்தோறும் பக்தியுடன் படிப்பார்களானால் அவர்கள் ஒருக்காலும் அசுபத்தை அடையமாட்டார்கள். சர்வாபீஷ்டங்களும் நிறைவேறி அவர்கள் சிறப்பாக வாழ்வார்கள்.

10.பிருகு, மரீசி முதலானோர் வமிசம்
பராசர மகரிஷியே! உங்கள் தயவால் ஸ்ரீதேவியின் திருவவதார வைபவத்தை அறிந்து கொண்டேன். இனிமேல் பிருகு முதலானோருடைய வமிச வரலாற்றைக் கூறியருள வேண்டும் என்று மைத்ரேயர் வேண்டினார். பராசர முனிவர் தொடர்ந்து கூறலானார். மைத்ரேயரே! பிருகு முனிவருக்குக் கியாதி என்ற பத்தினியிடம் ஸ்ரீவிஷ்ணு பத்தினியான லட்சுமியும் தாதா விதாதா என்ற பிள்ளைகள் இருவரும் உண்டானார்கள் அல்லவா?அந்தத் தாதாவும் விதாதாவும் மேரு புத்திரிகளான ஆயதி, நியதி என்னும் கன்னியரை முறைப்படியே விவாகஞ் செய்து கொண்டார்கள். அவர்களில் தாதாவுக்குப் பிராணன் என்கிற மகன் பிறந்தான். அவனுக்கு துதிமான் என்னும் மகன் பிறந்தான். அவனுக்கு அசாவான் என்ற குமரன் பிறந்தான். விதாதாவுக்கு மிருகண்டு என்று புத்திரன் உற்பத்தியானான். அந்த மிருகண்டுக்கு மார்க்கண்டேயன் பிறந்தான். அந்த மார்க்கண்டேயனுக்கு வேதசிரன் என்ற மகன் பிறந்தான். அவர்களாலே பிருகு வமிசம் உலகத்தில் பரவி வந்தது. இந்நிலையில் மரீசி மாமுனிவருக்குச் சம்பூதி என்ற மனைவியிடம் பவுர்ணமாசன் என்ற புத்திரன் பிறந்தான். அவனுக்கு விரசன், பர்வதன் என்னும் இருபிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களுடைய சந்ததிக் கிரமத்தைப் பின்னால் சொல்லுவேன். ஆங்கிரசமுனிக்கு பத்தினியான ஸ்மாருதி என்பவள் சீனிவாலி, குரு, ராகை அனுமதி என்று சொல்லப்பட்ட நான்கு பெண்களைப் பெற்றாள். அத்திரி மாமுனிவருக்கு மனைவியான அனுசூயை என்பவள் சந்திரனையும், துர்வாசரையும் தத்தாத்திரேயர் என்ற மகாயோகியையும் பெற்றாள். அவன் பூர்வ ஜன்மத்தில் சுவாயம்புவ மநுவந்திரத்திலே அகஸ்தியனாக இருந்தான். புலஹன் என்ற முனிவருக்குக்ஷமை என்பவளிடத்தில் கர்த்தமன் அர்வரீவான் சகிஷ்ணு என்ற மூன்று பிள்ளைகள் தோன்றினார்கள். கிரது என்னும் மாமுனிவருக்கு சன்னதி என்பவளிடத்தில், ஊர்த்துவரேதஸரும் கட்டை விரற் பரிமாணமுள்ளவரும் சூரியப்பிரகாசிகளுமான வாலக்கில்யர் என்ற அறுபதினாயிரம் முனிவர்கள் உண்டானார்கள். வசிஷ்டருக்கு ஊர்ச்சை என்ற பெண்ணிடம் ரசனும், காத்திரனும்; ஊர்த்தபாகுவும் சவனனும், அனகனும் சுதபனும் சுக்கிரனும், ஆகிய சப்த மாமுனிவர்கள் பிறந்தார்கள். பிரமதேவனுக்கு மூத்த மகனான அக்கினி என்பவனுக்கு சுவாஹா என்ற பத்தினியிடம் பாகவன், பவமானன், சுசி என்னும் பிள்ளைகள் மூவர் பிறந்தார்கள். அவர்களது சந்ததியில் நாற்பத்தைந்து பிள்ளைகள் பிறந்தார்கள். இவர்களும் இவர்களுடைய தகப்பன்மார்கள் மூன்று பேரும் கூடஸ்தனான அக்கினியபிமானி தேவதையும் ஆக நாற்பத்தொன்பது பேர்களும் அக்கினிகள் என்று வழங்கப்படுகிறார்கள். மைத்ரேயரே! சதுர்முகப் பிரமன் சிருஷ்டித்த அக்கினிஷ்வாத்தர் என்றும் பர்ஹீஷதர் என்றும் சொல்லப்பட்டு யாகம் செய்தவர்களும் யாகம் செய்பவர்களுமான பிதுர்க்கணங்களைச் சேர்ந்து ஸ்வதை என்னும் பெண்மணியானவள் மேனை, வைதரணி என்கிற இரு பெண்களைப் பெற்றாள். அவ்விருவரும் யோகப் பயிற்சியில் சிறந்து பிரமவாதிகளாய்த் திகழ்ந்தார்கள். இவ்விதமாக விருத்தியான தக்ஷ புத்திரிகளுடைய சந்தானக்கிரமம் சொன்னேன். இதை விசுவாசத்தோடு ஸ்மரணஞ் செய்த மனிதன் சந்தானமில்லதாவனாக மாட்டான்.

Tags

Related Articles

 • Vishnu Puranas -1
  Vishnu Puranas -1
  1.புராணம் கேட்ட வரலாறு 18 புராணங்களில் மூன்றாவதாக கருதப்படுவது விஷ்ணு புராணம். இது 23,000 ஸ்லோகங்கள் கொண்டது. ஒருநாள் அதிகாலையில் பராசர…
 • Vishnu Purana-3
  Vishnu Purana-3
  11.துருவன் கதை பராசரர் தொடர்ந்து கூறலானார் : மைத்ரேய முனிவரே! சுவாயம்புவ மநுவுக்குப் பிரியவிரதன் உத்தானபாதன் என்னும் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள்.…
 • Vishnu Purana-4
  Vishnu Purana-4
  16.பிரகலாத சரித்திரப் பிரச்னை பராசரரே! மனு வமிசத்தில் பிறந்த உத்தானபாதன், துருவன் முதலிய மாமன்னர்களின் வரலாறுகளையும் அனாதி புருஷனான ஸ்ரீவிஷ்ணுவே ஜகத்…
 • Vishnu Purana-5
  Vishnu Purana-5
  1.பிரியவிரத வம்சம் பராசர முனிவரே! உலகப்படைப்புப் பற்றி நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் பதிலளித்து விட்டீர்கள். நீங்கள் கூறியருளிய முதலம்சத்தில், உலகப்படைப்பு…
 • Vishnu Purana-6
  Vishnu Purana-6
  9.சிம்சுமார சக்கரம் மைத்ரேயரே! ஸ்ரீஹரி பகவானின் சிம்சுமாரம் என்ற ஜந்துவைப் போலத் தோன்றுகின்ற நட்சத்திரக் கூட்டமாகிய ரூபத்தின் வால்பகுதியில் துருவன் இருக்கிறான்.…

Be the first person to comment this article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *