Vishwamithrar’s Teaching

தசரதர், ராமனை விஸ்வாமித்ரர்ட்ட ஒப்படைகணும்னு முடிவு பண்ணவுடனே, கௌசல்யைட்ட சொல்றார், கௌசல்யா தேவியும் ராமருக்கு, ஸ்வஸ்தி வாக்யங்களெல்லாம் சொல்லி, ஆரத்தி எடுத்து, ரெண்டு பேருமா குழந்தைய விஸ்வாமித்ரர்ட்ட ஒப்படைக்கறா..
விஸ்வாமித்ரர்ட்ட ராமலக்ஷ்மணா வந்து சேர்ந்தபோது, தேவதுந்துபி முழங்கித்து, சங்க வாத்தியம் கேட்டது, வானத்திலேர்ந்து புஷ்பமாரி பொழிஞ்சது..
விஸ்வாமித்ரர் பரம சந்தோஷத்தோட, நம்ம வந்த காரியம் நடந்தது, ஏதோ கோவிச்சுகர மாதிரி அபினயம் பண்ணினோம், நம்மகிட்ட குழந்தைய குடுத்துட்டா, அப்படின்னு பகவான அழைச்சிண்டு போறார்..
சரயு நதிக்கரைல, ஒரு ஒன்றரை யோஜனை, பதினைஞ்சு மைல் போனவுடனே, சரயு நதிக்கரைல விஸ்வாமித்ரர் ராமரை கூப்பிட்டு, பலை அதிபலைன்னு மந்த்ரங்கள் உபதேசம் பண்றேன், வாங்கிகோங்கோ, அப்படின்னு சொல்றார்..
இந்த பலை அதிபலை மந்த்ரங்கள தெரிஞ்சுண்டேள்னா உங்களுக்கு, ஒரு பிரயாணத்தில போறபோது, எந்த ஒரு களைப்போ, பசியோ, தாகமோ இருக்காது. ராக்ஷஷர்களெல்லாம் நீங்க தூங்கும்போது உங்கள, துன்புறுத்த முடியாது” அதனால இந்த மந்த்ரங்கள வாங்கிங்கோங்கோன்னு, அதை குழந்தைகளுக்கு சொல்லி வைக்கிறார்..
அவாளும், கை கால் அலம்பிண்டு, அவர் சொன்ன மாதிரியே, குளிச்சிட்டு வாங்கோ, ஆசமனம் பண்ணிட்டு வாங்கோன்னு சொல்றார், அப்புறம் மந்த்ரங்கள சொல்லி குடுக்கறார். அவாளும் அதை வாங்கிக்கறா. அந்த மந்த்ரங்களை க்ரஹிச்சிண்டு, தேஜஸோட விளங்கறா..
அப்படி அந்த பலை அதிபலை மந்த்ரங்கள க்ரஹிச்சுண்டு ராமலக்ஷ்மணா போறா, அன்னிக்கு ராத்திரி, ஒரு மரத்தடில படுக்கவைக்கறார்..
அடுத்தநாள் காத்தால, “கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே. உத்திஷ்ட்ட நரஷார்தூலா, கர்த்தவ்யம் தெய்வமான்னிகம்” அப்படின்னு சொல்லி, விஸ்வமித்ரர், இந்த மங்களாஸாஸனம் குழந்தைய எழுப்பறார். இந்த ஸ்லோகம் எல்லாரும் கேட்டிருக்கோம், இந்த ஸ்லோகத்தை முன்னிட்டுண்டு, இந்த வால்மீகி வாக்குல, விஸ்வாமித்ரர் பண்ண இந்த சுப்ரபாதத்தை முன்னிட்டுண்டு, அப்புறம் சுப்ரபாதம் மஹான்கள் பண்ணினதுனாலே தான், அது உலகம் ,முழுக்க பிரசித்தியாயிருக்கு. இந்த வரிக்கு அவவளவு மகிமை, ராமரை வந்து எழுப்பறார், கௌசல்யா சுப்ரஜா ராமா ன்னு எழுப்பறார். கௌசல்யையுடைய குழந்தையே அப்படின்னு. அதாவது இந்த ராமன் தூங்கற அழகை பார்த்து, தினம் இந்த மாதிரி தூங்கற அழகை பார்த்து, குழந்தைய எழுப்பற பாக்கியம் அந்த கௌசல்யைக்குதானே கிடைச்சதுன்னு, கௌசல்யா சுப்ரஜா ராமா ன்னு சொல்றார். பூர்வா கிழக்கு திக்குல, சந்த்யா ப்ரவர்த்ததே சந்த்யா காலம் வருது அப்படின்னு..
சிஷ்யங்க்றவன் முன்னாடியே, குருவுக்கு முன்னாடியே எழுந்து தயாரா இருக்கவேண்டாமா, எழுப்பும்படி வெச்சுக்கலாமான்னு ஒரு கேள்வி இருக்கு. ஆனா ராமர் வந்து, அந்த தப்பு, அது ஒரு சின்ன பிழை இருந்தாலும் பரவால்ல. இந்த விஸ்வமித்ரர், குழந்தைய மரத்தடில தூங்க பண்ணிட்டோமேன்னு தாபப்படுவார், இன்னிக்கு தான் நன்னா தூங்கினோம்னு காமிக்கறதுக்காக, அவர் எழுப்பற வரைக்கும் தூங்கிண்டு இருக்கலாம்னு தூங்கறாராம்..
உத்திஷ்ட்ட நரஷார் தூலா, கர்த்தவ்யம் தெய்வமான்னிகம், காரியங்களெல்லாம் பண்ணனும், சந்த்யவந்தனங்கள் பண்ணனும்ன்னு எழுப்பறார். அதாவது, நீ கௌசல்யைக்கு பிள்ளையா, பூமில அவதாரம் பண்ணியிருக்க இல்லையா, அதனால நீ என்ன பண்ணறயோ, அதை பாத்துண்டு தான் எல்லாரும் பண்ணுவா, அதனால, நல்ல வழிய எல்லாருக்கும் காமின்னு சொல்லி எழுப்பறார். அப்புறம் எழுந்து சந்த்யவந்தனம் பண்றார்..
பின்னே, சரயு நதிக் கரையா கூட்டிண்டு போறார். சரயுவும் கங்கையும் கலக்கற இடத்தில ஒரு ஆஷ்ரமம் இருக்கு, ராமர் கேக்கறார், “இது ரொம்ப புண்யமான ரம்யமான ஆஷ்ரமமா இருக்கே, இங்க யார் இருக்கா? இது யாரோட ஆஷ்ரமம்?”னு கேக்கறார். அப்போ விஸ்வாமித்ரர் சொல்றார், இங்க பரமேஸ்வரன் தபஸ் பண்ணிண்டு இருந்தார், காமதகனம் பண்ணார். அதனால இதுக்கு காமஷ்ரமம்ன்னு பேரு,.
அது என்ன கதைன்னா, சூரபத்மன்ன்னு ஒரு அசுரன் இருக்கான், அவன் பரமேஸ்வரன் தவிர வேற யார் கையாலையும் வதம் கிடையாதுன்னு வரம் வாங்கிருக்கான். அவன வதம் பண்றதுக்கு, தேவர்கள், ஸ்வாமி தானா, அவன் சிவபக்தனா இருக்கறதனால, பரமேஸ்வரன் அவனை வதம் பண்ணமாட்டார், பரமேஸ்வர அம்சமா ஒரு குழந்தை பிறந்தா, அந்த குழந்தைய தேவசேனாதிபதியாக்கி, அவனைக் கொண்டு, இந்த சூரபத்மனை ஜெயிக்கலாம்னு, இவா பரமேஸ்வரன, அவர் தபஸ் பண்ணிண்டு இருக்காரே, சேனாதிபதி வேணுமேன்னு, தபஸை கலைக்கறதுக்கு மன்மதன அனுப்பறா..
மன்மதன் போய் மறஞ்சு இருந்து புஷ்ப-பாணத்தை போடறான், பரமேஸ்வரன் கண்ணை தொறந்து பாக்கறார், மன்மதனை பார்த்தவுடனே, நெற்றிக் கண்ணை தொறந்து, கோபத்துல அவனை எரிச்சுடறார். அப்போ, அப்புறம் கைலாசத்துக்கு போயிடறார். அந்த இடம் தான் அந்த காமஷ்ரமம்..
இதுக்கப்புறம் கதை என்ன ஆகறதுன்னா, பார்வதி பரமேஸ்வரனுக்கு பர்வதராஜ குமாரியா பொறந்து, பார்வதி தேவி பரமேஸ்வரனுக்கு கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கா. அவர் கோவிச்சுண்டு போனவுடனே, பார்வதி தபஸ் இருக்கா, ஒரு இலைய கூட சாப்பிடாம, தபஸ் இருக்கறதானால, அந்த அவஸரத்துல அம்பாளுக்கு, அபர்ணான்னு பேரு, அப்புறம் பரமேஸ்வரன் வந்து விளையாட்டு பண்ணிட்டு, ஒரு கிழவனா வந்து, “நீ என்ன, அந்த பரமேஸ்வரன் கிட்ட என்ன கண்டே, சிவபெருமானை போய் விரும்பறியேன்னு பேசறார். அவ கோவிச்சுக்கரா, அதுக்கப்புறம், அவர் தன்னை வெளிப்படுதிக்கறார், அப்போ பார்வதி, எங்க அப்பா கிட்ட பெண் கேட்டு, என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கோன்னு சொல்றா. சப்த ரிஷிகள அனுப்பிச்சு, பரமேஸ்வரன், பார்வதிய கல்யாணம் பண்ணிக்கறார், அந்த பார்வதி கல்யாணத்தின் போது, ரதிதேவி ப்ரார்த்தனைக்கு இணங்க, அம்பாள், மன்மதன உயிர்ப்பிச்சு குடுக்கறா. இந்த காமாக்ஷி, மன்மதன உயிர்பிச்சத மூகபஞ்சசதில, ஸ்ருதி சதகத்துல, ஒரு ஸ்லோகததுல வரது..
ஆதூன்வன்த்யை தரலநயனைராங்கஜீம் வைஜயன்தீம்.
ஆனன்தின்யை நிஜபதஜுஷாமாத்தகாஞ்சீபுராயை
ஆஸ்மாகீனம் ஹ்ருதயமகிலைராகமானாம் ப்ரபஞ்சை
ஆராத்யாயை ஸ்ப்ருஹயதிதராமதிமாயை ஜனன்யை ||
பஸ்மமா போயிட்ட மன்மதனை, இன்னிக்கும் மூவுலகத்தையும், ஜெயிக்கும்படியா கொடி கட்டி பறக்கவிட்டாள் அம்பாள், அப்படின்னு இந்த ஸ்லோகத்துல வரது..
அப்படி, இது பரமேஸ்வரன் ஆஷ்ரமம் அப்படின்னு, சொன்னவுடனே, அங்க உள்ள போறா. அங்க இருக்கற ரிஷிகள் எல்லாம் சிவபக்தர்கள், அவா வந்து, ஞானகண்னால வந்திருக்கறது யார்னு தெரிஞ்ச்சுண்டு, விச்வாமித்ரரரையும் குழந்தைகளையும் வரவேற்று, அங்க தங்க சொல்றா..
விஸ்வாமித்ரர் அவாள பத்தி, சிஷ்யா: தர்ம பரா: நித்யம் தேஷாம் பாபம் ந வித்யதே அப்படின்னு, இவா சிவ பக்தர்கள், இவாள் இடத்துல ஒரு பாபமும் கிடையாது, தர்மமே வடிவானவர்கள், அப்படின்னு புகழ்ந்து சொல்றார். அன்னிக்கு அங்க தங்கிட்டு, அடுத்தநாள் கார்த்தால எழுந்து படகுல ஏறி போறா..
பெரும் ஜலம் மோதறாமாதிரி சத்தம் கேக்கறது, இது என்னன்னு கேக்கறார் ராமர். கைலாசத்துல பிரம்மா, பரமேஸ்வரன் குளிக்கறதுக்காக, மனசால ஒரு சரஸ்-ஐ ஒரு குளத்தை நிர்மாணம் பண்ணார். அந்த சரஸ்லேர்ந்து கிளம்பி ஒரு நதி வந்தது, அதுதான் சரயுநதி, அந்த சரயு நதி இங்க, கங்கையோட கலக்கறது. அந்த ரெண்டு நதியும் கலக்கற சத்தம் தான் இந்த :வாரினோ, வாரி கட்டித: இந்த கூடல்ல இந்த சங்கமத்தில, இந்த நதிகளை வணங்கிக்கோங்கோ, நமஸ்காரம் பண்ணுங்கோன்னு சொல்றார். குழந்தேளும் அப்படி பண்றா.
அதி தார்மிகௌ அப்படின்னு வால்மீகி சொல்றார், பெரியவா சொன்னா கேட்டுண்டு தர்மத்தை நடத்தி காமிக்கறதனால ராம லக்ஷ்மணாள அதி தார்மிகௌ ன்னு சொல்றார்..
அதுக்கப்புறம் அந்த நதிய கடந்து போனா, ஒரு பயங்கரமான காடு வறது, இது என்ன இப்படி பயங்கரமா இருக்கே, ஓரு பசு பக்ஷி இல்ல, எல்லாம் பாலைவனமாட்டம் காய்ஞ்சு கிடக்கு, கருப்பு கருப்பா, என்ன இப்படி இருக்கேன்னு கேட்டவுடனே, “இங்க தாடகான்னு ஒருத்தி இருக்கா, அவ ஒரு யக்ஷிணி, அவளுக்கு ஆயிரம் யானை பலம், அவ கோபத்துனால இந்த இடத்தை இதுமாதிரி பண்ணிட்டா”ன்னு விஸ்வாமித்ரர் சொல்றார். “யக்ஷிணிகளுக்கு ஏது அவ்வளவு பலம்?”ன்னு ராமர் கேக்கறார். அவா கொஞ்சம் பலம் படைச்சவாதானேன்னு..
அப்போ விஸ்வாமித்ரர் சொல்றார், சுகேதுன்னு ஒரு யக்ஷன் இருந்தான், அவன் ப்ரம்மாட்ட தபஸ் பண்ணான், பிரம்மா அவனுக்கு ஒரு பெண் குழந்தைய குடுத்தார், அந்த குழந்தைக்கு ஆயிரம் யானை பலம் குடுத்திருந்தார், அவள் தான் தாடகா, அவள் வளர்ந்து, சுந்தன்னு ஒருத்தன கல்யாணம் பண்ணிண்டா, மாரிசன்னு அவாளுக்கு ஒரு பிள்ளை, இந்த சுந்தன், அகஸ்திய முனிவரை ஹிம்சை பண்ணவுடனே, அவர் அவனை வதம் பண்ணிட்டார், இந்த தாடகாவும், மாரிசனுமா அகஸ்தியரை கொல்லப் போனா, அப்போ அவர் இவாள, ராக்ஷக்ஷர்களா போங்கோன்னு சபிச்சுட்டார், அந்த தாடகை இந்த பிரதேசத்த ஆக்ரமிச்சிண்டுருக்கா, நீ இந்த தாடகைய வதம் பண்ணு, ராமா அப்படின்னு சொல்றார்..
ஸ்த்ரி வதம் பண்ணனுமான்னு யோசிக்காதே, முன்னே இந்திரன் விரோசனன் பெண்ணை வதம் பண்ணான், விஷ்ணு பகவான் காவியமாதாவை வதம் பண்ணார், அந்த மாதிரி, உலகத்துக்கு கெடுதல் நினைக்கிரவாளை பெண்ணா இருந்தாலும் வதம் பண்ணலாம், அப்படின்னு சொல்றார்..
ராமர், “நான் கிளம்புபோது எங்க அப்பா என்கிட்டே, விஸ்வமித்ரர் சொல்கிற பேச்சை கேளுங்கோன்னு சொன்னார், அதனால நீங்க சொன்ன படி நான் பண்ணறேன்”, அப்படின்னு வில்லை எடுத்து நாண்-அ சுண்டி விடறார், டங்காரம் பண்றார், அந்த சத்தத்தை கேட்டவுடனே, கடுங்கோபமா, சத்தம் போட்டுண்டு, இடி போல சத்தம் போட்டுண்டு இந்த தாடகா வரா, வந்து இவா மேல கல்லு மண்னு எல்லாம் கொட்டறா, யாரங்கேன்னு கத்தறா, அப்போ ராமர் லக்ஷ்மனன்ட்ட, நான் இவ கைய கால வெட்டி போட்டுடறேன், எங்கயும் போகமுடியாது அப்படின்னு சொல்றார், அப்போ அவ மறைஞ்சிருந்து அடிக்க ஆரம்பிக்கறா, அப்போ விஸ்வாமித்ரர்,.
அலம் தே க்ருணயா ராம பாபைஷா துஷ்டசாரிணீ.
இவள் கெட்ட நடத்தை கொண்டவள், இவள் கிட்ட கருணை காமிக்காதே ராமா, அப்படின்னு சொல்றார். மறைஞ்சிருந்து அடிக்கறா அவ, ராத்திரி ஆச்சுன்னா ராக்ஷஷர்களுக்கு இன்னும் பலம் ஜாஸ்தி ஆயிடும், விரைந்து காரியத்தை முடின்னு சொல்றார். துரிதபடுத்தறார்..
உடனே, ராமர், சப்தவேதின்னு, எங்க இருந்து சப்தம் வரதோ, அதை பாத்து, அம்படிக்கற அந்த வித்தைய கொண்டு, ஒரு அம்பு போட்டு அவள் மார்பை பிளந்துடறார். இந்த தாடகா வதம் ஆனா பின்னே, அந்த பிரதேசமே குபேர பட்டினத்துல இருக்கற நந்தவனம் போல ஆயிடறது.
ஸ்வாமிகள், பாகவதம் படிக்கறதுனால, கிருஷ்ணபரமாத்மா காளிய மர்த்தனம் பண்ணி அவனை அடக்கின பின்ன, அதுக்கு முன்னாடி விஷமா இருந்த யமுனை, பகவானோட பாத ஸ்பர்ஸத்துனால அமிர்தாமா ஆயிடுத்து, அப்படிங்கறதை, அதையும், இந்த ராமன், தாடகா வதம் பண்ணவுடனே, அந்த தாடகாவனம், நந்தவனமா ஆயிடுத்து, அப்படின்னு இந்த ரெண்டுத்தையும் சேர்த்து சொல்வார்..
இந்த தாடகாவதம் ஆனவுடனே, இந்த்ராதி தேவர்களெல்லாம் வந்து, விஸ்வாமித்ரர் கிட்ட இந்த ராமனுக்கு, அஸ்த்ர வித்தைகளை எல்லாம் சொல்லிகொடுங்கோ, இவனால பெரிய காரியங்கள் நடக்கப் போறதுன்னு சொல்றா..
குரு பேச்சை ராமர் கேட்டதால எல்லா தெய்வங்களும், சந்தோஷமடைகிறது.

விஸ்வாமித்ர மஹரிஷி, தாடகா வதம் ஆன பின்னே, அன்னிக்கு ராத்திரி தூங்கி எழுந்துட்டு, அடுத்த நாள் கார்த்தால ராமன் கிட்ட, “ஹே ராமா நான் உனக்கு, அஸ்த்ரங்களெல்லாம் சொல்லித் தரேன், அஸ்த்ர வித்தைகளெல்லாம் வாங்கிக்கோ”, அப்படின்னு, கிழக்கு முகமா நின்னுண்டு, அந்தந்த அஸ்த்ரங்களோட தேவதைகளை சொல்றார். தர்மச்சக்கரம், காலச்சக்கரம், விஷ்ணுச்சக்கரம், வஜ்ராஸ்த்ரம், ப்ரம்மாஸ்த்ரம், ஆக்னேயாஸ்த்ரம், வாயுவாஸ்த்ரம், காந்தர்வஸ்த்ரம், மோகனம், இப்படின்னு பல விதமான அஸ்த்ரங்கள், பாசுபதாஸ்த்ரம், சக்தி, இப்படின்னு, எல்லா தெய்வங்களுடைய எல்லா அஸ்த்ரங்களையும் விஸ்வாமித்ரர், ஐநூறு அஸ்த்ரங்களையும். அந்தந்த மந்த்ரங்களையும் சொன்னவுடனே, அந்தந்த அஸ்த்ரங்கள் முன்னாடி வரது, அதை ராமர் ஏத்துக்கறார். இப்படி எல்லா அஸ்த்ரங்களையும் சொல்லிண்டே வரார், அப்புறம், இதெல்லாம் வாங்கிண்ட பின்னே, இப்படி கிளம்பி போறா..

அப்போ விஸ்வமித்ரர் கிட்ட ராமர் கேக்கறார், “எல்லா அஸ்த்ரங்களையும் சொன்னேள், அதை நான் க்ரஹிச்சுண்டேன். ஆனா இந்த அஸ்த்ரங்களெல்லாம் விட்ட பின்ன திரும்பி வாங்கறதுக்கு, உண்டான மந்த்ரங்களெல்லாம் சொல்லி குடுக்கணுமே”, அப்படின்னு கேக்கறார். உடனே, ஆமா, அதெல்லாம் சொல்லித்தரேன், அப்படின்னு அந்த மந்த்ரங்களெல்லாம், சத்யவந்தம், சத்யகீர்த்திம், த்ருஷ்டம், ப்ரபதம், அப்படின்னு பல விதமான மந்த்ரங்களெல்லாம், ஒரு அஸ்திரத்தா விட்டனா, அது திரும்பவும், வாங்கிக்கறதுக்கு உண்டான மந்த்ரங்கள் எல்லாமும் சொல்லித்தரார்..

இப்படி எல்லா அஸ்த்ர வித்தைகளெல்லாம் சொல்லித் தந்தவுடனே, அதெல்லாம் ராமர் முன்னாடி வந்து, ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வினோதமா, ஒண்ணு வந்து சூரியன போல ஜொலிக்கறது, ஒண்ணு சந்திரன போல குளுமையா இருக்கு, இப்படி ஒவ்வொரு அஸ்த்ரமும் ஒவ்வொரு ரூபத்தோட விளங்கறது, அதெல்லாம் ராமர் முன்னாடி வந்து நின்னு, ராமர் அந்த மந்த்ரங்களெல்லாம் திருப்பி சொன்னவுடனே, அவருக்குள்ள அது வந்துடுத்து, எல்லாம் அவர் முன்னாடி கை கட்டி நிக்கறது,.

இமே ஸ்ம நரஷார்தூல ஷாதி கிம் கரவாம தே |.

ஹே மனிதர்களுள் ஸ்ரேஷ்டனே – ஷாதி, நீ உத்தரவு பண்ணு, நாங்க சொன்னபடி கேக்கறோம் அப்படின்னு சொல்றா, அப்போ ராமர் சொல்றார்,.

மானஸா: கார்யகாலேஷு சாஹாய்யம் மீ கரிஷ்யத |.

கம்யதாம் இதி தானாஹ யதேஷ்டம் ரகுநந்தன: ||.

என் மனஸ்ல இருங்கோ, அந்தந்த காலத்துல நான் கூப்பிடும்போது வந்து, எனக்கு சஹாயம் பண்ணுங்கோ, அப்படின்னு சொல்றார். இப்படியாக, அஸ்த்ர வித்தைகளெல்லாம் விஸ்வாமித்ரர், ராமலக்ஷமனாளுக்கு உபதேசஸம் பண்றார்..

அப்புறம், அவா கிளம்பிப் போறா, ஒரு இடம் வந்தவுடனே, ராமர் “ஆஹா இந்த இடமே ரொம்ப பரம ரம்யமா ரொம்ப ரமணீயமா இருக்கே, இது என்ன இடம் அப்படி?” ன்னு கேட்டவுடனே, இதுதான் பா அந்த சித்தாஸ்ரமம். இங்க தான் நான் இருந்துண்டு இருக்கேன். முன்னே விஷ்ணு பகவான், நூற்றுகணக்கான யுஹங்களுக்கு இங்க தபஸ் பண்ணிட்டிருந்தார், அந்த நேரத்துல பலின்னு ஒரு அசுரன், அவன் வந்து சுக்ராசார்யார்ன்னு அவரோட குரு அவனுக்கு நிறைய பலத்தை குடுத்தார், அதை வெச்சுண்டு அவன், இந்த்ரனையே ஜெயிச்சு மூவுலகத்துக்கும் ராஜாவாயிட்டான், இந்த்ரன், எங்கயோ ஒளிஞ்சுண்டு கஷ்டபட்டுண்டு இருந்தான்,.

அப்போ கஷ்யபரும், அதிதிதேவியும், விஷ்ணு பகவான குறித்து, ஆயிரம் திவ்ய வருஷங்கள், வெறும் பாலை மட்டும் சாப்பிடுண்டு, தபஸ் பன்ணா, தபஸோட முடிவுல, விஷ்ணுபகவான் காட்சி குடுத்தார், அவா கிட்ட, அவர் உங்களுக்கு என்ன வரம் வேணும்ன்னு கேட்டார், அப்போ கஷ்யபர் “அதிதி தேவியோட வயிற்றில நீ இந்த்ரனுக்கு தம்பியா, நீங்கள் எனக்கு குழந்தையா பொறந்து, இந்த தேவர்கள் படும் துன்பத்தை துடைக்கணும்”, அப்படின்னு பிரார்த்தனை பண்றார். அப்படியே ஆகட்டும்னு சொல்லி, விஷ்ணுபகவான், வாமன மூர்த்தியாக அவதாரம் பண்றார்..

அவதாரம் பண்ணி ஒரே நாள்ல குமாரனாயிடறார், அவருக்கு உபநயனம், பிரமச்சாரியா அவருக்கு உபநயனம் பண்ணி வெச்சவுடனே, அந்த வாமனர், அந்த பலி ஒரு யாகம் பண்ணின்டிருக்கான், அந்த பலியோட யாகத்துல போய் தர்ஸனம் குடுக்கறார். உடனே அவன் ரொம்ப சந்தோஷப்பட்டு, வாங்கோன்னு கூப்பிட்டு, உங்களுக்கு என்ன வேணும் அப்படின்னு கேக்கறான், அப்போ வாமன மூர்த்தி எனக்கு மூணடி மண் குடுன்னு கேக்கறார், இன்னும் நிறைய கேட்டுக்கலாமே என்றவுடனே, இதுல திருப்தி அடையாதவன், எதுலயும் திருப்தி அடையாமாட்டான், இந்த மூணடி மண்ணே எனக்கு போறும் ன்னு சொல்றார், சரின்னு, விந்த்யாவலின்னு அவனுடைய மனைவி ஜலம் விடறா. மூணடி மண்ணு தாரை வார்த்து குடுத்து அந்த ஜலம் அந்த வாமன மூர்த்தி கைல பட்டவுடனே, விண்ணுக்கும் மண்ணுக்குமா த்ரிவிக்கிரம அவதாரம் எடுக்கறார், பெருசா வளர்ந்து, ஓரடியினால, பூமி முழுக்க அளந்துடறார், இன்னொரு அடியினால வானலோகத்தெல்லாம் அளந்துடறார், இப்படியாக இந்த பலி ஜெயிச்சதெல்லாம் வாங்கின்னுடறார், மூணாவது அடிக்கு எங்க இடம்னு கேக்கறார், பலி, பலி வந்து, ப்ரஹலாதனோட பேரன், இயற்கைலையே நல்ல குணம் படைத்தவன், ஆனா இந்த கர்வம் வந்துடறது, நான், என்னதுன்னு, அவனோட அந்த கர்வத்தை, விஷ்ணுபகவான், அவனுடைய சொத்தெல்லாம் பிடுங்கினது மூலமா, அவனுடைய கர்வத்தை எடுத்துடறார், அஹங்காரம், மமகாரங்களெல்லாம் போக்கி, அவனையும் பக்தனாக்கிடறார், அவன் மூணாவது அடிக்கு எங்க இடம்னு கேட்டவுடனே, என் தலைல வைங்கோன்னு சொல்றான் கைகூப்பி, பகவான் அவன் தலைல கால வெச்சு அவன பாதாள லோகத்துக்கு அனுப்பிச்சிடறார், ஆனா, நீ சிரஞ்சீவியா அந்த லோகத்தை ஆண்டுண்டிரு, உன்னை யாரும் எதிர்க்காம, நானா பாதுகாக்கறேன்னு விஷ்ணு பகவானே, கைல ஒரு தண்டத்தை வெச்சுண்டு, பலியோட லோகத்தை காவல் காத்துண்டிருக்கார், ராவணன் திக்விஜயம் பண்ணிண்டு வரும்போது, விஷ்ணு பகவான், ராவணன வந்து, பலியோட இடத்துக்கு வந்தபோது, ஒரு அடி குடுக்கறார், அவன் எங்கயோ போய் விழறான், அப்படி விஷ்ணு பகவான் காவல் காத்துண்டிருக்கார், பலிக்காக. அப்படி விஷ்ணு பக்தன் பலி..

இந்த வாமன சரித்ரத்தை சொல்லி, இப்படி கஷ்யபர் பண்ண தபஸும் இந்த இடத்தில பலிச்சது, ஆதிநாராயணனும் இங்க தபஸ் பண்ணிண்டுருந்தார், கஷ்யபருக்காக நாராயணன், வாமன அவதாரம் எடுத்தார், இந்த இடம் எல்லாருக்கும் தபஸ் சித்தியானதுனாலே இது சித்தாஸ்ரமம்ன்னு பேரு, பகவான் என்னை இங்க இருக்கசொல்லி, நான் இங்க இருந்துண்டிருக்கேன், இது உன்னுடைய இடமும் தான், அப்படின்னு ராமர்ட்ட விஸ்வாமித்ரர் சொல்றார்..
ஸித்தாஸ்ரமத்தை அடைந்த பின் முனிவர் தீக்ஷை ஏற்று யாகத்தை துவங்குகிறார். யாகத்தை தடுக்க வந்த மாரீசனை, ராமர், மானவாஸ்த்ரத்தால் கடலில் தள்ளி, சுபாகுவை ஆக்னேய அஸ்த்திரத்தாலும் மற்ற அரக்கர்களை வாயு அஸ்த்ரத்தாலும் வதம் செய்கிறார். விஸ்வாத்மித்ரர் யாகத்தை பூர்த்தி செய்து ராமனை வாழ்த்துகிறார்..

Related Articles

 • Ramayana
  Ramayana
  இராமாயணம் வால்மீகி என்னும் முனிவரால் சமசுக்கிருத மொழியில்…
 • About Ayodhya
  About Ayodhya
  கோசலம், என்றொரு தேசம், இருந்தது. அதுல, சரயு…
 • Ashvemega Yaagam
  Ashvemega Yaagam
  இப்படி தர்மம் தவறாம தசரத மஹாராஜா, அயோத்தியை,…
 • Sri Rama Birth
  Sri Rama Birth
  ரிஷ்ய ஸ்ருங்க முனிவர் புத்திர காமேஷ்டி பண்ணி…
 • Rama-Sita Marriage.
  Rama-Sita Marriage.
  முனிவர்கள் விஸ்வமித்ரரிடம் ‘ராம லக்ஷ்மணர்களை மிதிலைக்கு அழைத்துச்…

Be the first person to comment this article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *